ராமாநுஜரின் குருபக்தி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ராமாநுஜாசாரியார் திருக்கோட்டியூர் நம்பி என்கிற தம்முடைய ஒரு குருவின் வார்த்தையை உல்லங்கனம் பண்ணி (மீறி) எல்லா ஜனங்களுக்கும் உபதேசம் செய்தார் என்று பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவரே இதே நம்பியிடம் எத்தனை அடக்கத்தோடு நடந்து காட்டியிருக்கிறாரென்றும் வைஷ்ணவ குரு பரம்பரா கதைகள் சொல்கின்றன. உபதேசம் தருவதற்கு முந்தித் திருகோட்டியூர் நம்பி ராமாநுஜாசாரியாரைப் பதினெட்டு தடவை ஸ்ரீரங்கத்திலிருந்து திருகோட்டியூருக்கு நடக்கப் பண்ணிவிட்டே கடைசியில் உபதேசம் கொடுத்தாராம். ராமாநுஜர் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இப்படி நடையாக நடந்தாராம்.

ஸ்மார்த்தர்கள் ஆசார்யனுக்கு நாலு தரம் நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். வைஷ்ணவர்கள் ஆசார்யன் போதும் போதும் என்கிற வரையில் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு தரம் ஸ்ரீரங்கத்துக்கு வந்த திருகோட்டியூர் நம்பி ஜில்லென்று காவேரி ஜலத்திலே (அல்லது படித்துறை மண்டபமாயிருக்கலாம்) நின்று கொண்டிருந்தாராம். வெளியிலே ஆற்றங்கரை மணலோ நல்ல வெயிலில் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்ததாம். அப்படிப்பட்ட மண்ணில் ராமாநுஜர் உடம்பு கன்றிப் போவதையும் பொருட்படுத்தாமல் நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருந்தாராம். அவருடைய குரு பக்தியை சோதனை பண்ணவேண்டும் என்று இப்படிச் செய்த நம்பி அப்புறம் மனஸ் தாங்காமல் அவரை நிறுத்தினாராம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆதிசங்கரரின் ஆசார்ய பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சங்கரரின் சீடர்கள்
Next