சமைப்பவர், பரிமாறுபவர் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சமைக்கிறவர், பரிமாறுகிறவர் ஆகியவர்களுடைய சுத்தமான பிரேமையால் ஆஹாரம் ஸாத்விகமாகிறது. தாயார், பத்தினி இவர்களுடைய கைச் சாப்பாடு இந்தக் காரணத்தால் உசந்தது என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதிலே அநேக கேள்வி வருகிறது. ஜெனரலாக அவர்களுக்குப் பதி, புத்ராளிடம் பிரேமை உண்டு என்றாலும் சமைக்கிறபோதும், பரிமாறுகிறபோதும் இந்தப் பிரியந்தான் அவர்கள் மனஸில் ரொம்பியிருக்கிறதா என்ன? எதையாவது நினைத்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு, எரிச்சல் பட்டுக்கொண்டு, அலுத்துக் கொண்டு அவர்கள் சமைத்திருக்கலாம். அப்போது அதன் ‘எஃபெக்ட் ‘சும்மா விடுமா? கதையிலே ராஜாவும், அவனுடைய மடப்பள்ளிக்காரர்களும் பிரியத்துடனும், பக்தியுடனும் பண்ணிப் போட்டுங்கூட, சாப்பிட்டவரோ மஹானாயிருந்த போதிலும் அரிசி எவனிடமிருந்து ஆர்ஜிதம் செய்யப்பட்டதோ அவனுடைய திருட்டுக்குணம் தான் போஜனத்தில் ‘ரிஃப்ளெக்ட்’ ஆயிற்று என்பதிலிருந்து நாம் இன்னும் டைரக்டாக ஸம்பந்தப்பட்ட சமையல்கார, பரிசாரகர் விஷயத்தில் – அவர்கள் அம்மாவாகவோ, அகத்துக்காரியாகவோ இருந்தால்கூட – ஜாக்கிரதை பண்ணிக்கொள்ள வேண்டுமென்றாகிறது.

ஸ்தோத்ரங்களையோ பகவன் நாமாவையோ சொல்லிக்கொண்டுதான் ஒரு ஸ்திரீ அரிசி பொறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்குவதிலிருந்து ஆரம்பித்து அரிசி களைந்து உலையில் போட்டு, அது பக்குவமாகிப் பரிமாறுகிற வரையில் இதைத் தொடர்ந்து செய்யணும்; சாப்பிடுகிறவனும் “கோவிந்த கோவிந்த” என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும்; இப்படிச் செய்தால் போஜனத்தின் ஷட்ரஸத்தோடு – அறுசுவையோடு – நாமரஸமும் சேர்ந்து அதன் தோஷத்தையெல்லாம் போக்கிவிடுமென்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வாஸ்தவந்தான், நாமாவுக்கு இல்லாத சக்தி எதற்கும் இல்லை. அது ஸர்வ பாப பரிஹாரம், ஸகல தோஷ நிவ்ருத்திகரம் என்பதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனாலும் சொல்கிறவர் எந்த அளவு ‘கான்ஸென்ட்ரேஷ’னோடு சொல்கிறாரென்பது முக்யமாச்சே! தினந்தினமும் சொல்வதில் மனஸ் கலக்காமல் மெகானிகலாக ஆகிவிடக் கூடாதே!

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் குழப்பமாயிருக்கிறது. ‘ஸாத்விக ஆஹாரமென்றால் கிளப் (ஹோட்டல்) கூடாது, கான்டீன் கூடாது என்று ஸ்வாமிகள் சொல்வாரென்று எதிர்பார்த்தோமானால், அவர் இன்னும் ஒரு படி மேலே போய் அகத்து மநுஷ்யர்கள் சமைத்துப் போடுவதற்கும் தோஷம் கொண்டு வந்து விட்டாரே!’ என்று தோன்றும்.

க்ளப், கான்டீன், ஹாஸ்டல், மெஸ் இதுகள் எதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நானென்றால் என்ன? சாஸ்திரம் சொல்கிறதை, சாஸ்திரஜ்ஞர் சொல்கிறதைத்தான் நான் ஒப்பிக்கிறேன். சாஸ்திரம் ஒப்புக்கொள்கிறதை நான் ஒப்பிக்கிறேன்! க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா என்பது ஸந்தேஹந்தான். வெளியிலே எல்லாம் ‘நீட்’டாக இருந்தாலும் உள்ளே எத்தனை அசுத்தமிருக்குமோ? இதிலே சுத்தமாயிருக்கிறதென்றே வைத்துக் கொண்டாலும் ஆசார சுத்தி, பண்ணுகிறவர்களின் மனஸ் சுத்தி என்பது இங்கெல்லாம் கொஞ்சங்கூட இருக்காது. பகவத் ஸ்மரணையோ, நாம் நன்றாயிருக்க வேண்டுமென்ற பிரேமையான எண்ணமோ, ஆசார அநுஷ்டானமோ துளிகூட இல்லாத எவனோ சமைத்துப் போடுகிறதைச் சாப்பிடுவதில் ஒரு நல்லதும் வராது. வேறே எந்தத் தொழிலும் கிடைக்காமல்தான் அநேகமாக இதற்கு வருவானாதலால் அவனுக்குப் புத்தியும் அதிகமிருக்காது. இந்த நாளில் எல்லாரையும் பிடித்து ஆட்டுகிற பொருளாசை, ஸினிமா (காமம்) , பாலிடிக்ஸ் (க்ரோதம்) இவற்றில்தான் அவன் தோய்ந்து போனவனாயிருப்பான்.  அதனால் இவன் கைச் சாப்பாடு நல்லது பண்ணாதது மட்டுமில்லாமல் கெடுதலே பண்ணும்.

மனஸ் சுத்தம், வெளி சுத்தம் இரண்டையும் இணைக்கிற ஆசாரத்துக்கு க்ளப்பிலும், மெஸ்ஸிலும் ஏது இடம்? ஒரே எச்சில், துப்பல்தான். தினம் ஒரு தட்டில் – பல பேர் சாப்பிட்ட தட்டில் – தின்னணும். கோமயம் [சாணி] போட்டு எச்சில் இடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? டேபிள், நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பரிஷேசனம், ப்ரணாஹுதி1 பண்ணலாமா? ப்ராணாஹுதிக்கு ‘ஸெர்வர் ‘கவனமாக அபிகாரம்2 பண்ணுவானா? ‘ஏதோ தின்றோம்; இந்த மாம்ஸ பிண்டத்தை வளர்த்தோம்; ஜிஹ்வா சாபல்யத்தை [நாக்கின் சபலங்களை] அதனால் தீர்த்துக் கொண்டோம்’ என்றால் [சாஸ்திர விதி] எதுவும் வேண்டாம். ஆனால் இதற்காகவா ஈஸ்வரன் ஆறறிவுள்ள மநுஷ்யனாக நம்மைப் படைத்திருப்பது? இப்படித்தானென்றால் மிருக ஸ்ருஷ்டியோடேயே நிறுத்திக் கொண்டிருக்கலாமே!


1. உண்ணும் முன் அன்னத்தைத் தீர்த்தத்தால் அபிமந்திரித்து, பிராண தேவதையர் ஐவருக்கும் அர்ப்பணம் செய்வது.

2. அன்னத்தின் மீது நெய் விடுதல்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is முக்குணங்களும் உணவும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பதார்த்த சுத்தம்
Next