பலவித வரவு-செலவுகளில் கணக்கு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

கல்வியில் கணக்குக்கு எவ்வளவு முக்யத்வம் தந்திருக்கிறோம்? வாழ்க்கையிலும் தரவேண்டும். இப்போது ரூபாய்க் கணக்கு மட்டும்தான் முக்யமாயிருக்கிறது. எல்லா ஆபிஸிலும் அக்கவுன்ட் ஸெக்ஷன், அது தவிர அக்கவுன்டன்ட்-ஜெனரல் ஆபீஸ்கள் என்றே நிறைய இருக்கின்றன. பழைய காலத்திலிருந்து இப்படி ராஜாங்க ரீதாயாக வரவு செல்வுகளைக் கணக்குப் பார்க்கும் ஏற்பாடு இருந்து வந்திருக்கிறது. ‘பெருங்கணக்கு’ என்று பழைய நாளில் ஒரு உத்யோகஸ்தர் – அவர்தான் இந்நாளில் அக்கவுன்டன்ட்-ஜெனரல் என்கிறவர். இது உச்சத்திலுள்ள உத்யோகம். அடிநிலையில் இருந்தது, ‘பெருங் கணக்கு’ என்ற மாதிரி ‘சிறுகணக்கு’ இல்லை; இந்ச் சின்ன உத்யோகத்துக்குத்தான் ‘கணக்குப்பிள்ளை’ என்று பெயர். ‘பிள்ளை’ என்பது இங்கே ‘சிறிய’, ‘சின்னது’ என்பதைக் குறிக்கும்; பிள்ளை ஜாதி இல்லை. தென்னம்பிள்ளை, அணிற் பிள்ளை என்றெல்லாம் சொல்கிறபோது ‘பிள்ளை’ என்பது சின்னதைத் தானே குறிக்கும்? அப்படியே கணக்குப்பிள்ளை என்கிறவர் ராஜாங்க வரவு-செலவு பார்ப்பவர்களில் சிறிய ஊழியர். ஆனால் அவருக்கு எல்லா நுணுக்கமும் தெரிந்திருக்கும். அதனால்தான் முன்னெல்லாம் ஜில்லா கலெக்டராக ட்ரெயினிங் பண்ணுகிறவன் கூடக் கணக்குப் பிள்ளையிடம்தான் வேலை கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டுமென்று வைத்திருந்தார்கள்.

‘இப்போது இதெல்லாமே பேப்பரில் (வரவுக்குச் செலவு) ஸரிகட்டுவதாகக் காட்டிவிட்டால் போதமென்று ஆகிவிட்டது; ஃபைனான்ஸ் மினிஸ்டரைப் பார்த்தால், அப்படி ஸரிகட்டாவிட்டால்கூடப் பரவாயில்லை; டெஃபிஸிட் ஃபைனான்ஸிங், (ரூபாய்) நோட்டுப் போட்டும், ஊரெல்லாம் உலகமெல்லாம் கடன் வாங்கியும் ஸரிக்கட்டினதாகக் காட்டினால் போதும் என்றாகி விட்டது’என்று சொல்லிக்கொள்கிறார்கள். மொத்தத்தில் இப்போது நவீன முறை என்று சொல்லி, கணக்கில்லாமல் ஆசைகளையும் தேவகளையும் பெருக்கி, அதற்காகச் செலவையும் பெருக்கி, மக்களையெல்லாம் கடனாளிகளாகவும், நிம்மதியில்லாதவர்களாகவும் செய்திருப்பதாகவே தெரிகிறது.

தேவை, வரவு, செலவு எல்லாவற்றிலுமே இப்படியில்லாமல், நாம் அவற்றை ஒரு கணக்குக்குக் கீழே கொண்டுவரவேண்டும்.

வரவு-செலவு என்பது பணம் ஒன்றில் மட்டுமில்லை. எல்லாவற்றிலும் உண்டு. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் எதிராளியிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறோமே இதுகூட வரவு-செலவுதான். நாம் வாயால் விட்டது செலவு; வாங்கி கட்டிக்கொண்டது வரவு! நாம் அனவரதமும், தூங்கும்போதுகூடப் பண்ணுகிற காரியம் என்ன? மூச்சுவிடுவது. அதுகூட வரவு செலவுதான்!காற்றை உள்ளே வாங்கிக்கொண்டு வெளியே விடுவது வரவும் செலவுந்தான்! அதில் கூடக் கணக்கு வேண்டுமென்றுதான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், ஸோஹம் த்யானமென்று பல யோகங்களை வைத்திருப்பது. புசுக் புசுக்கென்று வேகமாக ச்வாஸித்தால் ஆயுசும் குறையும்; ஆத்மா சுத்தப்பட்டு சாந்த நிலைக்கு வருவதற்கான நாடி சமனமும் ஏற்படாது. அதனால் மூச்சுக்கூடக் கணக்காக விடணும் என்று வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 21,600 ச்வாஸமே விடணும் என்று கணக்கு. அதாவது ஒரு ச்வாஸத்துக்கு நாலு ஸெகன்ட் ஆகவேண்டும். நாம் அவசரமாகக் காரியம் செய்யும் போதும், கோபதாபத்திலும் காமம் முதலான உணர்ச்சி வேகங்களிலும், புஸ் புஸ்ஸென்று ஒரு ஸெகன்ட், இரண்டு ஸெகன்டிலேயே ஒரு ச்வாஸம் முடிந்துவிடும். அதற்காகத் தான், ஈடுகட்ட இன்னொரு எக்ஸ்ட்ரீமில் ரொம்ப நேரம் தீர்க்கமாக மூச்சையிழுத்து அடக்கி வைத்து, நிதானமாக விட்டுப் பிராணாயாமம் பண்ணச் சொல்லியிருப்பது. ஆக இந்த சரீரத்துக்கான ஆயுஸ், சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மாவின் நிறைந்த ஸமநிலையான ஸமாதிநிலை இரண்டுமே மூச்சு ஒரு கணக்காயிருப்பதில்தான் அடங்கியிருக்கிறதென்று தெரிகிறது.

வெளியில் காட்டுகிற அக்கவுன்டஸில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு ஸரிகட்டினதாகக் காட்டி விடலாம். ஆனால் “நமக்கு நாமே accountable -ஆக இருக்க வேண்டும்” என்கிறார்களே, அதில் எந்த தகிடுதத்தமும் செய்து ஜயிக்க முடியாது!நாம் செய்கிற அத்தனையையும் கர்ம ஸாக்ஷியாக ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்!அவனை ஏமாற்றவே முடியாது! பண்ணிய பாபத்துக்கெல்லாம் ஈடாக எதிர்த் தட்டில் புண்ய கர்மங்களை ஏற்றியாக வேண்டும். அந்தக் கணக்குப் புஸ்தகம் அவன் கையில் இருக்கிறது. நாம் நல்லது செய்வதில் கணக்கு வழக்கில்லாமலிருந்தால்தான் அவன் பாலன்ஸ்-ஷீட்டை ஸரி செய்ய முடியும். இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் புண்யம் பண்ணுவதற்கு மனநெறி முதலில் ஏற்பட வேண்டும். அது ஏற்படுவதுற்கு நம்முடைய பேச்சு, எண்ணம், நமக்கென்று பண்ணிக்கொள்ளும் காரியம், சொந்தச் செலவு. சாப்பாடு, ட்ரெஸ் எல்லாவற்றிலும் கணக்காயிருந்தால்தான் முடியும். இவை யாவற்றிலும் நாம் கணக்காயிருப்பது சாச்வத ‘லாப’ த்தை உத்தேசித்தே என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது நம் பர்ஸுக்குள் இருப்பதன் லாப நஷ்டத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் நாம் இனிமேலாவது புண்ய லாபம் – பாப நஷ்டம் பற்றி நினைத்து, அந்தக் கணக்குப் புஸ்தகம் ஸரி கட்டுவதற்கானவற்றைச் செய்ய வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அளவறிந்து செய்தல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அபரிக்ரஹம்
Next