பெண்களுக்கான பணிகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பெண்கள் பகலில் ஒழிவு இருக்கிறபோது சேர்ந்து நல்ல மத நூல்களைப் படித்து மற்ற ஸ்திரீகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நமக்கு இருக்கிற ஸ்தோத்ரங்கள் யதேஷ்டம். பெண்கள் ஒன்று சேர்ந்து இவற்றைப் பாடம் பண்ணலாம். மடம், கோயில் மாதிரியானவற்றுக்கு சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுக்கலாம்.

[குங்குமம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒருமுறை ஸ்ரீ பெரியவர்களே கொடுத்த குறிப்பு: முப்பது தோலா கெட்டியான உருண்டை மஞ்சள் எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்க. இதற்கு ஸம எடை எலுமிச்சம் பழச்சாறு விதையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்க. (மஞ்சள் முதலியன கடையில் தோலாக் கணக்கில் எடைபோட்டு வாங்குவதுபோல், எலுமிச்சஞ் சாற்றுக்கு வீட்டில் எடை பார்ப்பது முடியாது. அதனால் முகத்தல் அளவையில் வீட்டில் இருக்கக்கூடிய அவுன்ஸ் க்ளாஸில் அளந்து போடுகிற விதத்தில் சொன்னால், பதினாறு அவுன்ஸ் எலுமிச்சம் பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.) இந்தப் பழச்சாற்றில் நன்றாகப் பொடித்த வெங்காரமும் படிக்காரமும் ஒவ்வொன்றும் மூன்று தோலா போட்டுக் கரைக்கவும். மஞ்சள் துண்டங்களை இதில் போட்டுக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற, ஈயம் பூசிய பாத்திரத்தில் வைப்பது உத்தமம். இதை ஒருநாளில் மூன்று தடவை நன்றாகக் கிளறவும். பழச்சாறு மஞ்சளில் சேர்ந்து சுண்டியபிறகு நிழலிலேயே நன்றாகக் காய வைக்கவும். அப்புறம் உரலில் இடித்து வஸ்திராயணம் செய்யவும். (மெல்லிய துணியில் பொடியை வடிகட்டுவதே வஸ்திராயணம் அல்லது வஸ்திரகாயம்.) இப்படி விழுகிற சுத்தமான மஞ்சட் குங்குமத்தை வாயகன்ற ஜாடியில் பத்திரப்படுத்தவும். குங்குமத்தில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி (tea-spoon) சுத்த பசு நெய்விட்டு, கட்டி தட்டாமல், நன்றாகக் கலக்கச் செய்து வைத்தால் காப்பும் ( preservative) ஆகும்; புனிதமும் ஆகும். சுத்தமான பசுநெய் கிடைத்தால் மட்டுமே சேர்க்கவும். சரக்கைப்பற்றிக் கொஞ்சம் ஸந்தேஹமிருந்தால்கூட நெய்யே சேர்க்காவிட்டாலும் பாதகமில்லை.]

ஸ்வாமி தீபத்துக்கு அகத்திலேயே சுத்தமாக வெண்ணெய் காய்ச்சி, பசும் நெய் எடுத்துத் தரலாம். முனைமுறியாத அக்ஷதைகள் பொறுக்கி அனுப்பி வைக்கலாம். ”அக்ஷதை” என்றாலே ”முறியாதது” என்று அர்த்தம். ஆனால் இப்போது மந்த்ராக்ஷதை என்று போடுவதில் பாதி நொய் மாதிரி தூளாகத்தானே இருக்கிறது? மந்த்ராக்ஷதை முழுசாக இருந்தால்தான் அதனால் மங்களம் கிடைக்கும். எங்கிருந்தோ. ‘டின்’னில் அடைத்து வருகிற நெய்யில் ஏதாவது கொழுப்புக் கலந்திருந்தால், அதை ஸ்வாமி தீபத்துக்குப் போடும் போது உத்தேசித்த க்ஷேமம் உண்டாகாமலே போய்விடும். நான் கேள்விப்படடிருக்கிறேன்: முன்பெல்லாம் யாராவது ஒரு ஹோமம், யஜ்ஞம் என்று செய்தால் விரோதிகள் அதை நிஷ்பலனாக்குவதற்கு ஒரு தந்திரம் பண்ணுவார்களாம். அதாவது ஹோமம் பண்ணுகிறவனிடம் ரொம்பவும் ஸ்நேஹம் வந்துவிட்டது போல் நடிப்பார்களாம். ‘ஹோமத்துக்கு நாங்கள் நெய் கைங்கர்யம் செய்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டு நெய்யில் கொஞ்சம் பன்றிக் கொழுப்பைக் கலந்து கொடுத்துவிடுவார்களாம். அவ்வளவுதான்! இந்த மாதிரி அசுத்த நெய்யினால் ஹோமம் பண்ணினால் பண்ணுகிறவர்களுக்கு நல்ல பலன் கிடைக்காமல் போய்விடும் என்பதோடு, விபரீத பலன் வேறு உண்டாகும். ஹோமம் அல்லது ஸ்வாமி தீபத்துக்கான நெய், மந்த்ராக்ஷதை, குங்குமம் முதலியவை சுத்தமாக இருக்கவேண்டும். இவற்றில் கடைச் சரக்குகளை நம்புவதைவிடப் பெண்கள் சேர்ந்து கைங்கர்யமாகச் செய்தால் ச்லாக்யமாக இருக்கும்.

மற்ற ஸோஷல் ஸர்வீஸ்களைவிட தெய்வ ஸம்பந்தமான, மத ஸம்பந்தமான இப்படிப்பட்ட பணிகளைப் பெண்கள் முக்யமாகச் செய்யலாம்.

பட்டுப்புடவை, வைரம் இன்னும் வேறு ‘தாம்தூம்’ செலவுகள் செய்யாமலிருப்பதற்கு ஸ்திரீகள் ஒரு ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டால் அதுவே பெரிய உபகாரமாகும். பட்டுத்துணி வேண்டாம் என்று வைப்பதால், லக்ஷக்கணக்கான பட்டுப்பூச்சிகளைச் சாகாமல் காப்பாற்றிய புண்யம் கிடைக்கும். அதோடு, ‘இருக்கிறவர்’கள் இப்படிச் செலவு செய்வதைப் பார்த்து, ‘இல்லாதவர்’களுக்கும் ஆசை உண்டாகிறதே; கடன் கஸ்தி வாங்கியாவது அவர்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்களே, இப்படி அவர்களுக்குத் தப்பான வழிகாட்டி அபகாரம் பண்ணாமலிருப்பதே உபகாரந்தான். இந்த ஆடம்பரங்கள் போய், காப்பிக்குப் பதில் மோர்க்கஞ்சி சாப்பிடுவது என்றாகிவிட்டால் எல்லாக் குடும்பத்திலும் பாதிச் செலவு மிஞ்சும். கடன் வாங்கிக் குடித்தனம் செய்பவர்கள் கடன் வாங்காமல் காலம் தள்ளலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is 'டிக்ரி'இல்லாமலே மதிப்புப் பெற
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பெண்களும் சிரமதானமும்
Next