சங்கரரின் சீடர்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதேபோல (சங்கர) ஆசார்யாள், ராமாநுஜர் ஆகியவர்களுடைய நேர் சிஷ்யர்களும் தாங்களே மஹா பெரியவர்களாயிருந்தபோதிலும் தங்கள் தங்கள் ஆசாரியரிடத்தில் அஸாத்யமான பக்தி வைத்திருக்கிறார்கள். ஆசார்யாளின் சிஷ்யர்களில் ஒருவரான தோடகாசார்யார் அவரை ”நீங்களேதான் பரமேஸ்வரன்” (பவ ஏவ பவான்) , ”விருஷபத்வஜர் நீங்களே” (புங்கவ கேதன) என்று ஈஸ்வர ஸ்வரூபமாகவே தெரிந்து கொண்டு ஸ்துதித்திருக்கிறார். இன்னொரு சிஷ்யரான பத்மபாதரும், ஆசார்யாளிடம் வ்யாஸர் வ்ருத்த ப்ராம்மண வேஷத்தில் வந்து வாதம் நடத்தினபோது, ”இதென்ன இப்படி இவர்கள் முடிவே இல்லாமல் வாதம் நடத்திகிறார்களே!” என்று ஆச்சர்யப்பட்டு, இப்பேர்ப்பட்ட பண்டித ஸிம்ஹங்கள் யாராயிருக்க முடியும் என்று பக்தியோடு த்யானித்துப் பார்த்து, சங்கர : சங்கரஸ் ஸாக்ஷாத் வ்யாஸோ நாராயண ஸ்வயம் – ”சங்கரர் ஸாக்ஷாத் சிவ பெருமானான சங்கரனே, வ்யாஸரோ மஹாவிஷ்ணு அவதாரம்”என்று சொல்லியிருக்கிறார். வ்யாஸர் செய்த பிரம்ம ஸூத்ரத்துக்கு ஆசார்யாள் செய்த பாஷ்யத்தைப் பற்றித்தான் இப்படி வ்யாஸரே மாறு, வேஷத்தில் வந்து வாதம் நடத்தினார். கடைசியில் பத்மபாதர் இப்படி, ‘அவர்தான் விஷ்ணு;ஆசார்யர்களோ பரமசிவன்’என்றவுடன் அவர் தம்முடைய வ்யாஸ ரூபத்தைக் காட்டி, ஆசார்ய பாஷ்யம் தம்முடைய அபிப்ராயத்தையே பூர்ணமாக அநுஸரிக்கிறது என்று மெச்சினார். பிற்காலத்தில் இந்த பத்மபாதரே வ்யாஸ ஸூத்ரத்துக்கு ஆசார்யாள் செய்த பாஷ்யத்தை மேலும் விஸ்தாரப்படுத்தி உரை எழுதினார். அதில் முதல் ஐந்து பாதங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருப்பதால், ”பஞ்சபாதிகா’ ‘என்கிறோம். அதிலும் பத்மபாதர் குரு வந்தனம் சொல்லும் போது ஆசார்யாளைப் பரமேஸ்வரனாகவே ”அபூர்வ சங்கரம்” என்று சொல்லியிருக்கிறார்.

அவருடைய குரு பக்தி மஹிமையால்தான் அவருக்குப் ”பத்மபாதர்” என்ற பெயரே வந்தது. அதற்கு முந்தி அவருக்கு ஸநந்தனர் என்று பெயர். அவர் தமிழ் தேசத்துப் பிராம்மணர்; சோணாட்டவர் (சோழ நாட்டுக்காரர்) . ஆசார்யாள் தம்முடைய ‘மிஷனை’ (ஜீவதப் பணியை)க் காசியில் ஆரம்பித்த காலத்திலேயே, அதாவது அவருக்குப் பதினாறு வயஸ் பூர்த்தியாகுமுன்பே ஸநந்தனர் அவரிடம் வந்து சிஷ்யராகச் சேர்ந்து விட்டார். ஆசார்யாள் தம்முடைய பதினாறாவது வயஸிலேயே பாஷ்யமெல்லாம் பண்ணி முடித்துவிட்டு, அதோடு சரீரயாத்ரையையும் முடித்துவிட நினைத்தார். அப்போதுதான் வ்யாஸர் வந்து வாதம் பண்ணி அவரை வாழ்த்தி, அவர் பாஷ்யம் பண்ணினது மட்டும் போதாது, அவரேதான் அதை தேசம் பூராவும் வித்வான்களுடன் வாதம் பண்ணிப் பிரசாரம் செய்து நிலைநாட்டவும் வேண்டும் என்று சொல்லி, அவருக்கு இன்னொரு பதினாறு வருஷம் ஆயுள் கொடுத்தார். அந்த விஷயம் இருக்கட்டும்.

ஆசார்யாள் காசியில் வாஸம் செய்த அப்போது ஒருநாள் அவர் கங்கைக்கு இக்கரையிலும், ஸநந்தனர் அக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாளின் வஸ்திரங்களைக் காயப்போட்டு ஸநந்தனர் வைத்துக் கொண்டிருந்தார். ஆசார்யாள் அப்போது சிஷ்யருடைய குரு பக்தியை லோகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தார். அதனால் தாம் இருந்த கரையைச் சேரவே ஸ்நானம் பண்ணிவிட்டு, ஈர வஸ்திரத்துடன் நின்றுகொண்டு, அக்கரையிலிருந்த சிஷ்யரிடம் ”காய்ந்த வஸ்திரம் கொண்டு வா” என்றார்.

ஆசார்யன் ஒன்று சொல்லிவிட்டால் அதை உடனே பண்ணியாக வேண்டும் என்ற பக்தி வேகம் ஸநந்தனருக்கு வந்து விட்டது. ஆசார்யாள் சொட்டச் சொட்ட ஈரக் காஷாயத்தோடு நிற்கிறாரே என்று அவருக்கு மனஸ் பறந்தது. ஆவேசமாக அன்பு, பக்தி வந்துவிட்டால் அங்கே rational thinking (அறிவுப் பூர்வமான சிந்தனை) எல்லாம் நிற்காது. அதனால் படகு பிடித்துக்கொண்டு போக வேண்டும் என்று ஸநந்தனரால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. எதிரே, அன்னை பெரிசாக, ஆழமாக அலை வீசிக்கொண்டு கங்கா நதி என்று ஒன்று இருப்பதே அவருக்குத் தெரியவில்லையே! அப்புறம் படகைப் பற்றி எப்படி நினைப்பார்? கொஞ்சம் தூரத்தில் ஆசார்யமூர்த்தி ஈரத்துணியுடன் நிற்கிறார், காய்ந்த வஸ்திரம் கேட்டு அவர் ஆக்ஞை பண்ணிவிட்டார் என்பது மாத்திரம்தான் அவர் புத்தியில் ‘டோட்ட’லாக வியாபித்திருந்தது. அதனால் எதிரே ஏதோ ஸம பூமி, கட்டாந்தரை இருக்கிறது போல, அவர் பாட்டுக்கு கங்கைப் பிரவாஹத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். கங்கையின் ஆழத்தில் முழுகிப் போவோமே, முழுகாமல் நீந்தினால் கூட வஸ்திரம் நனைந்து போய் குருநாதன் போட்ட ஆக்ஞையின் ‘பர்பஸே’ கெட்டுப்போய் விடுமே என்பதெதுவும் அப்போது அவருக்குத் தெரியவில்லை.

இப்படி ஒரு பக்தி பரவசம் ஏற்பட்டபோது, ஈஸ்வரன் (அந்த ஈஸ்வரன்தான் ஆசார்ய ரூபத்தில் வந்து நின்று கொண்டிருப்பதும்) அதற்கான பெருமையைத் தரமால் போவானா? அதனால் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பத்மபாதர் பாட்டுக்குப் பிரவாஹத்தின் மீது நடக்க அவர் அடுத்த அடி வைக்க வேண்டிய இடத்தில் கங்காதேவி நீரோட்டத்துக்கு மேலாக ஒவ்வொரு பெரிய தாமரைப் பூவாகப் புஷ்பித்துக் கொண்டே போனாள். இந்த பத்மங்களில் காலை வைத்துக் கொண்டே ஸநந்தனரும் கங்கையின் மேலே நடந்து போனார். ஆனால் அவருக்கு இப்படித் தாமரைகள் முளைத்துத் தம் அடிவைப்பைத் தாங்குவதும் தெரியாது. தீமிதியில் நெருப்புத் தெரியாது என்றால் இவருக்கு ஜில்லென்று, மெத்தென்று புஷ்பம் இருப்பது தெரியவில்லை.

எல்லாரும் பார்த்து அவருடைய குருபக்தி விசேஷத்தைச் வியந்து கொண்டிருக்கும்போதே, இப்படி அந்தப் பெரிய நதியைத் தாண்டி இக்கரைக்கு வந்து குருமூர்த்திக்கு வஸ்திரத்தை ஸமர்ப்பித்தார்.

”எப்படியப்பா நீ கங்கையைத் தாண்டி வந்தே?” என்று ஆசாரியாள் வேடிக்கையாகக் கேட்டார்.

அப்போதுகூட ஸநந்தனர் ஆற்றைத் திரும்பிப் பார்த்து பத்மங்கள் முளைத்ததைத் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை. ‘ஆக்ஞை பண்ணினது ஆசார்யன். அவர் ஆக்ஞை பண்ணி விட்டு அது எப்படி நிறைவேறாமல் போகும்? அவர் அநுக்ரஹமே நம்மை அங்கேயிருந்து இங்கே உருட்டிக் கொண்டு வந்துவிட்டது’ என்று அவருக்கு நிச்சயம்.

அதனால், தங்களை ஸ்மரித்தால் கடக்க முடியாத ஸம்ஸார ஸாகரமே ‘முழங்கால் மட்டும்’ ஜலமாகிவிடும்போது, தாங்களே வாயைத் திறந்து ஆக்ஞை பண்ணியிருக்கையில் நான் கங்கையைத் தாண்டினது என்ன பிரமாதம்?” என்றார்.

அப்புறம்தான் ஆசார்யாளே அவருக்குப் பத்மங்கள் புஷ்பித்ததைக் காட்டி, அவை இவருடைய பாதத்தை தரித்ததால் ”பத்மபாதர்” என்ற பெயரை இவருக்கு வைத்தார்.

ஈஸ்வரனாகவே ஒரு நிலையில் இருந்தாலும், இன்னொரு நிலையில் அவனுடைய பாதபத்மமாக நினைக்கப்படும் பகவத்பாதருக்குப் பொருத்தமாக இப்படி சிஷ்யரும் பத்மபாதராக அமைந்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ராமாநுஜரின் குருபக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில்
Next