ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -1 கீலக வருஷம் மாசி மாதம்
12-2-1969


செய்திகள்

வேத பாராயண ஸபா, ஸ்ரீ சங்கர மடம், மேலமாம்பலம், சென்னை.
இந்த ஸபையின் எட்டாவது ஆண்டு விழா 26-12-68 முதல் 29-12-68 வரை ஸ்ரீ சங்கர மடத்தில் வெகு விமரிசையாக நடந்தது. காலையில் ரிக் யஜுஸ் ஸாமவேத மந்த்ர ஹோமங்களும், மாலையில் ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி, உத்தமூர் வீரராகவாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ ஸந்தானகோபாலாசாரியார், ஸ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா, ஸ்ரீ மடம் ராமஸ்வாமி சர்மா, காலடி சுப்பிரமண்ய சாஸ்திரிகள் இவர்களின் உபந்நியாஸங்களும் நடந்தன. ஸபா வெளியிட்டிருக்கும் ஆண்டு விழா மலரில் வேத சம்பந்தமான பல கட்டுரைகளும், தைத்திரீய உபநிஷத் நான்கு ப்ரச்னங்களும் அடங்கியுள்ளன.
திருச்சிராப்பள்ளியில் வேத பரிபாலன ஸபையின் 14-ஆம் ஸம்மேளனம்
ஸம்மேளனம் ஆரியன் பள்ளிக்கூடம் கட்டிடத்தில் 26-12-68 முதல் 29-12-68 முடிய நான்கு நாட்கள் அதிவிமரிசையாக நடந்தது. பிரதிதினம் காலை மாலை ஸ்ரீ வேதவ்யாஸ பூஜைக்குப் பிறகு, ரிக், சுக்லயஜுஸ், யஜுஸ், ஸாம வேதங்களின் விக்ருதிவிவரணம், வர்ணக்ரமம் முதலியவற்றைப் பற்றிப் பிரபல வேதலக்ஷணக்ஞர்களான ப்ரஹ்மஸ்ரீ திருச்சி ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள், பரசுராம கனபாடிகள், வைகைநல்லூர் பாலஸுப்ரஹ்மண்ய கனபாடிகள், குழுமணி வாஸுதேவ கனபாடிகள், புதுக்கோட்டை பஞ்சாபகேச தீக்ஷிதர், திருவானைக் கோயில் ஸ்ரீ மடம் ஆஸ்தான வித்வான் t.v. பாலகிருஷ்ண சாஸ்திரிகள், சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், மணக்கால் ஸுப்ரஹ்மண்ய கனபாடிகள், s.m. கிருஷ்ண சர்மா அவர்கள், உ.வே. செளரிராஜய்யங்கார் ஸ்வாமி, ராமநாத தீஷிதர், திருவானைக் கோயில் ஸுப்ரஹமண்ய ச்ரெளதிகள் ஆகியவர் உபந்யஸித்தும் விந்யாஸம் முடிவுற்றதும், ஆவஹந்தி ஹோமமும், ரிக் ஸூக்த அநுவாக ஹோமமும், ஸாமவேத ஸ்ரீஸூக்த ஹோமமும் நடந்தன. மாலையில் ‘கல்வைத்தவாரம்’, ப்ரதக்ஷிண நமஸ்காரங்களுக்குப் பிறகு, ஆசார்ய ஸ்வாமிகள் அநுக்கிரகித்து அனுப்பிய ப்ரஸாதங்கள் விநியோகிக்கப்பெற்றன.
வேத தர்ம பரிபாலன ஸபையின் ஸம்மேளனங்கள்
அரசனங்காட்டில் வேத தர்ம பரிபாலன ஸபையின் ஸம்மேளனம் 9-1-1969 முதல் 12-1-1969 வரை மிகவும் விமரிசையாக நடந்தது. ரிக்வேத, கிருஷ்ண யஜுர்வேத, சுக்ல யஜுர்வேத, ஸாமவேத பாராயணங்கள் நடைபெற்றன. ரிக் வேதத்தைப் பற்றிப் பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும், கிருஷ்ண யஜுர்வேதத்தைப் பற்றித் திருவானைக்கா கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும், ஸாமவேதத்தைப் பற்றி உமையாள்புரம் அய்யாஸ்வாமி சாஸ்திரிகளும் உபந்யாஸம் செய்தார்கள். நான்காம் நாளன்று (12-1-69) ரிக்வேத ஸம்ஹிதா அநுவாக ஹோமமும், கிருஷ்ண யஜுர்வேத ஆவஹந்தி ஹோமமும், ஸாமவேத ஸ்ரீ ஸூக்த ஹோமமும் நடைபெற்றன. ஸாயங்காலம் கல் வைத்த வாரமும், அதையடுத்துச் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீஷிதரின் வேத மகிமையைப்பற்றிய உபந்யாஸமும் நடந்தன. முடிகொண்டான். ஆதி M.R. நாராயணஸ்வாமி அய்யரும், p.s. சீதாராமய்யரும் நான்கு நாட்கள் உடன் இருந்து ஸபையைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.
நெய்வேலி மகாஜனங்களின் ஆறாவது பிக்ஷாவந்தனம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் 1964-ஆம் வருஷம் ஜனவரி மாதம் நெய்வேலி புது நகருக்கு முதல் முறையாக விஜயம் செய்தார்கள். நெய்வேலி வாசிகளின் பாக்கியத்தினால் ஸ்ரீ ஆசார்யார்கள் மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள். இந்த விஜயத்தின் ஞாபகார்த்தமாக, ஸ்ரீ ஜகத்குருவை நேரில் தரிசனம் செய்து அநுக்கிரகம் பெற, பிரதி வருஷமும் ஜனவரி (தை) மாதத்தில் ஸ்வாமிகளுக்கு நெய்வேலி மஹாஜனங்களின் சார்பில் பிக்ஷாவந்தனம் செய்து வைக்க வேண்டும் என்று தீர்மானமாயிற்று. ஸ்ரீ S.A. வேங்கடேசன் அவர்கள் தலைமையில் பிக்ஷாவந்தனக் குழு ஒன்று அமைந்தது. இதன்படி ஒவ்வொரு வருஷமும் நெய்வேலியிலிருந்து ஒரு தனிப் பஸ்ஸை அமர்த்திக் கொண்டு ஆசார்யர் முகாம் செய்யும் இடத்துக்குச் சென்று பிக்ஷாவந்தனம் செய்து வருவது வழக்கம்.
இந்த வருஷம் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையில் (நெய்வேலியிலிருந்து 700 மைல் தொலையில்) சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். 23-1-69 முதல் 28-1-69 வரை ஆறு நாட்கள் சுமார் ஜம்பது பேர் கொண்ட கோஷ்டியினர் நெய்வேலியிலிருந்து யாதொரு சிரமமும் அலுப்பும் இல்லாமல் பிராயணம் செய்து, ஸ்ரீ பெரியவர்களையும், ஸ்ரீ புதுப் பெரியவர்களையும் நேரில் தரிசனம் செய்துகொண்டு உள்ள நிறைவுடனும், பிக்ஷாவந்தனப் பிரஸாதங்களுடனும், ஸ்ரீ ஆசார்யரின் அநுக்கிரகத்துடனும் நெய்வேலி திரும்பினர். நெய்வேலியில் பிக்ஷாவந்தனப் பிரஸாதங்கள் யாவருக்கும் வழங்கப்பெற்றன.
அண்ணாதுரையின் மறைவு
தமிழகத்தின் முதலமைச்சர் திரு ஸி. என். அண்ணாதுரை அவர்கள், 2-2-1969 ஞாயிற்றுக்கிழை இரவு 12-22 மணிக்குக் காலமான செய்தி பாரத நாடெங்கும் துயரத்தை விளைவித்தது. அவர் மக்களின் மாபெரும் தலைவர் என்பதை, அவரது இறுதி யாத்திரையில் கூடிய ஜனசமுத்திரம் தெளிவாக விளக்கியது. பிரசித்த அமெரிக்க டாக்டர் மில்லரும், சென்னையிலும் வெளியூர்களிலுமுள்ள மருத்துவ நிபுணர்களும் அல்லும் பகலும் பாடுபட்டு அவரைக் காக்க முயன்றும், கொடிய காலன் அவருயிரைக் கவர்ந்து சென்றான். பதவியேற்ற இரண்டு வருஷ காலத்துக்குள் திரு அண்ணாதுரை அவர்கள் தம் உயர்ந்த நற்குணங்களினால் தமிழ் கூறும் நல்லுலகத்தை மட்டுமின்றி, உலக மக்களின் உள்ளத்தையே கவர்ந்திருந்தார். அவரை இழந்தது தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைக. அவரது மறைவினால் வருந்தும் அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

~~~~~~~

Home Page