செலவு விஷயம்; ஜாக்ரதை தேவை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

செலவுக்கு என்ன செய்வதென்றால், பணக்காரனைத் தான் நம்பிக் கொண்டிருப்பது என்றில்லாமல், அவனவனும் ஒரு காலணாவாவது கொடுக்க வேண்டும். பணக்காரனும் சரீரத்தால் உழைக்க வேண்டும்; ஏழையும் திரவியத்தால் துளி உதவி பண்ண வேண்டும். இதுதான் நிஜமான த்யாகம். பணக்காரனை அதிகப் பணம் கேட்கவே கூடாது என்று எனக்கு அபிப்ராயம். காரணம் சொல்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் பணக்காரன் பாடுதான் ரொம்ப கஷ்டம் என்று தோன்றுகிறது. அந்தஸ்து (status), பேர் இவற்றுக்காக அவன் அநேக கார்யங்களை இஷ்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்யவேண்டியதாக இருக்கிறது. இது ஒவ்வொன்றுக்காகவும் தண்டம் அழவேண்டியிருக்கிறது. பெரிய மநுஷன் என்று தெரிய வேண்டுமானால் அதற்கு அநேக ‘கிளப்’களில் மெம்பராக வேண்டும். அதற்காக ‘ஸப்ஸ்கிருப்ஷன்’ செலவுகள். அப்புறம் ஏதாவது இரண்டு ஸ்கூல், காலேஜிலாவது எண்டோமென்ட் வைத்து ப்ரைஸ் கொடுக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கப்புறம் டைட்டில், கிய்ட்டில் வாங்குவதற்காக (நேரே அப்படித் தெரியுமால்) பல தினுஸுகளில் செலவு செய்ய வேண்டும். கார், பங்களா டிரஸ், பொழுதுபோக்குச் செலவுகள் வேறு. இவனுடைய கம்பெனியோ பண்ணையோ நன்றாக நடக்க வேண்டுமே, அதை உத்தேசித்து வெளியில் சொல்லக் கூடியதும் சொல்லக் கூடாததுமாகப் பலவிதங்களில் செலவு செய்ய வேண்டும். இது ஓரளவுக்குக் கடமை மாதிரியே ஆகிவிடுகிறது. இதெல்லாம் போதாது என்று (அரசியல்) கட்சிகள் வேறு டொனேஷனுக்கு வருகின்றன. அதிலும் இவனுக்கு வாஸ்தவத்திலேயே ஒரு கட்சியிடந்தான் அபிமானம், அது இருந்தால்தான் தனக்கு நல்லது என்று தோன்றினால்கூட அதற்கு மட்டும் டொனேஷன் கொடுப்பதோடு போக மாட்டேன் என்கிறது. இவனுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஒரு ஸமயத்தில் யாரிடம் நிர்வாஹம் இருக்கிறதோ, அவர்கள் இவன் தலையில் கை வைக்காமலிருப்பதற்காக அந்தக் கட்சிக்கும் நிறையக் கொடுத்துத் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது! இன்னும் அகத்தில் கல்யாணம், கார்த்திகை, ஃபீஸ்ட், அது இது என்றும் வாரிவிட வேண்டியிருக்கிறது. வரிகள் வேறு!செலவு செய்வதற்கும், தானம் (gift) பண்ணுவதற்கும் கூட வரி கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் பாவம், மனஸார இவன் எந்த நல பணிகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறானோ, அதற்குத்தான் ரொம்பக் குறைச்சலாகக் கொடுக்கும்படியாக ஆகிறது. பேர், புகழ், மாதிரியான ஸமாசாரங்கள், ”பிஸினஸ் இன்டரஸ்ட்” முதலானதுகள் அத்யாவசியமாகி விடுகின்றன. இப்படி இருக்க வேண்டாமே!’ என்று நாம் சொல்லிப் பிரயோஜனமில்லை. நாமே அந்தப் பணக்காரனாக இருந்தாலும் இப்படித்தான் செய்வோம். இம்மாதிரி வேண்டாததற்குச் செலவழித்துவிட்டு, வேண்டியதற்குச் செலவு செய்ய முடியாதபோது, அவனுக்கே guilty -யாகத் தான் இருக்கும். ‘இந்த ஸமயத்தில் நாம் வேறு போய் அவனிடம் யாசகம் கேட்டு அவனைக் கஷ்டப்படுத்துவானேன்? தனக்குப் பிடித்த கார்யத்துக்கே மனஸாரக் கொடுக்க முடியாத பரிதாபமான ஸ்திதியில் அவனைக் கொண்டுபோய் நாம் வைப்பானேன்?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

ஸமூஹக் கார்யங்கள் என்றால் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் இந்தக் கார்யங்களுக்கு பேட்ரனாக இருக்கக்கூடிய பணக்காரர்கள் யார் என்று பார்த்தால் ஒவ்வொரு ஊர் அல்லது பேட்டையிலும் ஒரு பத்து, பன்னிரண்டு பேர்தான் இருப்பார்கள். இவர்களிடமே ஒவ்வொரு கார்யத்துக்கும் ரசீதுப் புஸ்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினால் அவர்களுந்தான் என்ன செய்வார்கள்? ஒன்று, வேண்டா வெறுப்பாகக் கொடுப்பார்கள். அல்லது விருப்பம் இருந்தும்கூட நிறையக் கொடுக்க முடியவில்லையே என்று துக்கப்படுவார்கள்.

நமக்கும் யோசனை வருகிறது; அந்தப் பணம் கணக்கில் வந்ததா, வராததா; கணக்கில் வராதது என்றால் அந்த மாதிரிப் பணத்தை தர்மத்துக்குப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாமா என்றெல்லாம் யோசனை வருகிறது.

ஆனதால், பணக்காரர்களை நம்பித்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று வைத்துக் கொள்ளவே கூடாது. அவர்களாகவே காதில் விழுந்து கூப்பிட்டுக் கொடுத்தால் தாராளமாகவே வாங்கிக் கொள்ளலாம். நாமாகப் போய் பிடுங்கி எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

இதில் இன்னொன்றுகூட. சில பணக்காரர்களே அதிகப் பங்கு செலவு ஏற்கிறார்கள் என்றால் அதனாலேயே அவர்களுக்கு ஸங்கத்தில் அதிக ‘ரைட்’உண்டாகிவிடும். அவர்களுக்கு மற்றவர்கள் பவ்யப்படும்படியாக ஆகும். எதிலும் அவர்கள் சொல்லுவதுதான் முடிவு என்றாகிவிடும். இது கூடாது.

பொதுவாகவே பணத்தின் ‘டச்’ (ஸ்பரிசம்) வந்து விட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத்தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நல்ல ஆதரவு திரவிய ஸஹாயமாகவும் நம் கார்யத்துக்குக் கிடைத்தால்கூட அதனால் over-enthusiastic ஆகி (அதீத உத்ஸாஹம் அடைந்து) , இப்போது இந்தியா கவர்மென்ட் செய்கிற மாதிரி ambitious planning (அதி ஆசைத் திட்டம்) போட்டுப் நிறையப் பணம் ‘கலெக்ட்’பண்ண ஆரம்பிக்கக் கூடாது. இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இதனாலே பரோபகாரம் என்கிற அன்பு எண்ணத்தையும், அதில் அங்கமாகச் செய்கிற தேவாலய கைங்கர்யங்களின் பக்தி எண்ணத்தையுங்கூட ‘வசூல் எண்ணம்’முழுங்கிவிடும். எப்போது பார்த்தாலும் ரசீது புஸ்தகமும் கையுமாக அலைவதும், ‘பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் பண்ணலாமா, அட்வர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா?’என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும். நிறையப் பணம் சேர்ந்து அதைக் கையாள வேண்டியிருக்கும்போது நாமே எப்படி மாறிப் போய்விடுவோமோ என்ற பயம் ஸதாவும் இருக்கணும். அதுவுமில்லாமல், ரொம்பவும் பணம் சேர்ந்தால் ஊரிலிருப்பவர்களுக்கும் அது ஸரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற ஸந்தேஹம் எழும்பும். இதோடுகூட, சற்றுமுன் சொன்ன மாதிரி, இஷ்டமில்லாதவனையும் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதும், இப்படி வாங்கிவிட்டதால் அப்புறம் அவனிடம் பவ்யப்பட்டு நிற்பதும் நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆனதால் எந்த நல்ல காரியமானாலும் ‘அதி’யாக அதைக் கொண்டுபோய்விடாமல் அவசியத்தோடு நிறுத்திக்கொண்டு, செட்டும் கட்டும் சிக்கனமுமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வஹிக்க வேண்டும்.

பொதுத் தொண்டுக்கு மூல பலம் பணம் இல்லை, ஐக்யப்பட்ட மனம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். பணம் கொடுத்தவன் என்று எவனையும் பிரகடனப்படுத்தி, அதனால் அவனுடைய புண்யபலன் போய்விடும்படியாகச் செய்து விடக்கூடாது. திருப்பூந்துறை அய்யனார் கோயிலில் குளம் வெட்டினபோது பணம் வசூலித்து, கூலி கொடுத்து, ‘காமகோடி’ பத்திரிகையிலும் நன்கொடைக்காரர்களின் பெயரைப் போட்டு விட்டார்கள். அடுத்த ‘இஷ்யூ’விலேயே நான் கொட்டை எழுத்தில், ”இனிமேல் இப்படிப் பண பலத்தில் பண்ணாமல், ஆட்களின் அன்பு பலத்திலேயே பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் போட்டோம்” என்று நாசூக்காக மன்னிப்பு, பச்சாத்தாபம் தெரிவிக்கிற மாதிரி ‘பப்ளிஷ்’ பண்ண வைத்தேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வார வழிபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  திரவியம், தேஹம் இரண்டாலும்
Next