ஆதிசங்கரரின் ஆசார்ய பக்தி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

”ஆசார்யாள்” என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது. பத்ரிநாத்தில் அவர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்பாதரையும், பரமகுரு (குருவுக்கு குரு) வான கௌடபாதரையும் ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாகவே பார்த்து, அப்போதுதான் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி, அடிக்கு அடி அவர்களை நமஸ்காரம் பண்ணினார், என்று சொல்கிறதுண்டு. இவரே அந்த தக்ஷிணாமூர்த்தியின் அவதாரந்தான். குருவின் மஹிமையை ஆசார்யாள் ஒரு இடத்தில் ச்லாகித்துச் சொல்லும்போது, ”பித்தளையைக் கூடப் பொன்னாக்குகிற ஸ்பர்சவேதி மாதிரி குருவானவர் பித்தளை மனஸுக்கரார்களையும் மாற்றித் தங்கமாக ஜ்வலிக்கச் செய்பவர் என்று சொன்னால்கூட குரு மஹிமையை உள்ளபடி சொன்னதாகாது. ஏனென்றால் ஸ்பர்சவேதியில் இருந்த பித்தளை தான் மட்டுமே ஸ்வர்ணமாக ஆகுமே தவிர, மற்ற பித்தளை வஸ்துக்களை ஸ்வர்ணமாக்குகிற ஸ்பர்சவேதியாக மாறாது. ஆனால் குருவை ஆச்ரயித்த சிஷ்யனோ, தான் பூர்ணத்வம் பெறுவதோடு மட்டுமின்றி, தானும் குருவாகி மற்றவர்களுக்குப் பூர்ணத்வம் தருபவனாகி விடுகிறான். அதனால் குரு ஸ்பரிசவேதிக்கும் மேலே” என்கிறார்*. காசியில் பரமேஸ்வரனே சண்டாள வேஷத்தில் வந்துபோது, ”ஆத்ம ஞானியான ஒருத்தன் பிராம்மணனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை;அவன் சண்டாளனாகப் பிறந்தவனாயிருந்தாலும் ஸரி, அவனே எனக்கு குரு” என்று பரம விநயமாகச் சொன்னார் – ஜகதாசார்யர் என்று பிருதம் பெற்றவர் இப்படி நடுவீதியில் சொன்னார்*.


* 1. ‘சதச்லோகீ’ முதல் ஸ்லோகம்

* 2. ஸ்ரீ ஆதிசங்கரரின் குரு பக்தி குறித்து மேலும் சில விவரங்கள் ”தெய்வத்தின் குரல்” : இரண்டாம் பகுதியில் ‘‘குரு பக்தி” என்ற உரையில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தெய்வங்களும் சீடர்களாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ராமாநுஜரின் குருபக்தி
Next