வீட்டுக்குப் பின்பே வெளியுலகு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஒருத்தன் ஸந்நியாஸாச்ரமத்துக்குப் பாத்ரமான உத்தமாதிகாரியாக இருந்தால்கூட, ஏக புத்ரனானால் தாயார், தகப்பனார் ஸம்மதமில்லாவிட்டால் அவனுக்கு ஆச்ரமம் தரமாட்டார்கள்; இப்படியே க்ருஹஸ்தனானால் பெண்டாட்டி பிள்ளை-குட்டிகளை நிர்கதியாக விட்டுவிட்டு வந்தவனுக்கும் எத்தனை யோக்யதை இருந்தாலும் ஸந்நியாசம் தருவதில்லை. அதாவது சொந்தக் கடமையை, குடும்பப் பொறுப்பை விட்டவனுக்கு பாரமார்க்கத்திலேயே மூழ்கிவிடுவதற்குகூட ‘ரைட்’ இல்லை என்று வைத்திருக்கும்போது, ஆத்ம, ஞானத்துக்கு முதல் ‘ஸ்டெப்’ மட்டுமேயான லோக ஸேவைக்காக ட்யூட்டியை, ரெஸ்பான்ஸிபிலிடியை விடுவதென்பதைக் கொஞ்சங்கூட ஆமோதிக்கிறதற்கில்லை.

இதைப்பற்றி நான் இதுவரை அழுத்தமாகச் சொல்லாதது தப்புத்தான். இப்போது இதற்காக நான் மறுபடி ‘லெக்சர்’ அடிக்கிற வழக்கத்தை ஆரம்பிக்கிறதாகவும் இல்லை. ஆனாலும் என்னிடம் இப்போதும் வருகிறவர்கள் போகிறவர்களிடத்தில் இதைச் சொல்லணும் என்று நினைத்துக் கொள்கிறேன். நான் எல்லவற்றையும் விடணும் என்று நினைத்த அப்புறமும், வருகிறது வந்து சேர்ந்துகொண்டுதானிருக்கிறது! இப்போதுதான் நான் சொல்கிறதையெல்லாம் – சொல்லாததையெல்லாம்கூட – ஜாஸ்திப் பிரசாரம் பண்ணுவதாகவும் ஏற்பட்டிருக்கிறது! அப்படி இந்த அபிப்ராயமும் – சொந்தக் கார்யத்தையும் டொமெஸ்டிக் ஸர்வீஸையும் விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸுக்குப் போகப்படாது என்று சொல்வதும் – பரவினால் பரவட்டும்.

இப்போது இந்த தம்பதி வந்து அழுததுதான் என்றில்லை. அவ்வப்பொழுது இப்படி ஏற்பட்டிருக்கிறது. கடிதாசுகளும் வந்திருக்கின்றன. ஒரு பிராம்மணர். அவர் வக்கீலாக ப்ராக்டிஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அவரை நான் என் ஸ்வய கார்யத்தில் ஒரேயடியாக இழுத்துவிட்டேன். இந்த தேசம் பூராவும் எங்கெங்கே என்ன வேத சாகை இருக்கிறது என்று அவரை அலைந்து திரிந்து ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுத்துவரப் பண்ணினேன்; பாடசாலை பாடசாலையாக ஏறி இறங்க வைத்தேன். இதனால் அவருடைய பத்னியும், ஒரே பெண்ணும் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தை என்னோடு சண்டையே போட்டிருக்கிறது. சண்டை என்று சொல்வது தப்பு – உபதேசம் பண்ணிற்று என்று சொல்லணும். ”அப்பா ப்ராக்டிஸ் போயிடுத்து உடம்பும் வீணாப்போயிடுத்து. நாங்களும் நிராதரவாகப் போய்விட்டோம். எனக்கு அப்பா யார் என்று அடையாளமே மறந்து போய்விடுகிற அளவுக்கு இப்படி அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு ஊர் ஊராக அலையப் பண்ணுகிறீர்களே!” என்று அந்தப்பெண் கேட்கும். அப்படியும் நான் பாட்டுக்கு, ‘அவர்கள் விசாரம் அவர்களுடைய ஸமாசாரம்; என் கார்யம்தான் எனக்கு’என்று அந்த மநுஷ்யரை அப்படியே அல்லாட விட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் அவர்களே ”இதுதான் நமக்கு விதி’ ‘என்று ஓய்ந்து போய்விட்டார்கள். ஒரு பக்கம் என்னிடம் இப்படி அவர்களுக்கு வருத்தம் இருந்த போதிலும் பக்தியும் உண்டு. அதனால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட அநேக நல்லதுகளுக்கு என் அநுக்ரஹம்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் மரியாதை விச்வாஸங்களோடேயே இருக்கிறார்கள்.

ஒருவன் எப்படியிருந்தாலும் பத்னி புத்ராள் ஸஹித்துக்கொள்ளத்தான் வேண்டும். என்கிற சாஸ்திரப்படி, நான் இப்படிச் சும்மாவே இருந்ததற்கு ஸமாதானம் சொல்லிவிடலாம். ஆனால் இப்போது ஒரு மாதாபிதாக்கள் துக்கப்பட்டுக்கொண்டபோது – மாதா, பிதாவுக்கு அப்புறந்தானே குரு என்று நான் வருகிறேன்?- நான் சொல்லிக்கொள்ள ஸமாதானம் எதுவும் இல்லை என்று நியாயம் உறைத்து, இதையெல்லாம் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நோக்கத்துக்கே குந்தகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உச்சநிலை உதாரணமாகாது
Next