உடனே செய்ய வேண்டியது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘எல்லாரையும் வைதிகமாயிரு என்றால் இந்தக் காலத்தின் போக்கில் நடக்கிற காரியமா? நடக்காததைச் சொல்லிப் பிரயோஜனம் என்ன?’ என்று கேட்டால் நடக்கிற அளவுக்கு ஒன்று சொல்கிறேன். இதையாவது உடனேயே செய்ய ஆரம்பித்து விடவேண்டும்.

ஸமூஹத்தில் ஒட்டாமல் தனியாக வைதிகர்கள் ஒரு சின்ன கோஷ்டியிருப்பதாகவும், அவர்களும் இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸோடு அப்படியிருப்பதாகவும் இருக்கிற ஸ்திதி மாறுவதற்கு இந்த ஒன்றைச் சொல்கிறேன். அதாவது மற்றவர்கள் முழுக்க வைதிகமாகப் போகாமல் லௌகிகமான ஸ்கூல், காலேஜ் என்றே பசங்களை விடட்டும். தாங்களும் ஆஃபீஸோ, கம்பெனியோ, சொந்த பிஸினெஸ்ஸோ (அது ரொம்பவும் துராசாரமாக இல்லாத வரையில்) என்ன தொழில் பண்ணுகிறார்களோ அப்படியே பண்ணட்டும். ஆனாலும் பசங்களை தினம் ஸாயந்திரம் ஒரு மணி, ஸ்நானம் பண்ணி மடி கட்டிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஒரு பொது இடத்தில் ஒன்றாகக் கூடி கொஞ்சமாவது வேதாப்யாஸம் பண்ணுவதற்கும் ஸ்தோத்திரங்கள் கற்றுகொள்வதறகும் ஒவ்வொரு பேட்டையிலும் ஏற்பாடு செய்யவேண்டும். பிராம்மணரல்லாதாருக்கும் வேதாப்யாஸம் தவிர மற்ற தினுஸில் மதாபிமானம், தெய்வ பக்தி உண்டாகும் படியான ஏற்பாடுகளைப் பண்ணவேண்டும். நீராடுவது, நீறு பூசுவது (அல்லது திருமண் இடுவது),  தேவார திருவாசக திவ்ய பிரபந்தங்களை ஓதுவது என்று வைத்துக் கொள்ளாலம். சின்ன வயஸிலிருந்தே இப்படி நம் மதாநுஷ்டானங்களில் பிடிப்பை உண்டாக்கிவிட வேண்டியது அவசியம். ஸகல ஜாதிக் குழந்தைகளுக்கும் ஸம்ஸ்கிருதமும் கற்றுக்கொடுத்துவிடவேண்டும். அத்தனை சாஸ்திரங்களும் அந்த பாஷையில்தானே இருக்கின்றன? ஆனபடியால், நம் சாஸ்திரங்களைப் பார்த்து அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூடிய பாஷா ஞானத்தை நம் மதத்துக் குழந்தைகள் எல்லோருக்கும் உண்டாக்கிவிட வேண்டும்.

இப்படி இளவயசுக்காரர்கள் முழுக்க வைதிகாசாரப்படிதான் நடப்பது என்றில்லாவிட்டாலும், அதை மட்டமாக நினைக்காமல் அதில் மரியாதை வைத்து முடிந்த மட்டும் சில ஆசரணைகளைப் பின்பற்றும்படிப் பண்ணினால்தான் அடுத்த தலைமுறையில் முழு வைதிகர்களாகப் போவதற்கு வெட்கப்படாமல் சில பசங்களாவது வருவார்கள்; பௌரோஹித்யம் தங்களோடு போகட்டும் என்று நினைக்கிற இன்றைய சாஸ்திரிமார்கள் பிள்ளைகளை அந்தத் தொழிலில் விட முன்வருவார்கள்.

இப்படி ஒரு ஸ்நானம், மடி, அத்யயனம், ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஸ்தோத்ரங்கள் படிப்பது, எல்லோருமாகக் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணுவது, பஜனை பண்ணுவது என்று ஆரம்பித்து விட்டால், தானே கெட்ட ஆசாரங்கள் குறைய ஆரம்பித்து விடும். நாம், ‘இங்கே போகாதே, இதைத் தின்னாதே’ என்று கண்டிப்புப் பண்ணினால்தான் அங்கேயே போவது, அதையே தின்பது என்று முரண்டிக்கொண்டு தப்பிலேயே புத்தி போகும். இப்படிக் கண்டிப்பதற்குப் பதில் வைதிகமான, தெய்வ ஸம்பந்தமான சில காரியங்களில் பழக்கிவிட்டால், அப்புறம், “நாம் அந்த இடங்களுக்குப் போனால், அந்த வஸ்துக்களைத் தின்றால், ‘நீ கூடவா இங்கே வந்திருக்கே? இப்படிச் செய்யறே?’ என்று அந்த இடத்துக்காரர்களே கேட்பார்களே!” என்ற லஜ்ஜையால் பசங்கள் தாங்களாகவே ஸரியாயிருப்பார்கள். டிஸிப்ளின் பழக்கத்தால் வரவேண்டுமேயொழிய, உபதேசத்தால் அல்ல.

பசங்களுக்குச் சொன்னது வயசு வந்தவர்களுக்குந் தான். அவர்களும் டென்னிஸ் கோர்ட், ஸினிமா, கச்சேரி என்று போவதைக் குறைத்துக்கொண்டு இதே மாதிரி வைதிகமான, தெய்வ ஸம்பந்தமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இயன்ற மட்டும் ஆசாரங்களை அநுஷ்டிக்க வேண்டும். ரிடையர் ஆன பிற்பாடாவது, எக்ஸ்டென்ஷன், ரி-எம்ப்ளாய்மென்ட், சொந்த பிஸினஸ் என்று போகாமல் நம்முடைய ஆசாரங்களை அநுஷ்டித்துக் கொண்டு சாஸ்திரோக்தமாக வாழப் பார்க்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அனைவரும் வைதிகராகுக!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கட்டுப்படுவதன் பயன்
Next