அன்னரஸத்தில் திவ்ய ரஸம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸ்வயம்பாகத்தை நான் சொல்கிறதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. நாமே சமைத்துக் கொள்ளும்போதுதான் சமைகத்கிற நேரம் பூராவும் நாம் தெய்வ ஸம்பந்தமாகவே நாமாவைச் சொல்வது அல்லது ஸ்தோத்திரமோ ஸூக்தமோ சொல்வது என்று வைத்துக் கொண்டு, பதார்த்தத்தினால் ஸாத்விகமாக உள்ள ஒரு ஆஹாரம் அதோடு ஸம்பந்தப்படும் மநுஷ்யாளின் தப்பான எண்ணத்தால் கெட்டுப்போகாமல், மேலும் ஸாத்விகமாக ஆகும்படிச் செய்து கொள்ள முடியும்.

அடுப்பிலே உலை வைத்துவிட்டு அன்னம் பக்வமாகிறவரை அதன் பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டுதான் இப்படி நாமாவோ ச்லோகமோ சொல்லிக் கொண்டிருக்கணும் என்பதில்லை! அரிசியைக் களைந்து போட்டுவிட்டு நாம் பாட்டுக்கு ஜபமோ பாராயணமோ பண்ணிக் கொணடிருக்கலாம். இந்த ரஸம் தானே அன்னரஸத்தில் சேரும். அப்புறம் கால்மணியோ, அரைமணியோ எப்போது அது பக்குவமாகுமோ அப்போது போய் இறக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் ‘வெந்திருக்குமோ, வெந்திருக்குமோ?’ என்று அதுவே ஜபமாக உட்கார்ந்திருக்கக் கூடாது! ஆரம்பத்தில் அந்த எண்ணம் வந்து கொண்டுதானிருந்தாலும், நாளாவட்டத்தில் தானாக ஒரு ‘டயம் ஸென்ஸ்’ உண்டாகி, அந்த நினைவு இல்லாமல் கால்மணியோ அரைமணியோ ஜபத்திலேயே கான்ஸென்ட்ரேஷனோடு இருக்க முடியும்.

பதார்த்த சுத்தியும், சமைக்கும்போது பகவத் ஸ்மரணத்தால் உண்டான சுத்தியும் சேர்ந்த ஆஹாரத்தை அப்புறம் பகவானுக்கு நைவேத்யம் பண்ணி இன்னம் சுத்தமானதாக ஆக்க வேண்டும். கடைசியில், சாப்பிடும் போது “கோவிந்த, கோவிந்த” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடணும். “மௌனேன போக்தவ்யம்”- பேசாமலே சாப்பிட வேண்டும் என்பது விதி. ‘பேசாமல்’ என்றால் ‘அதைப்போடு இதைப்போடு’ என்காமல், எது இலையில் விழுகிறதோ அதைச் சாப்பிட வேண்டுமென்று அர்த்தம். மனஸுக்குள் கோவிந்த நாமோச்சாரணத்துடன் இப்படி போஜனம் பண்ண வேண்டும். கோவிந்த ரஸமாக உள்ளே போகிற அன்னத்தை, அங்கே ஜாடராக்னியாக இருக்கும் அவனே ஜீர்ணித்து தேஹ புஷ்டியோடு சித்த சுத்தியும் அருள்வான். கீதையில் [15.14] இப்படித்தான் சொல்லியிருக்கிறான்.

அஹம் வைச்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹ-மாச்ரித: |

ப்ராணாபாந-ஸமாயுக்த: பசாம்-யந்நம் சதுர்விதம் ||

ஆஹாரம் நாலு விதமானது (‘அன்னம் சதுர்விதம்’) . சாதம்போல மென்று சாப்பிடுவது ‘காத்யம்’. ‘கறுக் முறுக்’கென்று வறுவல் மாதிரிச் சாப்பிடுவது ‘சோஷ்யம்’. அப்படியே பஞ்சாமிர்தம்போல, பல்லால் கடிக்க அவச்யமில்லாமல் விழுங்குவது ‘லேஹ்யம்’. குடிக்கிறது ‘பேயம்’. இந்த நாலையும் வயிற்றிலே உள்ள வைச்வாநர அக்னிதான் ஜீர்ணம் பண்ணுகிறது. ஐந்து பிராணன்களைக் கொண்டு ஜீர்ணித்த ஆஹாரத்தை வைச்வாநர சக்தியானது தேஹம் பூராவுக்கும் அனுப்புகிறது. அந்த ஐந்தில் பொதுவான ச்வாஸமான ‘ப்ராண’னையும் கீழே நோக்கிப் போகிற வாயுவான ‘அபான’னையும் இங்கே ‘ப்ராணாபான’ என்கிறார். “இப்படிப் பிராணிகளின் தேஹத்தில் வைச்வாநரனாக இருப்பது நான்தாண்டா!” என்கிறார்.

ப்ராணாஹுதி என்று வேத மந்திர அதிகாரமுள்ள எல்லோரும் சாப்பிடுவதற்கு முந்தி, அன்னத்தைச் சுற்றியும் அதன் மேலேயும் தீர்த்தத்தைத் தெளித்து, வ்யாஹ்ருதிகளாலும் காயத்ரீயாலும் அதைச் சுத்தி செய்த பிறகு, இந்தப் பஞ்சப் பிராணன்களுக்குத் தான் ஆஹுதி பண்ணுகிறார்கள். வெளியிலே அக்னி மூட்டி ஹவிஸ்ஸை ஆஹுதி கொடுப்பது மாதிரி சாப்பிடுவதையும் உள்ளேயிருக்கிற அக்னிக்கு ஒரு குட்டி யஜ்ஞமாகவே வேதம் கொடுத்திருக்கிறது.

நமக்கு உள்ளேயிருக்கிற ஈஸ்வர சக்திதான் இந்த வேளை இந்த ஆஹாரம் நமக்கு லபிக்கும்படியாக அநுக்ரஹம் பண்ணியிருக்கிறது என்ற நினைப்போடு, இது நம் உடம்பில் ஒட்டும்படியாகவும் சித்தத்தை சுத்தம் பண்ணும்படியாகவும் அதுதான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கணும் என்பதே தாத்பர்யம்.

நைவேத்யமானது ஈஸ்வரனுக்கு ; அந்த அன்னமும் ஈஸ்வரன்தான்; அது விழும் அக்னியும் அவனே; இந்த ஆஹூதி பண்ணுகிறானே, அதாவது சாப்பிடுகிறானே, இவனும் ஈஸ்வரன்தான்; இதனால் அடைகிற லக்ஷ்யமும் அவனேதான் — ‘ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்’  ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம்*என்று சாப்பாட்டு விஷயத்தைப் பூரா பூரா திவ்ய ரஸத்தில் கரைத்துவிட வேண்டும்.

தானே சமைத்துக் கொள்வது என்கிறபோது வேலையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்குமாதலால் பல தினுஸு வ்யஞ்ஜனங்களைப் பண்ணிக் கொள்ளத் தோன்றாது. அதாவது நாக்கு ருசிக்காக அமித போஜனம் பண்ணிச் சித்தசுத்தியைக் கெடுத்துக் கொள்ளாமலிருப்போம்.

பகவத் ஸம்பந்தப்படுத்தி நாமாவோடு சமைப்பது, நிவேதனம் பண்ணுவது என்கிறபோது மாம்ஸாதிகளையும், மற்ற ராஜஸ தாமஸ ஆஹாராதிகளையும் பண்ணவே தோன்றாது. அதாவது தன்னால் வெஜிடேரியனிஸமும் இதில் வந்துவிடும். அந்நிய பதார்த்தங்கள் பக்குவமாவதற்கு நிறைய ‘டயம்’ பிடிக்குமாதலாலும், தானே சமைத்துக் கொள்கிறவனுக்கு அது வேண்டாமென்று தோன்றிவிடும். தர்ம சாஸ்திரத்தில் அஹிம்ஸை சொல்லியிருக்கிறது, யோக சாஸ்திரத்திலும் அதையே சொல்லியிருக்கிறது என்பதற்காகவெல்லாங்கூட அதைப் பின்பற்ற முடியாவிட்டாலும், ‘தனக்கு டயம் ஸேவ் ஆகிறதே, வேலை ஸேவ் ஆகிறதே’ என்பதனாலேயே ஸ்வயம்பாக நியமத்தில் வெஜிடேரியனியஸம் அநுஷ்டானத்துக்கு வந்துவிடும்! எப்படி வந்தாலென்ன? அப்புறம் இதவே தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற புண்ணியத்தையும், யோக சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற சித்த சுத்தியையும் கொடுத்துவிடும்.

ஆஹார தினுஸுகள் [ஸ்வயம்பாகத்தில்] குறைந்து விடுகின்றன என்பதாலேயே செலவும் குறைந்து விடும். அதாவது எகானமிக்கு எகானமி.

இன்னொன்று : இன்னொருத்தர் சமைத்துப் போடுகிறபோது, நாக்கைத் தீட்டி வைத்துக்கொண்டு, ‘இது உப்பு, அது உறைப்பு’ என்று நோணாவட்டம் சொல்லத் தோன்றுகிறது. இதில் நமக்கும் அதிருப்தி; பண்ணினவர்களுக்கும் மனக்கிலேசம். நாமே செய்து கொண்டால் அந்தச் சமையல் எப்படி இருந்தாலும் தேவாம்ருதமாகத் தோன்றும். சாப்பிடுகிற வேளையில் ‘எரி பிரி’ என்றில்லாமல் ஸந்தோஷமாக, திருப்தியாக இருக்கும். ஆஹாரம் இதனாலேயே உடம்பில் ஒட்டி சித்தத்திலும் நல்லதைப் பண்ணும்.

பிறத்தியாருடைய மனோபாவம், ‘பெர்ஸனல் மாக்னடிஸம்’, ‘ஆரா’ என்றெல்லாம் பாரா-ஸைகாலஜிக்காரர்களும் சொல்கிற சக்தி சாப்பாட்டின் வழியாகப் பாய்ந்து ஒருத்தனுடைய ‘ஆரா’வை பாதிக்காமல் அவனவனும் தன் கையாலேயே பொங்கிப் போட்டுக் கொண்டு தன் உள்பான்மையைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்வயம்பாகமே உதவி செய்கிறது.

இப்படி பல விதத்தில் நன்மை ஏற்படுகிறது.

‘மேல்ஜாதி – கீழ்ஜாதி; என்ன ஜாதியார் யார் சமைத்ததைச் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது’ என்கிற பேச்சுக்கும் இடமில்லாமல் ஆகிவிடும். எந்த ஜாதிக்காரனானாலும் அவனுவனும் தன் கையாலேயே பொங்கிப் போட்டுக் கொள்வது; சொந்த மநுஷ்யாள், பத்தினியோ மாதாவோ சமைத்தால்கூட சாப்பிடுவதில்லை என்று நியமம் வைத்துக்கொண்டு விட்ட பின் மற்றவர்களில் யார் பண்ணிப் போட்டால் சாப்பிடலாம் அல்லது சாப்பிடக்கூடாது என்ற கேள்விக்கே இடமில்லையோல்லியோ?


* கீதை 4.24. இச் சுலோகத்தில் ஸ்ரீபெரியவர்கள் கூறாமல் விட்ட கடைசிப் பாதம் “ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா” என்பதாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸ்வயம்பாகம்:புதுப்பாட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உடன் உண்பவர்கள்
Next