Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்

 மலர்: 21    ரௌத்ர வருஷம் - சித்திரை, வைகாசி ஏப்ரல், மே - 1980   இதழ் : 3, 4


ஸ்ரீ ராம நாம மஹிமை
புலவர் கே.வேங்கட்ராமன்

ராமநாம சிறப்பு எத்தன்மையது பாருங்கள்: முக்யமான சில பீஜாக்ஷரங்கள் வருமாறு:

(भूः பூ: भुवः புவ: सुवः :ஸுவ:) காயத்ரீ, ऐं ஐம் சரஸ்வதி, दुं தும் துர்கா, क्लीं க்லீம் காளிகா, श्री ச்ரீ லக்ஷ்மி, हौं ஹௌம் சிவன், गं கம் கணபதி. பீஜாக்ஷரங்களின்றி மந்திரங்கள் பயன்படாது. முச்சுடர்களின் பீஜாக்ஷரமும் ஒன்று சேர்ந்தது ராமநாமம். மும்மூர்த்திகளின் ஸ்வரூபமும் ராமநாமமே. ராமநாமம் பிரம்மா விஷ்ணு சிவஸ்வரூபமாக இருக்கிறது. அக்னி சிவஸ்வரூபம், சூர்யன் நாராயணஸ்வரூபம்; " सवित्रु मंडल मध्यवर्ती नारायण सरसिजासन" (ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண ஸரஸிஜாஸன) சூர்ய மண்டலத்தின் மத்யபாகத்தில் நாராயணன் இருக்கிறார். சந்திரன் பிரம்மஸ்வரூபம் (அத்ரிமகரிஷியின் மனைவி அனசூயாவிற்கு மும்மூர்த்திகளும் குழந்தைகளாக ஆனார்கள்; துர்வாசர் ருத்ராம்சமும், மகாவிஷ்ணு தத்தாத்ரேயராகவும், பிரம்மா ஆத்ரேயனாகவும் ஆனார்கள்).

ராம நாமம் மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக இருக்கிறது. ருக்வேதம், அக்னி ஸ்வரூபம் (अग्नीमीलॆ पुरोहितम् அக்நிமீளே புரோஹிதம்) சூர்யன் யஜுர் வேதம். சூர்ய நமஸ்காரம் யஜுர் வேதத்திலுள்ளது. சந்திரன் ஸாமவேதம்("ஹைமவதீ தேவீ ஸூக்தம்." ஸாமவேதத்தில் வருகிறது.)

இதனால் ஸ்ரீமத் ராமாயணமே வேதோபப்ரஹ்மணம். வேதத்திற்குப் பொருளாயுள்ள புருஷன் ஸ்ரீராமராகப் பூமியில் அவதரித்தபோது வேதமே ஸ்ரீமத் ராமாயணமாக அவதரித்ததென்பது பிரசித்தம்.

वेद वेद्ये परे पुंसि जाते दशरथात्मजॆ ||
वेद प्राचेलसादासीत् साक्षाद्रामायणात्मना ||

"வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ராசேலஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா"

வேதப்ரதிபாத்யமானது காயத்ரீ மகா மந்திரம்.

அந்த காயத்ரீ சந்தஸில் ஆனது ராமாயண சுலோகங்கள். இத்தனையும் தாரக மந்திரமான ராம நாமத்தில் அடங்கியுள்ளது. ராம நாமம் ’ஓம் நமோ நாரயணாய’ என்ற அஷ்டாக்ஷரத்தின் பீஜாக்ஷரமாகிய ரேபமும் ’ஓம் நம:சிவாய’ என்ற பஞ்சாக்ஷர மந்திரத்தின் மகரமாகிற பீஜாக்ஷரமும் அடங்கியுள்ளது. எனவே ராம நாமம் ஹரியாகவும், ஹரனாகவும், சங்கரனாகவும், நாராயணனாகவும் இருக்கிறது. சங்கர நாராயணனே ராம நாமம்.  திருமங்கையாழ்வார் பெருமாளைப் பாடுகிறார்:

‘’பிரைதங்கு சடையானை வலத்தே வைத்து
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து’’

ஜடாபாரத்தில் சந்திரனை வைத்திருக்கும் சிவனைத் தன் வலத்தே வைத்திருக்கிறாராம் திருமால்.

"குடமாடியை இடத்தே கொண்டு," என்கிறது தேவாரம். ஆழ்வார் திருமாலைச் சொல்லும்போது ஈசுவரனை வலப்பாகத்தில் கொண்டிருக்கிறார் பெருமாள் என்று சொல்லுகிறார். சிவபக்தர் சிவனைச் சொல்லும்போது மகாவிஷ்ணுவை இடப்பாகத்தில் கொண்டிருக்கிறார் சிவன் என்று சொல்லுகிறார்.

ஈசுவரனுடைய இடப்பாகத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார் என்றால் அதே வாம பாகத்தில்தானே அம்பிகை இருக்கிறார். ஈசுவரனுடைய வாம பாகம் அம்பாளுடையது. அம்பாளுடைய வலபாகத்தில் ஈசுவரன் இருக்கிறார். ஆழ்வாரும் மகாவிஷ்ணுவின் வலபாகத்தில்தான் ஈசுவரன் இருக்கிறார் என்று சொல்லுகிறார். இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால் ஒரே பொருள்தான் அம்பிகையாகவும் திருமாலாகவும் காணப்படுகிறது. தியாகையரும் பைரவி ராகத்தில் ’லலிதே ஸ்ரீ பிரவிருத்தே’ என்ற கிருதியில் அம்பிகையை ஸ்ரீராம சகோதரி என்று கூப்பிடுகிறார்.

இந்த அம்பிகையோ பரமேசுவரனுக்கு சரீரமாக இருக்கிறார். ஸௌந்தர்ய லஹரியில் ஆசார்யர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார்:

"शरीरत्वं शंभो" சரீரத்வம் சம்போ: சம்புவிற்கு சரீரமாக இருப்பவள் நீதான். அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம், சரீர சரீரி பாவ சம்பந்தம். அதாவது சேஷ சேஷீ பாவம்.  அம்பாள் பரமேச்வரனுக்கு சரீரமாக இருக்கும் போது நாராயணனும் பரமனின் சரீரமாகத்தானே இருக்க வேண்டும்.

நாராயணனின் தேவி லக்ஷ்மியோ அவரின் திருமார்பில் வசிக்கிறாள். திருமாலின் உந்தியில் தோன்றிய பிரமனின் தேவி சரஸ்வதியோ பிரமனின் நாவில்தானே வசிக்கிறாள். இதனால் சக்தியும் சக்திமானும் பிரிக்க முடியாத தத்துவங்களாகத்தானே இருக்கிறது! இத்தனைத் தத்துவங்களும் ராம நாமம் ஒன்றிலேயே அடங்கியிருக்கிறதே!

"உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளான்" என்று நம்மாழ்வார் வாக்குபடி நாமெல்லாம் உடல். நம்முள் உயிராக இருந்து இயக்குவது ராம நாமமன்றோ!

-0-0-0-0-0-0-0

     Home Page