மதுவிலக்கு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சாஸ்திரப்படி விலக்க வேண்டியவற்றில் மற்ற ஆஹார வகைகள் நாளாவட்டத்தில்தான் சித்தத்தைக் கெடுக்கின்றனவென்றால், குடியோ உடனேயே ஒருத்தனின் புத்தியைக் கெடுத்துக் கேவலப்படுத்துவதைப் பார்க்கிறோம். அதனால் இதை முதலில் விட்டுத் தொலைக்க வேண்டும்.

இப்படி ஒரு வஸ்து உள்ளே போவதால் உடனே சித்தம் கெட்டுப் போவதாலேயே, விலக்க வேண்டிய மற்ற வஸ்துக்களும் கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே போய் காலக்ரமத்தில் சித்தத்தை பாதிக்கும் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிறது. அதாவது சாஸ்திரம் சொல்கிறபடி ஆஹாரத்துக்கும் மனஸுக்கும் ஸம்பந்தமுண்டு என்று நிச்சயமாகிறது.

குடி கூடாது, அது புத்தியைக் கெடுக்கும், குடியையும் கெடுக்கும். முற்காலத்தில் குடிப்பதற்கு அநுமதி பெற்ற ஜாதியாரும் இப்போதைய ‘ஸெட்-அப்’பில் அந்தப் பழக்கத்தை விடுவதுதான் நல்லதாகிறது. இதனால், காந்தீயவாதிகள் சொல்கிற மதுவிலக்கை ஆதரித்து ஸ்ரீமட தர்மத்தொண்டு ஸபையும் அறிக்கைகூட விட்டிருக்கிறது.

நாம் வேதத்தையும் அதை அநுஸரித்து ஏற்பட்டுள்ள தெய்வ வழிபாட்டு நூல்களான ஆகமத்தையும் பின்பற்றுகிற தமிழ் மதஸ்தர்கள். இந்த வேதம், ஆகமம் இரண்டுமே மதுவிலக்கை விதித்திருக்கின்றன. ஆதலால் மத ரீதிப்படி நாம் குடிக்காமலிருக்கவே கடமைப்பட்டிருக்கிறோம் என்று எடுத்துக்காட்டி இப்படி அறிக்கை விட்டு, துண்டு பிரசுரமாக விநியோகித்தோம். ஸமூஹப் பிரச்னையாகவும் குடும்ப வாழ்க்கை விஷயமாகவும் காந்தீயவாதிகள் சொல்லும் மதுவிலக்குக்கே, அந்தக் காரணங்களையும் ஒப்புக்கொள்வதோடு, மத உணர்ச்சியை முக்யமாக வைத்து இன்னம் weight கொடுத்து இப்படிச் செய்தோம். இதன்படி நடப்பதாக ஜனங்கள் ஸம்மதச் சீட்டு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அப்படிச் செய்கிறவர்களுக்கு மடத்துப் பிரஸாதம் அனுப்பவும் ஏற்பாடு செய்தோம்.

[ஸ்ரீ பெரியவர்கள் குறிப்பிடும் அறிக்கையின் வாசகம் பின்வருமாறு:

“வேதங்கள் ‘கள்ளுண்ணாதே’என்று முரசறைகின்றன. ஆகமங்கள் தீக்ஷையைப் பற்றிச் சொல்லுமிடத்துக் கள்ளை விலக்குவதையே முதல் அறமாக உபதேசிக்கின்றன. ஆதலால், ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவ நூல்’ என்னும் திருமூலர் வாக்குப்படி, வேதாகம மரபில் வந்த தமிழன் ஒவ்வொருவனும் கள்ளுண்ணாமைப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் பிரமாணமெடுத்துக் கொண்டு கீழ்க்காணும் பிரமாணப் பத்திரிகையை ஆதீனத்துக்கு அனுப்புகிறவர்களுக்கு திருநீறு பிரசாதமோ, துளஸி பிரசாதமோ அனுப்பப்படும். திருநீறு அல்லது திருமண் இவைகளைத் தரிக்கும் அநுஷ்டான முறையை விளக்கும் உபதேச நூலும் அனுப்பப்படும்”.

இதைக் கண்ணுறுபவர் அனுப்ப வேண்டிய பத்திரிகையின் வாசகம்: “நான் நமது வேதாகம விதிப்படி இன்று முதல் கள்ளைத் தொடுவதில்லை. இங்ஙனம் ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு உறுதிமொழி கூறுகிறேன்.”]

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is படிப்படியாக முன்னேற
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  புகைத்தல்:லமூஹ விரோதச் செயல்
Next