பரிவதில்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

பரிவதில்

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பக்தியோடு எதைக்கொடுத்தாலும், அதைப்பெற்று மனநிறைவு கொள்பவன் பகவான். திருமால் பூசைக்கு எளியவன்.

வஞ்சி விருத்தம்

ஈசனைப் பாடிப் பூசியுங்கள்

2730. பரிவதி லீசனைப் பாடி, -

விரிவது மேவ லுறுவீர்,

பரிவகை யின்றிநன் னீர்தூய்,-

புரிவது வும்புகை பூவே.

வேத முதல்வனுக்கே பணி செய்க

2731. மதுவார் தண்ணந் துழாயான்,-

முதுவே தமுதல் வனுக்கு,

எதுவே தென்பணி என்னா,-

ததுவே யாட்செய்யு மீடே.

ஈசனையே என் மனம் பாடும்

2732. ஈடு மெடுப்புமி லீசன்,-

மாடுவி டாதென் மனனே,

பாடுமென் நாவலன் பாடல், -

ஆடுமெ னங்கம ணங்கே.

வணங்கி வழிபடத் தகுந்தவன் ஈசன்

2733. அணங்கென வாடுமெ னங்கம், -

வணங்கி வழிபடு மீசன்,

பிணங்கி யமரர் பிதற்றும், -

குணங்கெழு கொள்கையி னானே.

உள் கலந்தார்க்கு ஈசன் அமுது

2734. கொள்கைகொ ளாமையி லாதான், -

எள்கலி ராகமி லாதான்,

விள்கைவிள் ளாமைவி ரும்பி,

உள்கலந் தார்க்கோ ரமுதே.

அமிழ்தினும் இனியவன் நெடுமால்

2735. அமுதம் அமரர்கட் கீந்த,

நிமிர்சுட ராழி நெடுமால்,

அமுதிலு மாற்ற இனியன்,

நிமிர்திரை நீள்கட லானே.

இராமபிரான் திருவடிகளை வணங்குக

2736. நீள்கடல் சூழிலங் கைக்கோன், -

தோள்கள் தலைதுணி செய்தான்,

தாள்கள் தலையில் வணங்கி -

நாள்கள் தலைக்க ழிமினே.

ஈசனைத் தொழுதால் தீவினை மாளும்

2737. கழிமின்தொண் டீர்கள் கழித்துத்

தொழுமின், அவனைத் தொழுதால்,

வழிநின்ற வல்வினை மாள்வித்து,

அழிவின்றி யாக்கம் தருமே.

திருமால் நம் இரு வினைகளைத் துரத்துவார்

2738. தரும வரும்பய னாய, -

திருமுக ளார்தனிக் கேள்வர்,

பெருமை யுடைய பிரானார், -

இருமை வினைகடி வாரே.

மாதவனார் நம் தீவினைகள் விரைவில் ஓட்டுவார்

2739. கடிவார் தீய வினைகள்,

நொடியா ருமள வைக்கண்,

கொடியா அடுபுள் ளுயர்த்த,-

வடிவார் மாதவ னாரே.

பிறவியை நீக்கும் வழி

2740. மாதவன் பால்சட கோபன், -

தீதவ மின்றி யுரைத்த,

ஏதமி லாயிரத் திப்பத்து,-

ஓதவல் லார்பிற வாரே.

நேரிசை வெண்பா

இவற்றை ஓதினால் பிறப்பு நீங்கும்

பரிவதிலீ சன்படியைப் பண்புடனே பேசி,

அரியனலன் ஆரா தனைக்கென்று, - உரிமையுடன்

ஓதியருள் மாறன் ஒழிவித்தா னிவ்வுலகில்

பேதையர்கள் தங்கள் பிறப்பு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is வளவேழ்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பிறவித்துயர்
Next