வார்த்தை விளையாட்டு* : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நாம் தினந்தினமும் உபயோகப்படுத்துகிற வார்த்தைகளையே கவிகளும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனாலும் நம்முடைய பேச்சிலே கிடைக்காத அலாதியான நயம் அவர்களுடைய எழுத்திலே உண்டாகிவிடுகிறது. நவ ரஸங்களிலும், உயர்ந்த பக்தி பாவங்களிலும் உத்தமமான எண்ணங்களிலும் நம்மைக் கொண்டுபோய்ச் சொருகி ஆனந்தத்தை உண்டாக்குகிற சக்தி கவிகளுக்கு இருக்கிறது. அலங்காரம் (இதைத் தமிழில் அணி என்று சொல்வார்கள்; அப்படி அலங்காரம்) பண்ணினால் எப்படி ஸுமாராக இருக்கிற பெண் கூட அழகாக ஆகிவிடுகிறாளோ அதே மாதிரி இந்தக் கவிகள் நாம் ஸாதாரணமாக உப்புச் சப்பில்லாமல் உபயோகிக்கிற வார்த்தைகளையும் கருத்துக்களையும் தங்களுடைய சாதுர்யத்தால் அலங்காரம் பண்ணி அழகான கவிதைகளாக, காவியங்களாக ஆக்கிவிடுகிறார்கள். உவமை, உள்ளார்த்தம் த்வனிக்கச் சொல்லாமல் சொல்வது, இரண்டு அர்த்தத்தில் ச்லேஷை (சிலேடை) பண்ணுவது என்பதாகப் பல நகைகளைப் போட்டு, லளிதமான சப்தங்களை உடைய வார்த்தைகளால் தலை வாரி, புடவை கட்டி கவிதைக் கன்னிகையை நல்ல ஸெளந்தர்யவதியாகச் செய்துவிடுகிறார்கள்! அதனால் கவிதையை அழகுபடுத்தும் விதிகளைத் தரும் சாஸ்த்ரத்துக்கு ‘அலங்கார சாஸ்த்ரம்’ என்றே பெயர். தமிழிலும் உவமை அணி, சிலேடை அணி என்றெல்லாம் ‘அணி’ என்றே சொல்கிறோம்! தமிழில் உள்ள அணிநூலுக்கு “தண்டியலங்காரம்” என்றே பேர். தண்டி என்பவர் ஆயிரத்து இருநூறு வருஷத்துக்கு முந்தி காஞ்சீபுரத்தில் இருந்த ஸம்ஸ்கருதக் கவி;கவிதா சாஸ்த்ரத்தைப்பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் “காவ்யாதர்சம்” என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புஸ்தகத்தை base பண்ணி, பெரும்பாலும் அதையே தழுவி எண்ணூறு வருஷத்துக்கு முன்பு தமிழ் நாட்டில் ஒருவர் எழுதியதுதான் தண்டியலங்காரம்.

கவிகள் அழகுபடுத்துவதில் இரண்டு தினுஸு. அபிப்ராயங்களின் உயர்வினால், அவற்றை வெளியிடும் வார்த்தை நயத்தால் நம் நெஞ்சைத் தொடும்படி, உள்ளத்தை உருக்கும்படி கவிதை பண்ணி அதனால் படிக்கிறவனும் உத்தமமான உணர்ச்சிகளைப் பெறும்படியாகவும், உயர்ந்த கருத்துக்களைச் சிந்திக்கும்படியாகவும் செய்வது ஒன்று. இன்னொன்று வார்த்தைகளை, சப்தங்களை விசித்ரமாகவும் விநோதமாகவும் சொல்லி விளையாட்டுப் பண்ணி நாம் அதில் பிரமித்து, குதூஹலித்து, ஸந்தோஷப்படும்படி செய்வது. இதிலே மனஸை உருக்கும்படியாகவோ அறிவில் நமக்கு சாச்வதமாக உயர்வு தரும்படியாகவோ எதுவும் இருக்காது. ஆனாலும் ஒரு அபிப்ராயம் நம் மனஸில் நன்றாகப் பதிவதற்கு இது உதவுகிறது. அதோடுகூட, வார்த்தையை வைத்துக்கொண்டு கவிகள் என்ன வித்தை பண்ணியிருக்கிறார்கள் என்று பார்த்து ரஸிக்கிறபோது, அநேக வேடிக்கை வித்தைகளைப் பார்த்து நம்முடைய வாழ்க்கைக் கஷ்டங்களை மறந்து ஆனந்தப்படுவது போன்ற ஒரு இன்பம் ஏற்படுகிறது.

அதனால் மஹாகவிகளும்கூட அபூர்வமாக அங்கங்கே இப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகளை – Word Play என்றே இங்கிலீஷிலும் சொல்வதைச் – செய்திருக்கிறார்கள். ஒரு அர்த்தமும் ஸரியாகத் தெரிவிக்கத் தெரியாமல் கன்னாபின்னா என்று நாம் வார்த்தைகளைச் சொல்கிறோமென்றால், அதே வார்த்தைகளை அவர்கள் நூதன நூதனமாக அர்த்தம் கொடுக்கும்படிச் சொல்வதைப் பாராட்டத்தானே வேண்டியிருக்கிறது?அதனால் இவற்றுக்குச் ‘சித்ரகவிதை’ என்று பேர் கொடுத்து வைத்திருக்கிறது. சித்ர கவிதையில் வார்த்தை விளையாட்டால் அர்த்தத்தில் சாதுர்யம் செய்வதை அர்த்த-சித்ரமென்றும், சப்தஜாலம் மட்டும் செய்வதை சப்த-சித்ரமென்றும் சொல்வார்கள்.


*பண்பாட்டைக் குறித்த விஷயங்கள் அநேக உரைகளில் விரவி வந்துள்ளன. குறிப்பாக “காந்தர்வ வேதம்” எனும் உரையை இப்பகுதியிலும் கொள்ளலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸாரம் இதுவே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கன்னா பின்னா
Next