ஆடியாடி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

ஆடியாடி

'பகவானே!தேவரீர் எப்போதும் எல்லோருடைய துன்பங்களையும் நீக்குவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறீர்!தங்கள்மீது கொண்ட பேரன்பின் காரணமாக என் பெண் அவதிப்படுகிறாளே!இவளுக்காக நீர் என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!' என்று தாய் தன் பெண்ணாகிய பராங்குச நாயகியைப் பற்றி எம்பெருமானிடம் கேட்பதுபோல் அமைந்துள்ளது இப்பகுதி.

வஞ்சி விருத்தம்

நரசிங்கா என்று பாடி வாடுகிறாள் என் மகள்

2818. ஆடியாடி யகம்க ரைந்து, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல் கி,எங்கும்

நாடிநாடி நரசிங்கா வென்று,

வாடி வாடுமிவ் வாணுதலே.

கண்ணபிராணே!நின்னைக் காண என் மகள் ஆசைப்படுகிறாள்

2819. வாணுதலிம் மடவரல், உம்மைக்

காணுமாசையுள் நைகின் றாள்,விறல்

வாணனாயிரந் தோள்துணித் தீர்,உம்மைக்

காணீ ரிரக்க மிலீரே.

நுமக்காக என் மகள் உருகுகிறாள்

2820. இரக்க மனத்தோ டெரியணை,

அரக்கு மெழுகுமொக் குமிவள்,

இரக்க மெழீரிதற் கென்செய்கேன்,

அரக்க னிலங்கைசெற் றீருக்கே.

நுமது நினைவால் என் மகள் புலம்புகிறாள்

2821. 'இலங்கைசெற் றவனே!' என்னும்,பின்னும்

'வலங்கொள் புள்ளுயர்த்தாய்!' என்னும்,உள்ளம்

மலங்கவெவ் வுயிர்க்கும், கண்ணீர்மிகக்

கலங்கிக் கைதொழும் நின்றிவளே..

நும் திருத்துழாயை என் மகள் விரும்புகிறாள்

2822. இவளிராப் பகல்வாய் வெரீஇ,தன

குவளையண் கண்ணநீர் கொண்டாள்,வண்டு

திவளும்தண் ணந்துழாய் கொடீர்,என

தவள வண்ணர் தகவுகளே.

என் மகள் உள்ளூர உருகுகிறாள்

2823. 'தகவுடை யவனே!' என்னும்,பின்னும்

'மிகவிரும் பும்பிரான்!' என்னும், 'என

தகவுயிர்க் கமுதே!' என்னும்,உள்ளம்

உகவு ரகிநின் றுள்ளுளே.

என் மகள் கண்ணன் பெருமையையே பேசுவாள்

2824. உள்ளு ளாவி யுலர்ந்துலர்ந்து, 'என்

வள்ளலே!கண்ணனே!' என்னும்,பின்னும்

'வெள்ளநீர்க் கிடந்தாய்!' என்னும்,என்

கள்விதான் பட்ட வஞ்சனையே.

என் மகள் நின்னையே அடைக்கலம் அடைந்தான்

2825. 'வஞ்சனே!' என்னும் கைதொழும்,தன்

நெஞ்சம்வே வநெடி துயிர்க்கும்,விறல்

கஞ்சனை வஞ்சனை செய்தீர்,உம்மைத்

தஞ்சமென் றிவள்பட் டனவே.

என் மகள் பற்றி நுங்கள இஷ்டம் என்ன?

2826. பட்ட போதெழு போதறியாள்,'விரை

மட்டலர் தண்டுழாய்' என்னும்,சுடர்

வட்ட வாய்நுதி நேமியீர்,நும

திட்ட மென்கொலிவ் வேழைக்கே?

கண்ணா!என் மகளை வாட்டாதே

2827. ஏழை பேதை யிராப்பகல், தன

கேழிலொண் கண்ணநீர் கொண்டாள்,கிளர்

வாழ்வைவேவ இலங்கைசெற் றீர்,இவள்

மாழைநோக் கொன்றும் வாட்டேன் மினே.

இவற்றை பாடி திருமாலைத் துதியுங்கள்

2828. வாட்ட மில்புகழ் வாமனனை,இசை

கூட்டி வண்சட கோபன்சொல்,அமை

பாட்டோ ராயிரத் திப்பத்தால், அடி

சூட்ட லாகுமூமந் தாமமே.

நேரிசை வெண்பா

பகவானிடம் அன்பு கொண்டார் நிலையை மாறன் உரைத்தான்

ஆடிமகிழ் வானி லடியார் குழாங்களுடன்,

கூடியின்ப மெய்தாக் குறையதனால், -வாடிமிக

அன்புற்றார் தந்நிலைமை யாய்ந்துரைக்க மோகித்துத்,

துன்புற்றான் மாறனந் தோ!

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஊனில்வாழ்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  அந்தாமத்தன்பு
Next