தர்மயுத்தம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

தர்ம ரக்ஷைக்காகவே இப்படிப் பல தினுஸில் சரீரத்தைக் கொண்டும், ஆயுதத்தைக் கொண்டும் தன்னுடைய சரீரத்தையும், தன் நாட்டு மக்களின் சரீரத்தையும் ரக்ஷித்துக் கொள்வதற்கு தநுர்வேதம் வழி சொல்லிக் கொடுக்கிறது.

எந்தப் போர் முறையானாலும் இன்னின்ன ஒழுங்கு முறைகளின்படிச் செய்ய வேண்டும் என்று அதற்கு வ்யவஸ்தை பண்ணி ‘தர்ம யுத்தம்’ என்று வைத்திருக்கிறது. இதிலே பெரிய தர்மம், ‘ஸேனைக்கும் ஸேனைக்கும்தான் சண்டை, யுத்த பூமியிலேதான் அந்த சண்டை நடக்க வேண்டும், மற்றப் பொது ஜனங்கள் எவரையும் தாக்கப்படாது, நாடு நகரங்களை பாதிக்கப்படாது’ என்று வைத்ததுதான். தற்காலத்திலோ ஸிவிலியன் பாபுலேஷன், குழந்தைகள், ஸ்திரீகள் எவரானாலும் க்ரூரமாகக் கொன்று குவிக்கிற விமானப் படையெடுப்பும், குண்டு போடுவதுந்தான் போர்முறை என்றாயிருக்கிறது.

அத்து மீறிப் பண்ணினவர்கள்தான் முற்காலங்களில் நாடு நகரத்தில் புகுந்து நாசம் பண்ணியும், தீ வைத்தும், ஜலாசயங்களில் (நீர் நிலைகளில்) விஷம் கலந்தும், ஸ்திரீகளை மானபங்கம் செய்தும் யுத்தம் செய்தது. இவர்கள் ரொம்பவும் குறைச்சலே. துருக்கர்கள், முதலான அந்நிய தேசத்தவர்கள் இந்த மாதிரி முறைகெட்ட கார்யங்களைச் செய்ய ஆரம்பித்த பின்தான் இங்கே இவை சற்றுப் பரவின. அவர்கள் இப்படி அக்ரமம் பண்ணின போதுகூட சிவாஜி முதலான ஹிந்து ராஜாக்கள் சத்ருக்களைச் சேர்ந்த ஸ்திரீகளுக்குக் கெடுதல் பண்ணாமல், காப்பாகப் பல்லக்கிலே ஏற்றிப் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைத்துருக்கிறார்கள்.

பாபங்களிலும் பிராயச்சித்தமேயில்லாத சில மஹா பாபங்களுண்டு. இவற்றைப் பண்ணினவர்களுக்கு ‘ஆததாயி’ என்றுபேர். தர்ம யுத்தமாக சரீர-ஆயுத பலங்களை மட்டும் காட்டி ஜயிக்காமல் நெருப்பு வைக்கிறவன், விஷம் வைக்கிறவன், நிராயுதபாணியாக இருப்பவனை ஆயுதத்தால் கொல்பவன், கொள்ளையடிக்கிறவன், நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறவன், பரஸ்திரீயை அபஹரிக்கிறவன் ஆகியவர்களை ஆததாயிக்களின் லிஸ்டிலேயே சேர்த்திருக்கிறது. இதிலிருந்தே தர்ம வியவஸ்தை நம் யுத்த முறையை எப்படிக் கட்டுப்படுத்தியிருக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம்.

முன்னேயே இன்னார்தான் இன்னாருடன் யுத்தம் செய்யலாம் என்ற கட்டுப்பாட்டைச் சொன்னேன். ஸம பலமுள்ளவர்களே யுத்தம் செய்துகொள்ள வேண்டும். சரணாகதி பண்ணுகிறவனை அடிக்கக் கூடாது. பயங்காளியை விட்டுவிடணும். ஒரு font-ல் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தேவையின்போது சேர்ந்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறவன் (stand-by) திடீரென்று புகுந்து ஒருத்தனை தாக்கக்கூடாது. ரொம்ப முடியாமல் சத்ரு கொஞ்சம் ச்ரம பரிஹாரம் செய்து கொள்கிறேனென்றால் அவனுக்கு அநுமதி தரவேண்டும். ‘தீர்த்தம் குடிக்கிறேன்; கவசத்தை ஸரி செய்து கொள்கிறேன்;குதிரையை மாற்றிக் கொள்கிறேன்; புதுசாக ஆயுதம் கொண்டுவரச் செய்கிறேன்’ என்றெல்லாம் சத்ரு சொல்லும்போது, அவன் அப்படிச் செய்கிறவரையில் தாக்கக் கூடாது. ஆயுதம் இழந்தவன், கவசம் உடைந்தவன் கவனக் குறைவாய் இருப்பவன், புறமுதுகு காட்டி ஓடுகிறவன் முதலியவர்களை ஒருபோதும் அடிக்கக் கூடாது. சாரணர்கள் என்று ஒற்றர்கள், வேவுகாரர்கள் இருப்பார்கள்; ஸமாசாரம் கொண்டு வரும் தூதர்கள் இருப்பார்கள்; ஆயுதங்களைக் கொண்டுவந்து தருவதற்காகச் சிலபேர் இருப்பார்கள் உத்ஸாஹமூட்டுவதற்காக சங்கம், பேரி முதலான வாத்யங்களை வாசிப்பவர்கள் இருப்பார்கள். இவர்களையெல்லாம் தப்பித் தவறியும் தாக்கிவிடக் கூடாது. ராவணனுடைய சாரணர்கள், தூதர்கள் ஆகியவர்களை வானரங்கள் ஹிம்ஸிக்காதபடி ராமர் யுத்த தர்மத்தை அவர்களுக்குச் சொன்னதாக ராமாயணத்தில் இருக்கிறது.

யுத்த பூமியில்தான் சண்டையே தவிர, யுத்தம் முடிந்து திரும்பிப் பாசறைக்கும் போகிறபோது இரண்டு தரப்புக்காரர்களும் அன்போடுதான் பழக வேண்டுமென்று கூடச் சொல்வார்கள்.

இப்போது ஒரே அதர்ம யுத்தந்தான் Chemical Warfare என்று ஜலத்திலும் அட்மாஸ்ஃபியரிலும் விஷத்தைச் சேர்ப்பது, scorch-earth என்று நிலத்தை சாகுபடிக்குப் பிரயோஜனமில்லாமல் எரித்துவிடுவது எல்லாமே ஸஹஜமாகச் செய்யப்படுகின்றன.

நமக்கு அர்த்தம், காமம் எல்லாமே அநுமதிக்கப்பட்டிருந்தாலும் தர்மம், மோக்ஷம் என்ற இரண்டாலும் இவற்றுக்கு இரண்டு பக்கமும் வரம்பு கட்டி தர்ம-அதர்ம-காம-மோக்ஷம் என்று வைத்துவிட்டதால் யுத்தம் உள்பட எல்லாமே அததுவும் லக்ஷ்யமாய் விடாமல், தர்ம வாழ்க்கை, வீட்டுப் பேறு என்ற லக்ஷ்யங்களுக்கு அநுகூலம் செய்யும் ஸாதனங்களாகவே ஒழுங்கு செய்யப்பட்டன. இப்படி தர்மத்தோடு இசைந்து செய்யும்படியாகவே ரிஷிகள் அமைத்துத் தந்த போர்க் கலைதான் தநுர்வேதம். பாரத யுத்தத்தின்போது, ஸந்த்யா வந்தனத்தில் அர்க்யம் தருகிற வேளை தப்பிப் போகிறதேயென்று ஸேநா வீரர்கள், ஜலத்தைத் தேடிக்கொண்டு போக அவகாசமில்லாததால் புழுதியையே எடுத்து அர்க்யம் தந்தார்கள் என்று வியாஸர் சொல்வதிலிருந்தே யுத்தம் எப்படி தர்மாசாரங்களோடு சேர்ந்திருந்தது என்று தெரிகிறது.

தமிழிலே அர்த்த புஷ்டியுடன் ‘மறக் கருணை’ என்று சொல்வார்கள். லோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும் என்ற உசந்த லக்ஷ்யத்துக்காவே கடுமையாக நடந்து கொள்வதுதான் மறக் கருணை. இந்த அடிப்படையில் அநுஷ்டிக்க வேண்டியதே தநுர்வேதம்.


Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மல்யுத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உபயோகமில்லாதவன் உபயோகம்
Next