பகவத் ஸ்மரணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இப்போதும், எப்போதும் – இதுவரை செய்யாவிட்டாலும் இப்போதிருந்தாவது – நாம் செய்ய வேண்டியது பகவத் ஸ்மரணையை அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். அப்படி வாழ்நாள் பூரா, வெளியில் எத்தனை கார்யம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளூர ஓர் இழை பரமாத்மாவிடமே சித்தம் ஒட்டிக் கொண்டிருந்தால்தான் அந்திம காலத்தில் கன்னாபின்னா நினைப்புகள் வராமல் அவன் நினைவு மட்டும் – மாம் ஏவ என்ற மாதிரி அது மாத்திரமே – இருந்து கொண்டிருக்கும். இழுத்துப் பறித்துக்கொண்டு கிடந்தாலும் அத்தனை இழுபறியிலும் விடாமல் பகவத் ஸ்மரணமே இருக்கும். அல்லது அநாயாஸ மரணமாக இயற்கையாக ஸம்பவிக்கும்போதும் அவனையே நினைக்கத் தோன்றி அந்த ஒரு சில க்ஷணங்களானாலும் அதிலேயே ஜகாக்ரியத்தோடு முழுகிவிட முடியும். அல்லது திடீரென்று ஒரு புலி வந்து அடித்துப் போட்டாலோ, அல்லது கரென்ட் ஷாக் அடித்தாலோ அப்போதுகூட பயமோ, அதிர்ச்சியோ இல்லாமல், ப்ரக்ஞை போய்விடாமல், ‘டாண்’ என்று பகவத் ஸ்மரணம் வந்து நிற்கும்.

‘ ப்ராண ப்ரயாண ஸமயே கபாவத பித்தை: — உயிரின் நெடும் ப்ரயாண ஸமயத்தில் கபாவத பித்தங்கள் கட்டியிழுக்கிறபோது உன்னை எப்படி நினைப்பேனோ?1 என்று குலசேகரர் மாதிரிப் பெரியவர்களே பயப்படுகிறார்கள். பகவத் பாதாளும் இந்த ‘ப்ராண ப்ரயாண’பதப்பிரயோகம் பண்ணியிருக்கிறார்.

ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்2

உயிர் கிளம்புகிற ஸமயத்தில் ஏற்படுகிற பயத்தைப் போக்க, ஸகல பயத்தையும் நிவ்ருத்தி பண்ணும் லக்ஷ்மிநரஸிம்ம மூர்த்திதான் கைப்பிடிப்பாக (கர அவலம்பம்) வந்து ரக்ஷிக்க வேண்டும் என்கிறார். இதேமாதிரி ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்திலும், ‘ப்ரயாணேன்முகே மயி அநாதே’— ‘அநாதையான நான் நெடும் பயணம் கிளம்பும்போது, அப்பா குஹனே! தயாளுவே! நீ முன்னே வந்து நிற்கவேண்டும் என்கிறார். இதையே அச்சடித்த மாதிரி ‘திருப்புகழி’லும் சொல்லியிருக்கிறது. அது மஹான்கள் எப்போதும் பகவத் ஸ்மரணம் அல்லது ஆத்மாநுஸந்தானத்தில் இருந்தவர்கள். அதனால் நிஜமாக அவர்களுக்கு இந்த பயம் இல்லை. நம்மை உத்தேசித்து, நமக்குப் பிரார்த்திக்கக் கற்றுக்கொடுக்கத்தான் இப்படியெல்லாம் பாடி வைத்திருக்கிறார்கள்.

பெரியாழ்வார் இன்னும் கொஞ்சம் ஸ்வாதீனமாகக்கூட பகவானிடம் சொல்கிறார்: ” அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் ” . ” சாகிற ஸமயத்தில் உன்னை நான் நினைக்காமலும் போகலாம். அதற்காக நி என்னை விட்டுவிடாதே. இப்போது உன்னை என்னால் நினைக்க முடிகிறது. அதனால் இப்போது செய்கிற இந்த ‘ஸ்மரணை’யையே அப்போதைக்கென்று ‘ரிஸர்வ்’ பண்ணினதாக வைத்துக்கொள்” என்கிறார்!

ஆனால் கீதா வாக்யத்தைப் பார்த்தால், இப்படி என்றைக்கோ செய்த ஸ்மரணத்தை பகவான் ‘ரிஸர்வேஷ’னாக நினைக்கவில்லை; கடைசிக் காலத்தில் நினைக்கத்தான் சொல்லுகிறார். ‘ச’போட்டு ‘கடைசிக் காலத்திலும்’என்கிறார். அதாவது வாணாள் பூராவும் என்னை நினைத்துக் கடைசியிலும் நினை என்று இந்த ஸ்லோகத்தில் சொல்லாமல் சொல்கிறார். மேலே இரண்டு ஸ்லோகம் தள்ளி, ஸ்பஷ்டமாகவே சொல்கிறார்.

” தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அநுஸ்மர”

ஆனபடியால் என்னை ஸர்வகாலங்களிலும், எப்போதும் நினைத்துக்கொண்டே இரு என்கிறார். இப்படி எப்போதும் நினைத்தால்தான் முடிவில் அந்த நினைவு வரும்.


1.‘முகுந்தமாலா’

2லக்ஷ்மீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆயுள் முழுதும் செய்வதே அந்திமத்தில் வரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அந்திம நினைப்பின் முக்யத்வம்
Next