ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


துர்மதீனாம் துருக்தீ...

दुर्मतीनां दुरुक्ती:...

ஸ்ரீ அப்பய்யதீக்ஷிதர் அறிவுக் களஞ்சியம். பலதரப்பட்ட சாஸ்திரங்களுக்குப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். அவருடைய சிந்தனையில் பிறந்த நூல்கள் பண்டிதர்களைக் கண்டு கொள்ளும் கருவியாகப் பயன்படுகின்றன. நிறைகுடம். சிக்கலான விஷயங்களிலும் தங்கு தடையின்றிச் செயல்பட்டு, திரைமறைவில் இருக்கும் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் திறன் படைத்தது அவருடைய அறிவு.

சைவத்திற்குப் பிறகு தோன்றிய வைணவத்தின் முரட்டுத்தனமான ஏசல்களினால் புரையோடிய சிவத்வேஷத்தை அகற்றும் அருமருந்தாக "ஆனந்தலஹரியை" உலகுக்கு அளித்தார் தீக்ஷிதர். வைஷ்ணவத்தின் சிவாபகர்ஷத்தினால் கலக்க முற்ற மனதிற்கு கதகம் போல செயல்பட்டது ஆனந்த லஹரீ நூல்.

அப்பெரியாரின் நினைவு நாள் சொற்பொழிவு ஒன்று சென்னை ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதியினால் ஏற்பாடு செய்யப்பட்டு விமர்சையாக நடந்தேறியது. ஹரியையும் ஹரனையும் இரு கண்கள் போல் ஸமநோக்குடன் போற்றிப் புகழ்பாடும் அம்மகானின் அந்தரங்கத்தை அவரது மணிமொழிகளை மேற்கோள்காட்டியே அரங்கத்துக்கு கொண்டுவந்து அவையோரை அதிசயத்தில் அழ்த்தினார் சொற்பொழிவாளர். ’சிவாபகர்ஷத்தை அகற்றுவது எனது பணி’ என்று தன் குறிக்கோளை விளக்கும் தருவாயில் தீக்ஷிதர் (दुर्मतीनां दुरुक्ती:) "தப்பான சிந்தனையுடையவர்களின் முரை கேடான சொற்கள்" என்று பதப்ரயோகம் செய்துள்ளார். ’துர்மதீனாம் துருக்தீ:’ என்ற சொல் சிந்தனையைக் கிளறத்தான் செய்தது. ’தீக்ஷிதர் போன்ற பெரியோர்களிடமிருந்து இவ்வித சொல்லா?’ என்ற தயக்கம். தீக்ஷிதர் தினத்தில் பேசியவர் இச்சொல் சொன்னதைக் கேட்டதும் உபேக்ஷை செய்ய வேண்டியதாக ஒதுக்கப்பட்டு மறந்துபோன கட்டுரை ஒன்று மனக்கண் முன் நிழலாடியது. ஆம்! ஆண்டவன் ஸந்நிதியிலிருந்து வெளிவரும் பத்திரிகை, பரமபதத்தை அளிக்கவல்ல பாதுகையின் பெயர் அதற்கு, ஸ்ரீரங்கநாத பாதுகை என்று. விஷ்ணுபரத்வத்தை பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிவாபகர்ஷத்தை விளக்கி கட்டுரையை அப்பத்திரிக்கையில் நிரப்பி நிம்மதியை அடைந்திருக்கிறார் சிவத்வேஷி ஒருவர். ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகளின் கண்ணிற்கும் படாமல் எப்படியோ அந்தப் பத்திரிக்கையில் இக்கட்டுரை இடம் பெற்று விட்டது. சந்திரனிடமிருந்து விஷம்; சந்தனத்திலிருந்து நெருப்பு; ஸ்ரீரங்கனாத பாதுகையிலிருந்து சிவாபகர்ஷம்? முற்றிலும் அஸம்பாவிதம் என்றே எண்ணி மறக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் அந்தச் சொற்களுக்கு இந்த சிவத்வேஷி கட்டுரை உதாஹரணமாக அமைந்திருப்பதை எண்ணும் போது தீக்ஷிதரின் தீர்க்கதரிசனம் மிகவும் போற்றத்தக்கதே.  அவ்வப்போது இம்மாதிரி ஆலர்க்க விஷம் தலைதூக்கும் என்று தீக்ஷிதர் எண்ணினார் போலும்!

விஷத்தைப்பற்றிய கட்டுரையில்தான் தம் விஷத்தை கொட்டியிருக்கிறார் ஸ்ரீரங்கநாத பாதுகையில் கட்டுரையாளர். வாஸுகியைக் கயிறாகவும் மந்தர பர்வதத்தை மத்தாகவும் கொண்டு தேவர்களும் அஸுரர்களும் பால் சமுத்திரத்தைக் கடைந்தனர், அம்ருதப்ராசனம் செய்வதற்காக. ஆனால் அமிருதம் தோன்றுவதற்கு முன்பே வாஸுகியின் வாயிலிருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. அதை அள்ளிப் பருகி அவனியைக் காத்தார் கைலாஸபதியான பரமசிவன். இதனாலேயே அவருக்கு நீலகண்டன் என்று பெயர். இந்த சரித்திரம் வேதம், புராணம், இதிஹாஸம் காவ்யங்கள் முதலிய எல்லாவற்றிலும் காணும் உண்மையாகும்.

மஹாபாரதம், மத்ஸ்ய புராணம், வாயுபுராணம், அக்நிபுராணம்,ஸ்ரீ மத்பாகவதம், வால்மீகி ராமாயணம் போன்ற நூல்களிலும், நீலகண்ட விஜய சம்பூ போன்ற காவ்யங்களிலும் காண்பதாகும்.

ஸத்யம் இவ்விதமிருக்க, ஸ்ரீரங்கநாத பாதுகையில் எழுதிய கட்டுரையாளர் கூறுகிறார்:- "எம்பெருமான் ருத்திரனைப் பாத்திரமாக வைத்துக் கொண்டு விஷத்தைப்பருகி உலகத்தை காப்பற்றினார்" என்று. உண்மைக்குப் புறம்பான தம்முடைய கருத்துக்கு வேதமந்த்ரம் ஒன்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அந்த மந்த்ரத்தையும் அதற்குள்ள ஸ்ரீ ஸாயனாசார்யரின் உரையையும் வாசகர்கள் கவனித்தால் கட்டுரையாளரின் கருத்துக்கும் இதற்கும் கொஞ்சங்கூடச் சம்பந்தமில்லாமலிருப்பது புரியவரும். அந்த வேதமந்த்ரத்தில் பாற்கடலை கடைவது பற்றியோ அமிருதம் விஷம் இவைகளைப் பற்றியோ பேசப்படவில்லை.

கிரணங்களுடன் கூடிய சூரியன் மருத்கணங்கள் அல்லது வைத்யுதாக்னியுடன் ஜலத்தைக் குடிக்க ஸாதனமாக உள்ள தன் கிரணங்களைப் பயன்படுத்திக் கொண்டான் என்ற பொருளில் உள்ள மந்த்ரம் ஸாயன பாஷ்யத்துடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கவனித்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டிருப்பது புலனாகும்.

ஸ்ரீ தீக்ஷிதர் அவைகளின் சொல்லுக்கு முற்றிலும் தகுதி பெற்றவர் இக்கட்டுரையாளர் என்பதை எண்ணி மனம் ஆறுதல் அடைகிறது.

वायुरस्मा उपामन्थत्पिनष्‍टिस्माकुनन्नमा |
केशी विषस्य पात्रॆण यद्रुद्रॆणापिबत्सह ||
( ऋ. अ. 8 व 25-7 )

केशी-रश्मिभिर्युक्तः सुर्यः....... रुद्रॊ-वैद्युताग्निः
तेन सह वर्तमानः..... विषं-उदकं, पात्रॆण पानसाधनॆन रश्मिजालॆन अपिबत् ||

*********************************************************************************************

 

காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ பரமாசார்யர்கள்

காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ பரமாசார்யர்கள் சதாரா ஸ்ரீ சங்கரமடத்தில் 2 மாத சாதுர்மாஸ்ய சங்கல்பம் பூர்த்தியான கடைசி நாளன்று (செப்டெம்பர் 24-ஆம் தேதி) காலை 11 மணிக்கு அந்த ஊர் சமர்த்த ராமதாஸ் மந்திருக்கு விஜய யாத்திரையாக பக்தர்கள் புடைசூழ கிளம்பினார்கள். மந்திரில் பிற்பகல் 3 மணிவரை தங்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தர்சனம் கொடுத்து அனுக்ரஹித்தார்கள். பிறகு சதாரா சிடிக்கு வெளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவருகிற ஸ்ரீ ராம மந்திருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். மந்திர் நிர்வாகிகளும் அந்த பேட்டை வாசிகளும் மேளதாளத்துடன் ஸ்ரீ ஆச்சார்யர்களை பக்தியோடு வரவேற்றார்கள். பெண்மணிகள் ஆரத்தி எடுத்து பக்தி பாடல் பாடினார்கள். ஸ்ரீ ராம மந்திர் சுற்றிலும் பல வர்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தது கண்கொள்ளாக் காக்ஷியாக இருந்தது. மந்திரில் கீதை விச்வரூப கட்டத்தை வாசித்தபிறகு, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தர்சனம் கொடுத்து அனுக்ரஹித்தார்கள். அடுத்த நாள் அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி காலை மந்திரிலிருந்து சதாரா ரோடில் 5 கி.மீ. தூரத்திலுள்ள ஓர் சிறிய கிராமத்தை சிஷ்யகோடிகளுடன் அடைந்தார்கள். இங்கிருந்து விஜய யாத்திரையை தொடங்கினார்கள். சில தினங்களுக்குப் பிறகு சதாராவுக்கு திரும்பவும் விஜயம் செய்து அங்கு நவராத்திரி சமயம் தங்குகிறார்கள்.

Home Page