பிறப்பாலேயே குணமும் தொழிலும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவருக்குப் பாரம்பரியமாக ஏற்பட்ட குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான், ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கின்ற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை.

பரசுராமர், த்ரோணாசாரியார் இவர்கள் பிராம்மணராயினும் க்ஷத்ரிய குணத்தோடு இருந்தார்களே; தர்ம புத்ரர் க்ஷத்ரியராயினும் பிராம்மண குணத்தோடு இருந்தாரே; விச்வாமித்ரர் புஜபல பராக்ரமத்தோடும் ராஜஸ குணத்தோடும் இருந்துவிட்டே அப்புறம் பிரம்மரிஷி ஆனாரே என்றால் இதெல்லாம் கோடியில் ஒன்றாக இருந்த exceptionகள் (விதிவிலக்கு) தான். எந்த ரூலானாலும் எக்ஸப்ஷன் உண்டோ இல்லையோ? பொதுவாக வெளிப்பட வேறு குணம் தெரிந்த போது கூட உள்ளூரப் பிறப்பாலான ஜாதித் தொழிலுக்கேற்ற குணந்தான் இருக்கும் என்ற அபிப்ராயத்திலேயே பகவான் காரியம் பண்ணினதாகத்தான் தெரிகிறது.

அதெப்படி பிறப்பே குணத்தைத் தொழிலுக்கேற்றதாக அமைத்துக் கொடுத்த‌து என்றால், Individuality-யுடன் [தனித்தன்மையுடன்] heredity[பாரம்பரியம்] என்பதும் சேர்ந்தேதான் ஒரு மனுஷனை உருவாக்குகிறது என்று இக்கால ஸைக்காலஜியும் சொல்கிறதல்லவா? ஒருத்தனின் குணம் உருவாகும் முன்பே அவன் தலைமுறை தத்வமாக வந்த ஒரு தொழிலின் சூழ்நிலையிலேயே வளர்ந்து தானாகவும், கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொண்டும் அந்தத் தொழிலை எடுத்துக் கொண்டதால் குணமே தொழிலை அநுஸரித்து ஏற்பட்டது. ‘நமக்கு என்று ஏற்பட்ட தொழில் இது’ என்று அவரவரும் துராசையோ, போட்டியோ இல்லாமல் நிம்மதியாகப் பிரிந்திருந்து தொழில்களைச் செய்து கொண்டு மொத்த ஸமூஹம் ஒற்றுமையாக இருந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து, அதிபால்யத்திலேயே அந்தத் தொழிலைப் பார்த்து அதிலே ஒரு பற்று, aptitude உண்டானதால், பிறப்புப்படி செய்வது குணப்படி செய்வதாகவும் ஆயிற்று. இப்போது சீர்திருத்தவாதிகள் என்ன சொன்னாலும், பழைய ஏற்பாட்டில்தான் திறமை, குணம் இவையும் தொழிலோடு அநுஸரணையாகக் கலந்து இருந்தன. ஒருத்தன் தன் குணத்துக்கு அநுஸரணையாகத் தொழிலைச் செய்தான் என்றால் அது பழைய தர்மப்படி செய்த போதுதான் இருந்தது என்பேன். இப்போது இதைத் தலைகீழாக மாற்றித் திரித்துப் பேசுகிறார்கள்.

இப்போது மனோதத்துவத்தை ரொம்பவும் ஆராய்ச்சி செய்கிறவர்கள்கூட என்ன சொல்கிறார்கள்? ஒருத்தனின் குணத்தை, திறமையை, மனோபாவத்தை நிர்ணயம் பண்ணுவதில் heredity -க்கும் [பாரம்பரியத்துக்கும்] அவன் இருக்கிற environment -க்கும் [அதாவது] சுற்று வட்டாரத்துக்கும் மிகுந்த முக்யத்துவம் இருக்கிறது என்கிறார்கள். பழைய நாளில் பாரம்பரியப்படிதான் அப்பன், பாட்டன், முப்பாட்டன் தொழிலை ஒவ்வொருவனும் பண்ணினான். இரண்டாவதாக, ஒவ்வொரு தொழில்காரரும் ஒரே கிராமத்தில், அக்ரஹாரம், பண்டாரவாடை, சேரி, சேணியர்தெரு, கம்மாளர் தெரு என்று, தனித்தனியாக, ஒவ்வொரு சமூகமாக வசித்தபோது என்வைரன்மென்டும் [சுற்றுச் சூழ்நிலையும்] ஸாதகமாக இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் அழுத்தமான விதத்தில் ஒருத்தனுடைய குணத்தை அவனுடைய பரம்பரைத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாகச் செய்து வந்தன.

இந்த விஷயத்தை நான் சொல்வதைக் காட்டிலும் காந்தி சொன்னதை எடுத்துக் காட்டினால் சீர்திருத்தக்காரர்கள் ஒத்துக் கொள்வீர்கள். காந்தி இப்படி சொல்கிறார்.

“கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்று தான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை) ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”*

ஆகையால் கிருஷ்ண பரமாத்மா கொள்கை ஒன்று, காரியம் வேறொன்று என்று முரணாகப் பண்ணவில்லை யென்பது சீர்திருத்தவாதிகள் எல்லோரும் தலைவராக ஒப்புக்கொள்ளும் காந்தியின் வார்த்தையாலேயே உறுதியாகிறது. நவீனக் கொள்கைக்காரர்கள் தங்கள் இழுப்புக்கு வேத சாஸ்திரங்களையும் கிருஷ்ண பரமாத்மாவையும் இழுத்து வளைக்கக்கூடாது.

கிருஷ்ணர் “நான் சொல்கிறேன்; நீ கேள்” என்று அடித்துப் பேசுகிறவர்தான். ஆனால் அவரே ஜனங்கள் எப்படி காரியம் பண்ணவேண்டும் என்கிறபோது “நான் இப்படிச் சொல்கிறேன் என்று சொல்லாமல் சாஸ்திரம் எப்படிச் சொல்கிறதோ அதுவே பிரமாணம்” என்று அழுத்திச் சொல்லியிருக்கிறார். அவர் காலத்திலிருந்த சாஸ்திரப்படி ஜாதிகள் பிறப்புப்படிதான் பிரிந்திருந்தன என்பது பாரத, பாகவத, விஷ்ணு புராணாதிகளிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது. பிறப்பால் ஜாதி என்கிற சாஸ்திரங்களே கிருஷ்ணர் காலத்துக்குப் பிறகுதான் வந்தது என்றுகூட இக்கால ‘ரிஸர்ச்’காரர்கள் சொல்லக்கூடுமாதலால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன். கிருஷ்ண பரமாத்மாவின் காலத்தில் வர்ணாச்ரம விபாகங்களைச் சொல்கிற சாஸ்திரங்கள்தான் தர்மப் பிரமாணமாக இருந்தன என்று பாரத, பாகவத, விஷ்ணு புராணாதி க்ரந்தங்கள் ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் சொல்கின்றன. இவ்வாறாக பிறப்பின்படியே வர்ணவிபாகம் செய்யும் சாஸ்திரங்கள் அநுஷ்டிக்கப்பட்ட காலத்தில்தான் பகவான் ஸ்ப‌ஷ்டமாக,

ய: சாஸ்த்ர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:|

ந ஸ ஸித்திம் அவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் ||

தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதெள‌ |

ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்துமிஹார்ஹஸி ||

“எவன் சாஸ்திர விதியை மீறி சொந்த ஆசைகளின் வசப்பட்டு தொழிலை எடுத்துக் கொள்கிறானோ அவனுக்கு ஸித்தியில்லை, ஸுகமில்லை, கதி மோக்ஷமும் இல்லை. எந்தத் தொழில் செய்யலாம். எது கூடாது என்று வரையறுத்துக் கொள்வதற்கு சாஸ்திரம்தான் பிரமாணம். இப்படி சாஸ்திரோக்தமான வழியை உணர்ந்து அதன்படி தொழில் செய்வதற்கு உரியவனாகவே இருக்கிறாய்” என்று சொல்லியிருக்கிறார்**. இதனால் அவர் பிறப்புப்படி ஜாதி என்பதைத்தான் நிர்த்தாரணம் பண்ணுகிறார் [வலியுறுத்தி நிலைநாட்டுகிறார்] என்பதில் லவலேசமும் ஸந்தேஹமேயில்லை.


* “The Gita does talk of Varna being according to Guna and Karma but Guna and Karma are inherited by birth”

** கீதை XVI.23-24.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதம், கீதை இவற்றின் கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  குணப்படித் தொழில் தேர்வு நடைமுறையில் இல்லை
Next