உடன் கட்டை ஏறுதல் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இதைச் சொல்லும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். ‘ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!’ என்று பந்துக்கள் கதறிய போது, ‘அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.

ஆஞ்ஜநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதிவ்ர‌த்யத்தால் [கற்புச் சக்தியால்] அவரை பாதிக்காமலேயிருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற நம்முடைய ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது*. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்கும். அதை எடுத்து வந்து பூஜை பண்ணுவதுண்டு.

இன்னும் உயர்ந்த கற்பரசியானால் பதியின் உயிர் போனவுடனேயே இவர்களது பிராணனும் தானாகப் போய்விடும். கண்ணகி கதையில் பாண்டிய ராணி இப்படித்தான். புருஷன் ‘குற்றம் செய்து விட்டோமே!’ என்று பிராணத் தியாகம் பண்ணினதும், தானும் உயிரை விட்டு விட்டாள். அஷ்டபதி பாடின ஜயதேவருடைய பத்னி பத்மாவதியைப் பற்றியும் இப்படி ஒரு கதை உண்டு. அவளுடைய பாதிவ்ரத்யத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ராணி தமாஷுக்காக அவளிடம் ஜயதேவர் எங்கோ போன இடத்தில் மரணமடைந்து விட்டார் என்று சொன்னவுடனேயே அவளுடைய பிராணன் போய் விட்டது. இப்படி யோஜனை போதாமல் அனர்த்தம் பண்ணி விட்டோமே என்று ராணி ரொம்பப் பச்சாதாபப்பட்டபின் ஜயதேவரே கிருஷ்ண பரமாத்மாவின் அநுக்ரஹத்தால் பத்மாவதியை உயிர்ப்பித்தார் என்று கதை.

இம்மாதிரி கற்பிலே உச்ச நிலையில் இருக்கிற ஸ்திரீகள் தான் உடன்கட்டை ஏறினார்களே தவிர, பிறர் வலுக்கட்டாயப்படுத்தி ஸ்திரீகளைப் புருஷர்களோடு போட்டுக் கொளுத்தி விடவில்லை. வலுக்கட்டாயம் செய்யாததோடு இஷ்டப்பட்டு ஸஹகமனம் செய்யப் போனவர்களைத் தடுத்துக்கூட இருக்கிறார்கள். பாண்டுவின் இரண்டு பத்னிகளில் மாத்ரி [இவள் தான் நகுல, ஸஹாதேவர்களின் தாயார்] தன்னோடு பாண்டு சேர்ந்ததால்தானே பூர்வ சாபப்படி சாகும்படி ஆயிற்று என்று வேதனைப்பட்டு பிராயச்சித்தமாக உடன்கட்டை ஏறினாள். இதை அநுமதித்த பெரியவர்களே குந்தியும் உடன்கட்டை ஏறப்போனபோது, “கூடாது, கூடாது. நீ உயிரை வைத்துக் கொண்டு இந்த ஐந்து குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவதுதான் முறை” என்று தடுத்ததாக பாரதத்தில் பார்க்கிறோம்.

அப்பர் ஸ்வாமிகள் அந்தப் பேர் பெறாமல், மருள் நீக்கியார் என்ற பெயரில் பாலராக இருந்தபோது அவருடைய தகப்பனாரான புகழனார் மரணமடைந்துவிட்டார். அப்பொழுது பதிவிரதையான மாதினியார் என்ற அவருடைய பத்தினி உடன்கட்டை ஏறினாள் என்று ‘பெரிய புராணம்’ சொல்கிறது. இந்த கற்பை விட உசந்ததாயிருக்கிறது, இவர்களுடைய புத்திரி (அதாவது அப்பரின் தமக்கை) காட்டிய பாதிவ்ரத்யம். அவளுக்குத் திலகவதி என்றுப் பெயர். சின்ன வயசுதான். இன்னம் கல்யாணமாகவில்லை.கல்யாணமாகாமலே கற்பு என்பதுதான் விசேஷம்! பல்லவ ராஜாவிடம் சேனாதிபதியாக இருந்த கலிப்பகையார் என்பவருக்கு இவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக நிச்சயம் பண்ணியிருந்தார்கள். ஆனால் புகழனார் இறந்த அதே சமயத்தில் நல்ல வாலிபரான கலிப்பகையும் யுத்த பூமியில் வீர ஸ்வர்க்கமடைந்து விட்டார் என்ற தகவல் வந்தது. உடனே அந்தச் சின்ன பெண், “அவருக்கென்று என்னை எப்போது பெரியோர்கள் நிச்சயம் செய்துவிட்டார்களோ அப்போது அவருக்கு நான் மனைவிதான். எனக்கு இந்த எண்ணம் வந்த பிறகு நான் இன்னொரு ஆடவனுக்கு மாலையிட மாட்டேன். அவர் போய்விட்டதால் நானும் பிராணத் தியாகம் பண்ணிவிடப் போகிறேன்” என்று அதிசயமான கற்பு வேகத்தில் புறப்பட்டு விட்டாள். அப்புறந்தான் அப்பர் ரொம்பவும் அழுது அவளைத் தடுத்து, “அப்பா, அம்மா இருவரும் போனபின் நீயும் இல்லாமல் சின்னஞ் சிறுவனான நான் தன்னந்தனியாக என்ன பண்ணுவேன்? நானும் உன் பின்னாலேயே பரலோகம் வந்துவிடுகிறேன்” என்று பிடிவாதம் செய்தார். வேறு வழியின்றி தம்பியின் பராமரிப்புக்காக பரமத் தியாகமாக அவள் உயிர் வாழுவது என்ற முடிவு செய்தாள். திலகவதி எனற பேருக்கேற்ப மாதர் குல திலகம் என்கிறார்களே, அப்படி வாழ்ந்தாள். பிற்பாடு ஜைனத்துக்குப் போய் தர்மஸேனராகிவிட்ட மருள்நீக்கி மறுபடி சைவத்துக்கு வந்து நாமெல்லாம் கொண்டாடும் அப்பர் ஸ்வாமிகளாக ஆனதற்கு அவள்தான் காரணம். அது வேறு கதை.

ராஜஸ்தானத்து உத்தம ஸ்திரீகள் இந்த ஸஹகமன நெறியை விசேஷமாக அநுஷ்டித்திருக்கிறார்கள்.

நான் சொல்ல வந்தது, கட்டாய உடன்கட்டை கிடையாது என்பது. ஆனால் தாமாக இப்படி பிராணத்தியாகம் பண்ண முன் வருபவரை ரொம்பவும் மதித்து அப்படிப் பண்ண நம் சாஸ்திரம் அநுமதித்திருக்கிறது.

‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு ஸ்திரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பூர்வத்தில் அந்த லட்சியத்துக்கு அநுகூலமான சூழ்நிலை இருந்து பலபேர் அப்படி செய்தார்கள். இதனால் பிறத்தியார் கட்டாயப் படுத்தாவிட்டாலும், இப்படிப் பலபேர் போவதைப் பார்த்து அவர்களுக்கு உத்தம லோகம் ஸித்திப்பதாக சொல்கிறார்களே என்று தாங்களாகவே அரைமனஸாக ஓரிரண்டு பெண்கள் அக்காலத்தில் ஸஹகமனம் பண்ணியிருக்கலாம். இன்றைக்கோ அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாததால் இத்தனை கலிப் பிரவாஹத்தில், சீர்திருத்த நாட்களில் யாராவது உடன்கட்டை ஏறினால் இதுதான் ரொம்ப genuine [உண்மையானது] என்று நினைக்கிறேன்.

இதே மாதிரி இன்னொன்றைக் கூட நினைப்பதுண்டு. குருகுலவாஸம் வேண்டுமென்று நான் அடிக்கடி சொல்கிறேன் அல்லவா? சதி மாதிரிதான் இதுவும் இப்போதைய சூழ்நிலையில் மறந்தேபோன விஷயமாகி விட்டது. முன்பு ஸர்வ ஸாதாரணமாய் இருந்த குருகுல முறையை இப்போது நடத்துவது அஸாத்தியமென்கிற அளவுக்கு ஆக்கியிருக்கிறோம். இப்படி இருக்கிற நிலையிலேயே இன்னமும் யாராவது ஒரு பையன், இரண்டு பையன் பிக்ஷாசார்யம் பண்ணி குருகுலவாஸம் பண்ணினால் இதுதான் ஆதிகாலத்தில் பண்ணினதை விடவும் genuine என்று நினைப்பதுண்டு.

ஸந்நியாஸம் எல்லோருக்கும் ‘கம்பல்ஸரி’ இல்லை என்கிற மாதிரியே ஸஹகமனம் பெண்கள் யாவருக்கும் கம்பல்ஸரி இல்லை என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் சொல்கிறேன். தர்ம சாஸ்திரங்களில் விதவா தர்மங்கள் என்பதாகக் கைம்பெண்கள் இருக்க வேண்டிய முறைகளைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. எல்லோருக்கும் ஸந்நியாஸம் என்றால் தஹன ஸம்ஸ்காரமே சாஸ்திரத்தில் இருக்காது என்ற மாதிரி, விதவைகள் எல்லோரும் புருஷனோடேயே சிதை ஏற வேண்டும் என்று கட்டாயமாக இருந்திருந்தால் விதவா தர்மம் என்று ஒன்று இருக்கவே இடம் இருந்திருக்காது அல்லவா?

மரணமாவது எப்போது வருகிறது என்று எவருக்கும் தெரியாது. பால்யத்திலோ அல்லது கிருஹஸ்தாச்ரமத்திலோ திடீரென்று மரணம் ஸம்பவித்துவிடலாம். அதனால் எல்லோரும் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் சாக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனபடியால் இவர்களை உத்தேசித்தாவது தஹன ஸம்ஸ்காரம் சொல்லித் தான் ஆகவேண்டும். விதவா தர்ம விஷயம் அப்படியில்லை. புருஷன் போய்விட்டான் என்றால் உடனே ஒருத்தியைச் சேர்த்து கொளுத்தத்தான் வேண்டுமென்பது சாஸ்திர அபிப்ராயமானால் அப்புறம் விதவா தர்மம் என்று ஒன்றை எழுதி வைக்கக் கொஞ்சம்கூட இடமில்லை.


* தெய்வத்தின் குரல்-முதற்பகுதி “முருகனின் வடநாட்டு அவதாரம்” பார்க்க‌.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மற்ற ஸம்ஸ்காரங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸம்ஸ்கார லக்ஷியம்
Next