வேதியரின் தேகத் தூய்மை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ: ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.

ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.

வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம் இருக்கிறது. வீட்டிலும் அசுத்தம் பண்ணக்கூடாது; ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும், ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா [மாதவிடாய்] ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system-ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்குள் ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. “மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?” என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. “பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது” என்று [‘வாஸிஷ்ட ஸ்ம்ருதி’யில்] சொல்லியிருக்கிறது: “ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே| இஹ க்லேசாய மஹதே”.

லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதாகவே – அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே – தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். ‘எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே! பணம் சம்பாதிக்கிறார்களே! ஏன் நாம் செய்யக் கூடாது?’ என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary [இரண்டாவது] தான்.

மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், “நீ பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது” என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும்.

அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is காயத்ரீ
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  காயத்ரீ மந்திர மகிமை
Next