தேவலோகம் அல்லது ஆத்ம ஞானத்துக்கு வழி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்த லோக வாழ்க்கையில் ஸந்தோஷம், துக்கம் இரண்டும் கலந்து கலந்து வருகின்றன. சிலருக்கு ஸந்தோஷம் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு துக்கம் அதிகமாக இருக்கிறது. மனஸைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, எத்தனை துக்கத்திலும் சிரித்துக் கொண்டு ஸந்தோஷமாயிருப்பவர்கள் எங்கேயாவது அபூர்வமாக இருக்கிறார்கள். ஸந்தோஷப்பட எத்தனையோ இருந்தும் திருப்தியில்லாமல் அழுபவர்களோ நிறைய இருக்கிறோம். குறையிருக்கிறது என்றால் துக்கம் என்றுதான் அர்த்தம்.

எப்போதும் ஸந்தோஷமாயிருக்க வேண்டும் என்பது தான் அத்தனை ஜீவராசிகளும் விரும்புவது. எப்போதும் ஸந்தோஷமாயிருக்கிற இடங்கள் இரண்டு உண்டு. தேவலோகம் அல்லது ஸ்வர்க்கம் என்பது ஒன்று. இன்னொன்று ஆத்ம ஞானம். ஆத்மா ஸந்தோஷமே வடிவானது. ஆனந்தமே பிரம்மம் என்று உபநிஷத் சொல்கிறது. அந்தப் பிரம்மம் தான் ஆத்மா. இப்படி தெரிந்து கொண்டு விட்டால் சாச்வத ஸந்தோஷந்தான். ஆனால் இது இந்திரியங்களாலும் மனஸாலும் அநுபவிக்கிற ஸந்தோஷம் அல்ல. இந்திரியம், மனஸ் எல்லாவற்றையும் கடந்து, ‘சரீரம் நானில்லை, புத்தி நானில்லை, சித்தம் நானில்லை’ என்று பண்ணிக் கொண்ட உச்சாணி நிலை அது.

இந்திரியங்களாலும் மனஸாலும் ஸந்தோஷத்தை ஸதாவும் அநுபவித்துக் கொண்டிருக்கிற இடமே தேவலோகம். பாட்டு, கூத்து, கந்தர்வ கானம், ரம்பை-மேனகை நர்த்தனம், கல்பக விருக்ஷம், காமதேனு, நந்தனவனம் எல்லாம் இருக்கிற உல்லாஸ பூமி அது. அங்கே ஸதா ஆனந்தம். ஆனால் ஆத்ம ஞானியின் ஸந்தோஷத்துக்கும் இதற்கும் வித்தியாஸங்கள் உண்டு. தேவ லோகத்தில் ஸதா ஸந்தோஷமே தவிர, அங்கே போகிறவனுக்கு இல்லை. ஏனென்றால் தேவலோகத்தில் இவனுக்கு சாச்வத வாஸம் கிடைக்காது. ரொம்பப் புண்ணியம் பண்ணினால், அதற்கு பலனாக நல்லதான அடுத்த ஜன்மா தருவதற்கு முன்பு கொஞ்ச காலம் இவனுக்கு தேவலோக வாஸம் கிடைக்குமே தவிர, தேவலோகத்திலேயே இவனுக்கு நிரந்தர வாஸம் கிடைக்காது. புண்ய பலனை இவன் அநுபவித்து விட்டான் என்று கணக்கு பார்த்தவுடன் இவனை ஸ்வாமி பூலோகத்துக்கே உருட்டி விட்டுவிடுவார். மநுஷ்யர்களாக இருந்து ரொம்பவும் நிறையப் புண்ணியம் செய்ததால் தேவர்களாகவே ஆகி தேவலோக வாஸம் பெற்ற சிலரைப் பற்றியும் புராணங்களில் இருப்பது வாஸ்தவந்தான். ஆனால் தேவர்களுக்குமேகூட தேவலோகத்தில் நிரந்திர வாஸமில்லை என்றும் அந்தப் புராணங்களே சொல்கின்றன. தேவர்களை சூரபத்மன் அடித்துத் துரத்தினான், மஹிஷாஸுரன் அடித்துத் துரத்தினான், இந்திரன் உள்பட தேவர்கள் பூலோகத்திலே வந்து திண்டாடினார்கள் என்றெல்லாமும் புராணத்தில் இருக்கிறது. அதனால் தேவலோகத்தில் எப்பொழுதும் இருக்க முடிந்தால் சாச்வத ஸந்தோஷமாக இருக்கும் என்று hypothetical -ஆக வேண்டுமானால் சொல்லலாமே தவிர அப்படி யாரும் இருந்ததில்லை; இருக்கவும் முடியாது என்றுதான் தெரிகிறது.

இந்திரியத்தால் ஸந்தோஷம் என்கிறபோது வெளியிலே உள்ளவற்றை அநுபோகம் பண்ணுவதால்தான் அது கிடைக்கிறது. வெளியிலே இருப்பதை எப்படி எப்போதும் நம்மிடம் தக்க வைத்துக்கொள்ள முடியும்? அது கையை விட்டுப் போனாலும் போகும்தான். காமதேனுவும், கல்பக விருக்ஷமும், ஐராவதமும், இந்திராணியுமே கூட இந்திரன் கையை விட்டுப்போய், அவன் தனியாகத் தவித்த ஸந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. ஆகையால் வெளியிலிருப்பதை depend பண்ணுகிற (சார்ந்திருக்கின்ற) தேவலோக இந்திரிய ஸெளக்கியம் நிஜத்தில் சாச்வதமேயில்லை. வெளி-உள் என்று எதுவுமே இல்லாமல் ஆத்மாவிலேயே, ஸ்தித பிரக்ஞன் என்று பகவான் [கீதையில்] சொன்னது போல் ஆணி அடித்த மாதிரி ஊன்றிவிடுகிறவனுக்குத்தான் ஸதானந்தம். இந்திரனின் ஆனந்தமும் இந்த ஆத்மானந்த மஹாஸமுத்திரத்தில் துளியிலும் துளிதான் என்கிறார் ஆசார்யாள்.

யத் ஸெளக்யாம்புதி லேச லேசத இமே

சக்ராதயோ நிர்வ்ருதா – (மநீஷா பஞ்சகம்)

இந்திரியங்களையும் மனஸையும் பயிர்த்தண்டிலிருந்து ஈர்க்கை உருவுகிற மாதிரி உருவிப் போட்டுவிட்டு ஆத்மாவாகவே இருந்து விட்டால் இந்த ஸதானந்தம் கிடைப்பதாக உபநிஷத் சொல்கிறது. அதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். ‘சரீரம் நானில்லை, அதன் ஸுகதுக்கம் எனக்கில்லை’ என்று அதை உயிரோடு இருந்து கொண்டிருக்கும்போதே கிள்ளிப் போடுவதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். சித்த சுத்தி ஏற்பட்டாலொழிய இது வராது. சித்தம் சுத்தியாவதற்குத்தான் கர்ம அநுஷ்டானம். ஒரு ஜீவனை வேத மந்திரங்களால் இப்படி பரிசுத்தி பண்ணி, அந்த மந்திரங்களோடு சேர்ந்த காரியங்களில் ஈடுபடுத்துவதற்காகவே நாற்பது ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அதாவது அத்வைத முக்திக்கு முதல்படியாக இவை உள்ளன.

இந்த கர்ம அநுஷ்டானத்தால் சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொள்வதே லக்ஷ்யமாக இருக்க வேண்டும். அப்புறம் சுத்தமான அந்தஃகரணத்தைப் பெற்றுவிட்ட ஜீவன் ஆத்ம விசாரம் செய்து ஸதானந்தமான ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையவேண்டும் என்பது ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களின் கொள்கை. இந்த லக்ஷ்யம் இருந்தும், கர்மாவைக் கடைசி மட்டும் விடாமலே, ஸந்நியாஸியாகி ஞான விசாரம் செய்யாமலே இறந்து போனால் அவன் பிரம்ம லோகத்துக்குப் போகிறான் என்றும், மஹாப் பிரளயத்தில் பிரம்மா பிரம்மத்தோடு ஐக்கியமாகிறபோது இவனும் அத்வைத முக்தி அடைந்துவிடுகிறான் என்றும் சொல்கிறார்*. இப்படிப்பட்ட லக்ஷ்யம் இல்லாமல் கர்மாவுக்காகவே கர்மா பண்ணினால் தேவலோகம் கிடைக்கும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. இருந்தாலும் பூலோக அவஸ்தையைவிட, கொஞ்ச காலமானாலும் தேவலோக வாஸம் சிலாக்யம்தானே? அங்கே அனுப்புவதும் ஸம்ஸ்காரங்கள்தான்.


* அடுத்து வரும் பிரம்மசரியம் என்ற உரையில் ‘நைஷ்டிக பிரம்மசரியம்; இல்லற வாழ்க்கை’ என்ற பிரிவும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸம்ஸ்காரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மூன்றுவிதமான லோகங்கள்
Next