முடிச்சோதி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

முடிச்சோதி

திருமாலிருஞ்சோலையில் கேட்டார்க்கு வரமளிக்கும் கற்பக மரம் போல் இருக்கும் அழகரின் வடிவழகை அநுபவித்து ஆழ்வார் இன்பமடைகிறார்.

அழகரின் வடிவழகில் ஈடுபடல்

தரவு கொச்சகக் கலிப்பா

அழகரின் சோதி உருவம் என்ன!

2897. முடிச்சோதி யாயுனது

முகச்சோதி மலர்ந்ததுவோ,

அடிச்சோதி நீநின்ற

தாமரையாய் அலர்ந்ததுவோ,

படிச்சோதி யாடையடும்

பல்கலனாய், நின்பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ?

திருமாலே!கட்டுரையே.

அழகா!நின் சோதிக்கு இணையில்லை

2898. கட்டுரைக்கில் தாமரைநின்

கண்பாதம் கையவ்வா,

சுட்டுரைத்த நன் பொன்னுள்

திருமேனி ஒளிஒவ்வாது,

ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப்

புகழ்வெல்லாம் பெரும்பாலும்,

பட்டுரையாய்ப் புற்கென்றே

காட்டுமால் பரஞ்சோதீ!

பரஞ்சோதீ!நின் பண்புதான் என்னே!

2899. பரஞ்சோதி!நீபரமாய்

நின்னிகழ்ந்து பின், மற்றோர்

பரஞ்சோதி யின்மையில்

படியோவி நிகழ்கின்ற,

பரஞ்சோதி நின்னுள்ளே

படருலகம் படைத்த,எம்

பரஞ்சோதி கோவிந்தா!

பண்புரைக்க மாட்டேனே.

திருமாலே!நீ திருத்துழாயை விரும்பினாயே!

2900. மாட்டாதே யாகிலுமிம்

மலர்தலைமா ஞாலம்,நின்

மாட்டாய மலர்புரையும்

திருவுருவம் மனம்வைக்க

மாட்டாத பலசமய

மதிகொடுத்தாய், மலர்த்துழாய்

மாட்டேநீ மனம்வைத்தாய்

மாஞாலம் வருந்தாதே?

திருமாலே!நீ எங்கும் எதிலும் உள்ளாய்

2901. வருந்தாத அருந்தவத்த

மலர்கதிரின் சுடருடம்பாய்,

வருந்தாத ஞானமாய்

வரம்பின்றி முழுதியன்றாய்,

வருங்காலம் நிகழ்காலம்

கழிகால மாய்,உலகை

ஒருங்காக அளிப்பாய்சீர்

எங்குலக்க ஓதுவனே?

நின்னை முற்ற முடிய வாழ்த்துதல் அரிது

2902. ஒதுவார் ஒத்தெல்லாம்

எவ்வுலகத் தெவ்வெவையும்,

சாதுவாய் நின்புகழின்

தகையல்லால் பிறிதில்லை,

போதுவாழ் புனந்துழாய்

முடியினாய், பூவின்மேல்

மாதுவாழ் மார்பினாய்!

என்சொல்லியான் வாழ்த்துவனே?

நான்முகனைப்!படைத்தவனே நின் புகழ் என்னே!

2903. வாழ்த்துவார் பலராக

நின்னுள்ளே நான்முகனை,

மூழ்த்தநீ ருலகெல்லாம்

படையென்று முதல்படைத்தாய்,

கேழ்த்தசீ ரான்முதலாக்

கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,

சூழ்த்தமரர் துதித்தாலுன்

தொல்புகழ்மா சூணாதே?

மாலே!நின் ஒளி மழுங்காது

2904. மாசூணாச் சடருடம்பாய்

மலராது குவியாது,

மாசூணா ஞானமாய்

முழுதுமாய் முழதியன்றாய்,

மாசூணா வான்கோலத்

தமரர்கோன் வழிப்பட்டால்,

மாசூணா உன்பாத

மலர்சோதி மழுங்காதே?

புள்ளூர்தியானே!நின் சோதி மறையாது

2905. மழுங்காத வைந்நுதிய

சக்கரநல் வலத்தையாய்,

தொழுங்காதல் களிறளிப்பான்

புள்ளூர்ந்து தோன்றினையே,

மழுங்காத ஞானமே

படையாக, மலருலகில்

தொழும்பாயார்க் களித்தாலுன்

சுடர்ச்சோதி மறையாதே?

வேத மலர்ச் சுடரே நீயே தலைவன்

2906. மறையாய நால்வேதத்

துள்நின்ற மலர்ச்சுடரே,

முறையாலிவ் வுலகெல்லாம்

படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,

பிறையேறு சடையானும்

நான்முகனும் இந்திரனும்,

இறையாதல் அறிந்தேத்த

வீற்றிருத்தல் இதுவியப்பே?

இவற்றைப் பாடுக பிறவித் துன்பம் நீங்கும்

2907. வியப்பாய வியப்பில்லா

மெய்ஞ்ஞான வேதியனை,

சயப்புகழார் பலர்வாழும்

தடங்குருகூர்ச் சடகோபன்,

துயக்கின்றித் தொழுதுரைத்த

ஆயிரத்து ளிப்பத்தும்,

உயக்கொண்டு பிறப்பறுக்கும்

ஒலிமுந்நீர் ஞானலத்தே.

நேரிசை வெண்பா

அழகர் வடிவழகை அநுபவித்தவன் மாறன்

முடியார் திருமலையில் மூண்டுநின்ற மாறன்,

அடிவாரந் தன்னில் அழகர் - வடிவழகைப்

பற்றி, முடியும் அடியும் படிகலனும்,

முற்றும் அனுபவித்தான் முன்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கிளரொளி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  முந்நீர் ஞாலம்
Next