ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -4 ஸெளம்ய வருஷம் வைகாசி மாதம்
14-5-1969


பக்தி நிர்ணயம்
நாமகீர்த்தனத்தால் மோக்ஷம்

முக்தர்கள் பகவந்நாமாவில் உள்ள ருசியால் வேறு எந்த ப்ரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் அதைச் செய்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. மோக்ஷத்தை விரும்புகிறவர்களுக்கு அதுவே பலன் தரும் என்பதற்கு ‘விஷ்ணுஸூக்கத்’தில் வரும் வேத வாக்யம் சான்று.
தமு ஸ்தோதார: பூர்வ்யம் யதா வித ருதஸ்ய கர்பம் ஜனுஷா பிபர்தன |
ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவிக்தன மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமஹே ||
இதற்கு ஒரு சாரார் பின்வருமாறு அர்த்தம் சொல்லுகிறர்கள்: “வேதங்கள் மாந்தரைப் பார்த்து இவ்விதம் உபதேசிக்கின்றன: ‘ஜகத்துக்குக் காரணமானவனும், வேதாந்த வாக்யத்தால் குறிக்கப்பட்டவனுமான அந்த ப்ரஸித்தனான விஷ்ணுவைத் துதியுங்கள். அவனுடைய கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லை ஆயினும் உங்கள் புத்திக்கு எட்டியவரையில் துதியுங்கள். அப்படிச் செய்வதால் ஜன்ம ஸாபல்யம் உண்டாகும். (அதாவது, ஜன்ம, மரணச் சுழலான ஸம்ஸாரம் நீங்கிவிடும்.) ஸ்தோத்ரம் செய்ய முடியாமற் போனாலும், ஓ அறிஞர்களே, இந்தப் பரமாத்மாவின் நாமாவையாவது சொல்லுங்கள்.’ இவ்விதம் விடுதலையை விரும்புவோரைப் பார்த்துச் சொல்லிவிட்டு. வேதங்கள் பகவானைப் பார்த்து வணக்கமாய், ‘ஹே விஷ்ணோ, தங்களுடைய சுத்த ஞானமயமானதும், ஸ்வப்ரகாசமானதுமான ஸ்வரூபத்தை வணங்குகிறோம்’ என்று பணிகின்றன.’
அநந்ததேவர் இந்த ஸூக்தத்திற்குச் சற்று மாறுதலாக அர்த்தம் கொள்கிறார். இது ‘ஸம்ஹிதை’யில் வரும் மந்த்ரமாக இருந்தாலும் ‘ப்ராஹ்மண’ வாக்யங்கள் போலவே விதிவாக்யமாகக் கொள்ளத்தக்கது. ஏனென்றால் இது வேறு இடத்தில் சொல்லாத ஒரு கட்டளையை இடுவதாக அமைந்திருக்கிறது. அது என்ன கட்டளை? “ஓ மாந்தர்களே, ஜகத்காரணனான விஷ்ணுவின் குணஸங்கீர்த்தனம் செய்யுங்கள்” என்பதே. இது கட்டளை என்பதை வேதங்கள் பின்வருமாறு நிரூபிக்கின்றனவாம். “அது செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால் அவன் உங்களுக்கெல்லாம் முன் தோன்றல் அல்லவா? அண்ணனை வணங்கு என்று சொன்னால் அதற்குக் காரணம் கேட்பார்களா? அது கடமை ஆயிற்றே!” ஆனால் வேதம் ஆணைப்படி நடப்பவனுக்கு ஏதாவது பலன் கிட்ட வேண்டுமே. இங்கே என்ன பலன் கிட்டுகிறது? இதை,
ருதஸ்ய-கர்மபலஸ்ய ஸுகதுக்காத்மகஸ்ய,கர்பம்-காரணபூதம் ப்ராந்திக்ஞானம்,ஜனுஷா –ஜனகேன அக்ஞானேன(ஸஹ)பிபர்தன –பூரயத-ஸமாபயத இத்யர்த: ||
(பகவத் குண ஸங்கீர்த்தனத்தால் பூர்வ கர்மாக்களின் பலனான ஸுகதுக்கங்களையும், கர்மாவுக்குக் காரணமான அநாதி அவித்யையையும் ஒழித்து மோக்ஷம் பெறுவீர்.) இவ்விதம் அர்த்தம் கூறி, ‘குண ஸங்கீர்த்தனம் எவ்விதம் செய்வது?’ என்ற கேள்விக்கு, (வேதத்திலோ, புராணங்களிலோ வரும் ஸ்தோத்ரங்களாலும், ஸம்ஸ்க்ருதம், தேசபாஷை இவைகளில் கிடைக்கும் மற்றத் துதிகள் மூலமும் பகவானைப் புகழலாம்” என்பது வேதத்தின் கருத்து என்கிறார். ஆகையால் இந்த ஸுக்தத்தின் முக்கிய நோக்கம் ஸங்கீர்த்தனமே. மோக்ஷமோ ‘அவாந்தரபலம்,’ அதாவது இடையில் கிடைக்கும் பலன்.
ஹே ஜானந்த:,அஸ்ய விஷ்ணோர்நாமசித்—ஸஹச்ரநாமஸு யதேவ ரோசதே தத், ஆ—ஈஷத்,விவிக்தன—வததேத்யர்த: ||
(“அறிஞர்களே, இந்த விஷ்ணுவின் ஆயிரம் நாமாக்களில் ஏதாவது ஒன்றைச் சற்றே சொல்லுங்கள்”) இவ்விதம் சொல்லும் வேதங்கள், “அதுவே போதும் மோக்ஷம் கைகூட” என்றும், “பகவானுடைய குணங்களைத் துதிக்க அந்த குணங்கள் என்னவென்று தெரியவேண்டும். நாமாவைச் சொல்லுவதிலோ அவ்வளவு ஞானங்கூடத் தேவையில்லை. பலனோ அதைவிட மேலானது” என்றும் ஸுசிப்பிக்கின்றன என்கிறார் அநந்ததேவர்.
அது மட்டுமல்ல. இவர்கள் விஷ்ணு ஸாயுஜ்யம் (விஷ்ணுவோடு ஒன்றுதல்) பெற்று, அக்காரணத்தால் வேதங்களும் ஸமஸ்த லோகங்களும் அவர்களைத் துதித்து ஏற்றும்படியான பெருமையையும் அடைகிறார்கள்.
மஹ:--ப்ரகாஷாத்மகம், தே—த்வாம், ஸுமதிம்—சுத்தபுத்திம் பஜாமஹே ஹே விஷ்ணோ ||
(ஓ விஷ்ணுவே, ஸ்வப்ரகாசமாயும், சுத்த சைதன்யமாயும் நிற்கும் உன்னை வணங்குகிறோம்)- என்ற இந்த வார்த்தைகள், விஷ்ணுவோடு ஜக்யமடைந்த பக்தர்களைப் பார்த்து வேதங்களால் சொல்லப்படுகின்றன என்றே வைத்துக் கொள்ளலாம் என்கிறார் அநந்ததேவர்.
மேற்கண்ட ச்ருதி வாக்யம்தான் பகவத் குண, நாம ஸங்கீர்த்தனத்தால் விஷ்ணு ஸாயுஜ்யம் ஏற்படும் என்று சொல்லும் எல்லாப் புராணங்களின் வசனங்களுக்கும் ஆதாரம். அந்தப்புராண வசனங்களில் சில கீழ்க்கண்டவை. ‘பாதஞ்ஜல ஸம்ஹிதை’யில், “ந்ருஹரே! (ஹே நரஸிம்ஹமூர்த்தே!) என்று எவன் தினம் நிஷ்களங்கமான மனத்துடன் பகவந்நாமாவைச் சொல்லுகிறானோ அவன் ஸமஸ்த பாவங்களினின்றும் விடுபட்டு ஹரியுடன் ஒன்றிவிடுகிறான்” என்று கூறப்படுகிறது. ‘வாத்ஸ்யாயன ஸம்ஹிதை’யில் “பசு ஹத்தி செய்தும், கள்குடித்தும் கெட்ட பாவத்தைச் செய்தவனும் ஹரிநாமத்தை இடையறாது சொன்னால் எல்லாப் பாவங்களும் விலகி ஸாயுஜ்யம் பெறுகிறான்” என்று காணப்படுகிறது. ‘சாதாதப ஸம்ஹிதை’யில், “என் பேரைச் சொல்லுவதாலேயே மனிதன் என்னுடன் கலந்துவிடுகிறான்” என்று பகவான் சொல்லுவதாகச் சொல்லியிருக்கிறது. ‘விஷ்ணுபுராண’த்தில் “பகவான் கையால் மரணமடைந்த ஹிரண்யகசிபுவுக்கும் ராவணனுக்கும் மோக்ஷம் கிட்டவில்லை. அப்படி இருக்க, சிசுபாலனுக்கு எவ்விதம் முக்தி கிட்டிற்று?” என்ற கேள்விக்கு, “த்வேஷத்தினால் இடையறாது அஹங்காரத்தோடு அவன் க்ருஷ்ணன் பெயரைச் சொன்னதே அவன் முக்திக்குக் காரணம்” என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
கீதையில், இறந்தவர் ‘தூம மாக்கம்,’ ‘அர்ச்சிராதி மார்க்கம்’ என்று இரு பாதைகள் வழியே மேல் உலகங்களுக்குப் போகிறார்கள் என்றும், முதலாவது கர்மபலத்தில் ஆசை வைத்தவர் போகும் வழி, இரண்டாவது ஆசையில்லாது கடமை என்று செய்தவர் போகும் வழி என்று சொல்லியிருக்கிறது. ஸங்கீர்த்தனம் முதலிய பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவர் போகும் வழி எது? அது தூம மார்க்கமாக இருக்க முடியாது; ஏனென்றால் அந்த மார்க்கம் விஷ்ணு ஸாயுஜ்யம் அளிப்பதில்லை. அர்ச்சிராதி மார்க்கமோ உபாஸகர்களுக்கு உரியது. உபாஸகர் இருவகை: (1) ‘அஹம்க்ரஹோபாஸனை (‘நானே ப்ரஹ்மம்’ என்ற தியானம்) செய்பவர் ஒரு சாரார், (2) ஒரு பிம்பத்தில் பகவானைத் தியானிப்பவர் இன்னொரு சாரார். ஸங்கீர்த்தனம் செய்யபவர் இந்த ஒரு கோஷ்டியிலும் சேர்ந்தவர் அல்லவே, இவர்களுக்கு எங்கு இருக்கிறது மூன்றாவது வழி? இவ்விதம் சந்தேகிப்பவர்களுக்கு அநந்ததேவர் சமாதானம் கூறுகிறார். “விஷ்ணுவை ஏற்றும் புராணங்களில் விஷ்ணு பக்தர்களைத் தேவர்களே நேரில் வந்து விமானத்தில் வைகுண்டம் அழைத்துச் செல்லுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. அது போலவே சைவ புராணங்களிலும் சிவ பக்தர்களுக்குக் கைலாஸம் கிட்டுகிறது என்று சொல்லியிருக்கிறது. இது நம்பத்தகாதது அல்ல. ஏனெனில் பாதராயண ஸூத்ரத்தில், ‘தேவதைகளுக்குச் சரீரம் உண்டு’ என்று சொல்லியிருக்கிறது. இவ்விதம் விஷ்ணு ஸாயுஜ்யம் பெற்றவர்களுக்குப் பகவானின் அருளால் தத்துவ ஞானம் உண்டாகி, அதன்மூலம் முக்தியும் கிடைக்கிறது. ஆகவே ஸங்கீர்த்தனமே விஷ்ணு ஸாயுஜ்யத்தை அடைவித்து மோக்ஷத்தையும் அளிக்கவல்லது என்பது திண்ணம்.
மேற்கண்ட விஷ்ணு ஸூக்த வாக்யத்துக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தம் செய்யலாம் என்று அநந்ததேவர் காட்டுகிறார். ஸ்தோதார:---விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்யும் பெரியோர்களே,
தம்--அந்த விஷ்ணுவை, (அப்படி ஸ்தோத்ரம் செய்வதன் பலனாக) உள்ளபடி அறிவீர்கள். உபநிஷதங்கள்  கூறும் பரம்பொருளின் உண்மை ஸ்வரூபத்தை அவன் குணங்களைப் பாடுவதால் எப்படி அறிய முடியும்? அதற்குப் பதில்; ஜனுஷா பிபர்தன---நீங்கள் ஜன்மா எடுத்ததற்குப் பலன் அவனை (உங்கள் ஸ்தோத்ரங்களால்) திருப்தி செய்து வைக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அருள எண்ணி, பகவான் ஆத்மஞானத்தை உங்களுக்கு அளிக்கிறான்.
இவ்விதம் மோக்ஷத்தில் இச்சை உள்ளவர்களுக்கு வழிகாட்டிவிட்டுத் தத்துவஞானிகளான முக்தர்களுக்கு ஸ்தோத்ரத்தில் அதிகாரம் உண்டு என்பதை ஸூக்தத்தின் பின்பாதி காட்டுகிறது. “ஆ அஸ்ய ஜானந்த:”--விஷ்ணுவின் உண்மையையும் மஹிமையையும் முற்றும் உணர்ந்த ஞானிகளே, நாமசித்---அவன் ஆயிரம் நாமாக்களில் யாதானும் ஒன்றில் ருசி இருக்குமானால் அதை, விவிக்தன--அவன் குணங்களின் புகழையும் சேர்த்துச் சொல்லுங்கள்”. இவ்விதம் சொல்லிவிட்டு, வேதங்கள் பகவத்குண கீர்த்தனத்தில் ஈடுபட்ட தத்துவஞானிகளின் ஆனந்த நிலையை உணர்ந்து, தம்மையே அவர்களாகப் பாவித்து, “ஹே விஷ்ணோ, உன் உத்ஸவத்தில் நாங்கள் திளைக்கிறோம்” என்கின்றனவாம். ஆகையால் முக்தர்களும் ஸங்கீர்த்தனத்தில், அதனால் உண்டான ஆனந்தம் காரணமாக, ஈடுபடுகிறார்கள் என்ற எல்லாப் புராண வாக்யங்களுக்கும் இந்த ஸூக்தமே மூல ஆதாரம்.

~~~~~~~

Home Page