நைஷ்டிக பிரம்மச்சரியம்; இல்லற வாழ்க்கை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ளாமல் குருவிடத்திலேயே இருந்து வாழ்க்கை முழுதையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி அவர் போன பிறகும் பிரம்மச்சாரியாகவே வாழ்நாள் முழுதும் இருப்பதும் உண்டு. இதற்கு நைஷ்டிக பிரம்மச்சரியம் என்று பெயர். பீஷ்மர், ஆஞ்ஜநேயர் முதலியவர்களை நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் இது கலியில் விசேஷமாக சொல்லப்படவில்லை.

இயற்கை தர்மத்தை அநுஸரித்து பிரம்மச்சாரியானவன் ஸமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். பிரகிருதிக்கு எதிர் நீச்சல் போடுவது கஷ்டம். அதன் போக்கிலேயே போய், ஆனாலும் அதிலேயே முழுகிப்போய்விடாமல் கரையைப்பிடிக்க வேண்டும். அதனால்தான் தர்மமாக கார்ஹஸ்தியம் [இல்லறம்] வகித்து அப்புறமே கொஞ்சம் விடுபட்டு வானப்ரஸ்தம், அதற்கும் அப்புறம் பூர்ண சந்நியாஸம் என்று விதித்திருக்கிறது. Nature-ஐ Violent-ஆக எதிர்த்துப் போனால் ஹானிதான் உண்டாகும் என்பதால் இப்படி வைத்திருக்கிறது. நைஷ்டிக பிரம்ம்ச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டுவிட்டால் மஹத்தான பாபமாகிறது. இதுவே கிருஹஸ்தனுக்குப் பாபமாக இல்லாமல் பிரகிருதி தர்மமாக அநுமதிக்கப்பட்டிருக்கிறது.

எந்த ரூல் இருந்தாலும் எக்ஸெப்ஷன் (விலக்கு) உண்டு. நல்ல திட சித்தமும் பக்குவமும் பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார பலமும் இருப்பவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக இருக்கலாம். ஒரு முந்நூறு வருஷத்துக்குள் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் அப்படித்தான் இருந்துகொண்டு முகம்மதிய பிரவாகத்தையே சிவாஜி மூலம் முறியடித்து, நம் தர்மத்தை ஆழமாக நிலைநாட்டினார். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரின் அம்சம் அவர்.

வேத தர்மத்தை மறுபடி ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வர அவதாரமாக வந்த ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் தம் சொந்த வாழ்க்கையிலே பிரம்மச்சரியத்திலிருந்து நேரே ஸந்நியாஸத்துக்குப் போனது மட்டுமின்றி ஸுரேச்வரர் தவிர அவரது மற்ற மூன்று பிரதான சிஷ்யர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என்ற மூன்று பேருக்கும் பிரம்மச்சரியத்திலிருந்தே நேராக ஸந்நியாஸ ஆச்ரமம் கொடுத்திருக்கிறார். [சங்கர] மடத்திலும் பிரம்மச்சாரிகளே நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என்ற விதி அநுஸரிக்கப்படுகிறது. அதனால் எல்லாரும் கிருஹஸ்தாச்ரமம் வகித்துத்தான் ஆகவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது. ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் ரொம்ப அபூர்வமானவர்களுக்கே இருக்கும். விவாஹமும், பஞ்ச மஹா யக்ஞங்களும், தலைக்கு ஏழேழாக உள்ள பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்கள் இருபத்தியொன்றும் நைஷ்டிக பிரம்மசாரிகளுக்கும் நேரே பிரம்மச்சரியத்திலிருந்து துரீயாச்ரமத்துக்கு [நாலாவது ஆசிரமமான துறவறத்துக்கு]ப் போனவர்களுக்கும் இல்லாமல் போகிறது. அதாவது நாற்பது ஸம்ஸ்காரத்தில் பேர் பாதிக்கு மேல் அவர்களுக்கு இல்லாமல் போகிறது. இவை இல்லாமலே அந்தஃகரணம் சுத்தியடைகிற அளவுக்கு அவர்கள் பக்குவமாகியிருக்கவேண்டும். அதனால் இதை ‘எக்ஸெப்ஷனல் கேஸ்’கள் (விதிவிலக்கானவை, அசாதாரணமானவை) என்றே சொல்லவேண்டும்.

தஹனம் என்று எப்போது ஒரு கிரியை சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறதோ, அப்போது நம் மதப்படி எல்லோரும் கடைசியில், நல்ல விருத்தாப்பியத்தில் கூட, ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விதிக்கவில்லை என்றே அர்த்தம் என்று ஒரு கட்சி சொல்வதுண்டு. பிரம்மச்சர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், ஸந்நியாஸம் என்ற நாலு ஆசிரமங்களை ஒவ்வொருவரும் வரிசையாக அநுஷ்டித்தேயாக வேண்டும் என்றால் வாஸ்தவமாகவே தகனக்ரியை இருக்கமுடியாதுதான். ஸந்நியாஸியை தகனம் செய்யாமல் புதைக்கத்தானே சொல்லியிருக்கிறது? அதனால் பக்குவிகளுக்கே ஸந்நியாஸம்; மற்றவர்களுக்கு இல்லை – கிழ வயஸில் கூட இல்லை – என்று சொன்னால் இந்த வாதத்தைத் தப்பு என்று சொல்ல முடியவில்லை.

ஸந்நியாஸம் வாங்கிக் கொள்கிற அளவுக்கு வயசு ஆகாமல், சின்ன வயசிலேயே செத்துப் போனவர்களை உத்தேசித்துத்தான் தஹனக் கிரியையைச் சொல்லியிருக்கிறது என்று நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அகால மரணமாகவோ அல்பாயுஸாகவோ இல்லாமல் கால ம்ருத்யுவாக, நன்றாக வயஸாகிச் செத்துப் போகிறவர்களையும் உத்தேசித்ததாகத்தான் தகனக்கிரியை, அப்புறம் செய்யும் பித்ரு காரியங்கள் ஆகியன இருக்கிறது. ஆகையால், அத்தனை வயசிலும் அவர்கள் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலிருப்பதை சாஸ்திரம் அங்கீகரிப்பதாகத்தானே ஏற்படுகிறது?

நல்ல ஞான வைராக்கியத்தில் பிடிப்பு ஏற்பட்டவர்கள் கிருஹஸ்தாச்ரமம் ஆனபின் குடும்பப் பொறுப்புகளை விட்டுக் காட்டிலே போய் வைதிக காரியங்களை மட்டும் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகுட்டிகளையும் சொத்து சுதந்திரங்களையும் விட்டுவிட்டுப் பத்தினியை மட்டும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு போய்விடவேண்டும். பத்தினி எதற்கு என்றால் இந்திரிய ஸுகத்துக்காக அல்ல. பின்னே எதற்கு என்றால் அக்னி காரியங்களைப் பத்தினி கூட இருந்தால்தான் பண்ண முடியும் என்பதற்காகவே. யாகாதிகளையும் ஒளபாஸனையையும் பண்ணும் பொருட்டே அவளை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இதுதான் வானப்ரஸ்தம் – வனத்தில் போயிருப்பது என்று அர்த்தம். வீடு வாசலையும், உறவுக்காரர்கள், அவர்களுடைய காரியங்கள் ஆகியவற்றையும் விடுகிற பக்குவம் முதலில் வரவேண்டுமாதலால் வானப்ரஸ்தம் ஏற்படுகிறது. அப்புறம் வைதிக காரியத்தையும் விட்டுவிட்டு ஆத்மா என்ன, பரமாத்ம ஸத்யம் என்ன என்று தெரிந்து கொள்வது ஒன்றிலேயே நாட்டம் வலுத்த பின் குருமுகமாக ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும். பத்தினியையும் வேதகர்மாக்களையும் விட்டு விட்டு குருமுகமாக ஸந்நியாஸ ஆச்ரமம் பெற்று பரமாத்ம ஸத்யத்தையே ஸதாவும் சிந்தித்து தியானித்து, அதை அநுபவத்தில் தெரிந்துகொண்டுவிட வேண்டும். “அந்த ஸத்யம்தான் தானும்; லோகமெல்லாம் அதன் பொய் விளையாட்டு தான்” என்ற அநுபவம் ஏற்பட்டு, சரீரத்துக்கும் மனஸுக்கும் அதீதமான பரம ஸத்யமாக இருந்து கொண்டிருப்பதுதான் மோக்ஷம். பிராரப்தப்படி [முன்வினைப் பயன்படி] சரீரம் இருக்கிற மட்டும் இருந்து விட்டு அப்புறம் மரணம் அடைந்துவிடும். ஆனால் அதைப் பற்றி அநுபவ ஞானியான ஸந்நியாஸிக்கு ஒரு பொருட்டும் இல்லை. வெளி உலகத்தின் பார்வையில், இது வரைக்கும் தேகத்தில் வாழ்ந்த போதே முக்தி நிலையில் இருந்த ஜீவன் முக்தன், தேகம் போய் விதேஹ முக்தனாகிறான் என்று சொல்வது வழக்கம். அவன் நேரே குணம் குறியற்ற பரமாத்ம தத்வமாகி விடுகிறான்.

கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலே ஸந்நியாஸி ஆகிறவன்; கல்யாணம் பண்ணிக் கொண்டு நாற்பது ஸம்ஸ்காரங்களையும் முறைப்படி ஒன்றும் விட்டுப்போகாமல் பண்ணி, அதோடு அஷ்ட குணங்களையும் கைக் கொண்டு கடைசியில் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்கிறவன் – ஆகிய இருவரும் இப்படித் தானே பரமாத்ம தத்வமாக ஆகிவிடுகிறார்கள்?

ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே கடைசி வரை எல்லா ஸம்ஸ்காரங்களையும் அஷ்ட குணங்களையும் அநுஷ்டித்தவனின் கதை என்ன? செத்துப் போன பின் அவன் கதி என்ன? இவனுக்குத்தானே தஹனம் சொல்லியிருக்கிறது? லோகத்தில் பொதுவாக ரொம்ப ஜாஸ்தி இருக்கிறவனும் இவன்தானே? இவன் செத்தபின் என்ன ஆகிறான்?

ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் இவன் பரமாத்ம தத்வத்தோடு அத்வைதமாகக் கரைந்து விடுகிறான் என்று சொல்ல வில்லை. கடைசி வரையில் எல்லாவற்றையும் விட்டு, பரமாத்மா ஒன்றையே பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பெரிய தாபமாக இவனுக்கு வரத்தானே இல்லை? அது வந்துவிட்டால் யாரும் பிடித்து வைக்க முடியாது. அது வராததால் தான் இவன் ஸந்நியாஸியாக ஓடவில்லை. ஆகையால் இவன் அத்வைத முக்தி அடைவதில்லை. ஆனாலும் சாஸ்திரத்தை நம்பி அதன்படியே கர்மாக்களைப் பண்ணி சித்தத்தை நன்றாக சுத்தம் பண்ணி, லோக க்ஷேமத்தையும் உண்டாக்கியிருக்கிறானல்லவா? அதனால் இவன் குணமும் குறியுமில்லாத பரமாத்மாவுடன் ஒன்றாகாவிட்டாலும், அதே பரமாத்மா குணம் குறிகளோடுகூட லோகங்களை நிர்வகிக்கிற ஈச்வரனாக இருக்கிற பரம உத்தமமான ஸந்நிதானத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்ப ஸ்தானம் என்று அது சொல்லப்படுகிறது. பிரம்ம லோகம் என்பது அதுதான். பரமாத்மாவிலேயே கரைந்து ஒன்றாகிவிடாமல், வெளியே இருந்து கொண்டிருந்தாலும்கூட, அவரை ஸதாவும் அநுபவித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்தானத்தில்கூட எப்போதும் ஆனந்தமாகவே இருக்கும். ஒரு குறையும் இருக்காது. அப்படியானால் இதையும் மோட்சம் என்று சொல்ல வேண்டியதுதான். ஒரு குறையில்லை, ஒரு துக்கம் இல்லை, எப்போதும் ஈச்வர ஸாந்நித்யம். இதற்கு மேல் என்ன வேண்டும்? இப்படிப்பட்ட நிலையைத்தான் எல்லா ஸம்ஸ்காரங்களையும் செய்துவிட்டு ஸந்நியாஸியாகாமலே இறந்தவன் அடைகிறான்.

அவன் இதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டான். ஆனாலும் அந்த ஈச்வரன் தானும் ஒரு காலத்தில் இந்த லோக வியாபாரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, லோகங்களையெல்லாம் மஹாப் பிரளயத்தில் கரைத்துவிட்டு, குணம் குறியில்லாத பரமாத்ம ஸத்யமாக மட்டுமே ஆகிவிடுவான். அப்போது அதுவரை அவனுடைய ஸந்நிதானத்திலிருந்த ஜீவர்களும் அவனோடுகூடப் பரமாத்மாவோடு பரமாத்மாவாக அத்வைத முக்தி அடைந்து விடுவார்கள்.

மஹாப் பிரளயத்தில் ஸகல ஜீவராசிகளும்தான் – அநுஷ்டானமே செய்யாதவர்களும், புழு பூச்சியும் கூடத்தான் – பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். அப்படியிருக்க இத்தனை அநுஷ்டானங்களைச் செய்த இவனுக்கும் அந்த நிலை கிடைத்ததில் விசேஷம் என்னவென்றால், ஒரு விசேஷம் இருக்கிறது. மறுபடியும் அகண்ட வெளியிலிருந்து பரமாத்ம ஸகுண ஈச்வரனாகி லோகங்களை ஸ்ருஷ்டித்து, ஜகத் வியாபாரங்களை ஆரம்பித்து விடுவார். அப்போது அநுஷ்டானம் பண்ணாத மற்ற ஜீவர்களும், இதர உயிரினங்களும் பூர்வ கர்மாப்படி மறுபடி பிறந்துதான் ஆகவேண்டும். அதுவரை பரமாத்மாவில் அவை இரண்டற கரையாமல் லயித்துத்தான் இருந்திருக்கும். இப்போது லயம் விலகி மறுபடி ஜன்மா உண்டாகிவிடும். ஸம்ஸ்காரங்களைச் செவ்வேனே செய்து சுத்தியானவனோ இப்படி புனரபி ஜனனம் என்று மறு ஸ்ருஷ்டியின்போது பூமியில் வந்து விழாமல், பரமாத்மாவோடு பரமாத்மாவாக இரண்டறக் கரைந்தது கரைந்தபடியே இருப்பான்.

பிரம்மசரியம் என்பதிலிருந்து ரொம்பவும் தாண்டி முடிவான நிலைக்கு வந்துவிட்டேன். ‘ஒருத்தன் பிரம்மசாரியாக வாழ்நாள் பூரா இருக்கலாமா? கிருஹஸ்தாச்ரமம் வகிக்காமலே ஒரு பிரம்மச்சாரி ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளலாமா?’ என்ற கேள்விகள் எழுந்ததால் அதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மூலாதாரம் வீணாகக் கூடாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  நைஷ்டிக பிரம்மசரியம்;இல்லற வாழ்க்கை
Next