ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


அம்பிகை

நமது தேசத்தில் இமயம் முதல் ஸேது பர்யந்தம் உள்ளவர்கள் எல்லோரும் "நவராத்திரி" உத்ஸவம் கொண்டாடினார்கள். இந்த உத்ஸவத்தை எல்லா ஜாதியாரும், ஏழைகளும், பணக்காரர்களும் அவரவர் சக்திக்குத் தக்கவாறு வருஷம் தவறாமல் கொண்டாடுகிறார்கள். தொழிலாளிகள் எல்லோரும் "ஆயுத பூஜை" என்னும் ஒன்பதாவது தினத்தில் தங்கள் பிழைப்பிற்குச் சாதனமான ஆயுதங்களை பூஜை செய்கிறார்கள். மற்றோர் புஸ்தகங்களை வைத்து ஸரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.

நவராத்திரி ஒன்பது தினங்களும் அம்பிகையாம் பராசக்திக்குரிய நாட்கள். அவ்வம்பிகையின் ஒரு ஸ்வரூபமாகிய ஸரஸ்வதியை எல்லோரும் படிப்பும், அதற்கேற்ற புத்தியும் வளர்ச்சியடைவற்காகப் பூஜை செய்கிறார்கள்.

அம்பிகை என்பது யார்?

ஔவையார், "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றார். வேதமும் தாயாரைத் தெய்வமாகவே நினைக்கவேண்டுமென்று உபதேசிக்கிறது. இவ்வாறு ஒரு பிறவிக்கு ஏற்பட்ட தாயையே நாம் தெய்வமாக கொண்டாட வேண்டிய போது எல்லா ஜன்மத்திற்கும், எல்லக் குழந்தைகளுக்கும், எல்லாக் காலத்திலும் தாயாக இருப்பவளான அம்பிகையைக் கொண்டாட வேண்டியது மிகவும் அவசியமல்லவா?

உலகம் முழுவதிலும் உள்ள யாவரும் சகோதரர்களே. இவ்வளவு பேருக்கும் ஒரு தாயாக இருப்பவள் அம்பிகையே. அந்தத் தாய் வயிற்றிலிருந்து எல்லோரும் உண்டானார்கள். ’தாயாரைத் தெய்வமாக நினை’ என்பதனால் அவ்வாறு நினைக்க முடியும் என்பது நமக்குத் தெரிகிறது. அதைத் திருப்பி தெய்வத்தையே தாயாராக நினைப்பதுதான் அம்பிகையின் தியானம். நாமெல்லோரும் குழந்தைகளாகையால் பராசக்தியை அம்பிகையாக அதாவது தாயாக நினைத்தால் அப்படியே வந்து அனுக்கிரஹம் செய்வாள். எந்த ரூபமாக எண்ணினாலும் அந்த ரூபமாக வந்து அனுக்கிரஹம் செய்யும் தன்மை தெய்வத்துக்கு உண்டு. ஸாக்ஷாத் பரப்ரம்மமே அம்பிகை ரூபமாகவிருந்து தாயைப்போல் சகல பிராணிகளின் குற்றத்தைப் பொறுத்து அவரவர் கஷ்டங்களை நீக்கிக் காப்பற்றுகிறாள்.
அம்பிகையை ஆராதித்து எவ்வளவோ மஹாபுருஷர்கள் அனுக்கிரகத்தை அடைந்திருக்கிறார்கள்.

மஹாகவியாகிய காளிதாஸர் அம்பிகையின் தாஸர். அம்பிகையினுடைய கிருபையால் அவருக்குப் பரிபூர்ண வாக்கு உண்டாயிற்று. காஞ்சீபுரத்தில் காமாக்ஷி ஸந்நிதியில் ஊமையொருவர் அம்பிகையை உபாஸனை செய்து மஹாகவியானார். மூககவி என்னும் பெயரைப் பெற்றார். அவர் அம்பிகையின் விஷயமாக 500 ச்லோகங்கள் செய்திருக்கிறார். அத் தொகுதிக்கு "மூக பஞ்சசதி" என்று பெயர். அவை மிகவும் சுவையுள்ளனவாக இருக்கும்.

அம்பிகையின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி விடும் என்பது சாஸ்திரங்களின் கருத்து. அவளை பரதேவதை என்று வேதம் சொல்லுகிறது.

குழந்தைகள் பசி, கஷ்டம் முதலியவை வரும் காலத்தில் தாயாரை ஸ்மரிக்கின்றன. குழந்தைகளைவிடக் கன்றுக்குட்டிக்கு ’அம்மா!’ என்று கத்துவதில் ஆவல் அதிகம். கன்றுக்குட்டி ’அம்மா’ என்று கத்துவதைப் பார்த்துதான் மனிதர்கள் ’அம்மா’ என்ற பெயரைத் தாயாருக்கு வைத்திருக்க வேண்டும்.

இவ்விதம் பரம ஆவலோடு தாயாரைக் காணவேண்டுமென்று கன்றின் மனமுருகுவரு போலவே லோகமாதாவினுடைய அனுக்கிரகத்தை எப்பொழுது பெறுவோம் என்று நாமும் மனமுருக வேண்டும்.  நாம் வேறு, அவள் வேறு என்ற பேதமின்றி ஒன்றாகவே த்யானம் செய்யவேண்டும்.

இவ்விதம் அம்பிகையினிடம் நமது மனது ஈடுபட்டால் ஸ்ரீ ஆதிசங்கராசார்யர், "உன்னிடம் பக்தியுள்ளவன் எதெது வேண்டுமென்று நினைக்கிறானோ அவைகளையெலாம் அடைகிறான்" என்றபடி, நாம் வேண்டுபவை யெல்லாம் நமக்குக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

நாம் எல்லோரும் முதலில் பிரார்த்திப்பது ஸக்ஷ்மி கடாக்ஷம் தான். எல்லோரும் பணக்காரனாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் வித்தையின்றி பணம் மாத்திரம் ஒருவனுக்கிருந்தால், அந்தப் பணமே அவனுக்கு துக்கத்திற்கும், கஷ்டத்திற்கும் காரணமாகும். ஆகையால் அம்பிகை வித்தையையும், அதற்குத் தகுந்த புத்தியையும் முதலில் கொடுத்துப் பிறகு ஐச்வர்யத்தைக் கொடுப்பாள். இவையிரண்டும் இருந்தால் மாத்திரம் போதாது. தீர்க்கமான ஆயுளும், வியாதியின்மையும் வேண்டும். பிறகு கடைசி முடிவான ஆத்மஜ்ஞானம் வேண்டும். அம்பிகையைப் பூஜிப்பதால் ஒருவன் கல்வி, பணம் முதலியவற்றைப் பெற்ற பின்பு பரமானந்தத்தையும் அடைகிறான்.
ஆகையால் ஜகத்திற்குத் தாயாகவும் கருணைக் கடலாகவும் இருக்கும் பரதேவதையினிடம் கன்றுக்குட்டிக்குத் தாயிடம் போன்ற பக்தி இருக்கவேண்டும். எப்படிக் குழந்தையின் சௌக்யத்திற்கு வேண்டியவற்றை யெல்லாம் தாய் தருவாளோ அப்படியே அம்பிகை இந்த லோகத்தில் வித்தை, தனம், ஆரோக்யம், தீர்க்கமான ஆயுள் முதலியவற்றை அடையச் செய்து பிறகு தானாப் பழுத்து பரமானந்தத்தை அடையும்படி அனுக்ரஹம் செய்வாள்.

வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமல்விருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமிருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் ஆகவேண்டும்.

இதற்கு அம்பாளுடைய சாணாரவிந்தத் தியானம்தான் வழி. அம்பாளின் சரணத்தைத் தியானித்துக் கொண்டே இருந்தால் அப்படியே நிரம்பிப்போய் விடுவோம்.

ஆடும் மாடு மாதிரி சாகாமல், சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி வழியும் நம் உயிர் உடலிலிருந்து பிரிந்து, மறுபடியும் உடம்பு எடுக்காமல் இருப்பற்குத்தான் இத்தனை மதங்களும் உள்ளன. அம்பாளின் தியானத்தைவிட வேறு மதம் இல்லை. சாந்தியும் ஆனந்தமும் தந்து நம்மைப் பூரணத்துவம் அடையச் செய்வது அதுவே.

அம்பாளைத் தியானித்துத் தியானித்து நம்மில் யாராவது நிரம்பிப் போய்விட்டால் நம் மதம் தானே வளரும். மதத்துக்காகப் பிரசாரம், வாதம் எதுவுமே வேண்டாம். நான் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? இந்த நேரத்தில் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருந்தால் இதைவிட மிகவும் விசேஷம். இந்தப் பேச்சுவார்த்தைகளைவிட நிறைவுக்கு உதவுவது அதுவே. ஆனாலும் எனக்கு இந்த உண்மை இப்படிப் பேச உட்கார்ந்தால்தான் தெரிகிறது. ஆகவே, பேசப் பேச அதுவும் என் நினைவைச் சுத்தப்படுத்துகிறது தெரிகிறது. நம்மில் ஓர் ஆத்மாவவது பூர்ணமாக உயருவதற்காக, மதவிஷயங்களைப் பேசுகிறேன்.

இந்த மத விஷயங்களுக்கெல்லாம் முடிவு நம் முறைகளைக் களைந்து நிறைவு பெறுவதுதான். அவரவர்கள் நிறைவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் மதம். அம்பாளைத் தியானிக்கும்போது நம் குறையெல்லாம் தெரிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போது அம்பாளிடம் முறையிட்டு அந்தத் தோஷம் இல்லமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

என்னிடம் குறையிருந்தால் நான் பிறருக்கு உபதேசிப்பது வேஷம்தான். உங்களை ஏமாற்றுவதுதான். எனக்கு அம்பாள் அநுக்கிரகம் பூரணமாக வந்து நான் நிறைந்து போய் விட்டால் அப்புறம் உபதேசம் என்று செய்யவே தேவையில்லை. ஆனாலும் இப்படியெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பற்குக் காரணம் உங்களில் யாரவது தம்மைத்தாமே இவ்வாறெல்லாம் சோதித்துப் பார்த்துக் கொண்டு அம்பாளைத் தியானித்து பூரணத்துவம் அடைய மாட்டீர்களா என்ற ஆசைதான். பிரசாரத்தால் மதமும் ஆத்மாநுபவமும் வளரா. பிரசாரமும் உபந்நியாசமும் தற்கால சாந்திதான். நான் பேசினால் உங்களுக்குத் தற்கால சாந்தியாகத் திருப்தி உண்டாகிறது என்பதால் பேசுகிறேன்.

ஆனால் இதைவிட அவசியம் அம்பாளின் சரணாவிந்தத் தியானமே. எனக்கு முக்கியம் அம்பாள். லோக க்ஷேமார்த்தம் அம்பாளுடைய சரணாவிந்தத்தைத்தான் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோருமே அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும்.

மற்ற மதங்களினால் நம் மதத்துக்குக் கேடு வராது. நம்முடைய அநுஷ்டானக் குறைவினாலேதான் நம் மதத்துக்குக் கேடு வரும். நம் உடம்பில் சக்தி குறைந்தால் நோய் வருகிறது. அதே போல நம் அநுஷ்டானம் குறைந்தால் மத மாற்றம், நாஸ்திகம் முதலிய நோய்கள் வந்து விடுகின்றன.

அநுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு, அம்பாளுடைய சரணாவிந்தங்களைத் தியானம் செய்து கொண்டிருந்தால் போதும். ஒருத்தருக்கும் ஒரு கஷ்டமும் வராது. இதற்கெல்லாம் விசை நம்மிடமே இருக்கிறது. நாம் பெரிய பெரிய நல்ல காரியமாக ஏதோ செய்ய வேண்டும் என்பதே இல்லை. முதலில் நாம் தப்புப் பண்ணாமல் இருக்க முயன்றாலே போதும். அம்பாளிடம் இதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு ஆத்ம சுத்தி செய்தி கொண்டு படிப்படியாக நமக்கும் நிறைவைப் பெற்று, நம் மதத்துக்கும் நிறைவை உண்டுபண்ணுவோம்.

- ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு பரமாசார்யர்கள் அருள் வாக்கு

~~~~~~~

Home Page