அப்பட்டமான லோகாயதம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்த மதங்களெல்லாம் போக அப்பட்டமான நாஸ்திகமும் சார்வாகம் என்ற பெயரில் இருந்தது.

இதுவரை சொன்ன எல்லா மதங்களிலும் ஸம்ஸாரம் ஒரு பந்தம் என்று வைத்து, அதிலிருந்து நிவ்ருத்தி பெறுவதற்கு வழிகள் சொல்லியிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உயர்ந்த தத்வங்கள் இல்லாமலில்லை. இவற்றுக்கெல்லாம் மாறாக, ஸம்ஸாரம் பந்தம் என்றும் அதிலிருந்து மோக்ஷம் பெறுவதே லக்ஷ்யம் என்றும் சொல்லாமல், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருக்கும்படி சொன்ன மதம் தான் சார்வாகம். ‘சாரு’ என்றால் அழகானது, இனிமையானது. ‘வாகம்’ என்றால் வாக்கியம். கேட்க இனிமையாக உள்ள வாக்யமே சார்வாகம். “வ்ரதம் வேண்டாம்; உபவாஸம் வேண்டாம். தத்வங்களைச் சிந்தனை பண்ணி உழப்பிகொள்ள வேண்டாம்; நன்றாகத் தின்றுகொண்டு குடித்துக்கொண்டு போகங்களை அநுபவியுங்கள்” என்று சொன்னால் கேட்க நன்றாகத்தானே இருக்கிறது? அதனால் சார்வாகம் என்று பெயர். “சாமியாவது, பூதமாவது, ஆத்மாவாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை. (அவை) கண்ணுக்குத் தெரிகிறதா என்ன? கண்ணுக்கு உடம்பு தெரிகிறது. லோகம் தெரிகிறது. இந்த உடம்புக்கு ஸெளக்யமாக இந்த லோகத்திலிருந்து என்னவெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, எடுத்துக்கொண்டு அநுபவியுங்கள். வேறே மதமும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என்பது அந்த மதம்.

தேவ குருவான ப்ருஹஸ்பதிதான் அஸுரர்கள் நல்ல வழிக்கு வந்துவிடாமல் செய்வதற்காகவே இப்படி ஒரு மதத்தை உருவாக்கி ப்ரசாரம் செய்தார் என்பார்கள். அதனால் அதற்கு ‘பார்ஹஸ்பதம்’ என்று பேர் — முன்னேயே சொன்னேன். பரலோகத்தைப் பற்றிய பேச்சே இல்லாமல் இந்த லோகத்துடனேயே முடித்து விடுவதால் ‘லோகாயதம்’ என்று பொதுவாகச் சொல்வர்கள்! தமிழில் ‘உலகாயதம்’. ‘மெடீரியலிஸம்’ என்கிறார்களே, அது.

அஸுரர்களை உத்தேசித்துப் பண்ணிய இந்த மதமும் ஜனங்களுக்குள்ளேயே ஆஸுர வ்ருத்திகள் நுழைந்துவிட்ட கலிகாலத்தில் நம் தேசத்தில் கொஞ்சம் இருந்து வந்தது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பௌத்த-ஜைனமும் பொது ஜனங்களின் மனப் போக்கும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வேதத்தை ஒப்பியும் வேதாந்தத்தை ஒப்பாத மதங்கள்
Next