Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1980 இதழ் 7,8


ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை

நவராத்திரியில் மஹாநவமியன்று ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை செய்கிறோம். ஸ்ரீ பரமசிவனுடைய ஸகோதரி ஸரஸ்வதி. மஹாவிஷ்ணுவின் ஸகோதரி பார்வதி தேவி. பரமசிவனுக்கு ஜடையும், சந்திரகலையும், முக்கண்ணும் சுத்த ஸ்படிக ஸ்வரூபமும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. ஞானத்தைக் கொடுக்கும் பரமசிவனுடைய தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் ஸ்படிக மாலையும், கையில் புஸ்தகமும் கூறப்பட்டுள்ளன. அந்த ஸதாசிவ மூர்த்தியே ஸர்வ வித்தைகளுக்கும் ஈசானன் அல்லது ப்ரபு என்று வேதம் கூறுகின்றது. இவ்விதம் கூறப்பட்டுள்ள ஸகல லக்ஷணங்களும் ஸரஸ்வதியிடம் பொருந்தியுள்ளன. புஸ்தகம், ஸ்படிகமாலை, வெண்ணிறம், சந்திரகலை, ஜடை, முக்கண், ஞானானுக்கிரஹம் இவையெல்லாம் ஈசனுக்கும் ஸரஸ்வதிக்கும் பொதுவானவை. கலக்கத்தைக் கொடுக்கும் காமமே தெளிவைக் கொடுக்கும் ஞானத்திற்கு இடையூறு. காமனை எரிக்கும் மூன்றாம் கண் ஞானத்திற்குத் துணையாக நிற்கிறது. ஸூர்யனுடைய பிம்பம் ஒளியைக் கொடுப்பினும் தாபத்தை விருத்தி செய்கின்றது. சந்திரகலையோ ஒளியைக் கொடுத்துத் தாபசாந்தியையும் கொடுக்கின்றது. அதிலும் பிறைச்சந்திரன் ஞானவளர்ச்சிக்கு அறிகுறியாக நிற்கின்றது. ஸ்படிகம் களங்கமில்லாத தன்மையை அறிவிக்கின்றது.

ஆதலால் இந்த லக்ஷணங்களெல்லாம் வித்யைக்கு அதிபதியான ஈசானனுக்கும், வித்யா ஸ்வரூபிணியான ஸரஸ்வதி தேவிக்கும், ஒன்றாகப் பொருந்தியவை. த்வந்த்வங்கள் அற்றுத் தெளிவைக் கொடுக்கும் வாணீதேவிக்கு, ’சாரதா’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. தென்னாட்டில் நகரேஷு காஞ்சி என்னும் ஸ்ரீ காஞ்சி மாநகரத்தில் காமகோடி பீடம் இருப்பதுபோல் வடநாட்டில் பாரத தேவிக்கு முகமண்டலத்தைப் போல் இருக்கும் வெண்மையான காச்மீர மண்டலத்தில் ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பட்டிருக்கின்றது.

சரத்காலத்தில் ஸ்ரீ பாரத பூமியே நிர்த்வந்த்வமாயும், சாந்தமாயும் ப்ரகாசமாயும் விளங்குகிறாள். பங்குனி, சித்திரை மாதங்களில் நம் நாட்டின் மற்ற இடங்களில் உள்ள உஷ்ணத்தைவிடப் பதின்மடங்கு அதிகமுள்ள தாபம் டில்லி, காசி, ப்ரயாகை முதலிய இடங்களில் காணப்படும். வட நாட்டுப் பிரதேசங்களில் மார்கழி மாதம், தென்னாட்டைவிடப் பதின்மடங்கு அதிகமான குளிர் கொண்டிருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் விந்திய பர்வதத்தையுடைய மத்ய மாகாணத்திலும், ஸஹ்ய பர்வதத்தையுடைய குடகு மலையாள ப்ராந்தியங்களிலும் ஒரே இடைவிடா மழை பொழிந்து கொண்டிருக்கும். சரத் ருதுவின் ஆரம்பமான ஆச்விஜ சுக்ல பக்ஷத்திலோ காச்மீரம், ஹஸ்தினாபுரம், காசி, கல்கத்தா, காஞ்சி, குடகு, கன்யாகுமரி முதலிய பாரத கண்டத்திலுள்ள ஸகல ப்ராந்தியங்களிலும் வடநாட்டிற்கும் தென் நாட்டிற்கும் பேதமற்று, அபேத நிலையில், சீதோஷ்ணங்களென்னும் த்வந்த்வங்கள் விலகி, ஸமமாய் வெண்ணிறமான மேகங்களும், சாந்தமான சூர்ய பிரகாசமும், அஸ்தமித்த பிறகு சரத்கால சந்திரனுடைய நிலவும் நிலவி, உலகமே வித்யாதி தேவதையான ஸரஸ்வதியின் தெளிவான ஸ்வரூபமாக விளங்குகின்றது.

வெளியுலகம் தன்மயமாகும் பொழுது, உள்ளத்தையும் தன்மயமாக்கி, உள்ளும் புறமும் ஒன்றாகி ஸுலபமான அனுக்ரஹ ஸித்தியைப் பெறலாம். உதாரணமாக, நம் பெரியோர்களெல்லாரும் காலையில் எழுந்தவுடன் ’ஹரி நாராயண’ என்ற ஸ்மரணத்தையும், ஸ்ந்த்யா காலத்தில் சிவாலயங்களில் நெற்றியில் திருநீறு அணிந்து சிவஸ்மரணம் செய்வதையும் கண்டிருக்கிறோம். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முத்தொழில்களில் பரமசிவன் ஸம்ஹார மூர்த்தி என்னும் கோலத்தில் விளங்குகிறான். ஸம்ஹாரம் என்னும் பதத்திற்கு நாசம் என்னும் பொருள் கொள்வது சரியில்லை. அநாதியான ப்ரபஞ்சம் தனது காரண ஸ்வரூபத்தில் ஒடுங்குமிடம் என்னும் வேதப் பொருள் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ப்ராணியின் தூக்கத்தில் எல்லா இந்திரிய சக்திகளும், தம் நிலையில் ஒடுங்குவதைப் போல், ப்ரபஞ்சத்தின் முடிவில் ஸகல சராசரங்களும் சிவஸ்வரூபத்தில் அடங்கி ஒடுங்கி நிற்கின்றன. ப்ரபஞ்சத்தின் முடிவைப் போல ஒவ்வொரு நாளின் பகலின் முடிவிலும் தாபம் ஒடுங்குகின்றது. சப்தம் அடங்குகிறது. ஆவினங்களும் பறவைகளும் தத்தம் பட்டிகளிலும், கூடுகளிலும் அடங்குகின்றன. இந்தக் காலமே சிவஸ்வரூபத்தின் அதிகார காலம். ஊரெல்லாம் பறக்கும் உள்ளமெனும் பறவையும் ஒடுங்கி சாந்த நிலையை அடைய வேண்டுமென்னும் பேரானந்த அவாக்கொண்டவர்கள், இயற்கையடங்கும்போது தங்கள் உள்ளத்தையும் தம் நிலையாகிய சிவனிடத்தில் அடக்க எண்ணம் கொள்ள, ஸஹஜமாயும், ஸுலபமாயும் ஸபலமாயுமாகிறது. இதுவே ஸந்த்யா காலத்தில் பெரியோர்கள் சிவஸ்வரூபத்தில் லயிப்பதற்குக் காரணம். கீழ்காற்று அடிக்கும்போது கடலில் உள்ள கப்பலோட்டும் மாலுமி மேற்றிசை நோக்கிப் புறப்படுவது ஸஹஜமும், ஸுலபமுமன்றோ? அதுபோல் உலகமெல்லாம் ஸம நிலையும், வெண்ணிறமும், சாந்தமும், தெளிவும் அடையும்பொழுது இக்குணங்களே உருவெடுத்து வந்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆராதனத்தைச் செய்து, ஸகல பக்த கோடிகளும் ஞானமும் தெளிவும் அடைவது இயற்கையாகும்.

ஸ்ரீ ஸரஸ்வதியைப் பூஜிக்கும் முறை

ஆச்விஜ மாஸத்துச் சுக்ல பக்ஷத்தில் (புரட்டாசி அமாவாஸைக்குப் பின் வரும் வளர்பிறையில்) வரும் மூல நக்ஷத்திரத்தன்று, பீடத்தில் வெண்பட்டைப் பரப்பி, அதன் மேல் வீட்டிலுள்ள எல்லாப் புஸ்தகங்களையும் மண்டலாகாரமாக ஸ்தாபித்து, அந்தப் புஸ்தக மண்டலத்தில் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.  ஆவாஹனத்திற்குமுன் ஹ்ருதயத்தில், ஸரஸ்வதியை த்யானம் செய்து கொண்டு, அந்த த்யானமூர்த்தியைச் சிரஸ் பர்யந்தம் ஏற்றி வைத்து, அந்த மூர்த்தியே தேஜோமயமாகியதாகச் தியானித்து, அந்தத் தேஜஸ் சுவாசத்தின் வழியாக வெளியில் வருவதாக நினைத்து, கையில் புஷ்பாக்ஷதாஞ்ஜலியுடன் இந்தத் தேஜோமயமான தேவியை மேற் சொன்ன புஸ்தகமண்டலத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டியது. முதலில் ஹ்ருதயத்தில் த்யானிக்கும்பொழுது கீழ்க் கண்ட ச்லோகங்களின் அர்த்தப்படி த்யானம் செய்ய வேண்டும்.

नमस्कृय जगत्पूज्यां शारदां विशदप्रभाम् lll
सितपद्मासनां दॆवीं त्रयम्बकीं शशिभूषणाम् llllll

வெண்தாமரை மலரில் அமர்ந்து, முக்கண்ணோடும், சந்திர கலையோடும் வெண்மையான காந்தியுடன் விளங்கும் சாரதா தேவியை நமஸ்கரித்து பூஜிக்கிறேன்.

ஓங்காராஸனத்தில் ஆரோகணித்து, ஓங்காரத்தின் பொருளேயாகி நின்று வெண்மையாகவும், கண்ணாடியின் ஸ்வச்சம் போன்ற ஆடையால் அலங்கரிக்கப்பட்டுச் சரத்காலச் சந்திரனுக்கு ஒப்பான முகமண்டலத்தோடு நாதப்ரஹ்மமே உருவெடுத்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியைத் த்யானம் செய்கிறேன். பிறகு கீழ்க்கண்ட ச்லோகத்தினால் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

अत्रागच्छ जगद्वन्द्यॆ सर्वलॊकैकपूजितॆ illll
मया कृतामिमां पूजां संगृहाण सरस्वति ll

"இந்தப்புஸ்தக மண்டலத்தில் தாங்கள் வீற்றிருந்து ஸான்னித்யத்தை அளிக்க வேணும். உலகமெல்லாம் பூஜிக்கும் ஸரஸ்வதி தேவியே! நான் செய்யும் இச்சிறு பூஜையை அங்கீகரித்துக் கொள்ள வேணும்".

மூல நக்ஷத்திரத்தன்று இவ்விதம் ஆவாஹனம் செய்து, லகுவான பூஜை செய்யவேண்டும். பூராட நக்ஷத்திரத்தன்றும் ஸாமான்யமாகப் பூஜை செய்யவும். உத்திராட நக்ஷத்திரம் கூடிய மஹா நவமியன்று, விசேஷமான நைவேத்யத்துடன், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், மது பர்க்கம், பஞ்சாம்ருத ஸ்னானம், வஸ்திரயுக்மம் (இரு வெண்பட்டுகள்), உபவீதம், ஆபரணம், குங்குமம், மை, சந்தனம், அக்ஷதை, புஷ்பமாலை, தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கர்ப்பூர ஆரத்தி, புஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், ஆகிய உபசாரங்களுடன் சிறப்பான பூஜை செய்யவேண்டும். கடைசியில் ப்ரார்த்தனை:

ஸரஸ்வத்யை நம:, பாரத்யை நம:, வாக்தேவதாயை நம:, மாத்ருகாயை நம:,
சதுர்முக ப்ரியாயை நம:, ஹம்ஸாஸனாயை நம:, வேதசாஸ்த்ரார்த்த
தத்வஜ்ஞாயை நம:, ஸகல வித்யாதிதேவதாயை நம:

என்ற எட்டு நாமாக்களைக் கொண்டு முறையே எருக்கு, சண்பகம், புன்னை, நந்தியாவர்த்தம், பாதிரி, கண்டங்கத்தரி, அரளி, தும்பை இவ்வெட்டுப் புஷ்பங்களைச் சமர்ப்பிக்க வேணும்.


lदॊर्भिर्युक्ता चतुर्भिस्स्फटिकमणिमयींमक्षमालां दधाना
हस्तॆनैकॆन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरॆण l
भासा कुन्दॆन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना
सा मॆ वाग्दॆवतॆयं निवसतु वदॆन सर्वदा सुप्रसन्ना ll
(இந்த ச்லோகத்தையும், மற்ற ச்லோகங்களையும் சொல்லவேணும்.)

’ஸ்படிகமாலையும், புஸ்தகமும், வெண்தாமரைப் பூவும், கிளியும் நான்கு கைகளில் தரித்து, குந்தபுஷ்பம், சந்திரன், சங்கம், ஸ்படிகமணி- இவைகளைப் போன்ற பரிசுத்தமான காந்தியுடன் விளங்கும் ஸரஸ்வதி எனது முகத்தில் ஸர்வ காலத்திலும் வசித்துக் கொண்டிருப்பாளாக.’  சில த்யானங்களில் வெண்தாமரைக்குப் பதிலாக வீணையுமுண்டு.

चतुर्दशसु विद्यासु रमतॆ या सरस्वती l
सा दॆवी कृपया मह्यं जिह्वासिद्धिं करॊतु च ll

’எந்த ஸரஸ்வதி பதினான்கு வித்தைகளில் ஆனந்தித்துக் கொண்டிருக்கிறாளோ, அந்தத் தேவீ எனக்குக் க்ருபையோடு வாக்ஸித்தியைத் தந்தருள்வாளாக.’

பதினான்கு வித்தைகளாவன:-

வேதம் நான்கு, அங்கங்கள் ஆறு (சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்ப ஸூத்ரம்), உபாங்கம் நான்கு, (பதினெண் புராணங்கள் ந்யாய சாஸ்திரம், மீமாம்ஸா சாஸ்திரம், தர்மசாஸ்திரம்.)

உருவமேயில்லாத மரமாத்ம ஸ்வரூபம் இவ்வித தெய்விக உருவங்களைக் கொள்வது, அடியார்களின் மனசில் த்யான காலத்தில் குடிகொள்வதற்காகத்தான். உருக்கு நெய் குளிர்ந்தால் வெண்ணிறத்தையும் கெட்டித் தன்மையையும் அடைவது போல், உருவமில்லாப் பரம்பொருள், அடியார்களுடைய அன்பின் குளிர்ந்த தன்மையால் வெண்ணிறத்தையும் உருவத்தையும் அடைகின்றது.  மற்றும் அ-காரம் முதல் க்ஷ-காரம் வரையில் உள்ள ௫௧ எழுத்துக்களின் நாதங்கள் எனப்படும் ஒலிகளே ஸ்ரீ ஸரஸ்வதி தேவதையின் உருவமாய் அமைந்திருக்கின்றன என்று ஹ்ருதயத்தில் த்யானம் செய்துகொண்டு பூஜிக்க வேணும்.

இவ்விதம் மஹநவமியில் பூஜை செய்து, அன்னமிட்டு ச்ரவண நக்ஷத்திரத்தன்று லகுவான பூஜையுடன் தேவியை யதாஸ்தானம் செய்து, படிக்க ஆரம்பிக்க வேணும். மூல நக்ஷத்திரம் முதல் உத்திராட நக்ஷத்திரம் முடிய மௌனமாக இருந்து. ச்ரவண நக்ஷத்திரத்தில் படிப்பு ஆரம்பித்தால், நிறைந்த வாக்ஸித்தி கிடைக்கும்; அறிவின் பயனை அடையலாம்.

विमलपटी कमलकुटी पुस्तकरुद्राक्षशस्तहस्तपुटी l
कामाक्षि पक्षमलाक्षीं कलितविपञ्ची त्वमॆव वैरिञ्ची ll
या कुन्दॆन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता
या वीणावरदण्डमण्डितकरा या श्वॆतपद्मासना l
या ब्रह्माच्युतशंकरप्रभृतिभिर्दॆवैसदा पूजिता
सा मां पातु सरस्वती भगवती निश्शॆषजाड्यापहा ll

Home Page