ஈஸ்வர சிந்தனை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இது இரண்டுக்கும் நடுவே ஈச்வரனைக் கொண்டு வந்து விட்டேன். மனஸ் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு காலியாகிறபோது இப்படி ஈச்வர ஸ்மரணம் என்பதாகச் செய்வது மறுபடி எண்ணங்களை உண்டாக்கிக் கொள்வதுதானே?’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்து, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? பூர்ணத்வம், நித்ய ஸுகாநுபவம் வராவிட்டால் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த மனஸின் கன்னா பின்னா இழுப்பும், கெட்ட நினைப்புகளும் உண்டாக இடங்கொடுக்காமலிருந்தாலே போதும்’என்று தோன்றலாம்.

ஓரளவுக்கு மைன்ட் ஸ்டெடியாகி, நினைப்பில்லாமலிருக்கிற பக்குவம் பெற்றபின் அப்பியஸிக்க வேண்டிய ஈச்வர ஸ்மரணையைப் பற்றி இப்படிக் கவலைப்படவே வேண்டாம். அந்த ஸ்டேஜுக்கு அப்புறம் மனஸ் கெட்ட எண்ணங்களில் போகவே போகாது. ஒரு ஜீவன் ரொம்பவும் பிரயத்தனப்பட்டு எண்ணங்களை நிறுத்தித் தன்னிடம் மனஸைக் கொடுத்தபின் ஈச்வரன் அவனைக் கெட்டுப் போகும்படி விடமாட்டான். ஈச்வர பக்தியும் பிரேமையுங்கூட மனஸின் காரியந்தான் என்றாலும் இதற்கப்புறம் ஒருநாளும் மனஸ் கெட்டதற்குப் போகாது; தன்னை அடியோடு கரைத்துக் கொள்கிற மௌனத்துக்கே போகும்.

துஷ்டர்களால் நமக்கு வழியில் ஆபத்து உண்டாகிறதென்று போலீஸ்காரனைக் கூப்பிடுகிறோம். அந்தப் போலீஸ்காரன் துஷ்டனை விரட்டிவிட்டு நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றியபின் நம்மையும் பயமுறுத்திக் தண்டிப்பானா என்ன? அல்லது தானும் நம்மோடோயே வீட்டுக்குள் வந்து இருந்து விடுவானா? நம்மை ஆபத்திலிருந்து ரக்ஷித்து வீட்டில் சேர்த்தபின் அவன் போய்விடுவான் அல்லவா? இம்மாதிரிதான் கெட்ட எண்ணம் போக ஈச்வரனை எண்ணுகிறோம். இந்த ஸ்மரணையாவது கெட்டதை விரட்டிவிட்டு, நம்மை அறம், பொருள் இன்பம், வீடு என்பதில் ‘வீடு’ என்கிறார்களே அதில் சேர்த்துவிட்டுத் தானும் போய்விடும். மனஸை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கும் பக்தி மனஸ் அற்றுப் போகும் ஞானத்தில் கொண்டு விட்டுவிடும்.

ஸஜ்ஜனங்களின் கூட்டுறவும் இப்படித்தான் எல்லா உறவும் அற்றுப்போகிற நிலைக்குக் கொண்டு விட்டு விடும். ஒரு விதமான பற்றும் இல்லாமலிருக்க வேண்டும் என்றால் அது உடனே ஸாத்யமாயில்லை. அதனால் கெட்ட ஸஹவாஸத்தை விட்டு ஸத்ஸங்கம் சேரவேண்டும். இதுவும் உறவுதான். ஆனால் ஒரு பழம் நன்றாகக் கனிந்தபின் தானாக இற்று விழுந்து விடுகிறமாதிரி , இது ஒருநாள் முடிந்துவிடும். இதைவிட உயர்ந்த ஏகாந்த அநுபவத்தில் சேர்த்துவிடும். ” ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் ” என்று ஆசார்யாள் (‘பஜகோவிந்த’த்தில்) சொல்கிறார்.

இப்படியே God-thoughtலிருந்து no-thought உண்டாகும். ஆனால் இது முதலிலிருந்த சூன்ய no-thought இல்லை;பரிபூர்ண ஸ்திதி; ‘தாட் ‘எழுப்புகிறதற்கு இடமேயில்லாமல் ஞானம் பூர்ணமாக ரொம்பிய நிலை.

‘ஸத்ஸங்கம்’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் சொல்லலாம். ஸத்வஸ்து என்பது எக்காலும் மெய்ப் பொருளாயிருக்கும் ஆத்மா ஒன்றுதான். தேஹாத்ம புத்தியை நீக்கி அந்த ‘ஸத்’ தான நிஜ ஆத்மாவில் சேர்வதுதான் ‘ஸத்ஸங்கம்’. ஸத்புருஷர்களின் ஸங்கத்தினால் ஏற்படும் நிஸ்ஸங்கத்வம் கடைசியில் இந்தப் பெரிய ‘ஸத்’தின் ஸங்கத்தைத்தான் உண்டாக்கித் தரவேண்டும். அப்போது “நான், நான்”என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பது எதுவோ, நம்முடைய இத்தனை உபத்ரவங்களுக்கும் காரணம் எதுவோ, அது ஏக பரமாத்ம ஞானத்தில் அடிபட்டுப் போய், அந்த ஞான வஸ்துவின் பூர்ணானந்த ரூபமாகவே நாம் ஆகிவிடலாம. அது வேறே, நாம் வேறே என்று நினைக்கிறவரை ‘நான்’, ‘எனது’ என்கிற எண்ணங்கள் (அஹங்கார-மமகாரங்கள் என்பவை) இருந்து கொண்டேதான் இருக்கும். முதலில் ஸத்வஸ்துவை ஈச்வரன் என்று வேறேயாக வைத்தே அவன் கையில் இந்த அஹங்கார மமகார ‘நானை’ப் பிடித்துக் கொடுத்தால் இது உபத்ரவம் பண்ணுவதை விட்டுவிடும். அப்புறம் அவன் வேறேயாக இருக்க வேண்டாம் என்று இதைத் தானாகவே உயர்த்தி, உணர்த்திக் காட்டி விடுவான்.

அதனால் ஒன்றையும் நினைக்காமல் மௌனமாயிருப்பதென்று முதலில் வாயின் மௌத்துடன் ஈச்வர ஸ்மரணை பண்ணுவதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். பரமாத்மாவை நம்முடைய இஷ்ட தேவதை எதுவோ அதுவாக பாவித்து இப்படி ஸ்மரிக்க வேண்டும். ஸாக்த் பராசக்தியாகவோ, உமாமஹேச்வரனாகவோ, லக்ஷ்மி நாராயணனாகவோ பாவித்து மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். அதற்கப்புறம் இந்த நினைப்பும் போவது அந்தப் பராசக்தியின் அநுக்ரஹத்தால் நடக்க வேண்டியபோது நடக்கட்டும். மௌனமாக ஈச்வர ஸ்வரூப த்யானமும், மனஸுக்குள்ளேயே நாம ஜபமும்தான் நாம் செய்ய வேண்டியது.

கண்டதை நினைத்துக் கொண்டிருப்பதிலிருந்து நேரே இப்படி ஈச்வர நினைப்புக்குப் போனாலும் போகலாம். அல்லது எந்த நினைப்பும் வராமலிருக்கும் படியாகக் கொஞ்சம் பழகிக் கொண்டுவிட்டு, அப்புறம் அது வெறும் ஜடஸ்திதியாக நின்று விடாமலிருப்பதற்காக அந்த கட்டத்தில் ஈச்வர பரமாக நினைக்க ஆரம்பிக்கலாம். இந்த கட்டத்தில் அது கொஞ்சம் பலமாகவே ஈச்வரனிடம் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சிந்தனையை நிறுத்துவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஸமூஹ நலனுக்கும் உதவுவது
Next