ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 21       ரௌத்ர வருஷம் - சித்திரை, வைகாசி ஏப்ரல், மே - 1980   இதழ் :3,4


ஸ்ரீ பரமாசார்யர்கள் அனுக்ரஹம்
ஆர். லக்ஷ்மண அய்யர் (ஓய்வுபெற்ற ஜில்லா நீதிபதி)

1957-இல் நான் ராமனாதபுரம் ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த சமயம் சென்னைக்கு கார்மூலம் சென்றேன். திரும்பி வரும்போது காஞ்சீபுரத்திற்கு 15 கிலோ மீட்டரில் ஓர் ஊரில் முகாம் செய்திருந்த காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ பரமாசார்யர்களை தர்சிக்கச் சென்றேன். ஸ்ரீ ஆசார்யர்களைத் தர்சனம் செய்துக்கொண்டு சென்னைக்குத் திரும்ப ஆவலாக இருந்தேன். ஆனால் அந்தசமயம் Central Govt. Archaelogical Assistant Director, Dr. டி.என். ராமசந்திரன், Magic Lantern உதவியால் சில Slides திரைப்படம் மூலம் காண்பித்துக் கொண்டிருந்தார். ஒரு பில்வ விருஷத்தில் இரண்டு பக்ஷிகள் இருக்க ஒன்று அலக்ஷ்யமாய் வீற்றிருக்கவும், மற்றொன்று பழங்களைக் கொத்திச் சாப்பிடவும், தித்திப்பாக இருந்தால் முகமலர்ச்சியும் புளிப்பாக இருந்தால் முகம் சுளிக்கவும், இவ்விதம் உள்ள 2,3 புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. நான் சென்னைக்கு இரவு 10 மணிக்குள் போக வேண்டு மென்ற கவலை என் முகத்தில் தெரிந்ததோ என்னமோ! ஸ்ரீ ஆசார்யர்கள், "நீ சென்னைக்கு இன்றிரவே சீக்கிரம் போகணும். அது எனக்கு தெரியும். ஆனாலும் இந்த Slides யைக் பார்த்ததும் உனக்கு உபநிஷத் மந்த்ரம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது அல்லவா? என்று அந்த மந்த்ரத்தைச் சொன்னார்கள்:

द्वा सुपणौं सयुजौ सखायौ समानं वॄक्षं परिषस्व जाते II
तयॊरन्यःपिप्पलं स्वाद्वत्ति अनश्नन् अन्यॊअभचाकशीति IIIIII

 

(இரு பறவைகள் ஒருமரத்தில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்க, ஒன்று பழங்களை தின்கிறது; மற்றொன்று ஒன்றையும் சாப்பிடாமல் இருந்து வருகிறது.

பரமேச்வரன் தானே ஜீவனாக, பல சரீரங்களில் ப்ர்வேசித்து, ஸுகதுக்க ரூபமான கர்மபலன்களை அனுபவிக்கிறான். அதே நேரத்தில் தான் ஈச்வர நிலையில் எந்த பலனிலும் ஸம்பந்தம் கொள்ளாமலும் இருக்கிறான்.)

நானும் தெரியும் என்றேன். "பார்த்தாயா? இந்த Slidesகளை பார்த்ததால் நீ உன் உபந்நியாஸங்களை இன்னும் தெளிவாய்ச் சொல்வாய். இதற்காகத்தான் கொஞ்சம் தாமஸிக்கவைத்தேன். இந்தா ப்ரஸாதம்," என்று கூறி ஒரு தேங்காயைக் கொண்டுவரச்சொல்லி, அவர்கள் தன் கையாலேயே தேங்காய் முழுவதும் மஞ்சள் தடவி பூரணபலம் ப்ரஸாதம் அருளினார்கள். சாஷ்டாங்க வந்தனங்கள் செய்து ப்ராஸாதத்தை வாங்கிக் கொண்டு, "எனக்கு முன்னதாகவே ஜில்லா ஜட்ஜ் பிரமோஷன் வரவேண்டியது. ஒரு ஓய்வு பெற்ற ஜட்ஜூக்கு Disciplinary Tribunal இல் 3 மாதம் extension கொடுக்கப்பட்டதால் தடைப்பட்டு விட்டது," என்றேன். நான் கூறி முடிக்குமுன்பே ஸ்ரீ ஆசார்யர்கள், "இப்போ நீ தேவகோட்டை திரும்பியதும் உன் பிரமோஷன் கிடைக்கும். போய்வா" என்று அபய ஹஸ்தம் காண்பித்தார்கள். நான் தேவகோட்டைக்குத் திரும்பியதும் Promoted as District and Sessions Judge, என்ற உத்தரவு கிடைத்தது. இது மாதிரி பக்தர்கள் பல பேர் தங்களுக்குப்ல் பலவித எதிர்பாராத நன்மைகள் ஸ்ரீ பரமாசார்யர்கள் அனுக்ரஹவிசேஷத்தால் கிடத்ததைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

ऋषीणां पुनराद्यानां वाचमर्थॊंनुधावति II

’மகரிஷிகளான பெரியோர்களின் சொல்லை அதன் பொருள் தேடிச்செல்லும் என்று ’’பவபூதி’’ சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

Home Page