தேச கௌரவத்தை உயர்த்தும் கலை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இந்த லக்ஷ்யம் நமக்கு எந்நாளும் மறந்து போகக் கூடாது. இப்போது வெளி தேசங்களிலெல்லாம் நம்முடைய ஸங்கீதமும் நாட்டியமும் பரவி வருகிறது. அங்கே யுனிவர்ஸிடிகளில் இவற்றைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய பெரிய உலக ஸ்தாபனங்களில் நம்முடைய ஸங்கீதக் கச்சேரி வைத்துப் புகழ்மாலை சூட்டுகிறார்கள். இதிலே நமக்கு ஒரு ஆறுதல். என்ன ஆறுதலென்றால், ஆதியில் நமக்கு லோகத்தில் எதனால் பெரிய கௌரவம் இருந்ததோ அந்தப் பாரமார்த்திகமான பெருமை இப்போது ரொம்பவும் எடுபட்டுப்போய், மற்ற தினுஸிலும் பெருமை இல்லாமல் எல்லா தேசங்களிடமும் நாம் கப்பரை நீட்டுவதாகவும், அதிலே போட்டு உபகரிப்பவர்களிடமும் நம் ஸ்தானத்துக்கு மீறி ‘உபதேசம்’ பண்ணி அவர்கள் நம்மை நன்றியில்லாதவர்கள் என்று மட்டமாய் நினைக்கும்படியாகவும் காரியங்கள் நடந்து வருகின்றன. இப்படியிருக்கிறபோது நம்முடைய ஸங்கீத, நாட்டியக்காரர்களை அவர்கள் ரொம்பவும் கொண்டாடி, ‘இந்தியாவில் உள்ள இந்தக் கலைகளைப் போல எங்கேயுமில்லை’என்று கற்றுக் கொள்வதற்கு முன்வருவதைப் பார்க்கும்போது, “நாம் பிக்ஷாபாத்ரம் நீட்டுபவர்களாக மட்டுமில்லாமல் அவர்களுக்குப் போடுபவர்களாக இருக்கிற கௌரவம் இது ஒன்றால் தானே நமக்குக் கிடைத்திருக்கிறது?” என்று ஆறுதல் ஏற்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நாட்டு-தொழில்-வாழ்க்கைப் பாடல்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  லக்ஷ்யம் மறக்கலாகாது
Next