நிறைவு பெறுவோம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.

வியாதிக்கு மருந்து மாதிரி பசிக்குச் சாப்பாடு ரொம்பவும் அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக்கொள்ளத்தான் ஆஹாரமே தவிர ருசியைத் தீர்த்துக்கொள்ள அல்ல என்று ஆசார்யாள் சொல்லியிருப்பதாகச் சொன்னேன். மற்ற வியாதிகளுக்கும் இந்த ‘க்ஷுத் வியாதி’க்கும் ஒரு வித்யாஸம், தலைவலிக்கு மருந்து போட்டால் அது போய் விடுகிறது; மறுபடி என்றைக்கோ ஒரு நாள்தான் வருகிறது. ஜ்வரமும் இப்படித்தான். ஆனால் இந்தப் பசி வியாதி மட்டும் இப்போது மருந்து போட்டு ஸ்வஸ்தப்படுத்தி விட்டாலும், வேளை தப்பாமல் மறுபடி மறுபடி ‘அட்டென்டன்ஸ்’ கொடுத்துக்கொண்டேயிருக்கிறது! இப்படி இயற்கையை ஏவிவிட்டு ஈச்வரன் வேடிக்கை பார்க்கிறான். நமக்குப் பரீக்ஷை வைக்கிறான். நாம் பாஸ் பண்ணினால்தான் பெருமை. அவனுடைய அருள் துணையை நம்பி, நாம் ஸங்கல்பம் பண்ணிக்கொண்டு உறுதியாயிருந்தால், அவன் கைகொடுத்துப் பாஸ் பண்ண வைத்து, நல்லாரோக்யம், நல்ல ஆத்மாபிவிருத்தி முதலான ப்ரைஸ்களையும் கொடுப்பான்.

நம்முடைய த்ருட சித்தம் முக்யம். எங்கேயோ ஒரு இடத்துக்குப் போகிறோம். அவர்கள் விலக்கப்பட்ட பதார்த்தம் எதையோ உபசாரம் பண்ணிச் சாப்பிடச் சொல்கிறார்கள். அந்த ஸமயத்தில் தாக்ஷிண்யத்தாலோ, அவர்கள் தப்பாக நினைக்கப் போகிறார்களே என்றோ அதைச் சாப்பிட்டுவிடக் கூடாது. ப்ரின்ஸிபிளை விடக் கூடாது.

பெங்காலில் விதவைகள் எத்தனை கடுமையாக ஏகாதசி வ்ரதாநுஷ்டானம் பண்ணுகிறார்கள் என்பதைப் பார்த்து அதை நாமும் கொஞ்சமாவது ‘எமுலேட்’ பண்ண முயலவேண்டும். பெங்கால்காரர்கள் மத்ஸ்ய ப்ராம்மணர்கள்தான்; ஆனால் விதவைகளை அந்த ஸாமானைத் தொடமாட்டார்கள். அதோடு ஏகாதசியை அவர்களே மற்ற எவரையும் விடத் தீவிரப் பற்றுடன் அநுஷ்டிக்கிறார்கள். வாயில் சொட்டுப் பச்சைத் தண்ணி கூட விடாமல் அன்று வ்ரதமிருக்கிறார்கள். அங்கே கோடையில் கோட்டையடுப்பு மாதிரி ஊர் முழுக்க நெருப்புக் காற்று அடிக்கிற போதுகூட, வாய் அப்படியே உலர்ந்து வறண்டு ஒட்டிக் கொண்டாலும் அந்த விதந்துக்கள் சொட்டுத் தீர்த்தங்கூட விட்டுக் கொள்வதில்லை என்று பிடிவாதமாயிருப்பது வழக்கம். இதில் உஷ்ணம் தாங்காமல் அநேகம் பேர் செத்தே போனார்கள். இந்த மாதிரி விடக்கூடாது என்று பண்டிதர்களையெல்லாம் கூட்டி ஒரு ஸதஸ் நடத்தி சாஸ்த்ர ப்ரகாரமே கடுமையான உபவாஸ விதியைக் கொஞ்சம் இளக்கித் தர வழி இருக்கிறதா என்று பார்க்க முடிவு செய்தார்கள். ‘மிஞ்சிப் போனால் ஏதாவது பானம், கீனம் பண்ணாலமென்று சாஸ்திரத்திலேயே இருந்தால்கூட நாங்கள் அன்று வாயில் எதையும் விட்டுக்கொண்டு முழுங்க மாட்டோம்; செத்தாலும் சாவோம்’ என்று அந்த விதவைகள் சொல்லிவிட்டார்களாம். இதன்மேல் அந்தப் பண்டிதர்கள் சாஸ்திரங்களைப் பார்த்து, ‘ஸரி, ஏகாதசியன்று வாயில் தீர்த்தம் விட்டுக்கொள்ள வேண்டாம்; காதில் விட்டுக் கொள்ளட்டும். அதனால் பிழைக்கிறவர் பிழைக்கட்டும்’ என்று தீர்மானம் செய்தார்களாம். அத்தனை கடுமையான அநுஷ்டானம் அங்கே இருந்திருக்கிறது.

நாக்கை அடக்க முடியவில்லை என்று விடவே கூடாது. ஆப்பிளைச் சாப்பிட்டுத்தான் ஆடம் அடிமட்டத்துக்கு விழுந்துவிட்டான் என்கிறார்கள். Forbidden fruit மாதிரி நம் சாஸ்திரப்படி forbidden food எதையுமே சாப்பிடக் கூடாது. மீறினால் அது நம்மைக் கீழேதான் இறக்கும். இம்மாதிரி ஒரு ‘டெம்ப்டேஷன்’ உண்டாகிற சமயங்களில், ‘இப்போது இது உசந்த ருசி என்று சாப்பிட்டாலும், சாப்பிடுகிற இந்த ஐந்து, பத்து நிமிஷங்களுக்கு அப்புறம் ருசி நாக்கில் நிற்கிறதா என்ன? இது உசந்த பதார்த்தம் என்று சாப்பிட்டாலும் இது என்ன சாச்வதமாக வயிற்றிலே இருந்துகொண்டு மறுபடி பசிக்காமலே பண்ணப் போகிறதா என்ன?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு, கண்ட்ரோல் பண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு நல்லறிவு உண்டாவதற்கு மறுபடியும் பகவானையேதான் வேண்டிக் கொள்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஏகாதசிகளின் பெயர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வாய் வேலை குறைய
Next