பக்தி : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ப்ரவருத்தி, நிவ்ருத்தி என்பதாகக் கார்யம் செய்வது, செய்யாமலிருப்பது என்றே பாகுபடுத்திச் சொல்லிக் கொண்டு போனதால் கார்யமான கர்ம யோகம், கார்யங்களை விட்டு த்யான விசாரம் செய்து கொண்டு ஏகாந்தமாயிருக்கும் ஞான யோகம் என்ற இரண்டை மட்டும் சொல்லி, அதோடு விட்டுவிட்டது. பக்தி என்பது கார்யமாகவும் பூஜை முதலான சடங்குகளாக வரும். கார்யமில்லாத த்யானமாக, ஸவிகல்ப ஸமாதி என்று அப்படியே பகவானிடம் சொக்கிப்போய் இஹ ப்ரஜ்ஞையேயில்லாமல் உட்கார்ந்துவிடுகிற வரையிலும் போகும். ‘அவனிடம் சொக்கிப்போயிருக்கிற உறவுகூடப் போதாது. இன்னம் நெருக்கமாக, கொஞ்சங்கூடப் பிரிவு இல்லாமல் அவனே ஆகிவிடவேண்டும்’ என்று பக்தியானது உச்ச கட்டத்துக்குப் போகும்போது அதுவே ஞானமாகிவிடும்.

ஜன ஸமூஹத்தில் யோகம், வேதாந்தம், மீமாம்ஸை என்றெல்லாம் தத்வ ஆராய்ச்சியில் போகாதவர்கள்தான் நிறைய இருப்பார்கள். இவர்கள் உள்பட ஸகலமான பேருக்கும் அல்பமாகவோ ஸ்வல்பமாகவோ பக்திதான் ஏதோ ஒரு விதத்தில் ஸ்வாபாவிகமாக (தன்னியல்பாக) அமைந்தது. நாஸ்திகர்களைப் பற்றியும், ஈச்வரப் பிரஸ்தாவம் வேண்டியதில்லை என்று ஒதுக்கிய மீமாம்ஸகர்களைப் பற்றியும் இங்கே பேச்சில்லை. ஸாதாரணமாக யாராயிருந்தாலும், ‘இந்த லோகம் இப்படித் தோன்றி நடந்து கொண்டிருப்பதற்குக் காரணமாக ஒரு மஹாசக்தி இருக்கவேண்டும். அதனிடம் நாம் அடங்கியிருக்க வேண்டும்’ என்ற அளவுக்கு ஒரு பக்தியெண்ணம் தோன்றாமலிருக்காது. கர்ம ஸங்கிகளாகவே இருந்தாலுங்கூட, ‘பலதாதாவாக ஒரு ஈச்வரன் இருக்கவேண்டிய அவசியமில்லை’ என்ற மீமாம்ஸைக் கொள்கையைப் பொதுவாக ஜனங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மஹாசக்தனான அவனைத்தான் தங்களுடைய எந்த விருப்பத்தையும் ஈடேற்றுபவனாகக் கருதி ப்ரார்த்திப்பார்கள். பணம், படிப்பு, ஆரோக்யம், ப்ரமோஷன் எதுவானாலும், இதற்கெல்லம் தாங்களும் முயற்சி மேற்கொண்டு கார்யங்கள் பண்ணிக்கொண்டேயிருந்தாலும், அவனருள் இருந்தால்தான் நமக்கு வேண்டியது பலிக்கும் என்று, தங்களுக்குத் தெரிந்த அளவில் பக்தி செய்து கொண்டிருப்பார்கள். ‘இது பக்தியே இல்லை, வ்யாபாரம்தான்’ என்று சொல்பவர்கள் சொன்னாலும், தங்களளவில் பக்தியாக இருப்பதாகத்தான் இந்த ஜனங்கள் நினைக்கிறார்கள். ஒரே கடவுள் பல தேவதைகள் மூலம் அருள் செய்கிறாரென்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு தேவதையையும் ஒவ்வொரு காமனைக்காக ஆராதிப்பதோடு நின்று விடுவபவர்களை விஷயம் தெரிந்தவர்கள் பரிஹாஸம் செய்தாலும், இவர்களிடமும் எங்கேயோ ஒரு மூலையில் ஏக பரமாத்மாவிடம் ஒரு நிஜமான பக்தியெண்ணம் இல்லாமலே போய்விடவில்லை.

அவரவருடைய குணங்களையொட்டியே காமனைகள் இருக்குமாதலால், அவைகளை நிறைவேற்றித் தரவும் வெவ்வேறு தெய்வ பேதங்களை உபாஸிப்பது, தங்களுடைய குணத்துக்கு ஏற்றபடியே உபாஸனா மார்க்கத்தை அமைத்துக் கொள்வது என்று இருப்பதில், நல்லதற்கில்லாத அநேக விஷயங்களும் வழிபாட்டில் சேர்ந்துவிடுகின்றன. கர்ம யோகம் என்பது மீமாம்ஸகர்களிடம் நலிவு பட்டுப் போனாற் போலவே பக்தி யோகமும் கீழ் நிலைக்கு வந்து விடும்படி ஆகிறது. கீதையில் பகவான் இதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். பல தேவதைகளைக் காம்யமாக (விருப்பப் பூர்த்திக்காகவே) உபாஸித்து நச்வரமான பலன்களைப் பெறுவது, ஏகமான பரமாத்மாவை அவனுக்காகவே உபாஸித்து சாச்வதமான பலன் பெறுவது முதலான விஷயங்களை “ஞான விஞ்ஞான யோகம்” என்ற அத்யாயத்தில் சொல்லியிருக்கிறார். அப்புறம் முடிக்கிறதற்கு முந்தி “ச்ரத்தா த்ரய விபாக யோகம்” என்ற அத்யாயத்தில், ‘ஸத்வ குணமுடையவர்கள் ஸத்வமான தேவதைகளையும், ரஜோ குணிகள் யக்ஷ-ராக்ஷஸர்களையும், தாமஸ குணமுடையவர்கள் பூத ப்ரேதங்களையும் பூஜிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதில் ஆபாஸமான வழிபாட்டு முறைகள், நரபலி முதலான க்ரூரமான வழிபாட்டு முறைகள் ஆகியனவும் வந்துவிடுகின்றன.

அவனாகவே ஆகிவிடுவது என்ற பரமஞான, அதாவது நிவ்ருத்தி மார்க்கத்தின் பராகாஷ்டா நிலையிலிருந்து, கார்யத்தில் மஹா நீசமாகக் கழுத்தைச் சீவிப்போட்டு பலி கொடுக்கும் ப்ரவ்ருத்தி வரையில் பக்தியானது பல மட்டங்களிலும் கலந்து வருகிறது என்று சொல்லவந்தேன்.

ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என்று இரண்டுதானே ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருக்கமுடியும்? மூன்றாவதாக ஒன்று எங்கேயிருந்து வரும்? அதனால்தான் கர்மம், ஞானம் என்று மட்டும் சொல்லி, ஸகல ஜனங்களுக்கும் ஸ்வாபாவிகமாகத் தோன்றிக் கர்மத்தின் கீழ் நிலையிலிருந்து ஞானத்தின் உச்ச நிலைவரை எல்லாவற்றையும் தழுவிக்கொண்டு போகும் பக்தியைச் சொல்லாமல் விட்டது. உலகம் மாயை என்று அநுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்ட ஞானியும் ‘மாயைக்கு அதீச்வரனாக இப்படியொரு பரமாத்மா இருந்து கொண்டு என்னவெல்லாம் விளையாடுகிறான்?’ என்று பக்தியில் உருகிப்போகிறான். ஞானமே வேண்டாம் என்றே ஒதுக்கி விட்டு, ஸம்ஸார ப்ரவ்ருத்தியையும் அதே போல ஒதுக்கி விட்டு, அவனுடைய மஹிமைகளையே த்யானம் செய்து கொண்டு அவனை ஸாக்ஷாத்தாக வாத்ஸல்யம் முதலான பாவங்களில் அநுபவித்துக் கொண்டிருக்கும் பரம பக்தர்கள் இருக்கிறார்கள். ப்ரவ்ருத்தியில் இருந்துகொண்டே, அவன் தான் ஞான பிக்ஷை் போட்டு நிவ்ருத்தியில் சேர்க்கவேண்டும் என்று வேண்டுபவர்கள் இருக்கிறார்கள். கர்ம யோகிகள் ஞான யோகத்திற்குப் போகும் யோக்யதையைப் பெறச் சித்த சுத்தியோடு, சித்த ஐகாக்ரியமும் (ஒருமுனைப்பாடும்) பெறவேண்டியிருக்கிறது. இப்படிப் சித்தத்தை ஒன்றிலேயே நிறுத்த ஈச்வர சிந்தனை தான் உதவுகிறது என்பதால் அவர்களும் பக்தியுபாஸனை செய்கிறார்கள். அதோடு, பலதாதா அவனே என்று அவனுக்கே தங்கள் கார்யங்களின் பலனை அர்ப்பணம் செய்து, இந்த முறையில் பக்தி செலுத்துகிறார்கள். யோகிகளாக இல்லாமல் பலன்களை விரும்பியே ஓயாமல் கார்யம் செய்யும் நம் போன்றவர்களும், “தேங்காய் உடைக்கிறேன், அங்க ப்ரதக்ஷிணம் செய்கிறேன், ஸ்வாமீ! இதைப் பண்ணுங்கோ, அதைப் பண்ணுங்கோ” என்று, நாம் பக்தியென்று நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒன்றைப் பண்ணுகிறோம். இன்னும் க்ரூரமாகவும் பீபத்ஸமாகவும் (அருவருக்கத் தக்கதாகவும்) , மத்யபானம் (கள் குடிப்பது), ஸ்த்ரீ போகம், கடா வெட்டுவது வரையில் பக்தி என்றே நினைத்துக்கொண்டு செய்பவர்களும் இருக்கிறார்கள். எதுவானாலும் கடைசியில் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என்ற ஏதோ ஒன்றில் அடங்கிவிடவேண்டியதுதான். அதனால்தான் அந்த இரண்டோடு விட்டது. ஆனாலும் ப்ரவ்ருத்தி தர்மத்துக்கு ஆதாரமாக வேதத்தின் கர்ம காண்டமென்றும், நிவ்ருத்தி தர்மத்துக்கு ஆதாரமாக அதன் ஞான காண்டமென்றும் சொல்வதோடு சிலர் பக்தி வழிபாட்டுக்கு ஆதாரமாக அந்த வேதத்திலேயே உபாஸனா காண்டம் என்றும் ஒன்றைச் சொல்வதுண்டு. கீதையில் தெளிவாகவே கர்மா, பக்தி, ஞானம் என்று மூன்று யோகங்களைச் சொல்லியிருக்கிறது. முதல் ஆறு அத்யாயம் கர்ம ஷட்கம், அடுத்த ஆறு அத்யாயம் பக்தி ஷட்கம், அதற்கப்புறம் முடிவாக வரும் ஆறு அத்யாயம் ஞான ஷட்கம் என்றுகூடச் சொல்வதுண்டு.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இரு மார்க்கங்களின் உபதேசங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கீதை கூறும் யோகங்கள்
Next