நீராய் நிலனாய்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

நீராய் நிலனாய்

தூது விட்டனுப்பியும் எம்பெருமான் வரவில்லை. 'வாராய்!ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே!என்று ஆழ்வார் கூவியழைக்கிறார்.

ஆழ்வார் எம்மானை உருக்கத்துடன் அழைத்தல்

கலி நிலைத்துறை

பெருமானே!ஒரு நாள் தரிசனம் தா

3315. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்,

சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்,

கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்

வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 1

அம்மானே!ஒரு நாள் என் எதிரில் நட

3316. மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,

மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,

நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,

நண்ணி யருநாள் ஞாலத் தூடே நடவாயே. 2

உலகநாயகா!எவ்வளவு நாள் நான் தளர்வேன்?

3317. ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,

சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,

கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,

சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ? 3

பெருமானே!தேவர் புடைசூழத் தரிசனம் தா

3318. தளர்ந்தும் முறிந்தும் சகட, வசுரர் உடல்வேறா,

பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,

கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,

விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே. 4

எங்கும் நிறைந்தவனே!எனக்கு உருக்காட்டு

3319. விண்மீ திருப்பாய்!மலைமேல் நிற்பாய்!கடல்சேர்ப்பாய்,

மண்மீ துழல்வாய்!இவற்று ளெங்கும் மறைந்துறைவாய்,

எண்மீ தியன்ற புறவண் டத்தாய்!எனதாவி,

உண்மீ தாடி யுருக்காட் டாதே யளிப்பாயோ? 5

மாயோய்!உருகி எத்தனை நாள் திரிவேன்?

3320. பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்

தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த

மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,

தீயோ டுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? 6

உலகுக்கு உயிரே!அறிவிலேனுக்கு அருளாய்!

3321. உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,

உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து,

அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ,

அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே. 7

சோதி மூர்த்தி! என்னை இனியும் கெடுப்பாயோ?

3322. அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்,

வெறிகொள் சோதி மூர்த்தி!அடியேன் நெடுமாலே,

சிறிசெய் தென்னைப் புறத்திட் டின்னம் கெடுப்பாயோ,

பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே? 8

நெடியோய்!நின் திருவடியை என்று சேர்வேன்?

3323. ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,

பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,

கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ? 9

மாயோய்!உனக்கு அடிமையாவது என்று?

3324. குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,

சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும்,

மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,

சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே? 10

இவற்றைப் படியுங்கள்:தொண்டர் ஆகலாம்

3325. தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,

உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,

தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்,

உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்கள் உலகை உய்விக்கும்

நீராகி கேட்டவர்க ணெஞ்சழிய, மாலுக்கும்

ஏரார் விசும்பி விருப்பரிதா, - ஆராத

காதலுடன் கூப்பிட்ட காரிமா றன்சொல்லை,

ஓதிடவே யுய்யும் உலகு. (59)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பொன்னுலகு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  உலகம் உண்ட
Next