புலன் வழியே புலனுக்கு அப்பால் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மந்த்ர சப்தங்களுக்கு எப்படிக் கண்டமாயிருந்து கொண்டே அகண்டத்தில் சேர்க்கிற சக்தியிருக்கிறதோ, அப்படியே ஸங்கீத சப்தங்களுக்கும் (சக்தி) இருக்கிறது. ஸ்வரஸ்தானம் ஒன்றை தீர்க்கமாக (கார்வையாக) ச்ருதி சேர நீட்டியோ, அல்லது கமகமாக நன்றாக இழைத்தோ மூர்ச்சனையின் உச்ச நிலையை ஸ்வச்சமாகத் தொட்டு விடுகிறபோது கண்டமே அகண்டாநுபவத்தில் சேர்த்து விடுகிறது.

இந்த அகண்டாநுபவம்தான் அத்தனை வேத, வேதாந்த, யோக, மந்திர, தந்திர சாஸ்திரங்களுக்கும் லக்ஷ்யமாயிருப்பது. இதை ஸாதித்துத் தரும் ஸ்தானத்தில் தான் ஓசையை, ஒலியை நாதப் பிரம்மம், சப்தப் பிரம்மம் என்று ஸாக்ஷாத் பரமாத்மாவாகச் சொல்வது. அதை goal -ஆக நினைத்து, அதாவது காது என்ற இந்திரியத்தின் மூலம் மனஸின் இந்திரிய ஸுகத்துக்காக இன்றி, ஆத்ம ஸெளக்யத்தை goal -ஆகக் கருதி ஸங்கீத அப்யாஸம் பண்ணும்போது அது ‘நாதோபாஸனை’, ‘நாத யோகம்’ என்ற உசந்த பெயரைப் பெறுகிறது.

அர்த்தத்தோடு, அக்ஷரத்தோடு கலந்து மனமுருகிப் பாடும்போது பாடுகிறவருக்கும் கேட்கிற ஸதஸ் முழுதற்கும் பரமாத்மாவிடம் தோய்ந்து நிற்கிற பெரியதான இன்பம் கிட்டுகிறது. ஜபம், தபம், அஷ்டாங்க யோகம், தியானம் முதலானவை இந்திரிய ஸம்பந்தமில்லாதவையாகவும் ஸுலபத்தில் அப்யஸிக்க முடியாதவையாகவும் இருப்பவை. ஆனால் அவற்றின் பலனான அதே ஈச்வராநுபவம் இந்திரியத்துக்கு ஸெளக்கியமளிப்பதாகவும், ஸுலப ஸாதகமாகவும் உள்ள ஸங்கீதத்தால் கிடைத்துவிடுகிறது.

இந்திரிய விஷயங்கள் போல இருப்பவற்றாலேயே இந்திரியத்துக்கு அப்பாற்பட்ட ஆத்மானந்தத்தை, ஈஸ்வர ஸாக்ஷாத்காரத்தை ஏற்படுத்தித் தருவது நம் மதத்தின் ஒரு சிறப்பு அம்சம். பூஜையில் செய்கிற பஞ்சோபசாரம் என்கிற கந்த, புஷ்ப, தூப, தீப, நைவேத்யங்கள் பஞ்சேந்திரிய ஸெளக்யத்தைத் தரக்கூடியவைகளால் ஆனதுதான். உபநிஷத்துக்களிலே பரமாத்மாவை ஓம்கார ஸ்வரூபமாக, ரஸ ஸ்வரூபமாக, ஜ்யோதி ஸ்வரூபமாகவெல்லாம் சொல்லியிருக்கிறது ஓம்காரம் கேட்கிற இந்திரியத்துக்கானது; ரஸம் ருசி பார்க்கிற இந்திரியக்கானது; ஜ்யோதிஸ பார்க்கிற இந்திரியத்துக்கானது. இந்திரிய ஸெளக்யங்களைச் சிற்றின்பம் என்கிறோமானாலும் பரமாத்ம ஸம்பந்தத்தோடு அநுபவிக்கும்போது இவையே பேரின்பம் தருகின்றன என்பதை உபநிஷத்துக்கள் பரமாத்மாவையே இன்பவடிவமாக,, ஆனந்த ஸ்வரூபமாகச் சொல்லும்போது நிலைநாட்டி விடுகின்றன. இந்திரிய நுகர்ச்சி வஸ்துக்களாகத் தோன்றுகிறவைகளிலும் ஈஸ்வர ஸாந்நித்யமிருப்பதை பகவானும் விபூதி யோகத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஈஸ்வரன் இல்லாத இடமில்லை என்றால், இவற்றிலும் அவனுடைய ஸாந்நித்யம் இருந்துதானே ஆகவேண்டும்? பகவான் தன் விபூதிகளைச் சொல்லும்போது, “ஜ்யோதிஸ்களில் நான் ஸூர்யன்” என்னும்போது ஒளியாக இருப்பதைச் சொல்லிக் கொள்கிறார். இங்கே உஷ்ணமும் அவர்தானென்றாகிறது. அவரே “மாஸத்தில் நான் மார்கழி” என்கிறபோது பனியாகவும் குளிராகவும் இருக்கிறார். தான் ரிதுக்களுக்குள் இயற்கை இன்பம், இந்த்ரிய ஸெளக்யம் முழுவதும் தரும் வஸந்தமாக இருப்பதாகச் சொல்கிறார். இங்கே ‘வஸந்தம்’ என்பதற்கு ‘குஸுமாகர’ என்ற பெயரை பகவான் சொல்கிறார். அதாவது ‘புஷ்பித்துக் குலுங்கச் செய்கிற ரிது’ என்கிறார். புஷ்பத்தைச் சொன்னதால் ஸ்பர்சானந்தம், நேத்ரானந்தம், க்ராணானந்தம் என்னும் மூக்கின் இன்பம் மூன்றையும் சொன்னதாகிவிடுகிறது. பூர்ணத்தை பின்னப்படுத்திப் பார்க்கும்போது நமக்கு எதெல்லாம் சிற்றின்பத்தை மாத்திரம் தந்து பேரின்பத்தைத் தடுக்கின்றனவோ அவற்றாலேயே ஈச்வர உபாஸனை செய்யும் போது அவை பூர்ணர்த்தில் நம்மைச் சேர்க்கும் பேரின்பத்துக்கு ஸாதனமாகும் என்பதே தாத்பரியம்.

சப்தமே பிரம்மம், ரூபமே பிரம்மம், ரஸமே பிரம்மம், கந்தமே பிரம்மம், ஸ்பரிசமே பிரம்மம் என்று இப்போதே நம்மால் முழுதும் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இதைக் கொஞ்சம் ஞாபகமாவது படுத்திக் கொண்டேயிருந்தால் ஒருநாள் பலன் தெரியாமல் போகாது. இவற்றிலே ஸங்கீதத்தில் மெய்மறந்து போய் துளித்துளியாவது சப்த ப்ரம்ம அநுபவத்தைப் பெறுவது மற்றதைவிட நமக்கே சற்று நன்றாகத் தெரிவதாயிருக்கிறது.

ஸங்கீத கலை என்பது கொஞ்சங்கூட கஷ்டமில்லாமல் மோக்ஷத்தையே வாங்கிக் கொடுக்கக் கூடியது. வீணா வாத்யம் ஒன்றை வைத்துக்கொண்டு ஸ்வரசுத்தியோடு கலந்து வாசித்து ஆனந்தமயமாக இருக்கக் கற்றுக்கொண்டு விட்டால் யோகம் பண்ண வேண்டாம், தபஸ் பண்ண வேண்டாம். ஸுலபமாக மோக்ஷத்தையே அடைந்து விடலாம். அதோடு யோகி யோகம் செய்தால், தபஸ்வி தபஸ் செய்தால் அவர்களுக்கு மட்டுமே ஆத்மானந்தம் உண்டாகிறது. ஸங்கீதம் ஒன்றில்தான், அதை அப்யஸிக்கிறவர் மட்டுமின்றி கேட்கிற எல்லோருக்குமே அதே அளவு ஆத்மானந்தம் உண்டாகிறது.

வாய்ப்பாட்டு, வீணை மாதிரி ஸ்வரங்களோடு சேர்ந்த ஸங்கீதம்தானென்பதில்லை; ம்ருதங்கம், ஜால்ராவில்கூட நல்ல லயசுத்தத்தோடு ஸுநாதம் கலந்து வந்து விட்டால் அது தெய்விக ஆனந்தத்தில் நம்மைச் செருகிவிடுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஒலி விஞ்ஞானத்தில் பூர்விகரின் ஞானம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வாத்திய, நாட்டிய வகைகள்
Next