கூட்டுவதும் குறைப்பதும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பசுவின் வால் குச்சத்தில் நடுவிலிருந்து ஒவ்வொரு ரோமமாக எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்துக் கொண்டு வருகிறதோ அப்படி ஒரு வார்த்தை ஒவ்வொரு எழுத்தாகக் குறைந்துகொண்டே வருமாறு சித்ர கவிதை எழுதுவதுண்டு. பசு வாலை வைத்து இதற்கு ‘கோபுச்ச யதி’ என்று பெயர்.

முத்துஸ்வாமி தீக்ஷிதரும் கவிகளைப் போல இரண்டு மூன்று கீர்த்தனங்களில் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார். ‘மாயே’ என்ற தரங்கிணி ராக க்ருதியில் ‘ஸரஸகாயே, ரஸகாயே, ஸகாயே, அயே’ என்று பிரயோகம் பண்ணியிருக்கிறார். ‘ஸரஸகாயே’ என்றால் ‘அன்பும் அழகும் கொண்ட மேனியாளே’. ‘ரஸகாயே’ என்றால் (உபநிஷத் வாக்யப்படி) ரஸ ஸவ்ரூபமாயிருப்பவுள். ‘ஸகாயே’ என்றால் அரூபமாய் மட்டுமில்லாமல் ரூபமும் கொண்டிருப்பவள். ‘அயே’ என்றால் குழந்தை அம்மாவைக் கூப்பிடுகிற மாதிரி பராசக்தியைச் செல்லமாகக் கூப்பிடுவது.

இதேபோல ஆனந்த பைரவியில் ‘த்யாகராஜ யோக வைபவம்’ என்று ஆரம்பித்து, அடுத்ததாக இதிலே ‘த்ய’வை த்யாகம் பண்ணி, ‘அகராஜ யோக வைபவம்’ (அகராஜன் என்றால் மலையரசனான ஹிமோத்கிரி) , அதற்கப்புறம் ‘ராஜயோக வைபவம்’, ‘யோக வைபவம்’, ‘வைபவம்’, ‘பவம்’ (பவஸகாரத்திலிருந்து கடத்துவிக்கிறவனுக்கே ‘பவன்’ என்றும் ஒரு முக்யமான நாமா உண்டு) , ‘வம்’ என்று முடிக்கிறார். ‘வம்’ என்றால் அம்ருத மயமாயிருப்பவன்.

இந்தப் பாட்டிலேயே அநுபல்லவியில் இதற்கு எதிர்வெட்டாக, ஒரு சின்ன வார்த்தையில் ஆரம்பித்து ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்துக்கொண்டே போகிறார். இதற்கு ‘ஸ்ரோதோவாஹம்’ என்று பேர். சின்னதாக ஒரு ஓடை ஆரம்பித்து அதிலே ஒவ்வொன்றாகப் பல சின்னச் சின்ன நதிகள் சேர்ந்து அது பெரிசாகப் போவதுதான் ‘ஸ்ரோதோவாஹம்’. தீக்ஷிதர் இப்படிச் செய்திருக்கிறார். ‘சம்’ (மங்களம் என்று அர்த்தம்) என்பதில் ஆரம்பித்து, ‘ப்ரகாசம்’, ‘ஸ்வரூப ப்ரகாசம்’ என்றிப்படியே ‘சிவ சக்த்யாதி ஸகலதத்வ ஸ்வரூப ப்ரகாசம்’ என்கிற வரைக்கும் போயிருக்கிறார்*1.

பாமரன் ஒருவன்கூட “கவயாமி, வயாமி, யாமி” என்று கோபுச்ச யதியில் கவி பண்ணினதாகக் கதை இருக்கிறது.

போஜராஜா மஹாரஸிகனாக, கவிதை ஆர்வமுள்ளவனாக இருந்தான். அதனால் தன் ராஜதானியான தாரா (இப்போதைய தார்) நகரத்தில் கவி பண்ணத் தெரியாத ஒருத்தரும் இருக்கப்படாது, அவர்கள் கிராமத்துக்குப் போய்விட வேண்டும் என்று உத்தரவு போட்டான். ஸேவகர்களை விட்டு, தலைநகரிலே கவி பாடத் தெரியாமல் யார் இருந்தாலும் ராஜ ஸபைக்கு இழுத்துக்கொண்டு வரும்படி சொன்னான். அவர்கள் ஊர் பூரா தேடினதில் அத்தனை பேரும் கவி பாடிக் கொண்டிருந்தார்களாம். போஜனுக்கிருந்த ஸரஸ்வதி ப்ரஸாதத்தால் அவனுடைய ராஜதானியில் இப்படி அவளுடைய விலாஸம் ப்ரகாசித்துக்கொண்டிருந்தது. எனவே கொடுமையாகத் தோன்றுவதான அப்படிப்பட்ட உத்தரவைப் போடவும் அவனுக்கு ‘ரைட்’ இருந்தது, ந்யாயம் இருந்தது என்று தெரிகிறது.

கடைசியில் தேடிப் பிடித்து, கவி பாடத் தெரியாமலிருந்த ஒருத்தனே ஒருத்தனான ஒரு சேணியனை – துணி நெய்கிறவனை – ஸபைக்கு இழுத்துக்கொண்டு போனார்கள்.

“உனக்குக் கவி பாட வராதா?” என்று போஜராஜன் அவனைக் கேட்டான்.

ராஜாவைப் பார்த்தான் சேணியன். ஸரஸ்வதி கடாக்ஷம் நர்த்தனம் பண்ணுகிற அந்த முகத்தைப் பார்த்தவுடனேயே சேணியனுக்குள்ளே கவித்வ சக்தி பாய்கிற மாதிரி இருந்தது. உடனே தன்னையறிமால்,

காவ்யம் கரோமி நஹி சாருதரம் கரோமி

யத்நாத் கரோமி யதி சாருதரம் கரோமி

என்று கவிதையாகவே பதில் சொல்ல ஆரம்பித்தான். அதாவது, “ஓ, கவி கட்டுகிறேனே! ஆனாலும் ரொம்ப நன்றாகக் கட்டுவேன் என்று சொல்ல முடியாது. ப்ரயத்தனம் பண்ணிப் பார்த்தேனேயானால் ரொம்ப அழகாகவே கூடக் கட்டினாலும் கட்டிவிடுவேன்” என்று சொன்னான்.

கவித்வ தாரை உள்ளே சுரக்க ஆரம்பித்துவிட்டதென்றாலுங்கூட, முதல் முதலாகக் கவி பண்ணும்போது மிக உயர்வாகப் பண்ண முடியும் என்று சொல்லிக் கொண்டுவிடக்கூடாது. அதே ஸமயத்தில் எப்போதுமே ஏதோ ஸுமாராகத்தான் பண்ண முடியும் என்றும் விட்டுக் கொடுத்துவிடாமல் கான்ஃபிடன்ஸோடு, ராஜாவுக்கும் உத்ஸாஹம் தரும்படிச் சொல்ல வேண்டும் என்று இப்படி இரண்டு அடி சொன்னான். இதை நாலடி ஸ்லோகமாக முடிக்கவேண்டுமென்று அடுத்த இரண்டடியை ஆரம்பித்தவுடனேயே ப்ரதிபா சக்தி பொங்கிக் கொண்டு வந்தது. ‘ஹை க்ளாஸ் பொயட்ரி’ என்னும்படியாகவே அந்தப் பின்பாதி அமைந்துவிட்டது.

பூபால-மௌலி மணிரஞ்ஜித-பாதபீட

ஹே ஸாஹஸாங்க கவயாமி வயாமி யாமி ||

என்று ப்ராஸம், கீஸம் போட்டுத் தடதடவென்று முடித்து விட்டான். “அநேக ராஜாக்களின் கிரீடங்களிலுள்ள ரத்னங்களின் ஒளியால் சிவப்பாகச் செய்யப்பட்ட பாத பீடத்தை உடையவனே! (அதாவது இதர ராஜாக்கள் போஜனின் அடியில் தங்கள் முடி படக் கிடக்கிறார்களாம்! அந்த முடிகளிலுள்ள கிரீட ரத்னங்களால் அவனுடைய பாதபீடம் சிவப்பாகிவிட்டதாம்!) “ஸாஹஸச் செயல்களே ஸஹஜமாகிவிட்டவனே! நான் ‘கவயாமி’ : ‘கவி பாடுகிறேன்’ ‘வயாமி’ : நெசவு பண்ணுகிறேன். (‘வயனம்’ என்றால் நெய்வது; weaving என்பது இதே தாதுவில் உண்டானது தான்.) ‘யாமி’ : போய்விட்டு வருகிறேன்”, என்று கிளம்பி விட்டான்.

‘கவி பாடாவிட்டால் ராஜ தண்டனை கிடைத்திருக்கும். நல்லவேளை, ஏதோ அத்ருஷ்ட வசத்தால் பாடியாய்விட்டது. தண்டனைக்குத் தப்பினோம். இன்னம் பாடச் சொன்னால் வருமோ வராதோ? அதனால் ஸம்மானத்துக்குக் காத்துக்கொண்டிருக்காமல் முதலில் திரும்பிப் போய்ச் சேருவோம்’ என்றுதான் “யாமி – போறேம்பா”*2 என்று கிளம்பிவிட்டான்.

இங்கே ‘கவயாமி வயாமி யாமி’ என்பது கோபுச்சம்.


*1‘ஸ்ரீவரலக்ஷ்மி’ என்னும் ஸ்ரீராக க்ருதியிலும் ‘ஸ்ரீ ஸாரஸபதே, ரஸபதே, ஸபதே, பதே’ என்று கோபுச்ச யதியைக் கையாண்டிருக்கிறார்.

*2அள்ளித்தரும் போஜனின் ஸம்மானமின்றியே செல்ல வேண்டியிருப்பதில் அந்தச் சேணியனுக்கு இருந்திருக்கக்கூடிய தாபம் அவ்வளவும் த்வனிக்க ஸ்ரீ பெரியவர்கள் இந்த “போறேம்பா” சொன்னதை இங்கே தெரிவிக்க முடியாவிட்டாலும் வார்த்தையிலாவது “போகிறேனப்பா”வைப் “போறேம்பா”வாகத் தருகிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஒரே எழுத்தாலான ஸ்லோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  இருபொருளில் ஒரே சொல்
Next