பெயர்க் காரணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘காந்தர்வ வேதம்’ என்று ஏன் பெயர் என்றால் கந்தவர்கள்தான் உத்ஸாஹம் கொடுக்கும் விஷயங்களிலேயே பொழுதைப் போக்கிக் கொண்டு, ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறவர்கள். நம் கண்ணுக்குத் தெரியாத அநேக தேவ, அஸுர ஜாதிகளுக்குள் தேவஜாதிகளில் ஒன்றாக கந்தர்வர்கள் இருக்கிறார்கள். நம் கண்ணுக்குத் தெரியாமல் மைக்ராஸ்கோப்புக்குத் தெரிகிற சின்னஞ்சிறிய க்ருமிகள் பல இருக்கின்றன. மைக்ராஸ்கோப்புக்கும் தெரியாமல் எலெக்ட்ரிஸிடி இருக்கிறது. நம் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளேயிருப்பதெல்லாம் எக்ஸ் ரேயில் தெரிகிறது. அதீந்த்ரிய த்ருஷ்டி, திவ்ய சக்ஷுஸ், ஞானப்பார்வை என்றெல்லாம் சொல்கிற உயர்ந்த பார்வையை உடைய ரிஷிகளுக்கும், யோகிகளுக்கும், ஸித்தர்களுக்கும் நம் கண், மைக்ராஸ்கோப், எக்ஸ்-ரே ஆகிய எதற்கும் தெரியாத கந்தர்வாதி ஜாதிகள் புலனாவார்கள்.

சித்ரங்களில் கந்தர்வர்களைப் போடும்போது அவர்கள் வீணாகானம் பண்ணிக்கொண்டும், புஷ்பம் சொரிந்து கொண்டும் உத்ஸாஹமாயிருக்கிற பிறவிகளாகச் சித்தரித்திருக்கும். இந்திரிய ஸெளக்யங்களைத் தரும் விஷங்களுக்கு கந்தர்வர்களையே அதிஷ்டான தேவதைகளாகச் சொல்லியிருக்கிறது. ஆனதால் இப்படிப்பட்ட இன்பத்தைத் தருகிற சித்ரக் கலை, கவித்வம், பல பாஷா ஞானம், செஸ் மாதிரி வீட்டுக்குள்ளே விளையாடுகிற விளையாட்டு (in-door games), பந்து பாட்மின்டன் மாதிரி வெளியிலே ஆடுகிறவை (out-door games), நாட்டிய நாடகங்களிலேயே ஒரு அம்சமான பொம்மலாட்டம், நிழலாட்டம், கரகாட்டம் இவை எல்லாவற்றையுங்கூட காந்தர்வ வேதத்தைச் சேர்ந்ததாகவே சொல்வதுண்டு.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸங்கீதம், நாட்டியம், நாடகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அறுபத்துநாலு கலைகள்
Next