ஏகாம்ரர் – எண்களில் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ரொம்ப விசித்ரமாய் கவி பாடுவதில் காளமேகப் புலவரைத் தமிழில் தலைமை ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். “இம் என்பதற்கு முன்னே எழுநூறு எண்ணூறு என்று கவிதைகளைக் கொட்டிவிடுவேனாக்கும். நிறைய ஜலம் முட்டிக்கொண்டு கறுப்பாயிருக்கிற ஒரு காளமேகம் மழையைக் கொட்டுவதுபோலக் கவிதைகளை கொட்டுகிற காளமேகமாக்கும் நான்”என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நினைத்தே பார்க்கமுடியாதபடி நூதன நூதனமாக எதையாவது சொல்லி அந்தக் கருத்துக்கு இசைய இவர் கவிபாட வேண்டும் என்று மற்ற கவிகள் பந்தயம் வைத்திருக்கிறார்கள். கொஞ்சங்கூடச் சளைக்காமல் அத்தனை பந்தயத்திலும் அவர் ஜயித்திருக்கிறார்.

நமக்கு இந்தக் காஞ்சீபுரம், இதிலே ‘ஒரு மா’ என்பதாக ஒரே ஒரு மாம்பழத்தைப் பழுக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஏகாம்ரம் ( ஏக – ஒரு; ஆம்ரம் – மா) என்றால் கிட்டின உறவு மாதிரி. அதனால் அது ஸம்பந்தமாக ஒரு காளமேகக் கவிதை பார்க்கலாம்.

‘ஒரே ஒரு மா’ என்கிற போது அதைவிடக் குறைச்சலில்லை என்று ரொம்பச் சின்னதாக ஒரு நம்பரைச் சொன்னாற்போலிருக்கிறது. நான் சொல்லப் போகிற கவிதையிலோ எல்லாமே ஒன்றுக்கும் சின்ன நம்பர்களாக வரும்.

“ஒன்றைவிடச் சின்ன பின்னங்களாக முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று இருக்கிற எண்ணிக்கைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏகாம்ரநாதர் ஸம்பந்தமாக ஒரு வெண்பா பண்ணிக் காட்டும்” என்று மற்ற கவிகள் சாலஞ்ஜ் செய்தார்கள்.

‘ஆசு கவித்வம்’ என்பதாக உடனுக்குடன், கவி பாடும் வல்லமையை அகிலாண்டேச்வரியின் அநுக்ரஹத்தால் பெற்றிருந்த காளமேகம் கொஞ்சங்கூட யோசிக்காமல் பாடிவிட்டார்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கால ரைக்கால்கண் (டு) அஞ்சாமுன் – விக்கி

இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரைஇன் றோது .

இதிலே முக்காலிருந்து, கீழரை வரை உள்ள எல்லா எண்களும் வந்துவிடுகின்றன. ஆனால் எல்லாம் வேறே அர்த்தத்தில்!

வ்ருத்தாபயமும், யமபயமும், வியாதியும், சாவும் வருவதற்கு முன்பு, கச்சி ஏகம்பனை இப்போதிலிருந்தே ஸ்தோத்ரம் பண்ணு; ‘இன்று ஓது’ என்பது வெண்பாவின் தாத்பர்யம்.

‘முக்காலுக்கு ஏகா முன்’ என்றால் இரண்டு காலோடு மூன்றாவது காலாகக் கழியைப் பிடித்துக் கொள்ளும் காலம் வருவதற்கு முந்தி என்று அர்த்தம். ‘முன்னரையில் வீழா முன்’ என்றால் ‘முன்னுச்சி மயிரில் நரை ஏற்புவதற்கு முந்தி’. ‘முன்னுரை’ என்பதில் ‘நரை’, ‘அரை’ இரண்டும் வந்து விடுகின்றன. ‘அக்காலரைக்கால் கண்டு’ என்பதில் கால், அரைக்கால் இரண்டும் வருகின்றன. ‘அந்தப் பொல்லாத காலனின் அடிச் சுவடியைக் கண்டு’ என்பது இதற்கு அர்த்தம். ‘யமன் வருகிற தடயத்தைப் பார்த்து பயப்படுவதற்கு முன்’ என்று தொடர்ந்து போகிறது. வயோதிகத்தில் கபம், ச்லேஷ்மம் என்று விக்கலும் இருமலும் ஏற்படும். ‘அதற்கு முன்’ என்கிறார் – ‘விக்கி இருமாமுன்’. இங்கே ‘இருமா’ என்ற எண்ணிக்கை வந்து விடுகிறது. மாகாணி என்பதும் ஒரு எண். காணிப் பரப்புக்கும் பெரிசாக ஊருக்கு வெளியிலே ருத்ரபூமி (மயானம்) என்று விட்டிருப்பார்கள். அதைத்தான் ‘மாகாணி’ என்று கவி சொல்கிறார்.

‘மாகாணிக்கேகா முன்’ ருத்ர பூமிக்குப் போய்ச் சேருவதற்கு முன்னாலே. ‘ஒருமா’ என்ற இலக்கத்தையே ஏக ஆம்ரமான ஒருமா ஆக்கிக் கொண்டு விடுகிறார். காஞ்சீபுரத்தில் இந்த ஒரு மாவின் கீழே வஸிக்கிறவரைத்தான் ‘கச்சி ஒரு மாவின் கீழரை’ என்கிறார். அவரை, இப்பவே பிடித்து ஸ்தோத்ரம் செய்: “இன்றோது”.

ஏகத்துக்குக் கீழ்ப்பட்ட நம்பர்களால் ஏகாம்ரரைப் பற்றிய நினைப்பில் கொண்டு சேர்த்து விடுகிறார்!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வேற்று பாஷைகளில் ஒரே சொற்றொடர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கஞ்சி வரதர்
Next