இது தான் அஸ்வமேதம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பரோபகாரத்தைப் பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தபோது, ‘நம் எல்லோராலும் அஸ்வமேத யாகம் பண்ணமுடியுமா?’ என்று ஒரு கேள்வி கேட்டேன். அப்புறம் ‘எதற்காக அஸ்வமேதம்?’ என்று கேட்டேன். ” ஹயமேத ஸமர்ச்சிதா” – ”அஸ்வமேதத்தால் விசேஷமாக வழிபடப்படுபவள்” என்று அம்பாளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆனதால் அம்பிகையின் பூர்ண அநுக்ரஹத்தைப் பெறுவதற்காகவே அஸ்வமேதம் செய்யவேண்டும் என்று பதில் சொன்னேன். .ஆனால் இந்தக் கலிகாலத்தில், ரொம்பவும் நியமங்கள் தேவைப்படும் அஸ்வமேதம் செய்வது அஸாத்யமாயிற்றே, இதற்கு என்ன பண்ணுவது என்று கேட்டேன். பரோபகாரங்களில் ஒன்றை பண்ணினால் அதுவே அஸ்வமேதத்துக்கு ஸமானம் என்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது என்றும் ஆகையால் இந்தப் பரோபகாரத்தைப் பண்ணிவிட்டால் நாம் அம்பாளின் பூர்ணாநுக்ரஹத்தைப் பெற்றுவிட முடியும் என்று இதற்கு பதில் சொன்னேன். அப்புறம் பரோபகாரங்கள், ஜீவகாருண்யப் பணிகள் பலவற்றைப் பற்றிக் கதை அளந்துகொண்டே போனேன். ஆனால் இதுவரை அஸ்வமேதத்துக்கு ஸமமான பலனைத் தருகிற அந்த ஒரு பணியைச் சொல்லவில்லை. மற்ற எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணி என்னவென்றால் அதுதான் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம்.

அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்

அஸ்வமேத பலம் லபேத்

என்பது சாஸ்த்ர வசனம்.

பர-உபகாரமாக, செத்துப்போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே, நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து, நமக்கும் உபகாரம் பண்ணிக்கொள்கிறோம்.

டாக்டர் ஒருத்தர் கேட்டார், “Unclaimed bodies ஆகச் சில அநாதைப் பிரேதங்கள் கிடைப்பதிலும் ஒரு உபகாரம் இருக்கிறது. இந்தமாதிரிப் பிணங்களைத்தான் நாங்கள் போஸ்ட்-மார்ட்டம் பண்ணி, பரிசோதனைக்காக உறுப்புக்களை எடுத்துக்கொள்ள முடிகிறது. மெடிகல் காலேஜ், மெடிகல் எக்ஸிபிஷன் முதலானவற்றில் anatomy (தேக இயல்) -ஐ விளக்க இந்தப் பிரேதங்கள்தான் உதவுகின்றன. இவற்றையும் உங்கள் ஜீவாத்ம கைங்கர்யக்காரர்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டால் மெடிகல் ஸயன்ஸ் அபிவிருத்தி என்ன ஆவது?” என்று கேட்டார். அப்படியானால் டாக்டர்கள் வேண்டுமானால் தாங்கள் போன பிற்பாடு தங்கள் சரீரத்தைப் போஸ்ட் மார்டத்துக்குக் கொடுத்துவிடலாம் என்று பதில் சொன்னேன். சாஸ்த்ரோக்தமாக இதில் கொஞ்சம் தோஷமிருந்தாலும், இதிலே ஒருத்தன் மனமறிந்து, மனப்பூர்வமாகச் செய்கிற தியாகம் இருப்பதால் தோஷ நிவ்ருத்தி என்று வைத்துக்கொள்ளலாம். அதோடுகூட, முன்னே, அவனவன் தன் தொழிலில் ஏற்படுகிற தோஷம் போக அந்தத் தொழிலாலேயே தியாக ரூபமாக உதவி செய்ய வேண்டுமென்றேனே, அதில் மேலும் ஒருபடியாக, தொழிலால் பிறருக்கு உபகரித்து மட்டுமில்லாமல், சாவிலும் தன் தொழிலுக்கு மூலமான வித்யைக்கே உபகரித்ததாகவும் இது இருக்கும்.

‘இதர மதஸ்தர்கள் ஜெயிலிலும், ஆஸ்பத்திரியிலும், நடுத்தெருவிலும் ஸம்பவிக்கும் அநாதை மரணங்களில் ஒன்றுகூட விட்டுப்போகாமல், தங்கள் தங்கள் மதப்படி ஸம்ஸ்காரம் செய்கிறார்கள்; இப்படிப்பட்ட ஹிந்து ப்ரேதங்கள் மாத்திரம் பெரும்பாலும் ஸர்க்கார் சிப்பந்திகளாலேயே ஒருவிதமான சடங்கும் இல்லாமல் புதைக்கப்படுகின்றன’ என்கிற பாபமும், அவமானமும் நம்மைச் சேராமலிருக்க இப்போதாவது எல்லா ஊர்களிலும் தகுந்த ஏற்பாடு பண்ணியாக வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஹிந்து ஸமூஹத்தின் தோஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ராமனும் கண்ணனும் காட்டிய வழி
Next