ஏன் ஸங்கல்ப மாத்திரத்தால் கூடாது? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அது என்ன என்று பார்ப்பதற்குப் பூர்வாங்கமாக ஒரு பெரிய கேள்வி: ‘ஸரி, லோகத்தில் தர்மம் குறைகிறது. பரமாத்மா பரம கருணையோடு, ‘இது இப்படி வீணாகப் போகவேண்டாம். மறுபடி தர்மமாக வாழட்டும்’ என்று நினைக்கிறார். அப்படி அவர் ஸங்கல்பம் பண்ணிவிட்டாலே போதாதோ? தானாக பகவத் ஸங்கல்பம் நிறைவேறிவிட்டுப் போகிறது! அதை விட்டுவிட்டு ஜன்மா இல்லாத அவர் எதற்காக ஜன்மா எடுத்து, நாம – ரூபமில்லாதவர் அதுகளை வாரிப்போட்டுக்கொண்டு வந்து, ‘அவதாரம்’ என்று ஒன்றைப் பண்ணி, நம் மாதிரியே ரொம்ப யத்னங்கள் பண்ணி சண்டை கிண்டை எல்லாம் போட்டு ஸம்ஹாரங்கள் பண்ணி, அதில் தாமும்கூட அடி, உதை வாங்கிக் கொண்டு அவஸ்தைப்படவேண்டும்? அவதாரத்தில் அவரும் நமக்கிருக்கிற எல்லாக் கஷ்டங்களும்தான் படுகிறார்! வெளியிலிருந்து வருகிற கஷ்டம் மட்டுமில்லை. ஸச்சிதாநந்த ஸ்வரூபம் எனப்படும் அவருமே (அவதாரங்களில்) நம் மாதிரி கோபப்படுகிறார், அழுகிறார், ச்ருங்காரம் பண்ணுகிறார். இதெல்லாம் எதற்காக? தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணட்டும். ஆனால் அதை அவருடைய உச்ச ஸ்தானத்திலிருந்து கொண்டே, வைகுண்டமோ கைலாஸமோ எதிலோ ஒன்றில் இருந்து கொண்டே, ஸங்கல்ப மாத்திரத்தில் பண்ணிவிட வேண்டியதுதானே? அவதாரம் என்று ஏன் ஜன்மா எடுக்கவேண்டும்?’ என்று கேள்வி வருகிறது.

ஸங்கல்பத்தினாலேயே ஸ்வாமி என்னவும் செய்யமுடியும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் நன்றாக ஆலோசித்துப் பார்த்தால், இப்படி அவர் ஸங்கல்ப மாத்திரத்தில் எதுவும் செய்வதென்றால், முடிவாக என்ன பண்ண வேண்டிவரும் தெரியுமா? ‘ஸ்ருஷ்டியே வேண்டாம்’ என்று ஒரேயடியாக ‘க்ளோஸ்’ பண்ணத்தான் ஸங்கல்பிக்க வேண்டிவரும்! (சிரித்து) ‘ஸ்ருஷ்டி இல்லாமல் போகக் கடவது’ என்று ஒரே ஸங்கல்பமாகப் பண்ணிவிட்டு அவர் பாட்டுக்கு நிம்மதியாக இருந்துவிட வேண்டியே வரும்!

நிம்மதியாயிருந்துவிடக் கூடாதென்றுதானே அவரே ப்ரியப்பட்டு ஸ்ருஷ்டியை உண்டாக்கியிருக்கிறார்? ஆதியில் அவர் மட்டுந்தானே ஸச்சிதாநந்த ப்ரஹ்மமாக இருந்தார்? அந்த நிம்மதி போதவில்லை என்றுதானே, ‘விளையாடணும், கூத்தடிக்கணும்’ என்று மாயையை வாரிப்போட்டுக் கொண்டு ஸ்ருஷ்டியை உண்டாக்கி, அசடு அசடுகளாக நம் இத்தனை பேரையும் பண்ணிப் போட்டிருக்கிறார்? (கல்ப) ப்ரளயத்தில் அத்தனை ஜீவர்களும் ஒடுங்கினாலும், அவரும் போனால் போகிறதென்று ஆயிரம் சதுர்யுக காலம் அந்த லயம் (ஒடுக்கம்) அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சும்மாயிருந்தாலும், அப்புறம் ஒடுங்கினதையெல்லாம் மறுபடி புனர் ஸ்ருஷ்டி என்று பிடித்திழுத்துக்கொண்டு வந்து, ஜனன-மரணக் குடை ராட்டினத்தில் சுற்றுச் சுற்று என்று சுற்றத்தானே ஆரம்பித்துவிடுகிறார்? அவர் மனஸ், அவர் சித்தம் நமக்குத் தெரியவே தெரியாது. எத்தனை யோசித்தாலும் புரியவே புரியாது. தான்பாட்டுக்கு ‘ஏகமேவாத் விதீயம்’ (இரண்டற்ற ஒன்று) என்று இருந்துகொண்டிருக்காமல் ஸ்ருஷ்டி என்று எதற்காகப் பண்ணணும் என்று நமக்குத் தோன்றினாலும், எதற்காகவோ பண்ணித்தானே இருக்கிறார்? என்ன பண்ணுகிறது? ‘அதெல்லாம் ஸ்ருஷ்டி என்றே ஒன்று இல்லை; எல்லாம் கல்பனைதான், மாயைதான்’ என்று பரம வேதாந்தம் சொன்னாலும் அந்தக் கல்பனையோ, மாயையோ, அது மட்டும் ஏன் உண்டாகணும்? அதனாலே தான் ஒரே வார்த்தையில் “என்னவோ லீலை” என்று சொல்லி முடித்து விடுகிறது!

ஸ்வாமியின் ‘நேச்சர்’ தமக்குத் தெரியாது, புரியாது. அதனால், ‘நிம்மதியைக் கெடுத்துண்டு இதென்ன ஸ்ருஷ்டின்னு பண்ணிண்டு?’ என்று நாம் நினைத்தாலும், அவர் என்னவோ நிம்மதியாக, ப்ரசாந்த நிலையில் ஆத்மாராமனாக இருந்து கொண்டேதான் எத்தனை கூத்து உண்டோ அத்தனையும் அடித்துக் கொண்டிருக்கிறார்! கூத்தடிப்பதனால் நிம்மதி போகவில்லையாதலால் கூத்தை முடிக்கவே மாட்டார்! ஸ்ருஷ்டியை ‘க்ளோஸ்’ பண்ணவே மாட்டார்? அவர்தானே வேண்டுமென்று (“வேணும்ன்னு” என்று சுவைத்துக் கூறுகிறார்கள்) இனாகுரேட் பண்ணி, ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டிருக்கிறார்? அதனால், தன்னுடைய திட்டத்தில் ப்ரளயமென்று ஸ்ருஷ்டியை ஒடுக்கிக்கொள்ளவே ஏற்பட்ட காலம் தவிர வேறெப்போதும், எந்தக் காரணத்திற்காகவும் அதை ‘க்ளோஸ்’ பண்ணமாட்டார்.

அதிருக்கட்டும். அவதாரம் எடுக்காமல் ஸங்கல்ப மாத்திரத்திலேயே ஏன் அவர் தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணக்கூடாது என்று கேட்டால் அப்படிப் பண்ணுவதற்குப் பதில் அவர் ஸ்ருஷ்டியையே க்ளோஸ் செய்துவிடலாமென்று சொன்னால் என்ன அர்த்தம்?

என்ன அர்த்தமென்றால்…

தர்மம் அதர்மத்தை அழித்து விடும்படியான ஒரு நிலை வரும்போது ஸ்வாமி, ‘தர்ம ஸம்ஸ்தாபனம் நடக்கட்டும்’ என்று ஸங்கல்பம் பண்ணுவதாக வைத்துக் கொள்வோம். இந்த தர்ம ஸம்ஸ்தாபனம் சாச்வதமாக நிலைத்து இருக்கட்டுமென்று அவர் ஸங்கல்பிக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் இப்படி லோகம் பூரா ஒரே தர்ம மயமாகி அப்படியே இருந்து கொண்டிருந்தால் எந்த ரஸ பேதங்களுக்காக அவர் இப்படி விசித்ர விசித்ரமாக ஜீவ ஸ்ருஷ்டியை உண்டாக்கியிருக்கிறாரோ அதுவே இல்லாமல் போய்விடும்! லீலை, விளையாட்டு என்றால் எதிரெதிர்க் கட்சிகள் tug-of-war இழுத்துக்கொண்டு, எதிரெதிராக இரண்டு கட்சிகள் பந்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் உதைத்துக் கொண்டு, விழுந்து வாரிக்கொண்டு, வெற்றி-தோல்வி, ஏமாற்றம்-எதிர்பார்க்காத அதிருஷ்டம், கோபம்-ஸந்தோஷம், அழுகை-குஷி என்று பலவித உணர்ச்சிகளில் மாட்டிக்கொண்டால்தானே விறுவிறுப்பாயிருக்கும்? ‘லீலா நாடகம்’ என்றால் நாடகத்தில் நவரஸமும் இருக்கணுமோ இல்லியோ? ஸர்வ ஜனங்களும் தர்மாநுஷ்டானம் பண்ணிக் கொண்டு சாந்தர்களாகி அப்படியே சாச்வதமாயிருந்து விட்டால் அதில் லீலா விசித்ரம் ஏது? நாடகரஸம் ஏது? ஸ்வாமிக்கு ஒரேயடியாக போர்தான் அடிக்கும்! இதற்குப் பேரே ‘மிச்ர லோகம்’ என்பது. அதாவது, நல்லது பொல்லாதது கலந்தாங்கட்டியாக இருக்கும்படியாகவே அவர் உத்தேசித்திருக்கிற லோகம் இது. ஒரே பொல்லாததாக அஸுர லோகம், ஒரே ஸந்தோஷமாக தேவலோக – கந்தர்வ லோகங்கள், ஒரே சாந்தியாக தபோலோகம் ஸத்ய லோகம் இத்யாதி என்று அவர் ஸ்ருஷ்டியில் பண்ணி, அதிலெல்லாம் தாம் அலுத்துச் சலித்துப் போகாமலிருப்பதற்காகத்தான், நம் லோகத்தை மிச்ர லோகமாகப் பண்ணி, ஜீவர்களுக்குப் பல தினுஸாகவும் கர்மா செய்ய ஓரளவு ஸ்வாதந்தர்யத்தைக் கொடுத்து விளையாட்டுப் பார்ப்பது. அதனால் இந்த ஜீவ ஸ்வாதந்தர்யத்தின் ஸ்வாரஸ்யமே அடியோடு போய் எல்லாரும் எக்காலமும் தர்மிஷ்டர்களாக ஆகிவிட்டால் இந்த லோகமே பகவான் பார்வையில் ‘மெகானிகலா’கப் போய் விடும்! மிச்ரலோகமாக இருக்க வேண்டியது அப்படியில்லாமல் அமிச்ரமான (கலப்பில்லாத) தர்மலோகமாகிவிட்டால் அதை க்ளோஸ் பண்ணிவிட வேண்டியதுதானே?

தர்மப்படியே எல்லாரும் பண்ணினால் புதுக் கர்மாவே சேராது. பழைய கர்மா தீர்கிற மட்டுமே மாயா லோக ஸம்ஸாரத்தில் இருந்துவிட்டு அப்புறம் இந்த ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டுவிடுவார்கள். இப்படி அத்தனை பேரும் மோக்ஷத்திற்குப் போய்விட்டால் ஸ்ருஷ்டி க்ளோஸாகிவிட வேண்டியதுதானே? இப்படி ஜனங்களாகப் பண்ணுவதைவிட அவர்களையும் பண்ணி போட்ட ஸ்ருஷ்டிகர்த்தாவே பண்ணி விட நினைப்பதுதானே இயற்கை? (சிரித்தவாறு) ‘நாம் மெனக்கிட்டுப் பண்ணின ஸ்ருஷ்டியை இவா என்ன இல்லாமப் பண்றது? நாமே அப்படிப் பண்ணிடுவோம்’ என்றுதானே அவருக்குத் தோன்றும்?

ஸ்ருஷ்டி லீலை அவருக்கு வேண்டியிருப்பதால், சாச்வதமாக தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ண வேண்டுமென்று நினைக்கமாட்டார். இதனால்தான் லோகம் சாச்வதமாக தர்மத்திலேயே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்று ஸங்கல்பிப்பதற்குப் பதில் அவர் ஸ்ருஷ்டியையே க்ளோஸ் பண்ணிவிட நினைப்பார் என்று சொன்னது.

“ஸரி, அப்படியானால் ‘சாச்வதமாக தர்ம ஸ்தாபனம் ஏற்படட்டும்’ என்று (பரமாத்மா) ஸங்கல்பிக்க வேண்டாம். ரொம்பவும் மோசமான நிலை ஏற்படும்போது, அப்போதைக்கு மாத்திரம் ஏற்படட்டும்’ என்று ஸங்கல்பிக்கலாமே! (இப்படி வெறுமனே ஸங்கல்பிப்பதை விட்டு) அவதாரம் என்று அவரே பிறப்பானேன்?”

இப்படி ஸங்கல்பித்தால் மறுபடி மறுபடி அதர்மம் மேலோங்கி, மறுபடி மறுபடி அவர் (தர்ம ஸ்தாபனத்தை) ஸங்கல்பிக்க வேண்டியதாகத்தானே ஆகும்? ‘அவர் ஏன் அவதாரம் எடுக்கணும்? ஸங்கல்பத்தினாலேயே செய்யட்டுமே’ என்று சொல்வது. அவர் ஏன் ச்ரமப்படணும்?’ என்ற எண்ணத்தில்தான். அவதாரமெடுக்காமல் ஸங்கல்பிப்பது என்றாலும், நாம் அவருக்கு வேண்டும் என்று நினைக்கிற நிம்மதியோடு அவர் இருந்துவிட முடியாது. டெம்பரரி ஸங்கல்பமாகவே செய்வதால், லோகத்தின் நிலைமையை ஓயாமல் இன்ஸ்பெக்ட் செய்து கொண்டு மறுபடி மறுபடி ஸங்கல்பம் செய்யும் ச்ரமத்தை அவர் பட்டுத்தான் ஆகவேண்டும். நாம் நினைக்கிற நிம்மதி வேண்டாமல்தான் அவர் ஸ்ருஷ்டி என்று வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அத்தனை பேருக்கும் ஆஹாரம் போடுவது, கூலி தருவது என்று கார்யங்களை வலிய வரவழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் அவர் வேலையை எவ்வளவு குறைத்துத் தரலாமென்று நினைத்தாலும், திரும்பத் திரும்ப ஸங்கல்பம் செய்கிற கார்யத்தை அவர் போக்கிக்கொள்ள முடியாது என்றே தெரிகிறது. அப்படியிருக்கும்போது என்னமோ வெற்று யோசனையாக ‘ஸங்கல்பம்’ என்று பண்ணுவதைவிட — அவர் தான் லீலை ப்ரியராக இருக்கிறாரே, அதனால் — அவதாரம் என்று வேஷம் போட்டுக்கொண்டு வந்து லீலைகள் பண்ணித்தான் தர்ம ஸ்தாபனம் பண்ணுவோமே என்று நினைக்கிறார்.

எல்லாமே அவர் ஸங்கல்பந்தான். ஆனால் கார்ய ரூபத்தில் ஒவ்வொரு கருவி பண்ணினதாகக் காட்டுகிறார். ஓரோரு ஸந்தர்ப்பத்தில் அதர்மம் ஓங்குகிறதென்றால் அதுவும் அவர் ஸங்கல்பந்தான். ஆனால், ‘அவர் பரமாத்மாவாகவே எங்கேயோ உட்கார்ந்துகொண்டு ஸங்கல்பம் செய்தார்: உடனே லோகம் அதர்மமாகிவிட்டது’ என்று எங்கேயாவது படித்திருக்கிறோமோ? அஸுரர், ராக்ஷஸர், துஷ்ட ராஜாக்கள், தப்பான கொள்கைகளை மதமாக ப்ரசாரம் செய்பவர்கள், இன்னம் பல பேர், திருடர்கள், கொலைகாரர்கள், ஃபோர்ஜரிக்காரர்கள் என்பவர்கள் கார்ய ரூபத்தில் அநேகம் பண்ணுவதால்தான் அதர்மம் தலையெடுக்கிறது. கலியில் ஜனங்களின் மனஸ் கெட்டதுகளில் போகிறது என்றால் அதுவும் கையால், காலால் செய்யும் கார்யமாயில்லாவிட்டாலும் மனஸினால் செய்யும் கார்யந்தான்! மனஸ் கெட்டதை நினைத்த பிறகு, அந்தக் கெட்டதை அநுபவிப்பதற்காகக் கையும் காலும் வெளிக் கார்யமாகவே கெட்டதைச் செய்ய ஆரம்பிக்கிறது. இப்படிக் கருவி, கார்யங்களாலேயே லோகத்தில் எல்லாம் நடக்கிறபோது, (கெட்டது மட்டுமில்லை, நல்லதுந்தான் — எல்லாமே கருவி, கார்யங்களால்தான் நடத்துகிறானே தவிர, ஸகலமும் அவன் ஸங்கல்பமென்றாலும், ஸங்கல்ப மாத்ரத்தால் நடந்ததாகக் காட்டுவதேயில்லை;-இப்படி நடந்துவரும்போது,) அதாவது அவன் நடத்தி வருகிறபோது, அதர்மத்தின் பெரிய எழுச்சியும் இப்படியே நடக்கும்போது தர்மத்தின் மறுமலர்ச்சி மட்டும் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே நடக்கவேண்டும் என்றால் எப்படி? அதற்கும் லோகத்தில் கருவி, கார்யங்களைக் காட்டாவிட்டால் அவனுடைய ‘ஸ்போர்ட்’டில் ரொம்ப விறுவிறுப்பான ஒரு அம்சம் இல்லாமல் செய்கிற மாதிரி தான்!

அதனால், தர்மம் குறையும்போது அதை அபிவிருத்தி செய்வதற்காகத் தன் தூதர்கள் மாதிரியான மஹான்களைக் கருவியாக அனுப்புவான். அதுவும் பலிக்காது என்கிற கட்டத்தில் தானே தன் கருவியாகி அவதாரம் எடுப்பான்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவதார ரஹஸ்ய சூசனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவதாரத்தில் மனிதத்தன்மையும் தெய்வத்தன்மையும்
Next