திருச்சிரீவரமங்கை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருச்சிரீவரமங்கை

(திருச்சிரீவரமங்கல நகர், வானமாமலை, நாங்குனேரி, தோதாத்ரி க்ஷேத்ரம்)

திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் நாங்குனேரியில் இறங்கியோ அல்லது திருக்குறுங்குடியிலிருந்து திரும்புகையிலோ பெருமாளை ஸேவிக்கலாம். இங்கு ராமானுஜ கூடங்கள், சத்திரங்கள், ஹோட்டல் அறைகள் வானமாமலை ஜீயர் மடம் முதலிய எல்லா வசதிகளும் உண்டு.

மூலவர் - தோதாத்ரிநாதன் (வானமாமலை) வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே

திருமுக மண்டலம்.

உத்ஸவர் - தெய்வநாயகன்.

தாயார் - இருபுறமும் உபயநாச்சியார், தவிர, சிரீவரமங்கைத்தாயார் (இரண்டு

தனிக்கோவில் நாச்சியார்களும் உண்டு) .

தீர்த்தம் - இந்த்ர தீர்த்தம், சேற்றுத்தாமரைத் தீர்த்தம்.

விமானம் - நந்தவர்த்தந விமானம்.

ப்ரத்யக்ஷம் - ப்ரஹ்மா, இந்த்ரன், ரோமசர், ப்ருகு, மார்க்கண்டேயர்.

விசேஷங்கள் - இது தானாகத் தோன்றிய, (ஸ்வயம் வ்யக்த) ஸ்தலம். பெருமாளுக்குத் தினம் தைல அபிஷேகம் உண்டு. அந்த எண்ணையை எடுத்து சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமுள்ள கிணற்றில் ஊற்றிவிடுகிறார்கள். இந்த எண்ணயை நம்பிக்கையுடன் சாப்பிட்டால் எல்லாவியாதிகளும் நீங்கும்.

சேற்றுத்தாமரை புஷ்கரிணியில், ஸிந்து தேசத்து அரசன் குசாஸனமஹரிஷியால் சபிக்கப்பட்டு நாயுருவத்துடன் வந்து ஸ்நானம் செய்து பழைய அரச உருவத்தை அடைந்த ஸ்தலம். இங்கேயுள்ள சடாரியில் ஸ்ரீ சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தலம் வானமாமலை மடத்துக்கு தலைமை இடம். வானமாமலை ஜீயர் இங்கேதான் எழுந்தருளியிருக்கிறார். இவருடையதே இந்த ஸந்நிதி.

பகவான் மதுகைடபர்களை ஸம்ஹரித்த போது, பூமி தேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததாகவும், இவ்விடத்தில் தவமிருந்து பகவான் ப்ரத்யக்ஷமாகி, பூமியும் "மேதினி ஆனேனே" என்று புலம்ப, பகவான் அருள்புரிந்து மாசு கழுவப் பெற்றாய், "மேதினி" என்ற பெயரும் வாய்க்கும், என்று சொல்லி வைகுண்டத்தில் வீற்றிருப்பது போல் இத்தலத்தில் ஸ்ரீவைகுண்ட விமானத்தில் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதனாக ஆனந்தமயமாக காக்ஷி கொடுப்பதாக ஸ்தலவரலாறு. ஊர்வசியும் திலோத்தமையும இத்தலத்தில் தவமிருந்து பகவான் அருளால் அவர்கள் இருவரும் பெருமாள் அருகில் இன்றளவும் இரு பக்கங்களில் நின்று வெண்சமரம் வீசிக்கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.

ஸ்ரீ மணவாள மாமுனிகளால் ஸ்தூபிக்கப்பட்ட அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் ஸ்ரீ வானமாமலைஜீயர் ஸ்வாமி. ஸ்ரீமணவாளமாமுனிகளின் தங்கமோதிரம் ஸ்ரீஜீயர்ஸ்வாமி ஐப்பசி மூலத்தன்று சாத்திக் கொண்டு ஸ்ரீபாததீர்த்தம் ஸாதிக்கிறார்.

மங்களாசாஸனம் -

நம்மாழ்வார் - 3183-93 - 11 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவைகுண்டம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)
Next