உள்நாட்டு தண்டநீதி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆனாலும் சிக்ஷிப்பதை, அதாவது தண்டிப்பதை எடுத்த எடுப்பில் சொல்லியிருக்கவில்லை.

உள்நாட்டுப் பிரஜைகளை பொறுத்தமட்டில் ராஜா அவர்களை ஸன்மார்க்கத்தில் செலுத்துவதற்காக எதுவுமே பண்ணாமல் அவர்கள் தப்புப் பண்ணினால் மாத்திரம் தண்டிப்பது என்று வைத்துக்கொள்ளவில்லை. இந்த நாளில் அரசாட்சி முறைக்கும் பிரஜைகளின் நன்னெறிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நேர் ஸம்பந்தமில்லாதது போல அக்காலத்தில் இல்லை. ஜனங்கள் அவரவர் தர்மத்தை அநுஸரிப்பதற்கு ராஜா எல்லா விதத்திலும் ஊக்க, உத்ஸாஹங்களைக் கொடுத்து வந்தான். ஸத்துக்களைக் கொண்டு நிறைய தர்மப் பிரசாரம் செய்தான். அந்தந்த ஜாதி நாட்டாண்மை அதிலுள்ளவர்களை ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும்படியாகப் பண்ணினான். ஆலயத்தை ஸமூஹத்துக்கு மத்ய ஸ்தானமாக ஆக்கி, ஜனங்கள் ஈச்வர பக்தியால் தர்மிஷ்டர்களாக இருக்கும்படிப் பண்ணினான். இப்படி நேராக தர்ம ரக்ஷணை பண்ணினதாலேயே, அப்படியும் அவர்கள் கெட்டுப் போகிறபோது அவர்களை இந்த நாள் ‘ஸ்டான்டர்ட்’படிக் கடுமையாகவே சிக்ஷித்தான்.

குற்றவாளிகளிடம் கூடுதலாக தயா தாக்ஷிண்யம் காட்டுவது குற்றங்களுக்கு ஊக்கம் தருவதே ஆகும் என்பதுதான் சாஸ்திர அபிப்ராயம். இப்போதுதான் ‘பெர்ஸுவேஷன்’ என்பதால் நயமான முறையிலே அவர்களாக மனம் மாறித் திருந்தப் பண்ணணுமென்று நிறைப் பேசுகிறார்கள். ஸாதாரண மநுஷ்ய நேச்சர் இருக்கிற லக்ஷணத்தில் இப்படி எவராவது திருந்தினதாக இவர்களால் காட்ட முடியுமா என்பதே கேள்வி! ஜெயிலில் ஸெளகர்யமெல்லாம் பண்ணிக் கொடுப்பது என்றால், வெளியிலே வேலை வெட்டி இல்லாமல் திண்டாடுகிறவர்களுக்கு, ‘அங்கே (ஜெயிலுக்கு) போய் நாம் பாட்டுக்குத் தின்று கொண்டு, தூங்கிக்கொண்டு இருக்கலாமே!’ என்று தான் தோன்றும். தர்ம ரக்ஷணைக்கென்று டைரக்டாக ஸர்க்கார் எதுவும் செய்யாமல், அதே ஸமயத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்கும் தங்களுடைய கொள்கைகளுக்கும் ஸமூஹத்தில் முக்யத்வத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டதால் தர்ம பீடங்களின் செல்வாக்கும் தர்ம சாஸ்திரங்களின் அதாரிடியும் மங்கிப்போய் ஜனங்கள் தர்மத்துக்குப் பயப்பட வேண்டும் என்ற உணர்ச்சியை இப்போது ரொம்பவும் இழந்துவிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் குற்றம் செய்வது நாச்சுரல்தான் என்று வேண்டுமானால் இந்தக் காலக் குற்றவாளிகளை ரொம்பவும் தண்டிக்காமல் விடுவதற்கு நியாயம் சொல்லலாம்! ஆனால் முற்காலத்தில் பிரஜைகள் தர்மத்தை அநுஸரிப்பதற்கு ராஜாங்கம் ரொம்பவும் ஆதரவாயிருந்து, அதற்கானவற்றைப் பண்ணிக் கொடுத்த போதும் அவர்களில் சிலர் தப்பான வழியில் போனால் அங்கே தாக்ஷிண்யம் காட்ட இடமில்லைதானே? அதனால்தான் கடுமையான தண்டனைகளைச் சொல்லியிருக்கிறது. இப்படியிருந்ததால்தான் அப்போது மொத்த ஸமுதாயம் நல்லபடி இருந்தது; நல்ல ஜனங்கள் துஷ்டர்களினால் கஷ்டத்துக்கு ஆளாகாமல் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினார்கள்; மொத்தத்தில் நம் தேசம் லோகத்திலேயே நன்னெறிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என்பதைக் கவனித்தோமானால் ராஜதண்டம் சாஸ்திரப்படிதான் செயல்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வோம். மெகஸ்தனிஸிலிருந்து ஆரம்பித்து நம் தேச நிலைமையைப் பற்றி அவ்வப்போது இங்கே வந்து எழுதி வைத்திருக்கிற அயல் நாட்டவர்கள் எல்லோரும் ஒருமுகமாக இங்கே ஜன ஸமூஹத்தில் காணப்பட்ட ஒழுக்கத்தையும் நல்ல குணத்தையும் ஸ்தோத்திரிக்கிறார்களென்றால் அதற்கு ராஜசிக்ஷை முறையும் ஒரு காரணமாகும். இப்போது நம் ஜன ஸமுதாயம் எப்படி இருக்கிறது என்றும் நமக்குத் தெரியும். ஆனாலும் தண்டநீதி சாஸ்த்ரத்தைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

பெர்ஸுவேஷன் ஸாத்விகமாகத் திருத்துவது என்றெல்லாம் இக்காலத்தில் பேசினாலும், யுத்தம் வந்தால், அல்லது பொருளாதாரத்திலோ பொலிடிகலாகவோ நெருக்கடி வந்தால் அப்போது ‘எமர்ஜென்ஸி’ என்று பிரகடனம் செய்கிறபோது முதல் கார்யமாகத் தண்டனை விதிப்பதைத்தானே கடுமையாக்குகிறார்கள்? ஆக எடுத்துச் சொல்லித் திருத்துவதைவிட தண்டிப்பதுதான் தேசத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்பட உதவும் என்று ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது?

அநேக உயர்ந்த நோக்கங்களுக்காகவே தர்ம, அர்த்த சாஸ்திரக்காரர்கள் தண்டனையைக் கடுமையாக வைத்திருந்தார்கள். ஒன்று குற்றம் என்பது ஒருவனால் இன்னொருவனுக்கு அல்லது ஸமூஹத்துக்கே ஏதோ ஒரு விதத்தில் ஏற்படும் கஷ்டந்தானே? இப்படித் தான் கஷ்டத்தைக் கொடுத்தால் அப்போது ராஜா அதைவிடப் பெரிய கஷ்டத்தைத் தனக்குத் தண்டனையாகக் கொடுப்பானென்ற பயமிருந்தால்தான் ஒரு பிரஜை ஒழுங்காயிருப்பான். பத்து ரூபாய் திருடுவதால் ஒருத்தனுக்குத் தான் கொடுத்த கஷ்டத்துக்குப் பதிலாக நாலு மாஸம் ஜெயிலில் கஷ்டப்படணும் என்றால்தான் திருடமாட்டான். இரண்டாவது நோக்கம், கடுமையான தண்டனையானது குற்றம் பண்ணுகிற ஒருவன் இனிமேல் அப்படிப் பண்ணாமலிருக்கும்படி செய்வதோடு மற்றவர்களும் இவனைப் பார்த்து அந்த மாதிரிப் பண்ணாமலிருக்கச் செய்து ஒரு ஸமூஹ ரக்ஷையாகிறது. மூன்றாவது நோக்கம் ஆத்ம ஸம்பந்தமானது. அதாவது பாபம், பாப பரிஹாரம் என்ற விஷயங்கள் வந்து விடுகின்றன. குற்றம் பண்ணுவது பாபம், அது குற்றவாளியை நரகத்துக்குத் தள்ளும். என்னென்ன குற்றத்துக்கு நரகத்தில் என்னென்ன மஹா பயங்கரமான தண்டனைகள் என்று சாஸ்திர, புராணங்களில் விவரமாகச் சொல்லியிருக்கிறது. ராஜ தண்டனை பெறுவதனால் ஒரு குற்றவாளி இந்தப் பாபத்திலிருந்தும், நரகாவஸ்தையிலிருந்தும் விடுபடுகிறான். அந்த (நரக லோக) சித்ரவதையுடன் ‘கம்பேர்’ பண்ணினால் ராஜா தரும் தண்டனை ரொம்ப லேசானதுதான். இப்படி அரசன் தரும் சிக்ஷையே குற்றவாளிக்கு ஆத்ம க்ஷேமத்தைக் கொடுக்கும் பாபப் பிராயச்சித்தமாகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is முக்யமான இரு அரசக் கடமைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பிராம்மணனுக்குப் பக்ஷபாதமா
Next