முந்தைய உரைத் தொடர்பாக ஒரு விளக்கம்1 : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘சிகாம், புண்ட்ரம், ஸூத்ரம்’ என்று சொன்ன2 மூன்று விஷயங்களும் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவைதான். மதாந்தரங்களில் இவையில்லை. ஆனதால் ஹிந்து மதத்துக்குள்ளேயே வெவ்வேறாயுள்ள பிரிவுகளை ஒப்புக்கொண்டு, இவற்றில் பிறந்தவர்கள் தங்கள் முன்னோரின் பிரிவுக்குரிய ஆசாரத்தையே பின்பற்ற வேண்டும் என்று ஸ்பஷ்டமாக ஏற்படுகிறது.

அப்போது ஒரு கேள்வி வருகிறது. ஹிந்து மதம் வேதமதம்தான். அதற்கு முதல் ஆதாரம் ச்ருதி என்ற வேதம்; அடுத்தபடியான ஆதாரம் அந்த வேதத்தை ஆதாரமாகக்கொண்டே அதில் சுருக்கமாகவும், மறைமுகமாகவும், குறிப்பாகவும் ( hint-ஆகவும்) சொல்லியுள்ளவற்றை விளக்கி வைக்கிற ஸ்ம்ருதி என்ற தர்ம சாஸ்திரம். ஆக, வேதம்தான் [இந்த மதத்துக்கு] மூச்சு. இந்த வேதத்தின் பரமதாத்பரியம் என்ன என்பதிலே ஏற்பட்ட வித்யாஸத்தால்தான் இதற்குள் பல பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. த்வைதம் என்று ஒருத்தர் நிர்தாரணம் பண்ணுகிறார்; அத்வைதம் என்று இன்னொருத்தர், இரண்டுமில்லை விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம், த்வைதாத்வைதம் என்றெல்லாம் பலபேர் பல விதமாக முடிவு பண்ணுகிறார்கள். வைதிக மதத்தில் எல்லா தெய்வமும் ஒரே பரமாத்மாதான் என்று ஒருத்தர் சொல்கிறார். இன்னொருத்தர் விஷ்ணுதான் பரமாத்மா மற்ற தெய்வங்களில்லை என்கிறார். வேறொருவர் இதே மாதிரி சிவனைச் சொல்கிறார். எல்லாரும் தாங்கள் சொல்வதுதான் வேதத்தின் ஸரியான அபிப்ராயமென்கிறார்கள், ‘த்வைதம், அத்வைதம் என்றெல்லாம் பெயர் கொடுத்தாலும் இது sub-title தான். நாங்கள் வேதமதம் என்பதுதான் title’ என்று அவரவரும் சொல்கிறார்கள்.

இதிலிருந்துதான் கேள்வி வருகிறது. வேதமதத்தை விட்டு வேறு மதத்துக்குப் போனால்தான் தப்பா? பதிதனாகிறானா? அல்லது ஒரே வேத மதத்திலேயே இருக்கிற ஒரு பிரிவிலிருந்து அதிலே பிறந்தவன் இன்னொரு பிரிவுக்குப் போனாலும் பதிதனாகிற தோஷம் வருமா?

ஸ்லோகத்தில் வைதிக ஸமயத்தில் மட்டுமேயுள்ள சிகை, புண்ட்ரம், ஸு¨த்ரம் இவற்றைச் சொல்லி, அப்புறம் ஸமயசாரத்தையும் சொல்லி, இவையெல்லாவற்றிலும் ஒருவன் பூர்விகரின் ஆசாரத்தைத்தான் கடைபிடிக்க வேணடும்; இல்லாவிட்டால் பதிதனாகிறான் என்று ஸ்பஷ்டமாக இருக்கிறபோது, ஹிந்து மதத்திலேயே ஒரு பிரிவிலிருந்து இன்னொன்றுக்குப் போகலாமா என்று கேட்பது ஸரியில்லைதான். ஆனாலும் இப்படிக் கேட்பது அடியோடு தப்பான விதண்டாவாதம் என்று தள்ளிவிட முடியாது. கேட்பவர்களின் ஆர்க்யுமென்டிலும் நியாயமிருக்கிற மாதிரித் தோன்றுகிறது. அதனால் அதைக் கேட்டு, தீர்க்கமாக ஆலோசனை செய்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆர்க்யுமென்ட் என்ன? “மதாந்தரங்கள் என்றால் அவை வேதத்தை ஆதாரமாக, ப்ராமண நூலாகக் கொள்ளாதவை. பைபிள், கொரான், த்ரிபிடகம், ஃஜென்டோவஸ்தா, க்ரந்த ஸாஹேப், ஓல்ட் டெஸ்ட்மென்ட்*1 என்று ஏதோ ஒன்றைத்தான் அவை ஆதார க்ரந்தமாகக் கொண்டிருக்கின்றன. ஆகையால் வேத மதம் என்பதில் பிறந்துள்ள நாம் அவற்றிலொன்றுக்குப் போவது தப்பு. ஆனால் நாம் இந்த வேத மதத்தை விடாமலே இதில் ஒரு பிரிவிலிருந்து இன்னொன்றுக்குப் போனால் எப்படித் தப்பு? இந்தப் பிரிவுகள் தோன்றுவதற்கு முந்தி எப்படியிருந்தது? நீங்களே இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறீர்கள்? ‘மாறுபட்ட எல்லா ஹிந்துமத ஸித்தாந்தங்களின் அபிப்ராயத்துக்கும் வேதம் ஒவ்வொரு ஸ்டேஜில் இடம் கொடுக்கிறது. த்வைதம் விசிஷ்டாத்வைதம்-அத்வைதம், சைவம் வைஷ்ணவம் என்றெல்லாம் தனித்தனி ஸம்ப்ரதாயங்களாகப் பிரிவதற்கு முன்னாலும் தன்னுடைய பக்குவ ஸ்திதியில் ஒருவர் எந்த ஸ்டேஜில் இருந்தாரோ அதைப் பொறுத்துத் தத்வரீதியில் த்வைதியாகவோ, அத்வைதியாகவோ, இன்னொன்றாகவோ, இதே மாதிரி தெய்வ உபாஸனை என்று வரும்போது சிவ பக்தராகவோ, விஷ்ணு பக்தராகவோ, அம்பாள் பக்தராகவோ, தம் பாட்டுக்கு இருந்து கொண்டுதான் இருந்தார். ச்ருதி, ஸ்ம்ருதிகளைப் பார்த்தால் இது ஒன்றுதான் தத்வம், இது ஒன்றுதான் தெய்வம் என்று முடிவுகட்டி எல்லாருக்கும் பொதுவாக எதையும் சொல்லியிருக்கவில்லை. ஆதலால் பிரிந்து போகாமலே தமக்குக் ‘கன்விக்ஷன்’ உள்ள தத்வத்தை அநுஸரித்துக் கொண்டும், தமக்கு ‘அப்பீலா’கிற தெய்வத்தை உபாஸித்துக் கொண்டும் ஒரே ஸம்பிரதாயமாகத்தான் ஹிந்துக்கள் எல்லாரும் இருந்திருக்கிறார்கள். ஸம்ஸ்காரங்களிலும், ஆசாரங்களிலும் எல்லாரும் தர்ம சாஸ்திரப்படி ஒரே மாதிரிதான் அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்திலேயே கூட இருந்தவர்கூட வெவ்வேறு தத்வ ஸித்தாந்தத்தை அநுஸரித்துக் கொண்டும், அவர்களில் ஒருவர் சிவபூஜை பண்ணுகிறவராகவும், இன்னொருவர் விஷ்ணு பூஜை பண்ணுகிறவராகவும் இருந்திருக்கிறார்கள். ச்ரௌத ஸ்மார்த்த*2 கர்மாக்களான பஞ்ச மஹா யஜ்ஞங்கள், நாற்பது ஸம்ஸ்காரங்கள், ஸந்த்யாவந்தனம் முதலியவற்றில் வித்யாஸமில்லாமல் எல்லாரும் ஒரே போலப் பண்ணி வந்தார்கள். பிற்காலத்தில்தான் ஸித்தாந்தம், தெய்வம் என்பதற்காக வேறுவேறு பிரிவுகளானது’என்றெல்லாம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே! ஆகையால் இப்போது த்வைதியாகப் பிறந்திருக்கிற ஒருத்தனுக்கு அத்வைதத்தில்தான் ‘கன்விக்ஷன்’ என்றால் அவன் அப்படி மாறக் கூடாதா? சிவபூஜையே பண்ணி வருகிற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு விஷ்ணுவிடம் தான் பக்தியிருக்கிதென்றால் அவன் அகத்துப் பூஜையை விட்டு விட்டு விஷ்ணுவைப் பூஜை பண்ணினால் தப்பா? இந்தப் பிரிவுகள் பிற்காலத்தில் ஏற்படுவதற்கு முன்னால் ஒருவனுக்கு இப்படிப்பட்ட ஸ்வதந்திரம் இருந்தது என்பதால் இப்போதும் இப்படி வேத மதத்துக்கு விரோதமாகப் போகாமல். அதற்குள்ளேயே மனஸ்ஸாக்ஷிப் படி குலாசாரத்தை விட்டு வேறுவிதமாகச் செய்தால் அது எப்படித் தப்பாகும்?”

இதற்கு மேலேயும் கேள்வி போகிறது நானே சொன்னதை வைத்தே என்னை மடக்குகிறார்கள்! “சங்கராசார்யார் தம் ஸித்தாந்தப்படிப் போகிறவர்களை வேத ஸம்பிரதாயத்தில் புதுப் பிரிவு என்றே நினைக்கவுமில்லை, வைக்கவுமில்லை. இதற்கு அத்தாட்சியாக அதுவரை ஹிந்துக்களுக்கு இருந்து வந்திருக்கிற பொதுப் பெயரான ‘ஸ்மார்த்தர்’ என்பதேதான் இன்றுவரை அவரை ஆசார்யராகக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பெயராக இருக்கிறது. ராமாநுஜரைச் சேர்ந்தவருக்கு ஸ்ரீவைஷ்ணவர் என்றும், மத்வரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்வர் என்றும், இப்படியே மற்ற ஸம்பிரதாயஸ்தர்களுக்கு ஒவ்வொரு தனிப்பெயரும் ஏற்பட்டிருப்பதுபோல் சங்கரரைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாமல், ‘ஹிந்துவாகப் பிறந்த எல்லோருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றுகிறவன்’ என்று அர்த்தம் கொண்ட ‘ஸ்மார்த்தர்’ என்பதுதான் பெயராயிருக்கிறது. அவர் அவருக்கு முற்பட்ட சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களையேதான் அவலம்பித்தாரே [நிலைநாட்டினாரே] தவிர அவற்றில் மாறுதல் எதுவும் செய்யவில்லை. பிற்பாடு மற்ற ஆசார்யர்கள் வந்த போதுதான் தங்கள் தங்கள் ஸம்பிரதாயத்துக்குத் தனிப் பெயர் தந்தது; இவர்களும் ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களில் பூர்விகமான தர்ம சாஸ்திரங்களைத் தான் பெரும்பாலும் பின்பற்றினார்களென்றாலும், அவற்றோடு தங்களுடைய புதிய பிரிவைத் தழுவுவதற்கு அடையாளமாக அதிகப்படியான சிலவற்றையும் (ஸமாச்ரயணம், முத்ராதாரணம் முதலியவற்றைப் போன்றவை) சேர்த்தார்கள். ச்ரௌத ஸ்மார்த்த கர்மாவுக்குக் கொஞ்சம் முக்யத்தைக் குறைத்து புராணாதிகளுக்கு அதிகம் முக்யம் தருவது போன்ற சில மாறுபாடுகளையும் செய்தார்கள். புண்ட்ரத்திலும் [நெற்றிக்கு விடுவதிலும்] புது விதமாக வைத்தார்கள்” என்றெல்லாம் நான் சொல்லியிருக்கிறேனல்லவா?*3 இதை வைத்தே கேட்கிறார்கள்: “நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்தே, பிற்கால ஆசார்ய புருஷர்களாக இருக்கப்பட்டவர்களே அதுவரை இருந்து வந்த அவர்களுடைய குலாசாரத்துக்கு வித்யாஸமாகப் பண்ணியிருக்கிறார்களென்று ஆகிறதே! அப்படியானால் இப்போதும் அப்படியே ஒருத்தன் ஹிந்துவாகவே இருந்துகொண்டு ஸ்மார்த்தத்திலிருந்து வைஷ்ணவத்துக்கோ, மத்வ மதத்திலிருந்து ஸ்மார்த்தத்துக்கோ போனால் என்ன?” – இப்படி ஆர்க்யுமென்ட் போகிறது.

இதில் நியாயம் இருப்பதாகப்பட்டாலும் சாஸ்திர அபிப்ராயத்தைத்தான் நான் சொல்ல வேண்டும், பூர்விகர் வழிதான் போகவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் உபதேசித்துவிட்டு நானே பூர்விகர் அபிப்ராயத்துக்கு மாறாகச் சொல்லக்கூடாது என்பதால், அவரவரும் தாங்கள் பிறந்திருக்கிற குலாசாரப்படித்தான் நடக்க வேண்டும் என்றே சொல்கிறேன். சாஸ்திரத்தை நம்ப வேண்டுமென்றால் அப்புறம் ஆர்க்யுமென்டுக்கு வால்யூ இல்லை ஆர்க்யுமென்டில் எத்தனை நியாயம் இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டு அதன்படிதான் செய்ய வேண்டும். நம்பிக்கை (faith) என்னும்போதே அது புத்தியால் மட்டும் புரிந்துகொள்ளக் கூடியதல்ல என்று தானே அர்த்தம்? புத்திக்குப் புரிவதைத் தீர்மானமாக நாமே தெரிந்துகொண்டு விடுவோமாதலால், இதிலே ‘நம்ப’ என்ன இருக்கிறது? தெரியாததைத்தான் நம்ப வேண்டும். இதோ எதிரே ‘மைக்’ இருக்கிறது என்று கண்ணுக்குத் தெரிவதைச் சொன்னால் அதிலே ‘நம்புவதற்கு ‘என்ன இருக்கிறது? ஆனபடியால் மத நம்பிக்கை, சாஸ்திர நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்றெல்லாம் வார்த்தைகள் இருப்பதாலேயே – மதத்துக்குப் பேரே Faith என்று வைத்திருப்பதாலேயே – அதில் எல்லாவற்றையும் புத்தி தர்க்கத்தால் விளக்கிக் கொள்ள முடியாது என்றுதான் அர்த்தம்.

ஆனாலும் இப்படிச் சொல்லி அடியோடு விட்டுவிடாமல் [ஹிந்து மதப்பிரிவுகளுக்குள்ளும் பிறப்பின் படி அமைந்த பிரிவுக்கான பூர்வாசாரப்படித்தான் பண்ண வேண்டும் என்பதற்கு] கொஞ்சம் காரணமும் சொல்கிறேன்.

முதல் கேள்வி: தத்வத்தில் ‘கன்விக்ஷன்’ [உண்மை என்ற உறுதிப்பாடு] என்பதற்காக த்வைதத்திலிருந்து அத்வைதத்துக்கு அல்லது அத்வைதத்திலிருந்து விசிஷ்டாத்வைதத்துக்கு மாறலாமா? இதற்காகக் குலாசாரத்தை விடலாமா?- என்பது.

தத்வத்தில் ‘கன்விக்ஷன்’ என்பது முழுக்க ஒருத்தனின் உள்விஷயம். மனம் போனபடி ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல், நன்றாகக் கற்றறிந்து ஆலோசித்து ஏற்பட்டதாகவோ, அல்லது நல்ல உள்ளநுபவத்தில் ஏற்பட்டதாகவோயிருந்தால் அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கன்விக்ஷன் மேம்போக்காக இருக்கக்கூடாது. ஆழமாகப் போயிருக்க வேண்டும். ஏன் அந்த ஸித்தாந்தத்திலே பற்று என்பதற்குக் காரணம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். காரணமில்லாமலே ஆழ்ந்த பற்று என்றால், அப்போது ஸம்ஸ்கார விசேஷத்தால் அப்படி ஏற்பட்டிருக்கும்; அப்போது அறிவால் சொல்லத் தெரியாதது அநுபவத்தில் பேச ஆரம்பிக்கும். எப்படியாயினும் ஒரு தத்வத்திலே, ஸித்தாந்தத்திலே ஒருவனுக்குப் பற்று மேலெழுந்தவாரியாயில்லாமல் உறுதியாக இருக்கிறது என்றால் அந்த உள்விஷயத்தை யாரும் ஆக்ஷேபிப்பதற்கும், இப்படி மாறக்கூடாது என்று சொல்வதற்கும் இல்லை. ஆனால் – இப்போது நான் சொல்லப் போகிறது ரொம்ப முக்கியமான பாயின்ட் – ஒருத்தனுக்குப் பூர்விகர்களின் ஸித்தாந்தத்துக்கு வித்யாஸமாக இன்னொன்றில்தான் ஆழமான விச்வாஸமிருக்கிறது என்கிறதற்காக அவன் குலாசார அநுஷ்டானங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதேயில்லை.

“இதென்ன? தத்வத்தில் வேறேயாகப் போவதை ஒப்புக்கொள்ளலாம், ஆனால் ஸமயாசாரத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் குழப்பமாயிருக்கிறதே!” என்று தோன்றும். இதை நன்றாக அலசி, ஆலோசித்துப் பார்ப்போம். பார்த்தால் தத்வத்தைப் பற்றின உள்ளநுபவத்துக்கும் ஆசார அநுஷ்டானம் என்பதான வெளிக்கார்யம், வெளிச் சின்னங்களுக்கும் நேர் ஸம்பந்தம் இருக்கவில்லை என்று தெரியும். நேர் ஸம்பந்தம் இல்லாவிட்டாலும் சுற்றி வளைத்து நிச்சயமாய் ஸம்பந்தம் இருக்கிறது. அடியோடு ஸம்பந்தமேயில்லாமலில்லை. “ஸித்தாந்தம் அநுபவ விஷயம்; அதற்கு வெளி ஸமாசாரமான ரிசுவல் எதற்கு, ஆசாரம் எதற்கு?” என்று கேட்கிற ரிஃபார்ம்காரர்களோடு நான் சேர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் வெளிக் கார்யம், சின்னத்துக்கும் உள்ளே அநுபவம் உண்டாவதற்கும் அடியோடு ஸம்பந்தமில்லை என்று தப்பாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் நினைப்பதில் தப்பு என்ன என்பதைத்தான் இவ்வளவு நாழி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இப்போது என்ன சொல்கிறேனென்றால்: ஆசார அநுஷ்டானங்களில் பொரும்பாலானவற்றுக்கும் ஸித்தாந்தத்துக்கும் நேர் ஸம்பந்தம் அதிகம் கிடையாது என்கிறேன். ஸமயாசாரங்களும் கர்மாக்களும் எதற்காக என்று திருப்பித் திருப்பிச் சொன்னேன்? ஒரு ஜீவனுடைய சித்த சுத்திக்காக என்றுதானே சொன்னேன்? ஒரு ஜீவன் முடிவான லக்ஷ்யமாக ஏதோ ஒரு தத்வத்தின், ஸித்தாந்தத்தின் ஸத்யத்தைப் பிரத்ய அநுபவமாக்கிக் கொள்வதற்கு நேர் உபயமாகவே சாஸ்திர கர்மாவைப் பண்ணவேண்டும் என்று சொல்லவில்லையே? கிருஷ்ண பரமாத்மாவும் ஸரி, சங்கர ராமாநுஜ மத்வாதி ஆசார்யர்களும் ஸரி, கர்மாக்கள் ரூபத்திலும் வெளிச் சின்னங்களாகவும் இருக்கிற ஆசார அநுஷ்டானங்களைச் சொன்னதெல்லாம் சித்த சுத்திக்காகத்தானேயொழிய முடிவான லக்ஷ்யமான தத்வ ஞான ஸ்வாநுபூதிக்காக அல்ல. (ஞானம் என்று இங்கே நான் சொல்வது பக்தி ஸித்தாந்தங்களில் பக்தி என்ன தத்வத்தை உள்ளபடி அறிந்துகொள்வதையும் குறிக்கும்.) எந்த ஸித்தாந்தமானாலும் அதன் ஸத்யத்வத்தை ஒருவன் தெரிந்து கொள்கிற பக்வம் வரவேண்டுமானால் அவனுடைய மனஸு அழுக்கிலாமலிருந்தால்தான் முடியும். சித்தம் என்ற கண்ணாடி அழுக்காகவும் ஆடிக்கொண்டும் இருக்கிற வரையில் அதில் எந்த ஸித்தாந்தத்தின் உண்மையும் தெளிவாகவோ, ஸ்திரமாகவோ பிரதிபலிக்காது. ஆகையால் ஸித்தாந்தம் வேறே வேறேயானாலும் அதைப் பெறுவதற்கு முந்தி எல்லாரும் common -ஆகப் பெற வேண்டியது சித்த சுத்தி. இப்படி சுத்தி ஏற்படவே ஆசார அநுஷ்டானம் என்பதே மறுபடி மறுபடி சொன்ன விஷயம். அதாவது ஸித்தாந்தத்தில் ஸித்தி என்ற முடிவான லக்ஷியத்துக்கு நேர் உபாயமான சித்த சுத்தி என்ற பூர்வாங்கமான லக்ஷ்யம் ஸித்திப்பதற்கு உபாயமாகத்தான் ஆசார அநுஷ்டான ரூபமான கர்மாக்களை வைத்திருக்கிறது. ஸித்தாந்தத்துக்கும் கார்யத்துக்கும் டைரக்ட் ஸம்பந்தம் கிடையாது.

ஆலோசனை பண்ணிப் பார்த்தால் தெரியும். லோகத்தில் எத்தனையோ ஸித்தாந்தங்களிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஏற்பட்டிருக்கிற கார்யங்களோ ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கின்றன. நாம் தீபாராதனை பண்ணினால் இன்னொருத்தன் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறான்; நாம் சாந்த்ராயண விரதம் என்றால் வேறே ஒருத்தன் ரம்ஜான் fasting என்கிறான். நம்முடைய தேவாலயங்களில் எப்படி பூஜை நடக்கிறதோ அப்படியேதான் பௌத்த, ஜைன ஆலயங்களிலும் நடக்கிறது. நமக்குள்ளேயே எடுத்துக் கொண்டால் ஒரேபோல தப்த சின்னங்களை தரித்துக் கொள்கிறதில் [சூடு போட்டு முத்திரை பதித்துக்கொள்கிறதில்] த்வைத அநுபவம், விசிஷ்டாத்வைத அநுபவம் என்று வேறேவேறாயாக வருகின்றனவா என்ன அத்வைதத்துக்கு, இப்போது “வேதாந்தா” லெக்சர் பண்ணுபவர்கள் சொல்கிறபடி, எந்த ஆசார அநுஷ்டானமுமே இருக்கக்கூடாதுதான். ஆனால் அத்வைத ஆசார்யர்களும், மடங்களும் விதித்திருக்கிறபடி இந்த ஸித்தாந்திகளும் மற்றவர்களைப் போலவே ஸ்நான பானம், பூஜை, தீர்த்த யாத்திரை, திவஸ தர்ப்பணம் என்றுதானே பண்ணுகிறார்கள்? சைவன் எப்படி அபிஷேகம், அர்ச்சனை, கந்த, புஷ்ப உபசாரங்கள் செய்கிறானோ அப்படியேதான் வைஷ்ணவனும் செய்கிறான். ஸாளக்ராமமும் லிங்கமும் வேறேயாக இருக்கட்டும். இவன் போடுகிற துளஸியும் அவன் போடுகிற வில்வமும் வேறேயாக இருக்கட்டும். புளியோதரையும் சம்பாப் பட்டையும் வேறாக இருக்கட்டும். அவன் வைகுண்ட ஏகாதசிக்குக் கண்விழித்துப் பட்டினி கிடக்கிறானென்றால் இவன் சிவராத்திரிக்குத்தான் அப்படிச் செய்வது என்றே இருக்கட்டும். ஆகக்கூடி கார்யம் ஒன்றுதானே? இப்படியே  சின்னங்களும்; சாந்துப்பொட்டு, திருமண், விபூதி ஏதோ ஒன்று, ஆக நெற்றியில் சின்னம் இருந்தாக வேண்டும். மடிசார்ப் புடவை வலது பக்கம், இடது பக்கம், வெளியிலே கச்சம் தெரிவது, தெரியாதது – எதுவானாலும் கச்சம் என்ற சின்னம் பொது. ஸந்நியாஸியாகிவிட்டால்கூட ஏக தண்டம், த்ரி தண்டம் என்று ஏதோ ரூபத்தில் தண்டம் என்ற சின்னம் இருந்தாகணும்.

ஒரே மாதிரி ஸந்தியாவந்தனம், ஒரே மாதிரி பூஜை, பஜனை, விரத உபவாஸங்கள், ஷேத்ராடன தீர்த்தாடனங்கள், திவஸம் முதலியன பண்ணிக்கொண்டே வெவ்வேறே ஸித்தாந்தங்களில் ஸித்திக்காக முயற்சி பண்ணுவது என்றால் என்ன அர்த்தம்? ஒன்று, எந்த ஸித்தாந்தமானாலும் இவை வேண்டத்தான் வேண்டும் என்பது. இன்னொன்று, வேறு வேறு மாதிரியான ஸித்தாந்தங்களுக்கும் ஒரே மாதிரியான ஆசாரணை என்பதால் ஆசாரமும் ஸித்தாந்தமும் நேராக ஸம்பந்தப்பட்டவையல்ல என்பது. ஆசாரமில்லாமல் தத்வ ஞானமோ, ஏதோ ஒரு ஸித்தாந்தத்தில் ஸித்தியோ வராது. ஒரு ஜீவனின் பழைய மூட்டை*4யெல்லாம் தீர்க்கிற அளவுக்கு அவனுக்கு ஓயாமல் நிறையக் கர்மாக்களைக் கொடுத்து அழுக்கு மூட்டையை சுத்தம் பண்ணுகிறதாகவே எல்லா ஸம்பிரதாயத்து ஸமயாசாரமும் இருக்கிறபடியால், அதில் இதைத்தான் பண்ண வேண்டும் என்றில்லாமல், எதைப் பண்ணினாலும், ஆனால் நிச்சயமாகப் பண்ணத்தான் வேண்டும் என்று வழுவறப் பண்ணினால் இவனுக்குப் பிடிமானமுள்ள ஸித்தாந்தத்திலேயே ஸ்வாநுபூதி அடைய அதுவே இவனுக்கு ஸஹாயம் செய்துவிடும். ஆகையால் ஒருத்தன் தத்வத்தில் தான் பிறந்த குடும்பத்துக்கு வேறாக கன்விக்ஷன் இருக்கிறது என்பதற்காக அதன் ஸமயாசாரத்தைவிட வேண்டியதில்லை. “பூர்வைராசரித:குர்யாத்” என்ற உத்தரவை மீறிப் பதிதனாகப் போக வேண்டியதில்லை.

அப்படியானால் பூர்விகர்களின் ஸித்தாந்தத்துக்கு வேறாக ஒன்றில் மட்டும் பற்று வைக்கலாமா, அப்போது மாத்திரம் பதிதனாகிவிட மாட்டானா என்றால், இப்படிப் பண்ணுவது தப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி சொல்லலாம் என்றால் நான் சொன்ன ஸ்லோகமே ” சிகாம் , புண்ட்ரம் “ என்று வெளிச் சின்னங்களையும் “ஸூத்ரம்” என்று கர்மாக்களைச் சொல்லும் ச்ரௌத, ஸ்மார்த்த ஸூத்ரங்களையும், “ஸமயாசாரமேவ” என்று, ஒரு ஸமயத்துக்கு அநுகூலமானது என்று வெளி நடத்தையாக வைத்த ஆசாரங்களையும்தான், ” பூர்வை : ஆசரித் : குர்யாத் ” முன்னோர்களின் ஆசரணைப்படியே பண்ண வேண்டும் என்கிறதே தவிர, தத்வ நம்பிக்கை பற்றிச் சொல்லவில்லை.

தத்வம் அநுபவத்தில் ஸித்திக்க வேண்டுமென்றால் முதல் படியாக மனஸ் கன்னா பின்னா என்று போகாமல் அதை நன்றாக ஏதோ ஒரு நெறியால் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். உனக்கு ஜன்மா வாய்த்தபடி எந்த குலாசாரம் வந்திருக்கிறதோ அதுவே இதைப் பண்ணிவிடும். அதனால் இதை விடாதே; பதிதனாய்ப் போகாதே.

“சில ஸமயாசாரங்களே கொஞ்சம் ‘லீனியன்ட்’டாக இருந்துகொண்டு, மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஆசார அநுஷ்டானங்களை கொஞ்சம் விட்டுக்கொடுத்து விடுகின்றனவே! காயக் காய உபவாஸமிருந்தால்தான் கர்மா போகும்; வயிற்றிலே ஆஹாரமில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம், த்யானம் பண்ண முடிகிறது என்று பார்த்தால் கோவிலேயே ‘திருப்பக்ஷி’ (‘திருப்பள்ளி எழுச்சி’ என்பது தான் இப்படியாயிருக்கிறது!) என்று அக்கார அடிசிலும் புளியோதரையும், ததியோரையும் போடுகிறார்களே! ப்ரஸாதமானதால் “வேண்டாம்” என்றாலும் தோஷமாகுமே”! என்றால் … பரவாயில்லைப்பா! அதைச் சாப்பிடு. உன் மனஸு பகவானுக்குத் தெரியும். உனக்குச் சாப்பாட்டில் ஆசையில்லாவிட்டாலுங்கூட, அது வேண்டாம் என்றே இருந்தாலும்கூட, பகவான் பிறப்பித்த படி நமக்கென்று ஏற்பட்ட பெரியார்கள் பண்ணி வைத்த வழிக்கு அடங்கி நடக்க வேண்டுமென்றுதான் பிரஸாதத்தைச் சாப்பிடுகிறாய் என்பது ஸ்வாமிக்குத் தெரியும். அந்த மனப்பான்மையை மெச்சியே அவன் வெறும் வயிற்றில் செய்யும் த்யானத்தினால் ஏற்படுகிற பலனைக் கொடுத்துவிடுவான். ப்ராணாயாமம் என்று நீயாகப் பண்ணுவதை பகவானின் கிருபை பண்ணிவிடும். அல்லது ப்ரஸாதத்தை வாங்கிக்கொள்; ஆனால் உடனேயே சாப்பிடாமல், வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோய் உன் தியானம் முடிந்தபின் சாப்பிடு. பூர்வாசாரத்தை விடப்படாது என்ற உறுதியிருந்தால் எப்படியாவது ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டுவிடலாம்.

நீ உன் பூர்விகர்களின் ஸித்தாந்தத்தை விட்டு விட்டாய் என்று கூட வெளியில் தெரியவேண்டியதில்லை. நீ பாட்டுக்கு ஸம்ஸ்கார பலத்தால், படிப்பால், அநுபவத்தால், பகவதநுக்ரஹத்தால் அந்த உன் உள் விஷயத்தில் போய்க் கொண்டிரு. வெளியிலே குலாசாரப்படியே பண்ணு. அதனால் சித்தத்தை சுத்திப் படுத்திக் கொண்டு ஸித்தாந்தத்தின் அந்தத்துக்குப் போ. அப்புறமும் கூடப் பூர்வாசாரத்தை விடாதே. சித்த சுத்தி ஸித்தித்து, ஸித்தாந்தமும் அநுபவமாகிவிட்ட பின் உன்னளவில் பூர்வாசாரமோ, பிற ஆசாரமோ எதுவுமே வேண்டாந்தான் என்றாலும் லோகத்திலுள்ள மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக முன்னோர் கைக்கொண்ட ஆசார, அநுஷ்டானங்களை விடாமல் பண்ணிக்கொண்டிரு. இதுதான் பகவான் போட்டிருக்கும் [கீதைக்] கட்டளை.

ஜன்மாப்படி வாய்த்த ஒரு ஸமயாசாரத்தில் இருந்துகொண்டே வேறொரு ஸித்தாந்தில் முன்னேற முடியும் என்பது வெறும் possibility தானா? யதார்த்தத்தில் அப்படிக் காட்ட முடியுமா? காட்டினால்தானே நம்பிக்கை வரும்? காட்டமுடியும். ஏ.வி. கோபாலாசாரியார் என்று ஒருவர் இருக்கிறார்*5. வைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படிதான் எல்லாம் செய்து வருகிறார். வைஷ்ணவ ஸித்தாந்தத்துக்குமேகூட நிறையத் தொண்டு செய்து வருகிறார். நல்ல பாண்டித்யம் உள்ளவர். வித்வத் ஸதஸுகள் நடத்துகிறார். ஆனாலும் நம்முடைய [சங்கர] ஆசார்ய பாஷ்யங்களிலும் அத்வைதத்திலும் அபாரமான பற்று வைத்திருக்கிறார். ராமகிருஷ்ணா மிஷனோடு நெருங்கி ஸம்பந்தப்பட்டிருந்தாலும் ‘அண்ணா’ என்கிறவர் வைதிகாசாரங்களின்படியே அநுஷ்டானம் செய்து வருகிறார். இங்கே வர ஆரம்பித்திருக்கிற வெள்ளைக்காரர்களையே பார்த்தால், சர்ச்சுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள், க்றைஸ்டிடம்தான் நிறைந்த பக்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் [அத்வைத] வேதாந்தத்திலேயே விச்வாஸமுடையவர்களாக இருக்கிறார்கள். Converse -ஆக இந்த ஸ்மார்த்த மடத்தில் விதிக்கப்பட்டிருக்கிறபடி ஆசார, அநுஷ்டானங்களை நன்றாகச் செய்துகொண்டே, என்னிடம் அபிமானம் மரியாதையும், ஆசார்யாளிடம் பக்தியும் செலுத்திக்கொண்டே, ஆனாலும் என்னிடமே, “நீங்கள் என்னதான் சொன்னாலும் எங்களுக்கு அத்வைதத்தைவிட பக்திதான் பிடிச்சிருக்கு; அம்பாள் பூஜைதான் பிடிச்சிருக்கு; அவளே ‘அத்வைதமாக ஐக்யம் பண்ணிக்கொண்டு விடுகிறேன்’ என்று சொன்னால்கூட, ‘வேண்டாம்! உன் பக்திதான் வேண்டும்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இதுவும் எந்த ஒரு ஸமயாசாரமும் ஒரு தனி மநுஷ்யரின் ஸித்தாந்தத்துக்கு பாதகமாகச் செய்து விடவில்லை என்பதற்கு நிரூபணமாகிறது.

இன்னொரு கேள்விக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது வரையில் நான் தத்வம் என்பதை தனிப்பட்ட தெய்வ உபாஸனையோடு சேர்க்காமல் பிரித்தே பேசி வந்திருக்கிறேன். நம்முடைய மதத்திலோ philosophical -ஆக இருக்கிற தத்வ ஸித்தாந்தத்தோடேயே theological -ஆக வருகிற விஷயமான மூர்த்தி உபாஸனையும் சேர்ந்திருக்கிறதது. இங்கேயும் பூர்வாசாரப்படியே ஒருவன் ஜன்மாவை பொருத்துச் செய்ய வேண்டுமென்றால் ஜாஸ்தி மோதல் ஏற்படும் போலிருக்கிறது. அதாவது: விசிஷ்டாத்வைதி என்கிறவன் வெறும் ஃபிலாஸஃபியாக, ‘எல்லாருக்கும் பொதுவான ஒரு பரமாத்மாதான் ஜீவாத்மாவின் அந்தர்யாமியாக உள்ளே புகுந்து ஆட்டிக் கொண்டும் இருக்கிறது. ஜீவனானவன் முக்தியிலும்கூட அதோடு ஒன்றாகப் போய்விடாமல், தான் அதன் ஒரு அம்சமே என்பதைப் புரிந்துகொண்டு, பக்தியோடு அதன் ஆளுகைக்குக் கீழே தனியாகத்தானிருக்க வேண்டும்’ என்று சொல்லிப் பொதுப்படையான ஒரு பரமாத்மாவோடு நிறுத்திவிடவில்லை. ‘அந்தப் பரமாத்மா விஷ்ணுதான்; சிவன் இல்லை. அவனுக்கு இன்ன நிறம், இத்தனை கை, அவனுக்கு நிறைய அலங்காரம் பண்ணி ஆராதிக்க வேண்டும்’ என்றெல்லாமும் சொல்கிறான். இப்படியே சைவ ஸித்தாந்தியும் இன்னொரு தத்வ சாஸ்திரத்தைச் சொல்கிறான். அது விசிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதத்துக்குக் கிட்டே போகிறது. என்றாலும் இதிலும் அத்வைத ஐக்யம் இல்லை. இவனும், பெயரே சைவ ஸித்தாந்தம் என்றிருப்பதற்கேற்க, பொதுவாக ஏதோ ஒரு பரமாத்மா என்று சொல்லாமல், ‘அவர் சிவன் என்ற மூர்த்திதான்; விஷ்ணு இல்லை. அவர் ‘இப்படியிப்படியிருக்கிறார். அவருக்கு ஆராதனையாக ஓயாமல் அபிஷேகம் செய்யவேண்டும்’ என்றெல்லாம் சொல்கிறான். அத்வைதி அந்தப் பரமாத்மாவை வித்யாஸமில்லாமல் எல்லா மூர்த்திகளிலும் உபாஸிக்க வேண்டுமென்றிருந்தாலும், நடைமுறையில் [அத்வைதிகளான] ஸ்மார்த்தர் குடும்பங்களில் எத்தனையோ தலைமுறையாக சிவபூஜைதான் பண்ணுவது, [விஷ்ணுவுக்கான] ஸாளக்ராம பூஜைதான் பண்ணுவது, [அம்பாளுக்கான] ஸ்ரீ வித்யா பூஜைதான் பண்ணுவது என்றெல்லாம் வந்திருக்கிறது.

கேள்வி என்னவென்றால்: “எந்த ஸித்தாந்தமானாலும் உன் நம்பிக்கைப்படி வைத்துக்கொள்ளு, அதற்காகக் குலாசாரத்தை மாற்றாதே என்று சொன்னீர்கள். ஸரி. ஆனால் நமக்கு மூர்த்தி உபாஸனை, இஷ்ட தெய்வம் என்பதும் முக்கியமாயிருக்கிறதே! நம்முடைய மதத்தில் இத்தனை தெய்வங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் புராணம், ஸ்தோத்ரம், க்ஷேத்ரம் என்று வைத்திருப்பதால் அவற்றில் ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒன்றில் விசேஷப் பிடிப்பு ஏற்படுகிறதே!  இப்படியிருப்பதில், நான் விசிஷ்டாத்வைத வைஷ்ணவாகப் பிறந்தாலும் எனக்கு அத்வைதத்திலும் சிவனிடத்திலுமே பிடிப்பு இருக்கிதென்றால், உங்கள் உபதேசப்படி அத்வைதத்துக்காக விசிஷ்டாத்வைத பூர்வாசாரத்தை விட வேண்டியதில்லைதான் என்று பார்த்தால், இதுவே என் பக்தி உபாஸனையில் குறுக்கே வந்து மோதுகிறதே!எனக்கு சிவனிடம்தான் ஸ்வாபாவிகமாக பக்தி என்றாலும் விஷ்ணுவை அல்லவா பூஜை பண்ணியாச வேண்டியிருக்கிறது? எந்தக் கர்மாவானாலும் ஸித்தாந்த அநுபவத்துக்குப் பூர்வாங்மான சித்த சுத்திக்குப் பிரயோஜனமாகிறது என்று மனஸை ஸரிப்படுத்திக் கொண்டு செய்கிறது போல, விஷ்ணுவை வைத்துப் பூஜை பண்ணினால் அது சிவபூஜைதான் என்று மனஸை எப்படி ஸமாதானப்படுத்திக் கொள்வது?” -என்று கேட்டால் என்ன பதில்?

அல்லது சைவராகப் பிறந்த ஒருவருக்கு விஷ்ணுவிடம்தான் பக்தி என்று அவர் இதே போலக் கேட்டால் என்ன சொல்வது? ஸ்மார்த்தர் ஒருவர், “சிவ பூஜைதான் அகத்தில் இருந்து வந்திருக்கிறது. எனக்கு [அம்பாளின்] ஸ்ரீசக்ர பூஜையில்தான் ஈடுபாடு இருக்கிறது; அல்லது முருகனிடந்தான் தன்னால் பக்தி வருகிறது. நான் என்ன?” பண்ண என்று கேட்டால் என்ன செய்வது?

பூர்விகர் ஆசாரப்படிதான் செய்ய வேண்டும் என்பதை மாற்றிச் சொல்லலாமா? இல்லாவிட்டால் இவர்கள் ரொம்பவும் மனஸு நொந்து கஷ்டப்படுவார்கள் போலிருக்கிறதே! இவர்கள் நாஸ்திகர்களாகப் போகவில்லை. பூஜை பண்ணமாட்டோமென்று சொல்லவில்லை. நம் மதத்திலேயே சொல்லியிருக்கிற ஸ்வாமிகளில் ஒன்றைத் தான் பூஜிக்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். இவர்களை இன்ன குலத்தில் ஈஸ்வரன் பிறப்பித்ததால் இவர்கள் அதில் முன்னே இருந்தவர்கள் எப்படிச் செய்தார்களோ அப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திச் சொல்லலாமென்றால், அதே ஈஸ்வரன் தானே இவர்களுக்குத் தன்னுடைய வேறு ஒரு மூர்த்தியில் விசேஷ பக்தியை உண்டு பண்ணியிருக்கிறான்? ஆகையால், “கர்மா-பக்தி-ஞானம் என்று வருகிற மூன்றில் மற்ற சாஸ்திர கர்மாக்களைப் பூர்வாசாரப்படி பண்ணு!பக்தி மட்டும், பக்தி கர்மாவான பூஜையை மட்டும் உன் இஷ்ட தேவதைக்கே பண்ணப்பா! ஞானம் என்ற ஸித்தாந்த ஸமாசாரத்தைத்தான் முன்னேயே சொல்லியாச்சு” என்று பதில் சொல்லி விடலாமா?

இதுவும் ஸமாதானப்பட மாட்டேன் என்கிறது. மற்ற சாஸ்திர கர்மா, பக்தி கர்மா என்று பிரிக்க முடியாமல் சேர்த்துப் பிசைந்தல்லவா வைத்திருக்கிறது? எல்லாருக்கும் பொதுவான ஸந்தியாவந்தனத்தில் கூட ஒருத்தர் “பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்றால் இன்னொருத்தர் “ஈஸ்வர” சப்தம் சிவனை ஞாபகமூட்டுகிறதேயென்பதால் (“ஈஸ்வரன்”, “பகவான்”என்ற இரண்டும் ஒரே பரமாத்மாவைத்தான் சொல்கிறதென்றாலும்) , மஹா விஷ்ணுவின் ப்ரீதிக்காகவே என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்து “ஈஸ்வர” என்கிற இடத்தில் “பகவத்” என்கிறார்! சைவனாகப் பிறந்து விஷ்ணு பக்தி பண்ண வேண்டுமென்றிருக்கிற ஒருவனுக்கு, “கேசவ, நாராயண” என்று சொல்லிக் கொண்டு நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொண்டால் தான் மனநிறைவு இருக்கலாம். இவனை விபூதிதான் இட்டுக் கொள்ள வேண்டுமென்றால் அவன் [சிவ] பஞ்சாக்ஷரம் சொல்லித் தானே அதைக் குழைத்து இட்டுக் கொள்ளவேண்டியிருக்கும்? சிகை, ஸூத்ரம் ஆகியவற்றோடு ‘புண்ட்ரம்’ என்று நெற்றிக்கிட்டுக் கொள்வதிலும் பூர்வாசாரப்படிதான் பண்ண வேண்டும் என்றிருப்பதால், தெய்வத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று வைத்துக்கொண்டால், அது ஸ்வபாவமான பக்திக்கு இடையூறாக ஆகிறதே! இப்படியாக வெளிச் சின்னம், நேராக பக்தி பூஜையில்லாத வைதிக கார்யம் இவற்றிலெல்லாங்கூட பூர்விகர்களின் ஸம்பிரதாயத்தில் நிலை நாட்டப்பட்டுள்ள ஏதோ ஒரு தெய்வத்தை ஸம்பந்தப்படுத்தியிருக்கிறதே!

அதனால், “நான் இவ்வளவு நேரம் சொன்னதை வாபஸ் பண்ணிவிடுகிறேன். பூர்வாசாரமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். நீ எப்படியும் பகவானை நம்புகிறாய், அவனை மனஸார ஒரு ரூபத்தில் உபாஸிக்க வேண்டும் என்று தாபப்படுகிறாய் அதனால் உன்னை அவனே பார்த்துக்கொள்வான். பூர்விகர் ஆசாரத்தைப் பற்றிக் கவலைப்படாதேயப்பா” என்று சொல்லி விடலாமா?

இதுவும் நிம்மதிப்படமாட்டேனென்கிறது. எங்கே கட்டறுத்துக்கொண்டு போகலாமென்று ஜனங்கள் ஒரே இந்திரிய ஆட்டத்திலும் நாஸ்திகத்திலும் போய்க் கொண்டிருக்கிற இந்த ஸமயத்திலே ஏதோ கொஞ்சம் தர்மம், பக்தி, ஆத்மார்த்தமான தத்வம் என்று நாட்டம் உள்ளவர்களையும் குல வழக்கத்திலிருந்து அவிழ்த்து ஸ்வதந்திரமாக விடுவதென்றால், இப்போது நல்ல லக்ஷ்யத்துக்காகவே இவர்கள் ஸ்வதந்திரம் கேட்டாலும், அப்புறம் அதன் பழக்கத்தாலேயே மற்றவற்றிலும் ஸ்வதந்த்ரமாகத் தெறிகெட்டுப்போக ஆரம்பித்துவிட்டால் என்ன பண்ணுவது என்று இருக்கிறது.

அநேக இடங்களில் இப்படி நடந்துமிருக்கிறது. பக்தி, தர்மம், தத்வம் என்ற அபிலாஷைகளிருக்கும் மற்ற ஜனங்களும் இவர்களைப் பார்த்து இவர்கள் குலாசாரத்தை விடுகிறார்களென்பதால் தாங்களும் விடலாம் என்பதற்குத் தானே ஊக்கம் பெறுவார்கள்? இதையெல்லாம் பார்த்தால், பகவானே என்ன சொன்னார், ரொம்ப நிர்தாக்ஷிண்யமாகத்தானே சொன்னார், அப்படித்தான் நாமும் குலாசாரத்தை ஒரு நாளும் விடப்படாது என்று சொல்லிவிடுவோமென்று தோன்றுகிறது.

குலதர்மம் என்பதற்காக யுத்தம் பண்ணிப் பிதாமஹர், பந்து, மித்ரர்களையெல்லாம் கொல்லுவதாவது என்று வில்லைப் போட்டுவிட்டு உட்கார்ந்த அர்ஜுனனிடம் பகவான் இப்படித்தானே சொன்னார் “உனக்கு சாஸ்திரம் இந்த ஸ்வதர்மத்தைத்தானே கொடுத்திருக்கிறது? ஒரு பிராம்மணனிடம் போய் நான் ‘சண்டை போடு’ என்று சொல்வேனா? உன்னை ஈஸ்வரன் க்ஷத்திரியனாகப் படைத்திருக்கிறானோ இல்லையோ? அப்படியானால் அந்தக் குலாசாரப்படிதான் நீ பண்ண வேண்டுமென்றே அர்த்தம். ‘அதன்படி பண்ணினால் குலமே போயிடும்; குலஸ்த்ரீகள் பாழாய்ப் போவார்கள்’ என்றெல்லாம் நீ அழுது அடம் பண்ணிப் பிரயோஜனமில்லை. பலனைப் பார்க்காதே. ஈஸ்வரன் இப்படி ஜன்மா கொடுத்தானென்றால் அதற்கு சாஸ்திரம் எந்த வழியைக் காட்டுகிறதோ அப்படித்தான் போகணும். மற்றவர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்குகிறோமே என்று பார்க்காதே. அல்லது உனக்கே இதனால் கஷ்டம், மனவேதனை, guilty conscience இருந்தாலும் இதுகளையும் பார்க்காதே’ என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போய், “இதற்கெல்லாம் மேலாக உன் பிராணனே போகிறதா? போகட்டும்! ஸ்வதர்மத்தின்படியே இருந்து கொண்டிருந்தால், அதற்காகச் செத்தாலும் மேல்,

ஸ்வதர்மே நிதனம் ச்ரேய:”

என்று ஒரே முடிவாகச் சொல்லிவிட்டார்!

“உன்னுடைய ஸ்வதர்மம் அதாவது பிறப்பாலேற்பட்ட குலதர்மம் குணமில்லாததாக, நல்ல அம்சங்களில்லாததாக இருந்து, இன்னொரு குலதர்மம் உசத்தியான அநுஷ்டானங்களுள்ளதாக இருந்தாலுங்கூட, நீ அதை எடுத்துக் கொள்ளப்படாது. ஸ்வதர்மந்தான் ச்ரேயஸ்” என்று பகவான் தீர்மானிக்கச் சொல்லி,

ச்ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்

என்று அடித்துச் சொல்லி, அதற்கும் மேலே கடுமையாக

ஸ்வதர்மே நிதநம் ச்ரேய:

“தன் குலதர்மத்திலே இருந்து கொண்டு சாவே ஏற்பட்டாலும் சிரேயஸ்” :

பரதர்மோ பயாவஹ:

“பிறத்தியான் தர்மம் மஹா பயங்கரமாய் முடியும் என்கிறார்*6.

ஸரி, பகவானே சொன்ன இந்த முடிவை அது எத்தனை கடுமையாய்த் தோன்றினாலும் பகவான் சொன்னதென்பதால் அதற்கு மேல் க்ஷேமமில்லையென்று நாமும் முடிவாகச் சொல்லிவிடலாமென்றால், முடியவில்லை.

ஏன்? பூர்வாசாரத்தை விடலாமா என்று கேட்கிறவர்களின் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருப்பதால் முடியவில்லை. இதுவும் நானே சொல்லிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு என்னையே வளைக்கிற கேள்விதான்!

நம்முடைய பூர்விகர்கள் என்று எட்டு, பத்து, இருபது தலைமுறைகளாகச் செய்து வருவதை இப்போது நாம் பூர்வாசாரமென்று சொல்லி அதைத்தான் அநுஸரிக்க வேண்டுமென்கிறோம். அவர்களுக்கு முந்தி இன்னம் அநேகத் தலைமுறைகளுக்கு முன்னாலிருந்த ‘பூர்விகப் பூர்விகர்’கள் செய்து வந்ததையும் இவர்கள் செய்து வந்ததையும் பார்த்தாலோ அதற்கு இது கொஞ்சம் மாறுதலாகவும், சிலதைக் கூட்டியும் குறைத்தும் காணப்படுகிறது. நானே சொன்ன விஷயந்தான்; அதாவது ஆயிரம் வருஷத்துக்கு முந்தி வரையில் ஸ்மார்த்த ஆசாரம் என்பதுதான் பொதுவாயிருந்து வந்திருக்கிறது. அப்புறம் தான் பல ஸம்ப்ரதாயங்கள் ஏற்பட்டு, ஆசார அநுஷ்டானங்களில் மாறுதல், கூடுதல், குறைதல் பண்ணியிருக்கிறது. அதற்கு அப்புறம் இந்தப் பிரிவுகளுக்கென்று அதனதன் ஆசார்ய புருஷர்கள் செய்த இந்தப் புதிய ஆசாரங்கள் (புதுசு என்றால் முழுக்கப் புதுசு இல்லை. முக்கால்வாசி பழைய வைதிகாசாரமாக இருப்பதுதான்; கால்வாசி வித்யாஸமாயிருக்கும் – இப்படிப்பட்ட ஆசாரங்கள்) தலைமுறை தலைமுறையாக வந்து இதுகளும் உறுதிப்பட்டுவிட்ட ஸமயாசாரங்களாக இப்போது ஆகிவிட்டிருக்கின்றன. “இப்போது இந்த ஸமயாசாரங்களையும் யாரும் மீறக் கூடாது என்கிறீர்கள். அது ஸரி. ஆனால் பொதுவான ஸ்மார்த்த ஸம்பிரதாயத்திலிருந்து ஒரு பிரிவாக ஒன்றை வைத்தபோது அந்தந்த ஆசார்ய புருஷர்களே அதுவரையிருந்த பூர்வாசாரத்தில் மாறுதல்கள் பண்ணித்தானேயிருக்கிறார்கள்? அப்போது அவர்களே பூர்வாசாரப்படி ‘ஸ்ட்ரிக்ட்’டாகப் பண்ணவில்லை என்றுதானே ஆகிறது?” இதற்கு மேலே இன்னொன்று என்னை நன்றாக மடக்குகிறதாகக் கேட்கலாம்: “நாங்கள் பூர்விகர் ஆசாரத்தை மாற்றிக்கொள்ளவேண்டுமென்று எதற்காகச் சொல்கிறோம் இஷ்ட தேவதா உபாஸனைக்காகத்தான். நாங்கள் நாஸ்திகமாகப் போகவில்லை. ஸித்தாந்தத்துக்காகவோ இஷ்ட தெய்வத்துக்காகவோ மாறலமா என்றுதான் கேட்டோம். ஸித்தாந்தத்துக்காக ஆசாரத்தை மாற்றவேண்டாமென்று காரணம் சொல்லி விட்டீர்கள். இப்போது இஷ்ட தெய்வ விஷயம் மட்டும் நிற்கிறது. இதிலும் பூர்வாசாரப்படிதான் போகவேண்டும் என்று சொல்லி விடலாமென்று நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் நமக்கு நேராகப் பூர்விர்களாக இருக்கிறவர்கள், அவர்களுக்கும் பூர்விகர்களாக இருக்கிறவர்கள் என்று பாகுபாடு செய்து ஆராய்ந்து பார்த்தால், நம் நேர் பூர்விகர்களே ஆதி பூர்விகர்களுக்கு வித்யாஸமாகப் போயிருக்கிறார்களென்றும், இந்த இஷ்ட தெய்வ ஸமசாரத்தில் வேத காலத்திலிருந்து ஆயிரம் வருஷத்துக்கு முன்வரை வந்த நெடுங்காலப் பூர்வாசாரம் எங்களுக்கு ஆதரவாகத்தானிருக்கிறதென்றும் தெளிவாகத் தெரிகிறது. வேதத்திலோ, ஸ்மிருதிகளிலோ, இந்த ஸ்வாமிதான் உசத்தி என்று எந்த ஒன்றையும் பரதெய்வம் என்று நிர்தாரணம் பண்ணி வைத்திருக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரே பரமாத்மாவாகச் சொல்லி, ஆனாலும் எவரெவருக்கு எந்த மூர்த்தியில் அபிருசியோ, மனஸு லயிக்கிறதோ அதை இஷ்ட தெய்வமென்று வழிபட இடம் கொடுத்திருக்கிறது; தனக்கு ஒன்றில்தான் கவர்ச்சியிருக்கிறது என்பதற்காக அதை பக்தி செய்தாலும், மற்ற தெய்வங்களை நிந்திக்கக் கூடாது என்று வைத்திருக்கிறது; இதற்காகவே பஞ்சாயதன பூஜை*7 என்று ஏற்படுத்தி, இஷ்ட தெய்வத்தை அதில் பிரதானமாக வைத்தாலும் மற்றவற்றையும் பரிவாரங்களாக வைத்துப் பூஜை செய்து ஸமரஸ பாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறது -இதையெல்லாம் நீங்களே உபந்யாஸம் செய்திருக்கிறீர்கள். ஆகையால் அதற்கப்புறம் நடுவாந்தரத்தில் வந்த ஆசார்ய புருஷர்கள் சிவன்தான் உசத்தி, விஷ்ணுதான் உசத்தி என்று ஏதோ ஒன்றை வைத்து அது எங்கள் குலாசாரமாக வந்திருக்கிறபோது, பிராசீனமான வைதிக தர்மத்துக்கு வித்யாஸமாகப் போய்விட்ட இந்தக் குலாசாரத்தை நாங்கள் மாற்றி, பிராசீன வழிப்படியே உபாஸனா விஷயத்தில் போனால் அது எப்படித் தப்பு? நாங்கள் சீர்திருத்தகாரர்களைப் போல வேதத்தின் கர்ம காண்டம், ச்ரௌத-ஸ்மார்த்த ஸூத்ரங்கள், தர்ம சாஸ்திரங்கள் இவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, வேதாந்தந்தான் ஸாரம், பாக்கியெல்லாம் சக்கை என்று சொன்னால் தப்பு. இவை எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டே, ‘இஷ்ட தெய்வ உபாஸனை இவற்றுக்கு ஸம்மதமானதுதான். இன்னும் சொல்லப் போனால் ஒரு தெய்வத்துக்கு மட்டுமே பரத்வம் சொல்வதுதான் ஒரிஜினலான சாஸ்திரங்களுக்கு சம்மதமாயிருக்காது’ என்றே, இப்போது கட்டாயமாக ஏதோ ஒரு ஸ்வாமியிடம்தான் பக்தியாயிருக்க வேண்டும் என்கிற குலாசார ஏற்பாட்டிலிருந்து ஸ்வதந்திரம் கேட்கிறோம். கொஞ்சங்கூட வைதிக சாஸ்திரத்துக்கு விரோதமாக இல்லாத இந்த ஆசையை எப்படி நிராகரிக்கலாம்?” என்று கேட்கலாம்.

” ‘ஸ்வதர்மே நிதனம் ச்ரேய:” என்றால், ‘ஸ்வதர்மம்’ என்று இப்போது வந்திருக்கிற குலதர்மமே ஆதியிலிருந்த ஸ்வதர்மத்துக்கு இந்த அம்சத்தில் வித்யாஸமானதாகத்தானே இருக்கிறது?ஆகையால் அதைப் பழையபடியே – அதாவது ஒரிஜினலான ஸ்வதர்மமாக – மாற்றிக் கொண்டால் இது எப்படி தோஷமாகும்? க்ஷத்ரியன் தர்மத்துக்காக யுத்தம் பண்ணத்தான் வேண்டுமென்று ஆதியிலிருந்து அன்றைக்கு வரையில் இருந்த ஸ்வதர்மத்தைப் பற்றி பகவான் சொன்னதை, ஆதியிலிருந்து ஒரு விதமாகவும் பிற்பாடு வேறு விதமாகவும் குலாசாரம் மாறியிருக்கிற நிலையில் எப்படிப் பொருத்தலாம்?” என்று கேட்டுவிட்டால் என்ன பண்ணுவேன்? பகவான் சொன்ன பதிலை (மரணமே ஸம்பவித்தாலும் குலாசாரத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற பதிலை) வற்புறுத்த முடியாமல் என் வாயைக் கட்டித்தான் போடுகிறது.

ஏற்கனவே கட்டு விட்டுக் கெட்டுப்போனது போதாது என்று புதிதாக எந்தக் கட்டுப்பாட்டையும் தளர்த்தி விடக்கூடாது என்கிற நியாயமும் இன்னொரு பக்கம் என்னைக் கட்டுப்படுத்துகிறது.

அதனால் ஒரு ‘காம்ப்ரமைஸ்’ பண்ணி வைக்கத் தோன்றுகிறது. இதைவிட்டால் வழியில்லையென்று, இரண்டையும் ராஜி பண்ணி ஒரு யோசனை சொல்கிறேன்:

இப்போது குலாசாரமாக எது வந்திருக்கிறதோ அதன்படியே பண்ணு; அதோடு கூட உனக்கு இஷ்டமானதாகவும் ஆதி வைதிகாசாரத்துக்கு விரோதமில்லாமல் எது இருக்கிறதோ அதையும் சேர்த்துக் கொள். அப்பா, தாத்தா பண்ணின மாதிரியே சிவ பூஜையோ, விஷ்ணு பூஜையோ பண்ணு. அதோடுகூட உன் இஷ்டதேவதை எதுவோ அதையும் சேர்த்துக் கொள்ளு. முடியுமானால் பஞ்சாயதன பூஜையாகவே பண்ணு. உன் இஷ்ட தேவதைக்குக் கொஞ்சம் ஜாஸ்தி அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம் வேண்டுமானால் பண்ணிக் கொண்டு போ. எப்படியானாலும் இப்போது உனக்கு வாய்த்திருக்கிற குலாசாரத்தை விடாதேயப்பா! அதற்கு கௌரவம் கொடுத்து ரக்ஷிக்காமலிருக்காதேயப்பா! இந்த ஸம்பிரதாயத்துக்கு ஆசார்ய புருஷர்களாக வந்தவர்கள் தங்களுக்கு முன்னேயிருந்த பதினாயிரங்கால ஏற்பாட்டில் வித்யாஸங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களேயென்று அவர்களைக் கண்டனம் செய்யாதே, மரியாதைக் குறைச்சலாகப் பேசாதே, அவர்களை இந்தக் கால ரிஃபார்மர்களோடு சேர்த்து வைத்துவிடாதே. புதுச் சீர்திருத்தக்காரர்கள் பழசில் நூற்றுக்குத் தொண்ணூறைத் தூக்கிப் போட்டுவிட வேண்டுமென்கிறார்கள். ஆனால் ஸமீப நூற்றுண்டுகளுக்கு முன் வந்த வெவ்வேறு ஸம்பிரதாய ஆசார்யர்களும் கொஞ்சம் மாறுபாடாகப் போயிருந்தாலும் ஆதியிலிருந்ததில் நூற்றுக்குத் தொண்ணூறை ஒப்புக் கொண்டு, தங்களை அநுஸரிப்பவர்கள் தொடர்ந்து அநுஷ்டிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். முக்யமாக, வைதிகமான நித்ய கர்மாநுஷ்டானங்களை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஸநாதன தர்மத்துக்கு முதுகெலும்பாக உள்ள வர்ணாச்ரம விபாகங்களை, அதனால் ஏற்பட்ட அதிகார பேதத்தை இவர்களெல்லாரும் ஒப்புக் கொண்டேயிருக்கிறார்கள். இதிலேகூடச் சிலபேர் சற்று ‘ரிஃபார்ம்’ மனப்போக்கு காட்டியிருக்கிறார்களென்றாலுங்கூட, தனி மநுஷ்யன் ஒருத்தன் பிரேமையினாலும் நைச்யத்தாலும் ஸம பாவனையாலும் வித்யாஸம் பார்க்காமலிருப்பதைத் தான் ஆதரித்திருக்கிறார்களே தவிர, ஸமூஹத்திலேயே இப்படிப்பட்ட பிரிவுகள் இருக்கக்கூடாது என்று எடுத்துப் போட்டுவிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தங்களுக்கு முற்பட்ட சாஸ்திரத்தில் ஏன் கூடுதல் குறைச்சல் பண்ணினார்களென்றால், அந்தந்தக் காலத்தில் வேறே சிலபேர் இதற்கு எதிர்த்திசையில் ரொம்ப தூரம் பூர்வ சாஸ்திரத்திரத்துக்கு விரோதமாக இன்னொரு விதமாகப் போயிருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் மறுதிசையில் கொஞ்சம் கூடுதலாகவே போனால்தான் தாக்குப் பிடித்து நிற்க முடியும் என்று [இந்த ஆசார்யர்கள்] இப்படிச் செய்திருக்கலாம். விஷ்ணுதான் நிஜமான ஸ்வாமி என்று ஒருத்தர் ஸித்தாந்தம் செய்தாரென்றால், அந்தக் காலத்தில் வேறே யாரோ விஷ்ணுவை ரொம்ப மட்டந்தட்டியிருக்கலாம். அப்பைய தீக்ஷிதர் இருக்கிறார். பரம அத்வைதி, அதாவது அத்வைத லெக்சர் மட்டும் பண்ணுபவரில்லை, அநுபூதிமான். ஈஸ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு ஒவ்வொருவருமே ஸாக்ஷாத் பரமாத்ம ஸ்வரூபம்தான் – இவர்கள் ரத்ன த்ரயம் – மும்மணிகள் -என்று எழுதியிருப்பவர். அப்படிப்பட்டவரே பரமேஸ்வரனைப் பற்றி மற்ற தெய்வங்களைவிட ரொம்ப அதிகமாக எழுதி, சிவ மஹிமையையே விசேஷமாக நிலைநாட்டியிருக்கிறார். காரணம் என்னவென்றால் அந்தக் காலத்தில் வீர வைஷ்ணவர்களின் செல்வாக்கு மித மிஞ்சிப் போயிருந்தது. Counteract பண்ணுவதற்காகவே இவர் சிவபரமாக அதிகம் செய்ய வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு ஆசாரியரின் காலத்தில் பூர்வாசாரத்துக்கு ரொம்பவும் விரோமாக ஒரு போக்கு ஏற்பட்டிருந்தது என்பதாலேயே அதற்கு opposite direction-ல் இவர்களும் அதற்கு கொஞ்சம் வித்யாஸமாகப் போகும்படி ஏற்பட்டிருக்கலாம். தன் தெய்வம் உசந்தது என்பதனால் அவர்கள் இன்னொன்றை மட்டம் தட்டினார்கள், நிந்தித்தார்கள் என்பதற்காக நீ அப்படிப் பண்ணாதே. நிந்திக்கிறார்களே என்று அவர்களையும் நிந்திக்காதேயப்பா! பயமோ விநயமோ இல்லாமல் சாஸ்திரக் கட்டுப்பாடுகளை மீறுகிற நம் காலத்தவரைப் போலில்லாமல், பழைய ஏற்பாடுகளில் நிரம்ப ச்ரத்தா பக்திகளுடன் ஜனங்கள் அடங்கியேயிருந்த அந்த நாளிலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் சற்று வித்யாஸமாகப் போன இந்த ஆசார்ய புருஷர்களை அநுஸரித்துப் போயிருக்கிறார்களென்பதிலிருந்தே அவர்களிடத்தலே ஒரு ஸத்யத்தின் சக்தி இருந்திருக்கிற தென்று தெரிகிறது. இப்போதைய ரிஃபார்மர்களைவிட நிச்சயமாக ஸொந்த வாழ்க்கையில் அவர்கள் ரொம்பப் பெரியவர்களாகவும் சீலமுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லை. இப்போது சில ரிஃபார்ம்களின் காரண புருஷர்கள் சீலமுள்ளவர்களாயிருந்தாலும், அப்புறம் அந்த மூவ்மெண்டில் அப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது. நம் மதத்துக்குப் பெருமையே ஆதியிலிருந்து இங்கேதான் கூட்டங் கூட்டமாக மஹான்களும், ஸாதுக்களும் தோன்றி வந்திருக்கிறார்களென்பதுதான். லோகத்தில் வேறெங்கும் இல்லாத விதத்தில் நம் தேசத்தில் தான் ஆசார அநுஷ்டானங்கள் வெகு கட்டுப்பாட்டுடன் அநுஷ்டிக்கப்பட்டிருக்கின்றன; இங்கேயேதான் லோகத்தில் வேறெங்கேயும் பார்க்க முடியாத அளவுக்கு மஹான்களும் தோன்றியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்த ஆசார அநுஷ்டானம்தான் சீலத்தின் உயர்வுக்குக் காரணம் என்று தெளிவாகத்தெரிகிறது, இந்த அபிப்ராயத்துக்கு பலமூட்டுவதாகவே பூர்வாசாரங்களை விட்டுவிட்ட சீர்திருத்த இயக்கங்களில் உத்தமர்கள் பெருவாரியாக வரவில்லை என்று பார்க்கிறோம். வைதீக சாஸ்திரங்களில் பெரும்பாலானவற்றை அநுஸரித்து. மற்றவற்றை மட்டும் மாற்றியிருக்கிற ஸம்பிரதாயங்களைப் பார்த்தாலோ இவற்றில் முதல் ஆசார்ய புருஷருக்குப் பிற்பாடும் ஏகப்பட்ட பெரியவர்கள், நிரம்ப யோக்யதையுள்ளவர்களாகவும். பகவானின் அநுக்ரகத்தைப் பிரத்யக்ஷ்மாகப் பெற்றவர்களாகவும், தங்களை ஆச்ரயித்தவர்களுக்கு அநுக்ரஹம் செய்யச் சக்தி வாய்ந்தவர்களாகவும் தோன்றியிருப்பதைப் பார்க்கிறோம். இன்றைக்கும் அவற்றில் நிறைய அனுஷ்டாதாக்கள் இருப்பதையும் பார்க்கிறோம். வாய்ப்பேச்சு என்றில்லாமல் நல்ல கண்டிப்பான அநுஷ்டானம் செய்த ஆயிரக்கணக்கானவர்களின் அநுபவபலம் என்பது, ஒவ்வொரு ஸம்பிரதாயத்திலும் அதன் ஆசாரியரின் நாளிலிருந்து இன்றுவரை தலைமுறை தலைமுறையாக வந்து அவை ஒவ்வொன்றுக்கும் உரமூட்டியிருக்கிறது. தாய்மரத்திலிரந்து கொஞ்சம் பிரிந்தே வந்த விழுதும் அப்புறம் மரமாகி வஜ்ரம் பாய்ந்து உறுதிப்பட்டுவிட்டதைப்போல, இப்போது இந்த ஸம்பிரதாயங்கள் எல்லாவற்றிலுமே அதற்கான ஸமயாசாரமென்பது நன்றாக ஸாரத்துடன் கெட்டிப்பட்டிருக்கிறது. ஸொந்த கன்விக்ஷன் இருக்கிறதா இல்லையா என்பதையே நினைக்காமல், ‘அப்படி நினைக்கிறதே பாபம்; நமக்கென்று ஏற்பட்ட ஸமயாசாரம் இதுதான்; ஒரு அப்பா அம்மாவுக்குப் பிறந்தோமென்றால் அவர்கள் எப்படியிருந்தாலும் அவர்களையே தெய்வமாகக் கொள்வதுபோல, நாம் இந்த ஸம்பிரதாயத்தில் பிறந்து விட்டதால் இதுதான் நமக்கு தெய்வம் மாதிரி’ என்கிற விஸ்வாஸத்துடன், தியாக புத்தியுடன் இவ்வழிகளைப் பின்பற்றினால் முன்னோர்களின் அநுஷ்டான பலம் இன்றைக்கும் இவற்றில் போகிறவர்களைத் காப்பாற்றும்.

ஆனபடியால் ஸமீபத்தில் ஏற்பட்டிருக்கிற சீர்திருத்த மதங்களோடு இவற்றைச் சேர்த்து விடாமல், சீர்திருத்த மதங்கள் மாதிரியில்லாமல் ச்ருதி, ஸ்ம்ருதி, புராணம் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளும் ஸம்பிரதாயங்களில் பிறந்தவர்கள் அவற்றின் ஆசரணைகளை விடுவது விரும்பத்தக்கதல்ல. அவற்றுக்கு அதிகமாக, ஆதி வைதிக மரபுக்கு ஸம்மதமானதாகத் தாங்கள் இஷ்டப்படுகின்றவைகளையும் சேர்த்துக்கொண்டு செய்யவேண்டும். இதில் முடிந்த மட்டும் ஸொந்த இஷ்டத்தை விட்டுக் கொடுத்து, தியாகம் பண்ணி, அந்தந்த ஸமயாசாரத்தையே பின்பற்ற வேண்டும்.

இந்தத் தியாக பலனாகவே ஈஸ்வரன் நாம் விரும்புகிற நிறைவை அநுக்ரஹித்து விடுவான். ‘என்ன கர்மா பண்ணினோமோ, அதனாலேயே பகவான் இப்படி மனஸ் பூர்ணமாக ஏற்றுக் கொள்ள முடியாத குலாசாரத்திலே பிறக்கப் பண்ணியிருக்கிறான் ஆனதால் அப்படியே அநுபவித்துத் தீர்த்து விடுவோம்’ என்ற புத்தியை முடிந்த மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கட்டு விட்டுப் போன பிறகு தேசத்தில் ஏற்பட்டிருக்கிற அனர்த்ததைப் பார்த்து, இதற்கு நாமும் பலம் கொடுத்து விடக்கூடாது என்ற தீர்மானத்தின்மேலே, நம் ஸொந்த அபிலாக்ஷகளையும் லக்ஷ்யங்களையுங்கூட முடிந்த மட்டும் ஒதுக்கிவிட்டு, ஒரு கட்டுப்பாட்டிலே ஒட்டிக் கொண்டிருப்பதைத்தான் இப்போது ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிற எல்லாரும் தலையான கடனாகக் கொள்ள வேண்டும்.

பழைய வழிக்கு ரொம்பவும் விரோதமில்லாமலே நடுவில் உண்டான குல ஸம்பிரதாயங்களுக்கு மாறாக பக்தி பண்ண விரும்புகிறவர்கள் இஷ்ட தெய்வக் கொள்கைக்கு வைதிகாசாரம் இடம் தருகிறது என்பதோடு, தெய்வ பேதமில்லாத ஸமரஸ மனப்பான்மையே நம் ஸநாதன மதத்தின் தாத்பரியம் என்பதையும் நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். இப்படிச் செய்துவிட்டால் சிவ பக்தியுள்ள ஒரு வைஷ்ணவனுக்குத் திருமண்ணுக்குப் பதில் விபூதி இட்டுக் கொள்ளத் தோன்றாது. அந்தச் சாம்பலிலே வருகிற பரமேஸ்வரன் இந்த மண்ணிலும் வருவான் என்ற பக்குவம் வந்துவிடும். “கேசவ நாராயண” என்று நாமத்தைப் போட்டுக் கொள்ளும்போது சிவ நாமாவைச் சொல்வதில் இவனுக்கு உண்டாகக் கூடிய ஆனந்தம் இல்லாவிட்டாலுங்கூட, இந்த நாமங்களைச் சொல்வதிலும் வெறுப்பு இருக்காது. வைஷ்ணவனாகப் பண்ணவேண்டியதையெல்லாம் பண்ணிக்கொண்டே அதிலேயே ஓரளவுக்குத் தன் ஈஸ்வரனை பாவித்துக்கொண்டு, அதற்கு அதிகாமாகவும் தனியாக சிவனை பக்தி செய்வான். இவன் இப்படி விசால மனஸோடு இருந்தாலே குடும்பத்தாரும் பூஜையில் ஸாளக்ராமத்தோடு இவன் ஒரு சிவலிங்கத்தையும் சேர்த்துக் கொண்டால் ஆக்ஷேபிக்காமல் இருப்பார்கள். ஆக்ஷேபிக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களுடைய நம்பிக்கையை எதிர்த்து சண்டை போட வேண்டாம். பாவம், அவர்களுக்கு சிவனையும், தெரியாது, விஷ்ணுவையும் தெரியாது. அதனால் சிவனிடம் விரோத பாவம் என்றால்கூட அது தானாக இவர்கள் ஏற்படுத்திக் கொண்டதல்ல. இதுதான் நம் குலாசாரம் என்று நினைத்து (அது தப்போ, ரைட்டோ, அது வேறே விஷயம்; இப்படி நினைத்து) அந்த மரபுக்கு வித்யாஸமாகப் போகக்கூடாது என்ற பயபக்தியில்தான் விரோதம் கொண்டாடுகிறார்கள். அதை நாம் குலைக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு நல்லபடியாக வேண்டுமானால் எடுத்துச் சொல்லிப் பார்ப்போம். அந்த ஈஸ்வரனிடமே இதற்காகப் பிரார்த்தனை செய்வோம். நாம் சொல்லி அவர்கள் கன்வின்ஸ் ஆனபின்னுங்கூட, “ஆனாலும் நம் அகத்தில், நம் ஜாதியில் இப்படி லிங்க பூஜை பண்ணுவதில்லையே” என்றால், இந்த ஸமூஹக் கட்டுப்பாட்டுணர்ச்சியை நாம் மதித்து ஒப்புக்கொள்வோம். வீட்டுப் பூஜையில், இல்லாததைச் சேர்க்கக்கூட வேண்டாம். மானஸிகமாக சிவ ஸ்தோத்ரங்களைச் சொல்லிக்கொண்டு உபாஸனை செய்வோம்; சிவன் கோவிலுக்குப் போவோம்;அங்கு மனஸார சிவ தர்சனம் பண்ணி நமஸ்காரம் செய்வோம்; சிவ ஸம்பந்தமான உபந்யாஸம், பாராயணம் இவற்றில் மனஸைக் கொடுத்து ஈடுபடுவோம். இதுவுங்கூடக் கூடாது என்று அகத்துப் பெரியவர்கள், ஜாதிப் பெரியவர்கள் சொன்னால் கேட்கவேண்டுமென்பதில்லை. ஆனால் சண்டையும் போட வேண்டாம்.

வீட்டில் முருகன் உபாஸனை, உனக்கு அம்பாளிடம் பக்தி, அதனால் யாரோ பெரியவரை அழைத்து ஸ்ரீசக்ர பூஜை நடத்தவேண்டுமென்று ஆசையிருந்தால் முதலில் வீட்டிலே ஸுப்ரம்மண்யருக்கு ஷஷ்டி பூஜையோ கிருத்திகை விரதமோ மாவிளக்கோ காவடியோ என்ன செய்வார்களோ அதை செய்து விட்டு அப்புறம் ஸ்ரீசக்ர பூஜைக்கு ஏற்பாடு பண்ணு.

நீ வைஷ்ணவன்; உனக்கு அத்வைதத்தில் பற்று இருக்கிறது; ஆசார்யாளுக்குக் கைங்கர்யம் பண்ண வேண்டுமென்றிருக்கிறது; அதனால் எனக்கு பிக்ஷை செய்து வைக்க வருகிறேனென்றால் வா. தாராளமாக வா. ஆனால் அத்வைத மடத்துக்கு பிக்ஷை பண்ணுவதற்கு முன்னாடி உனக்கென்று ஜன்மாப்படி ஏற்பட்டிருக்கிற ஜீயர் யாரோ அவருக்கு பிக்ஷை நடத்திவிட்டு அப்புறம் இங்கே வா.

குலாசாரத்தை ‘மாக்ஸிமம்’ அநுஸரி. அதற்கு அதிகமாக உன் ஸொந்த உள்ளநுபவத்துக்கும் மனப்பான்மைக்கும் அநுகூலமாக உள்ளதைச் செய். இப்படி அதிகமாகச் செய்வது குலாசாரத்தையும்விட, மூல வைதிக ஆசாரத்துக்கு ஸம்மதமானதாயிருக்க வேண்டுமேயன்றி குலாசாரத்தை விடவும் ஆதிவழியிலிருந்து விலகிப்போய் விட்ட ஸமீபகாலச் சீர்திருத்தங்களைச் சேர்ந்ததாயிருக்கக் கூடாது என்பது முக்கியம்

“நடுவாந்தரத்தில் ஏற்பட்ட குலாசாரங்களைவிட இன்னும் க்ளோஸாக மூலமான ஸ்ம்ருதிகளின்படிச் செய்யத்தானே நாங்கள் ஆசைப்படுகிறோம்? இது எப்படித் தப்பு?” என்கிற வாதத்தில் ஒரு குறை இருக்கிறது மூலமான ஸ்ம்ருதியிலேயேதான் “சிகாம் புண்ட்ரம் ச ஸூத்ரம் ச ஸமயாசாரமேவ ச | பூர்வை : ஆசரிதம் குர்யாத் அந்யதா பதிதோ பவேத் ||” என்றும் சொல்லியிருக்கிறது. அதாவது அந்த மூல ஸ்ம்ருதிகளே, “நாங்கள் ஜெனரலாகத்தான் ரூல்களைக் கொடுத்திருக்கிறோம். இந்த அமைப்புக்குள்ளே அவரவரும் பர்டிகுலராக அவர்களுடைய குலாசாரப்படியுள்ள ரூல்களைத்தான் சிகை, ஸூத்ரம், நெற்றிக்கிடுவது, மதத்தின் மற்ற ஆசரணை ஆகியவற்றில் பின்பற்றவேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தமாகிறது. எனவே குலாசாரத்துக்கு வித்யாஸமாகப் போயும் மூல ஸ்ம்ருதிக்கு க்ளோஸாகப் போவது என்பதை ஸ்ம்ருதியே ஒப்புக் கொள்வதாகத் தோன்றவில்லை. ஸ்ம்ருதி வாழ்க்கையே பூர்ணமாகப் புத்துயிர் தந்து நிலைப்படுத்திய பகவத்பாதாளும், ‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகாவி’ல் “உயிரைவிடப் பிரியமானதாக எதை ரக்ஷிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு, “குல தர்மத்தை” என்றே பதில் சொல்லியிருக்கிறார். வேத தர்மம், ஸ்ம்ருதி வழியான ஸ்மார்த்த தர்மம் என்காமல் அவரவருடைய குலதர்மத்தையே சொல்லியிருக்கிறார்: “ப்ராணாத் அபி கோ ரம்ய?” “குல தர்ம:”.


1. இது முந்தைய உரையோடு தொடர்ந்து பெரியவர்கள் அருளியது. எனினும் அனைவரும் முன்னோர் வழி செல்ல இறைவனைப் பிரார்த்தித்தவுடன் அதோடு உரை பூர்த்தியானது போல நிறுத்திவிட்டு, மீண்டும் ஏதோ தோன்றியது போலவே தொடர்ந்தார்கள். முதலில் நிறுத்திய இடத்திலேயே உரை வடிவத்துக்கு ஒரு நிறைவு ஏற்பட்டுவிட்டதால் அதோடு முந்தைய கட்டுரையை முடித்துத் தொடர்ச்சியை இங்கே தனியாகத் தருகிறோம்.

2. முந்தைய உரையில் ‘பிறந்த குலாசாரமே உய்நெறி‘ என்ற பிரிவில்.

*1. முறையே கிறஸ்துவம், இஸ்லாம், பௌத்தம், பார்ஸி மதம், ஸீக்கியர் மதம், யூதர் மதம் முதலியவற்றின் ஆதார சாஸ்திரங்கள்.

*2. ச்ருதியைத் தழுவுவது ச்ரௌதம்; ஸ்ம்ருதியைத் தழுவுவது ஸ்மார்த்தம்.

*3. தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியிலுள்ள “சங்கர ஸம்பிரதாய“த்தில் இவ்விஷயங்கள் பலவற்றைக் காணலாம்.

*4. பூர்வகர்ம வாஸனைச் சுமையான சித்தமலம்.

*5. தற்போது மறைந்துவிட்டார்

*6. கீதை 3.35

*7. தெய்வத்தின் குரல் முதற் பகுதியில், என்ற பிரிவிலுள்ள என்ற பார்க்கவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மனநெறி இயற்கை நெறியை ஆள்வது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  விதி விலக்கான மஹான்கள்
Next