பிரத்யக்ஷச் சான்று : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இந்த நூற்றாண்டில் பிரத்யக்ஷமாகத் திரும்பத் திரும்பப் பார்த்த விஷயம் சொல்கிறேன். தர்மசாஸ்திர ஆசாரங்கள் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாகப் பிளவுபடாமலே இருந்திருக்கின்றன. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றெல்லாம் தத்வரீதியில் பிரிந்த போதுங்கூட இவர்கள் புதுப்புது தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொண்டு விடவில்லை. பழைய சாஸ்திரங்களின்படியேதான் பெரும்பாலான ஆசாரங்கள் இருந்தன. ஆதியிலிருந்த ஆபஸ்தம்ப, ஆச்வலாயனாதி ஸுத்ரங்களும், மநுதர்ம சாஸ்திரம், நிபந்தன க்ரந்தங்கள் முதலியனவுந்தான் எல்லா ஸித்தாந்திகளுக்கும் பொதுவாகத் தொடர்ந்து இருந்திருக்கின்றன. இவற்றுக்குள்ளேயேதான் சில ஸித்தாந்திகள் சிலதை விட்டும் சிலதைச் சேர்த்தும், சிலதைக் கூட்டியும் சிலதைக் குறைத்தும் பண்ணுகிறார்கள். இப்படி வைதிகாசாரமானது ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஒரே மாதிரியாக இருந்துவந்திருக்க, ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே அநேகமாக ஹிந்துமதச் சீர்திருத்த இயக்கங்களாகத் தோன்றிய எல்லாவற்றிலும் பிளவுகள் ஏற்பட்டு வெவ்வேறு ”க்ருப்”கள் தோன்றி விட்டன!

மதச் சீர்திருத்த அம்சங்களையே நிறையக் கொண்ட அரசியல் கட்சிகளிலும் இப்படியே ஒவ்வொன்றும் இரண்டாக, மூன்றாக உடைந்து போயிருக்கின்றன. இப்படி இதுகளுக்கு stability (ஸ்திரத்தன்மை) போதாததே இவற்றிலே ஸத்ய பலம் குறைச்சல், இவற்றை ஆரம்பித்தவர்களுக்கு (அவர்கள் நல்லவர்களாகவும், நல்ல நோக்கமுள்ளவர்களாகவும் இருந்தாலும்) தபோ பலம் குறைச்சல் என்பதற்கு அழுத்தமான proof -ஆக இருக்கிறது. கொள்கைகளின் ஸத்யமும், அவற்றைச் சொன்ன ரிஷிகளின் தபோ பலமும்தான் வைதிக ஸமயாசாரத்தை யுகயுகாந்தரங்களாகக் காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு இத்தனை சீர்திருத்த மத இயக்கங்கள் ஏற்பட்ட பின்னும் முக்கால்வாசிக்கு மேலான ஜனங்கள் இவற்றில் சேராமல் மூலமான ஹிந்து மதத்தில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியிலே ஆசாரத்துக்கு மாறாகச் சொல்கிறவர்கள் கூட உள்ளூர [அதற்குக்] கொஞ்சம் பயப்படத்தான் செய்கிறார்கள். தங்கள் சொந்த விஷயத்தில் ரஹஸ்யமாக அநேக ‘ஸுபர்ஸ்டிஷன்’களை அநுஸரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்! இப்படி அநேகம் என்னிடம் அற்றுபடியாகிக் கொண்டிருக்கின்றன! எலெக்ஷனுக்கு டெபாஸிட் கட்டுவதென்றால் எத்தனை ரேஷனலிஸ்டானாலும் நாள், நக்ஷத்ரம் பார்த்துத்தான் செய்கிறார்கள் என்று கேள்வி!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தலைவர்களும், பின்பற்றுகிறவர்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஒரு பரீ¬க்ஷ போதும்
Next