ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 10       கீலக வருஷம் மாசி மாதம் இதழ்1
12-2-1969


அநுஷ்டானம்…

ஆசாரம், அநுஷ்டானம் என்ற வார்த்தைகளே அறியாமையின் சின்னங்களாக நம் நவநாகரிகப் பெரியோருக்குத் தோன்றுகின்றன. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு துக்ககரமான சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதும்போது ஒரு பத்திகை, “இக்காலத்து மனிதருக்குப் பிடிக்காத கட்டுப்பெட்டி ஆசாரங்களை அவர் துச்சமாக எண்ணினார். பரந்த மனமுள்ளவர்கள் அவசியம் வெறுக்கக்கூடிய மதவெறியை அவர் வெறுத்தார்” என்று கூறியிருந்தது. இப்பேர்ப்பட்ட மனப்பான்மையைப் போற்றுபவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தால் நன்றாக இருக்கும். நவநாகரிகம் தலைதூக்கி ஆடும் இக்காலத்தில் தான் மதம் ஒன்று தவிர மீதி எல்லாத் துறைகளிலும் போலி ஆசாரங்களும், பிராணி ஸமூகத்துக்குக் கொடுமை செய்யும் துராக்கிரகங்களும் மலிந்து கிடக்கின்றன.
நூறு வருஷத்துக்கு முன்பு வங்காளத்தில் அதிகாரி வர்க்கத்தில் உயர்ந்த பதவி வகித்த பீமீஷ் என்ற ஆங்கிலேயர், ராஜதானியின் கவர்னராக இருந்த பிரபு, ஒரு தடவை கல்கத்தாவிலிருந்து ஒரு ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்த ஒரு வாரத்தில் அந்த அமளியில் ஈடுபட்டு அந்த ஜில்லா முழுவதும் எல்லா அரசாங்கச் சிப்பந்திகளும் தங்கள் நிரந்தர வேலைகளைச் செய்ய முடியாமற் போயிற்று என்றும், இந்தவித ஆடம் பரமும் வீண் செலவும் எந்தத் தெய்வத்துக்கும் அடுக்காது என்றும் சினந்து எழுதினார்.
இதை இப்பொழுது மந்திரி வர்க்கத்துக்கு மாமூலாக நடக்கும் தனிப்பட்ட உபசாரங்களுடன் (இதைத்தான் v.l.p. treatment என்பார்கள்) ஒப்பிட்டுப் பாருங்கள். செலவு ஆயிரம் பங்கு அதிகரித்திருக்கிறது. அர்த்தராத்திரியில் குடை பிடிப்பது என்ற புது நாகரிக ஆசாரம்- ஏன், இதுவும் ஓர் ஆசாரம் தானே!- பதினாயிரம் மடங்கு வளர்ந்திருக்கிறது. வெறியைப் பற்றிப் பேசும்போது, இன வெறி, மொழி வெறி, பிராந்திய வெறி, ராஜீயக் கொள்கை வெறி- இப்படி எவ்வளவு வெறிகள் இப்பொழுது தாண்டவமாடுகின்றன! மத விஷயத்தில் வெறி இல்லாதவர்களோ, மதத்தைக் கண்டு வெறி கொள்ளுபவரோதாம் இப்பேர்ப்பட்ட பல அசுர வெறிகளைக் கிளப்பிவிடுகிறார்கள் என்பதும் கவனிக்கத் தகுந்தது.
ஆசாரம் என்பது என்ன? சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுக் கடவுளால் விதிக்கப்பட்ட கடமையைச் செய்வதே. ‘கடவுளை யார் கண்டார்?‘ என்று பேசும் அறிஞர்களுக்காக இந்த வியாஸம் எழுதப்படவில்லை. ‘வேதம், ஸ்ம்ருதிகள், மற்றச் சாஸ்த்ரங்கள் இவை கடவுளின் சாஸனம்‘ என்று எண்ணும் ஆஸ்திகர்களுக்கு ‘யஜ்ஞம், தானம், தபஸ்‘ வீதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று கடமைகளுக்கும் அடிப்படை தியாகம்தான். நாம் விரும்பிச் சேமிக்கும் பொருளை ‘என்னுடையதல்ல‘ என்று கடவுளுக்கு அர்ப்பணம் செய்து பிறருக்குக் கொடுப்பதே இந்தக் கர்மாக்களின் முக்கிய அம்சம். இது எவ்விதத்தில் அறிவிலியின் காரியமாகும்? சமூகத் தொண்டைப் பற்றியும் தாழ்ந்தவரை உயர்ந்த வேண்டிய கடமையைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசுகிறோம். ஆனால் இந்த நோக்கத்துடன் கையாளப்படும் முறைகளோ அநேகமாக விபரீதப் பலனைக் கொடுக்கின்றன. இதற்கு என்ன காரணம்? கொடுப்பவன், வாங்குபவன் இருவருக்கும் தியாகபுத்தி இருந்தால் எந்த ஸமூகமும் முன்னுக்கு வரும்.
ஜனநாயகத்தில் அதிகாரம் வகிப்பவர்கள் ஜனங்களுடைய ஆன்மகுணங்கள் வளர்ச்சி அடைவதில் அக்கறை செலுத்துவதில்லை. அஹிம்ஸை, ஸத்யம், பிறர் சொத்துக்கு ஆசைப்படாமை முதலிய குணங்கள் ஒரு ஸமூகத்தில் பரவ வேண்டுமென்றால், ஒவ்வொரு தனிமனிதனிடமும் இந்தக் குணங்கள் நிரம்பியிருக்க வேண்டும். இவற்றை வளர்ப்பதற்குத் தகுந்த சாதனங்கள் என்று ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டவை நம் ஆசாரங்களும் அநுஷ்டானங்களும், அவற்றை நிறைவேற்றுவதற்குத் தகுதியான மனப்பான்மையை உபதேசிக்கும் நம் சாஸ்த்ரங்களுமே. இந்தப் படிப்பினைகளில் முக்கியமானது பகவான் கீதையில் செய்த “பலனை உத்தேசிக்காமல் உன் கடமையைச் செய்” என்ற உபதேசமே. வேலை செய்யாமல் ஊதிய ஏற்றத்துக்காக ‘ஸ்ட்ரைக்‘ செய்யும் “உழைப்பாளிகளும்”, பள்ளிக்கூடத்தில் படிக்காமல் ‘டிக்ரீ’யும் ‘டிப்ளோமா’வும் உத்தியோகமும் கிடைக்காவிட்டால் ஊரில் நெருப்பு வைப்போம் என்ற “மாணவர் இயக்கங்கள்” நடத்துபவரும் பகவானுடைய உபதேசத்தைத் தலைகீழாக ஸ்வீகரித்துள்ளார்கள் போலும்! இது அல்லவா நவநாகரிகத்தின் கைகண்ட பலனாக இருக்கிறது?
ஆசாரம், அநுஷ்டானம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல் அல்ல. அதிகாரிக்குத் தகுந்தபடியும், வசதிக்குத் தகுந்தபடியும், கால நிலைக்குத் தகுந்தபடியும் சாஸ்த்ரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் அவசியம் செய்ய வேண்டியவை என்று சொல்லக் கூடியவை வெகு சிலவே, ஊர்வம்பில் காலம் கடத்துவோர் இவற்றைச் செய்யப் பொழுது இல்லை என்று சொல்லுவது வியக்கத்தக்கதே, ஆனால் இப்படி நம் தர்மத்துக்குத் குறைவு வரும் ஒரு காலம் உண்டு என்று எண்ணித்தானோ என்னவோ, கடவுளை வணங்கி அவனிடம் அன்பு செலுத்தி ஆன்மசாந்தி பெற ஒரு சுலபமான வழியை நம் முன்னோர்களான பெரியோர்கள் வெகு காலத்துக்கு முன்னேயே கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான் பகவானுடைய நாமஸ்மரணை. சாந்தி தத்வத்தை உலகத்தில் பரவச் செய்வதே தமது முக்கிய நோக்கம் என்று முரசு கொட்டும் முற்போக்காளர்கள் காந்திக்கு அந்தரங்கச் சொந்தமான ராம நாமாவைப்பற்றி மட்டும் பேச்சே எடுப்பதில்லை. இதுவும் ஒரு விந்தை அல்லவா?
நாமத்தின் பெருமையை வேதம் பேசுகிறது. விஷ்ணுபுராணம், பாகவதம், ஸ்காந்தம் முதலிய புராணங்கள் கலியுகத்துக்கு அதைவிட மேலான மோக்ஷ ஸாதனம் கிடையாது என்று பறைசாற்றுகின்றன. ஸமஸ்தமான வைதிக, ஸ்மார்த்த கர்மாக்களிலும் ஏற்படக்கூடிய குற்றங்குறைகளுக்கு அச்யுத, அநந்த, கோவிந்த என்ற மூன்று நாமாக்களின் உச்சாரணமே தகுந்த பரிஹாரம் என்பது சாஸ்த்ரங்களின் முடிவு. இந்த நாமப்ரபாவத்தின் காரணங்களைப் பல பேரறிஞர்கள் தங்களுடைய நிபந்தக்ரந்தங்களில் விளக்கி, அதை ஆக்ஷேபிப்பவர்களுடைய வாதங்களைப் பல யுக்திகளைக் கொண்டு கண்டித்திருக்கிறார்கள். விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஸ்ரீ சங்கர பகவத்பாதரவர்கள் மீதி தர்மங்களைக் காட்டிலும் நாமஸ்மரணத்தின் ஏற்றத்துக்கு ஆறு காரணங்கள் கூறியிருக்கிறார். இதில் ஜீவஹிம்ஸை இல்லை, பணச்செலவு இல்லை, பிறர் ஸெளகரியத்தை அபேக்ஷிக்க வேண்டியதில்லை, காலம், தேசம், ‘இவ்விதம் தான் செய்ய வேண்டும்‘ என்ற கட்டுப்படுகள் இல்லை என்பதை விளக்கியிருக்கிறார். பூர்வமீமாம்ஸை முதலிய சாஸ்த்ரங்களின் கண்ணுடன் நாமஸ்மரணையைக் கூர்ந்து நோக்கி அதனுடைய பல மர்மங்களை விவரமாக வெளிப்படுத்திய லக்ஷ்மண மிச்ரர், அநந்ததேவர், பகவந்நாம போதேந்த்ரர், அய்யாவாள் என்று பிரஸித்தி பெற்ற ஸ்ரீதர வேங்கடேச சாஸ்திரிகள் முதலான மஹான்கள் செய்திருக்கும் க்ரந்தங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை ஆராய்ந்து, நவீன மனப்பான்மைக்கு முரணாகப் படும் சில அங்கங்களுக்கு ஏற்படக் கூடும் ஆக்ஷேபங்களை அவர்கள் எப்படிச் சமாளித்திருக்கிறார்கள் என்ற விஷயங்களை ‘ப்ரதீப’த்தில் வரும் இதழ்களில் சுருக்கமாக விசாரிப்போம்.

Home Page