விஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்: சிவ-விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

க்ருஷ்ணாவதாரத்தைத் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டு, அவர் சொன்ன கீதையையும் திரும்பத்திரும்ப quote பண்ணி, அதோடு ஆசார்யாள், ஆசார்யாள் என்று முடிச்சுப் போட்டால் ஒரு கேள்வி வரலாம்: “ஆசார்யாள் பரமசிவ அவதாரமென்றுதான் கேள்விபட்டிருக்கிறோம். க்ருஷ்ணர் மஹாவிஷ்ணுவின் அவதாரம். அப்படியிருக்க, அவர் அந்த மாதிரி பண்ணினார், இவர் இந்த மாதிரி பண்ணினார். ஆனாலும் அவர் கீதையில் சொன்ன வாக்குபடிதான் இவர் அவதரித்ததே; காலச் சூழ்நிலை மாறுபட்டதால் அவதார வாழ்க்கைமுறை மாறுபட்டாலும் கீதையில் சொன்ன அதே தர்ம ஸம்ஸ்தாபன நோக்கத்தைத்தான் பூர்த்தி பண்ணினார்” என்றால் எப்படி?”

அப்பா! சிவன், விஷ்ணு என்று முழுக்கவும் பேதப்பட்டு இரண்டு பேர் இல்லை. ஒரே பரமாத்மா போட்டுக் கொண்டுள்ள இரண்டு ரூபபேதங்கள்தான் அவர்கள். “ப்ரச்நோத்தர ரத்னமாலிகா”வை முடிக்கிற இடத்தில் ஆசார்யாள் ஒரு கேள்வி கேட்கிறார்:

கச்ச பகவான்?” “பகவான் என்பது யார்?”

மஹேச: சங்கரநாராயணாத்மைக:” என்று பதில் கொடுக்கிறார்.

வேதாந்தத்தில் ஈச்வரன் என்றும், ஈசன் என்றும் சொன்னால் சிவன் என்று அர்த்தமில்லை. ஜகத் வியவஹாரத்தையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கும் மஹா சக்தியான ஸகுண ப்ரமத்தைத்தான் ‘ஈச்வரன்’ என்று அங்கே சொல்வது. “மஹேச:” என்னும்போது மஹிமை வாய்ந்த ஈசனான அந்த ஸகுண ப்ரஹ்மம்தான் பகவான் என்று ஆசார்யாள் பதில் கொடுத்துவிடுகிறார். உடனே அடுத்த கேள்விக்குப் போய்விடவில்லை. “முக்யமாக நம் மதத்தில் சைவர், வைஷ்ணவர் என்று இரண்டு பிரிவு இருப்பதால், ‘மஹேசன்’ என்றால் அதோடு விடமாட்டார்கள். பகவான் ‘யார்?’ என்று கேட்ட மாதிரியே, ‘மஹேசன் என்றால் யார்? சிவனா, விஷ்ணுவா?’ என்று கேட்பார்கள்” என்று ஆசார்யாள் நினைத்து, அதற்கும் பதிலைச் சேர்த்துச் சொல்லிவிட்டார் :

“மஹேச: சங்கர-நாராயணாத்மைக:” சங்கர-நாராயண-ஆத்மா-ஏக :”.

“சங்கரன், நாராயணன் இருவருக்கும் ஆத்மாவாக இருக்கப்பட்ட ஏக வஸ்து”, அல்லது, “சங்கரன், நாராயணன் இருவராகவும் உள்ள ஆத்மா என்ற ஏக வஸ்து,”-அதுதான் பகவான், அதுதான் மஹேசன்.

இருக்கிற அத்தனையும் ஒரே ஆத்மா அல்லது ப்ரம்மம்தான். அதுவே சிவன், அதுவே விஷ்ணு.

“அதுவே எல்லாமாய், எல்லாருமாய், நாமாகவுங்கூட இருக்கும்போது, இந்த இரண்டு பேரைக் குறிப்பாக ஏன் அப்படிச் சொன்னார்?”

அதுதான் நம் எல்லோருமாகவும்கூட இருப்பது என்பது வாஸ்தவந்தானப்பா! ஆனால் நம்மில் ஒருத்தருக்கொருத்தர் நாமேதான் மற்றவரும் என்று தெரிகிறதா? தெரிந்தால் இத்தனை போட்டி, அஸூயை, த்வேஷம் இருக்குமோ? நாம் ஆத்மாதான் என்பதாவது நமக்குத் தெரிகிறதா? ஈச்வரனும் (சிவனும்) மஹாவிஷ்ணுவும் இப்படியில்லை. அவர்களுக்குத் தாங்கள் ஆத்மாவான ப்ரஹ்மம்தான் என்று நன்றாகத் தெரியும். அதோடு ஈச்வரனுக்குத் தானே மஹாவிஷ்ணு என்று தெரியும். மஹா விஷ்ணுவுக்கும் தானே ஈச்வரன், அதாவது சிவன் என்று தெரியும்.

லோக நாடக தர்பாரில் ஒரே பரமாத்மா பல ரூபங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றும் ஒரு இலாகாவை நிர்வஹித்து விளையாடும்போது, மாயா ப்ரபஞ்சத்தை நடத்தி வைத்து ப்ரவ்ருத்தி தர்மத்தைப் பரிபாலிக்கும் சக்ரவர்த்தியாக மஹாவிஷ்ணுவும், ப்ரபஞ்சத்திலிருந்து விடுவித்து மோக்ஷத்தை அருளும் நிவ்ருத்தி தர்ம மூர்த்தியாகப் பரமசிவனும் பொதுவில் இருப்பார்கள். சிவன் மோக்ஷம் தருவதில் இரண்டு வகை. ஒன்று — தகுதி பார்க்காமல் ஸகலருக்கும் ஸம்ஸார விடுதலை தருவது. ப்ரளயத்தில் அப்படித்தான் எல்லா ஜீவர்களுக்கும் ரெஸ்ட். ஆனால் இது சாச்வதமில்லை. மறு ஸ்ருஷ்டியில் அவர்கள் திரும்பவும் ஸம்ஸாரத்தில் பிறக்கத்தான் வேண்டும். இன்னொரு வகை தான் சாச்வத மோக்ஷம்: தகுதி பெற்றவர்களுக்கு மாத்திரம் ஞானத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது. பரமசிவன் இந்த இரண்டுவித மோக்ஷங்களையும் இரண்டு விதமான அவஸரங்களில் (கோலங்களில்) அருளுகிறார். தகுதியில்லாதவர்களுக்கு ஒரு ப்ரளயத்திற்கும் மறு ஸ்ருஷ்டிக்கும் இடையிலுள்ள அவ்வளவு நீண்ட காலம் ஸம்ஸார நீக்கம் தருவதுகூட கர்ம நியதிக்கும் நீதிக்கும் பொருந்தாத ‘ஓவர்-கருணைதான் என்பதால், அதைக் கொஞ்சம் ஈடுகட்டுவதற்காக அப்போது ஜீவர்களை பயமுறுத்துகிற மாதிரி ருத்ரன் என்ற பெயரில் ஸம்ஹார மூர்த்தியாகி ப்ரளயம் என்று கோரமாகக் காட்டுகிறார். தகுதியுள்ளவர்களுக்குப் பரம சாந்தமாக ஞானாநுக்ரஹம் செய்து நித்ய மோக்ஷத்தில் சேர்க்கும்போது தக்ஷிணாமூர்த்தியாக சாந்தமான ஸெளம்ய ரூபத்தில் இருக்கிறார்.

பொதுவிலே இப்படி மஹாவிஷ்ணு-மாயா லோக நிர்வாஹம், பரமேச்வரன் – ஞான* ப்ரதானம் என்று தோன்றும்படியிருந்தாலும், பரமாத்மாவின் லீலையே ” unity in diversity” (வேற்றுமையில் ஒற்றுமை) என்பதில் தான இருக்கிறது? அதனால் இரண்டும் ஒரே பரமாத்மா என்று காட்டும்படியாக அவ்வப்போது இந்த இரண்டு பேர்களும் தங்கள் இலாகாக்களைக் கொஞ்சம் பரஸ்பரப் பரிவர்த்தனையும் பண்ணிக்கொள்வார்கள்! தங்களுடைய ஐகீ பாவத்தை (ஒற்றுமையை) இப்படி விளையாடிக் காட்டுவார்கள்.

எல்லா அவதாரங்களிலுமே மஹாவிஷ்ணு துஷ்ட ஸம்ஹாரம் பண்ணினார், அவர் கையால் ஸம்ஹாரமானவர்கள் மோக்ஷத்திற்கே போனார்கள் என்னும்போது அவர் பரமேச்வரனின் ருத்ர கார்யத்தைத்தானே பண்ணியிருக்கிறார்?

வேதம் சிவபரமாக ஸூக்தங்களையும் யஜ்ஞங்களையும் கொடுத்திருக்கிறது; விஷ்ணு பரமாகவும் அதே மாதிரி கொடுத்திருக்கிறது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி அடைமொழிகளைத்தான் கொடுத்து, பேதமேயில்லை என்று காட்டுகிறது. ஸ்ம்ருதிகளிலும் அப்படித்தான். புராணங்களைப் பார்க்கும்போதுதான் சைவமான புராணங்கள், வைஷ்ணவமான புராணங்கள் என்று இருப்பதில், பேதப்படுத்தி, ‘இதுதான் ஒசத்தி; இல்லை, இன்றொன்றுதான் ஒசத்தி’ என்று காட்டுவதாகத் தோன்றும். ஆனாலும் ஆதார சாஸ்த்ரங்கள் என்று ‘அதாரிடி’ பார்த்தோமானால் முதலில் ச்ருதி (வேதம்) , அப்புறம் ஸ்ம்ருதி, அப்புறந்தான் புராணம் என்று வரும். அது மட்டுமில்லாமல் புராணங்களையேகூட ஆழ்ந்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் சில இடத்திலாவது, ‘பேதமே கிடையாது, இரண்டும் ஒன்றுதான்’ என்ற அபிப்ராயம் தத்வோபதேசமாக மட்டுமின்றி, நன்றாக மனஸில் தைக்கிற மாதிரி கதா ரூபமாகவேகூட விளக்கப்பட்டிருக்கும். அவரவர் மனஸுக்கு ஏற்றபடி இஷ்ட தெய்வமாக வரித்த மூர்த்தி ஒன்றிடமே சித்தம் சிதறாமல் ஒருமுகப்பட வேண்டுமென்றே ஒசத்தி-தாழ்த்தி சொல்லியிருப்பதெல்லாம் என்று புரியும்.

ஆகையால் சிவ-விஷ்ணுக்களை ஒரேயடியாக பேதப்படுத்தி நினைப்பது ரொம்பத் தப்பு. பூர்ண வைதிகமாக ஆசார்யாள் மறுபடி ஸ்தாபித்த ஸ்மார்த்த ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கு சிவ-விஷ்ணு பேதம் இருக்கவே கூடாது என்று தான் அவர் வைத்திருக்கிறார். ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்கள் காட்டுகிற அபேதத்தையே அவர்கள் பின்பற்ற வேண்டுமென்று வைத்திருக்கிறார்.

க்ருஷ்ணராக வந்தபோது அப்படித்தான், தாம் வேறில்லை, ஈச்வரன் வேறில்லை என்று அவர் ப்ரூவ் பண்ணிக் காட்டினார். மஹாவிஷ்ணுவின் அவதாரமானாலும், பரமேச்வரனுக்குரியதாகக் கருதப்படும் ஸம்ஹாரம், ஞானோபதேசம் இரண்டையும் நன்றாகச் செய்து காட்டினார். எல்லா அவதாரங்களிலுமே ஸம்ஹார மூர்த்தியாக இருந்திருக்கிறாரென்றாலும், இங்கே அந்த ‘ஆஸ்பெக்ட்’டை நன்றாகவே ‘அன்டர்-லைன்’ பண்ணிக் காட்டினார். அர்ஜுனனுக்கு விச்வரூப தர்சனம் கொடுக்கும்போது,

திவ்யம் ததாமி தே சக்ஷு:, பச்ய மே யோகம்-ஐச்வரம்1

-“உனக்கு தெய்விகமான பார்வை கொடுக்கிறேன். அதைக்கொண்டு, ஈச்வரனுக்குரியதான யோக சக்தியை என்னிடத்தில் பார்” என்கிறார்.

இங்கே ‘ஈச்வரன்’ என்னும்போது வேதாந்தம் சொல்லும் ஸகுண ப்ரம்மத்தைச் சொன்னாரா? அல்லது, வ்யவஹாரத்தில் பரமசிவனையே ‘ஈச்வரன்’ என்று சொல்லும் அர்த்தத்தில் சொன்னாரா?

வெகு காலமாக உலக வழக்கம் பரமசிவனையே ஈச்வரன் என்று சொல்வதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. (அகராதியான) ‘அமர கோச’த்திலேயே சிவனுடைய பெயர்களைச் சொல்லும்போதுதான், “ஈச்வர: சர்வ ஈசாந:” என்று இருக்கிறது. காளிதாஸனுடைய வாக்கு உத்தமமான வியவஹாரம். அவர் ‘ரகுவம்ச’த்தில்,

“ஹரிர்-யதைக: புருஷோத்தம ஸ்ம்ருத:
மஹேச்வரஸ்-த்ர்யம்பக ஏவ நாபர:”
(III.49)

“எப்படி விஷ்ணு ஒருத்தரே புருஷோத்தமன் என்றும் த்ரிநேத்ரரான சிவன் ஒருத்தரே மஹேச்வரன் என்றும் கருதப்படுகிறார்களோ, அப்படி…” என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டு போகிறார். பரமசிவனைப் புருஷோத்தமன் என்று சொல்லும் வழக்கமே கிடையாது. ‘புருஷ உத்தமன்’ தான் ‘பெரும் ஆள்’-‘பெருமாள்’ என்று ஆனது. பெருமாள் கோவில் என்றால் விஷ்ணு ஆலயம் தானே? சிவனுடையதில்லையே? அப்படியே, ஈச்வரன் கோவில் என்றால்…?

இப்படி ‘அமரகோசம்’, மஹாகவியின் வாக்கு, லோக வ்யவஹாரம் மூன்றிலும் ஈச்வர சப்தத்தால் குறிக்கப்படும் சிவனை க்ருஷ்ண பரமாத்மா சொன்னாரா, அல்லது வேதாந்த பரிபாஷைப்படி ஸகுண ப்ரம்மத்தைச் சொன்னாரா என்று கேட்டால், இந்த இடத்திலே சிவனைச் சொன்னதாகத்தான் அடுத்தாற்போல் நடப்பதிலிருந்து தெரிகிறது. அடுத்தாற்போல் என்ன நடக்கிறது? பகவான் விச்வரூபம் காட்டுகிறார். ஆனால் மாயா மோஹனனாக ஜகத் பரிபாலனம் பண்ணி விளையாடும் மஹாவிஷ்ணுவாகவா அந்த விச்வரூபத்தில் அவர் (தம்மைக்) காட்டினார்? இல்லை. ப்ரளய கால ருத்ரனாகத்தான் காட்டினார்! அவரே,

“காலோ (அ)ஸ்மி லோக-க்ஷய-க்ருத் ப்ரவ்ருத்த: (XI.32)

-“உலகை அழிக்கும் மஹாபலம் கொண்ட காலனாக இருக்கிறேன்” என்கிறார்! கால காலனான பரமசிவனுக்கே மஹா காலன் என்று பெயர். உஜ்ஜயினியில் அந்தப் பெயரில்தான் ஜ்யோதிர்லிங்கமாயிருக்கிறார்.

பரம லாவண்ய மூர்த்தியாக வேணுகானம் பண்ணுபவனை இந்த உக்ரரூபத்தில் பார்க்கவே அர்ஜுனனுக்குக் குலை நடுங்குகிறது! ஸம்ஹார மூர்த்தியாக, ஆகாசத்துக்கும் பூமிக்குமாக விச்வரூப தர்சனம் தந்தால்? அர்ஜுனன் “ஐயோ, அப்பா!” என்று அலறிப் புடைத்துக் கொண்டு, “இந்த உன்னுடைய உக்ரரூபத்தைப் பார்த்து த்ரிலோகமும் நடுங்குகிறது. ததா (அ)ஹம் : நானும் அப்படியே! அக்னிஜ்வாலை வீசும் உன் கண்ணைப்பார்த்தால், காப்ராவில் என் தைர்யம் போன இடம் தெரியவில்லை! உன் கோரைப்பல்லையும், ப்ரளயாக்னி வீசும் வாயையும் பார்த்தால் எனக்கு திக்குத் திசையே புரியவில்லை!

இங்கே (போர்க்களத்தில்) கூடியிருக்கிற அத்தனை ராஜாக்களும், கௌரவ ஸமூஹமும், பீஷ்ம த்ரோணாதிகளும், கர்ணனும், நம்படைகள் உள்பட எல்லாரும் நீ பயங்கரமாகத் திறந்து கொண்டிருக்கும் வாய்க்குள் போய் அரைபட்டு, உன் பல்லுக்கு நடுவில் சூரணமாக ஈஷிக்கொண்டிருக்கிறார்களே!” என்றிப்படி விலவிலத்துப்போய் பெரிய ஸம்ஹாரமூர்த்தியாகத்தான் அந்த விச்வரூபத்தை வர்ணிக்கிறான்.

பூமாதேவி துஷ்ட அரசர்களின் பாபத்தைத் தாங்க முடியாமல் முறையிட்டதன் பேரில்தான் க்ருஷ்ணாவதாரமானது பூபாரம் தீர்ப்பதான ஸம்ஹார உத்தேசத்துடன் ஏற்பட்டது. ‘விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று ருத்ரனின் ஸம்ஹார க்ருத்யம் மற்ற அவதாரங்களிலும் நடந்தது தானென்றாலும், க்ருஷ்ணாவதாரத்திலேயே அது ஒரு நீண்ட ஆயுஸுக்காலத்தில் ஆரம்பத்திலிருந்து ஏறக்குறைய கடைசிவரை நெடுக நடந்தது.

மத்ஸ்ய, வராஹ, நரஸிம்ஹ அவதாரங்களில் சட்டென்று ஒரு ஸந்தர்பத்தில் ஆவிர்பாவம், ஒரு அஸுரனை அல்லது அஸுரக் கூட்டத்தை வதம் செய்வது என்பதோடு ஸரி. கூர்மம் அமிருதம் கடைந்த காலத்தில் மத்தாக இருந்த மந்தர மலையைத் தாங்கியதோடு ஸரி. வாமனாவதாரம் ப்ரம்மசாரியாக சில வருஷங்கள் லோகத்திலிருந்து, மஹாபலிக்கு ஸம்ஹாரம் என்று சொல்ல முடியாத பரமாநுக்ரஹமாகப் பண்ணியே அவனிடமிருந்து பூலோக, ஸ்வர்க லோகங்களை மீட்டது. பரசுராமர் ரொம்பவும் நீண்டகாலம், 21 தலைமுறை துஷ்டராஜாக்களை ஸம்ஹாரம் செய்தாலும் தனியாட்களைத்தான் கொன்றாரே தவிர ஸேனை ஸேனையாக வதம் செய்யவில்லை. ராமர் முதலில் பால்யத்தில் ஸுபாஹு மாரீசரோடு ஒரு சின்ன ராக்ஷஸ கோஷ்டி, அப்புறம் பல வருஷத்திற்கு அப்புறம் தண்டகாரண்யத்தில் விராதன், பிறகு 14,000 கர, தூஷணாதி ராக்ஷஸர்கள், அதற்கப்புறம் மிகப் பெரிய ராவண ஸைன்யம் என்று நாலைந்து ஸந்தர்ப்பங்களில்தான் ஸம்ஹாரம் செய்தார். நடுவில் கபந்தன், வாலி மாதிரியான தனி ஆஸாமிகளின் வதமும் நடந்தது. பிற்பாடு லவணாஸுரவதம் சத்ருக்னனால் நடந்தது. க்ருஷ்ணர்தான் பிறந்தவுடன் பூதனையில் ஆரம்பித்து, அப்புறம் சகடாஸுரன், த்ருணாவர்த்தன், பகாஸுரன் என்று கம்ஸன் வரையில் போய் ஒரு பட்டாளத்தை பால்யத்திலேயே ஸம்ஹரித்து விட்டு, அப்புறம் எழுபது எண்பது வருஷம் ஒன்று மாற்றி இன்னொன்று என்று — ஜராஸந்தனின் பெரிய ஸேனையைத் திரும்பத் திரும்ப அழித்து, காலயவனன் போன்றவர்களையும் மறைமுகமாகக் கொன்று, அப்புறம் ருக்மிணி விவாஹத்தில் மச்சினன்மார்களுடனேயே சண்டை (கொல்லவில்லை), நரகாஸுரனுடன் யுத்தம், பாண்டவர்களைக் கருவியாகக்கொண்டு மிகப் பெரிய மஹாபாரத யுத்தம், தாத்தாவான பிறகுகூட பேரன் அநிருத்தனை ஜெயிலில் வைத்த பாணாஸுரனுடன் யுத்தம் என்று விடாமல் பண்ணி ருத்ர பாவத்தை நன்றாகக் காட்டினார். அவரே ஸபஷ்டமாக,

காலோஸ்மி லோக க்ஷயக்ருத் ப்ரவ்ருத்த: |
லோகாந் ஸமாஹர்த்தும் இஹ ப்ரவ்ருத்த: ||

“நான் லோகத்தை அழிக்கும் பலவானான காலனாக இருக்கிறேன். லோகங்களை ஸம்ஹரிக்கவே இங்கே வந்திருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இது மிகைப்படுத்திச் சொன்னதுதான். வாஸ்தவத்தில் அவர் லோகம் முழுதையும் ஸம்ஹாரம் செய்து விடவில்லை. அவதாரத்தை முடித்தபோது லக்ஷோபலக்ஷம் கௌரவ-பாண்டவர்கள் செத்துப்போய், யது வம்சமும் அழிந்து போயிருந்தாலும் அப்போதும் நிறைய ப்ரஜைகள் பாக்கியிருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மேல்தான் பரீக்ஷித்து ஆட்சி செலுத்தினான். ஏன் மிகையாகச் சொன்னாரென்றால், ……இவரே தேரை ஒட்டிக்கொண்டு வந்து அர்ஜுனனை யுத்த பூமியில் நிறுத்தியிக்கும்போது அவன், ‘யுத்தமா, பண்ணுவதா?’ என்று முரண்டு பண்ணுகிறான். ‘டேய், நீ இல்லாவிட்டாலும் நானே தீர்த்துக் கட்டி விடுவேண்டா! அதுதான் என் ஸங்கல்பம். உனக்கு வெற்றி வீரன் என்று யசஸ் சேர்க்கணுமென்றே போனால் போகிறதென்று உன்னை எனக்குக் கருவியாக ‘சூஸ்’ பண்ணினேன்’ என்று பகவான் அவனுக்குச் சொல்ல வருகிறார். அது அவனுக்கு நன்றாக மனஸில் தைக்கணுமானால் இப்படி மிகைப்படுத்தித்தான் சொல்லணும்…….ஒரு ஸத்கார்யம், ஆயிரம் ரூபாய் வேண்டியிருக்கிறது, நாமே போட்டுப் பண்ணிவிடலாம். ஆனாலும் நாலுபேருக்குப் புண்யம் வரட்டுமே என்று நினைத்து ஒருத்தனிடம் போய்க் கேட்கிறோம். அவன் மூக்கால் அழுகிறான். அப்போது, “அடேய், உன் ஸஹாயமில்லாமல் நானே லக்ஷரூபாய் போட்டுப் பண்ணிவிட முடியும்டா” என்று, — நமக்கு வேண்டியது ஆயிரம்தான், நம்மால் முடிந்ததும் அவ்வளவுதான் என்றாலும்கூட — அதை ஒரே தூக்காக லக்ஷம் என்று தூக்கித்தானே சொல்வோம்? அப்படித்தான், துஷ்ட ஜன ஸம்ஹாரத்திற்கு மட்டுமே வந்த பகவான் ஸர்வ லோகத்தையுமே ஸம்ஹரிக்க வந்ததாகச் சொன்னார்! அப்படிச் சொல்லும்போதே இப்படி ஸர்வலோக ஸம்ஹாரம் செய்வது ப்ரளய கால ருத்ரனே ஆனதால், தானும் அவனும் ஒன்றுதான் என்று தெரிவித்துவிட்டார்!

ஒரு பரமாத்மாதான்-சிவன், விஷ்ணு என்று இரண்டு ரூபத்தில் இரண்டு பேருக்கும் தாங்கள் பரமாத்மா என்று தெரியும். அதோடு ஈச்வரனுக்குத் தானே விஷ்ணுவென்றும், விஷ்ணுவுக்குத் தானே ஈச்வரனென்றும் தெரியும். கீதையில் அப்படித்தான், ‘யோகம் ஐச்வரம்’ என்று ஈச்வரனுக்குரியதான யோகத்தைத் தாம் காட்டுவதாகச்சொல்லி ஸம்ஹார க்ருத்யத்தைக் காட்டினார்.

ஆனால், லோக வ்யவஹாரம் என்பதைப் பல தேவதைகள் அவரவருக்கென்று ஒரு பொறுப்புடன் நடத்துவது போலவே விளையாட வேண்டும். ராஜாங்க அதிகாரிகள் இன்னார் இன்ன இலாகா என்று கார்யம் செய்வதுபோல தேவதைகளுக்கு ஒழுங்காக வகுத்துக் கொடுத்து விளையாட்டை நடத்தவேண்டும் என்பதுதான் ஏக பரமாத்மா பல ரூபம் போட்டுக்கொண்டதற்குக் காரணம். இதில் மஹாவிஷ்ணு, ஈச்வரன் என்று இரண்டு ரூபம் எடுத்துக் கொண்டு ஒன்றில் சக்ரவர்த்தியாயிருந்து லோக நிர்வாஹம் செய்வது, இன்னொன்றில் யோகியாயிருந்து லோகத்திலிருந்து ஜீவர்களை விடுவிப்பது என்று விளையாட்டுப் பண்ணுகிறார். இது நிரந்தர விடுதலை.

முன்னேயே சொன்னாற்போல, விடுவிப்பதில் இரண்டு தினுஸு. நிரந்தரமாக விடுவிப்பது ஒன்று. அது ஞானத்தினாலேயே நடப்பது. அதைச் செய்வதற்காக ஞான ஸ்வரூபமான தக்ஷிணாமூர்த்தி யோகியாயிருக்கிறார். இன்னொன்று, தாற்காலிகமாக விடுவிப்பது. ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெற லாயக்கே இல்லாதவர்களுக்கும், ‘ஐயோ, பாவம்!’ என்று தாற்காலிகமாக ஓய்வு தருவது. அதுதான் ப்ரளயம். ‘ப்ரளயம்’ என்ற வார்த்தையைக் கேட்டால் பயங்கரமாக இருந்தாலும் அதற்கு நிஜ அர்த்தம், ‘நன்றாகப் பரமாத்மாவின் அமைதியில் லயித்துப் போவது’ என்பதே. ப்ர-லயம்: ‘ப்ர’, நன்றாக; ‘லயம்’, லயிப்பது. ‘ஸம்ஹாரம்’ என்று கோர க்ருத்யமாகத் தெரிவதற்கும் அர்த்தம், ஸ்ருஷ்டியில் வெளிவந்ததை ஆதியிலிருந்த அமைதி நிலைக்கே பழையபடி இழுத்துச் சேர்த்துவைப்பது என்பதுதான். ஆனால் இது நிரந்தரமான முக்தியில்லை. முக்தியில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா மறுபடி பிரிக்கமுடியாமல் ஒன்றாகப் போய்விடும். லயிப்பது என்றாலோ லயம் கலைந்தபிறகு அடுத்த ஸ்ருஷ்டியில் ஸம்ஸாரத்துக்கு வரவேண்டியதுதான் என்று அர்த்தம். ஆனாலும் அத்தனை காலமாவது, லாயக்கே இல்லாத ஜீவனுக்கும் ஈச்வரன் ருத்ரனாக இருந்து வாழ்க்கையின் ஓயாத சஞ்சலங்களிலிருந்து ஓய்வு தருகிறான். சித்த சுத்தியோடு கர்மாக்களைக் கழித்துக்கொண்டு ஞான மார்க்கத்தில் செல்பவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் குருவாக வந்து பரம சாந்தனாகவும் பரம ஹிதமாகவும் ஸம்ஸார விடுதலை தரும் போதோ அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வெகுமதியாக நிரந்தர முக்தியாகவே தருகிறான். தகுதியில்லாதவர்களுக்கும் தாற்காலிக முக்தி தரும்போது அப்படி சாந்தமாக, ஹிதமாகப் பண்ணலாமா? அப்போது ‘எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகலாம்’ என்று ஜனங்களுக்குக் குளிர்விட்டுப் போய்விடுமல்லவா? அதனால்தான் சாந்த ஸ்வரூபியாகப்போய் ப்ரளயத்தை உண்டுபண்ணாமல் ருத்ரனாக பயங்கர ஊழித்தாண்டவம் செய்து கார்யத்தை முடிக்கிறான். பயமுறுத்தி, கஷ்டப்படுத்தி, ஆனாலும் பெரிய சாந்த நிலையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். இது இருக்கட்டும்.

இவரிவருக்கு இன்ன கார்யம் என்று தேவதைகளுக்கிடையே பரமாத்மா வைத்திருக்கிறான் என்றேன். ஒருத்தர் டிபார்ட்மென்டில் இன்னொருத்தர் தலையிட்டால் ஒழுங்கு போய்விடும். ஆனாலும் எல்லாதேவதைகளும் முடிவில் ஒன்று தான் என்ற அபேத பாவமும் உலகத்திலிருக்கவேண்டும். இல்லாவிட்டால், “என்னுது, உன்னுது” என்று (தெய்வ பேதம் செய்து) கட்சி கட்டிக்கொண்டு ஒரே சண்டையாகத் தான் ஜனங்கள் நிற்பார்கள். ஆனால் பரமாத்மாவின் ஏற்பாட்டில் எப்படியிருக்கிறதென்றால், ஈச்வரன் (சிவன்), விஷ்ணு, அம்பாள் போன்ற முக்ய தேவதைகள் தங்களுக்குள் அபேதத்தைக் காட்டுவதாக எந்தப் பொறுப்பையும் ஏற்று, எந்த டிபார்ட்மென்டையும் நடத்தலாம் என்றிருக்கிறது. சின்ன தேவதைகள் இப்படிச் செய்யமுடியாது. முக்ய தேவதைகளும் ஓரொரு ஸமயத்தில் ஓரளவுக்குத்தான் இலாகாக்களை மாற்றிக்கொண்டு பண்ணுவது. ஒரேயடியாக மாற்றிக் கொள்வதில்லை.

க்ருஷ்ணருக்கு முற்பட்ட அவதாரங்களில், சட்டென்று கொஞ்ச நாழிக்கு மட்டும் ஒரு ஆவிர்பாவம் பண்ணியோ, அல்லது சில வருஷமோ பல வருஷமோ பூலோகத்தில் மநுஷன் மாதிரி வாஸம் பண்ணியோ தப்புக் கூட்டங்களை அழித்து, வேத தர்மத்தை விளங்கும்படிச் செய்வது என்றிருந்தது. அதாவது ஒரு ராஜா சத்ருக்களை வதம் பண்ணி தர்ம மார்க்கத்தில் ராஜ்யபாரம் செய்வதுபோல அவை இருந்தன. இதனால் லோக பரிபாலனத்தில் ராஜாவாக உள்ள மஹாவிஷ்ணுவே அவதாரங்கள் எடுத்து க்ஷத்ரிய தர்மப்படி யுத்தம் செய்வது, பரிபாலிப்பது என்று பண்ணினார். யுத்தத்தில் ஈச்வரனின் ஸம்ஹார அம்சத்தை எடுத்துக்கொண்டார். க்ருஷ்ணாவதாரத்தில், நாம் பார்த்தபடி, ஈச்வர ஸ்வபாவத்தை ஸம்ஹார விஷயத்தில் வெளிப்படையாகவே சொல்லி எடுத்துக்கொண்டார்.

அதோடு ஈச்வரனின் இன்னொரு கார்யமான ஞானோபதேசத்தையும் அந்த அவதாரத்தின் கடைசி பாகத்தில் செய்தார்.

அதற்கு முற்பட்ட அவதாரங்களில்2 ஞானோபதேசம் இல்லை. அதைச் செய்ய அக்காலங்களிலிருந்த ஞானிகளும் மஹான்களுமே போதுமாக இருந்தது. இவர்கள்கூடத் தாங்களே ஜனங்களைத் தேடிப்போய் மல்லுக் கொடுத்து உபதேசிக்க அதிகத் தேவையில்லை; அவதாரத்தினால் துஷ்ட ஸம்ஹாரம் ஆன பிற்பாடு, ஜனங்கள் தாங்களாகவே பழையபடி தர்ம வழிகளில் போவதாகவும், மஹான்களைத் தாங்களே அதிகமாகத் தேடிப்போய் உபதேசம் வாங்கிக்கொள்வதாகவும் இருந்துவந்தது.

க்ருஷ்ணாவதார காலத்தில் அஸுரர்கள் மநுஷரூபமான அரசர்களுக்குள் நன்றாகக் குடிகொண்டபோது, பொது ஜனங்களின் அறிவிலும் கொஞ்சம் புகுந்தனர். கலி மாதிரி ஒரேயடியாக இல்லை, கொஞ்சம்தான். ஆனாலும் கொஞ்சமாவது இப்படி ஏற்படத்தான் செய்தது. அதனால்தான் அர்ஜுனன் மாதிரியான ஒரு உத்தம புருஷன்கூட, முக்யமான ஒரு ஸந்தர்பத்தில் தர்மாதர்ம விவேகம் கலகலத்துப்போய், ஸ்வதர்மத்தை மறந்து, ‘நான் யுத்தம் பண்ணமாட்டேன்’ என்று சொல்லித் தனக்கு ஸாதகமாகத் தப்பான கொள்கைகளுக்கு உயர்ந்த ஃபிலாஸஃபி மாதிரி ரூபம் கொடுத்துச் சொன்னது. இதனாலேயே, அவதாரமாக வந்தவர் ஞானோபதேசமும் பண்ணவேண்டி வந்தது.

ஆனாலும் — பரிபாலனத்தைக் கடமையாகக் கொண்ட ஒரு சக்ரவர்த்தி அதன் பொருட்டே துஷ்ட சிக்ஷணம் பண்ண வேண்டும் என்றிருப்பதால், மஹாவிஷ்ணுவான சக்ரவர்த்தி ஈசவரனின் ஸம்ஹார க்ருத்யத்தை மேற்கொள்வதுபோல ஞானோபதேசத்தையும் மேற்கொள்வதற்கு நியாயம் சொல்ல முடியாது. சக்ரவர்த்திக்கு ஞானோபதேசப் பொறுப்பு கொடுக்கப்படவில்லை…

அடியோடு கொடுக்கவில்லை என்று நினைத்துவிடக் கூடாது. ஜனங்களை ‘விநயம்’ உள்ளவர்களாக, அதாவது பண்பாளர்கள் என்னும்படியாக ஆக்கவேண்டியதும் ராஜாவின் ஒரு கடமைதான். ஜனங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பதான “ரக்ஷணம்”, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வசதிகள் செய்து கொடுப்பதான “பரணம்” என்ற இரண்டிற்கும் முந்தியே ராஜாவின் முதல் கடமையாக அவர்களுக்கு ‘விநய ஆதானம்’ செய்யவேண்டும் — அதாவது அவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டவேண்டும் — என்று காளிதாஸன் சொல்லியிருக்கிறார்3. இதில் ஞானோபதேசமும் கொஞ்சம் வந்துவிடும்தான். ஆனாலுங்கூட ராஜாவே இந்த ‘விநயாதான’த்தை, அதிலும் குறிப்பாக ஞானோபதேசத்தைச் செய்ய வேண்டுமென்று இல்லை. ஸத்துக்களை, நல்ல ஆசார்யர்களை, ரிஷிகளை, ஞானிகளை ராஜாவானவன் நன்றாக ஆதரித்து பஹுமானித்து வைத்துக்கொண்டு, அவர்கள் மூலமே ஜனங்களின் ஆத்ம ச்ரேயஸுக்கான விஷயங்களை வளர்த்துக் கொடுக்கவேண்டுமென்றுதான் சாஸ்த்ரங்கள் காட்டுகின்றன.

அத்யாவச்யத்தில் சக்ரவர்த்திகளும் உபதேசிக்கலாம் என்றாலும் அதைத் தன்னுடைய முக்யமான நோக்கமாக அவர்கள் வைத்துக்கொள்ள முடியாது. புராணங்களில் அநேக ராஜாக்கள் ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் உபதேசம் செய்வதைப் பார்க்கிறோம். துஷ்டர்கள்கூட உபதேசிப்பார்கள். “அஸுர வேதாந்தம்” என்றே அதைச் சொல்வது! ஆனாலும் க்ஷத்ரிய தர்மம், ராஜாவின் கடமை என்னவென்றால் லோகத்தில் தர்ம பரிபாலனமே தவிர, லோகத்தை விட்டுப் போகும் ஞானத்தில் உபதேசம் அல்ல. அது ப்ராம்மண தர்மமாக வைக்கப்பட்ட கார்யம். யோகிகளுக்கும் ஞானிகளுக்குமே அதில் முக்யமாக அதிகாரம்.

க்ஷத்ரிய தர்மத்தை மேற்கொண்ட லோகத்தில் தர்ம ஸம்ஸ்தாபனம் நடக்கவேண்டியிருந்த காலத்தில் பரமாத்மா அதை லோக பரிபாலக சக்ரவர்த்தியாக இருக்கப்பட்ட மஹாவிஷ்ணுவின் அவதாரங்களாலேயே நடத்திவைத்தார். ராமர் க்ஷத்ரியராகப் பிறந்தார். அதே ஸமயம் பரம ஸாத்விகராக இருந்தார். பரசுராமர் ப்ராம்மணராகப் பிறந்தாலும் ஸாத்விகமாக இல்லாமல் க்ஷாத்ரமான (க்ஷத்ரியருக்குரிய) ரஜஸுடனே இருந்தார். இருவரும் அதர்ம சக்திகளை ஒவ்வொரு விதத்தில் அழித்து, உலகில் தர்மம் நிற்கும்படிச் செய்தார்கள். வாமனர் ப்ராம்மணரானாலும் தானம், யாசகம் என்று மறைமுகமாக விளையாடி, அஸுரனின் தலையில் காலை வைத்து அழுத்துவதாகக் காட்டியே அவனுக்குப் பரமாநுக்ரஹம் பண்ணி ஒரே விசித்ரமாக முடித்து விட்டதால் அவரைப்பற்றி ஒன்றுமே சொல்ல முடியாமலிருக்கிறது! மஹாபலியும் மற்ற அஸுரர்கள் மாதிரியில்லாமல் அநேக உயர்ந்த குணங்களைப் பெற்றிருந்ததால் இந்தக் கதையே ஒரு மாறுதலாயிருக்கிறது. ஆனாலும் யோசித்துப் பார்த்தால், அவனுக்கு அஸுரர்களுக்கு உரியதான கீழ் லோகத்தில் மட்டுமே ஆதிக்யம் என்று அவன் தலையில் பகவான் கால் வைத்து அழுத்தி அனுப்பிவிட்டதால், இங்கேயும் லோக வியவஸ்தைகளை அமல் செய்யும் க்ஷத்ரிய ராஜ தர்மத்தைத்தான் அவர் மற்ற அவதாரங்களில் செய்தாற் போலவே செய்திருக்கிறாரென்று தெரிகிறது.

மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரஸிம்ஹம் என்று ‘ம்’ போட்டு-வாமனர், பரசுராமர், ராமர் என்பது போலில்லாமல், ‘ம்’ போட்டு-சொல்வதிலிருந்தே அந்த அவதாரங்களுக்கு ஜாதி சொல்லமுடியாதென்று தெரிகிறது! என்றாலும் க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அவையும் அவலம்பித்திருக்கின்றன. அதர்ம சக்தியான அஸுரரை அடக்கி அதன் வழியாகவே தர்ம பரிபாலனம் நடக்கத்தான் அந்த அவதாரங்களும் ஏற்பட்டன. (அஸுரர்களுக்கு எதிரான தேவர்கள் அம்ருதம் பெற்று பலசாலிகளாகவும், மரணமில்லாதவர்களாகவும் ஆவதற்கு ஸஹாயம் செய்ய ஏற்பட்டதுதான் கூர்மாவதாரம்.) பலராமாவதாரம் க்ருஷ்ணாவதாரத்துடனேயே ஒட்டிக்கொண்டு போய்விடுகிறது. தம்பிக்கு வித்யாஸமாக அண்ணா போவதுகூட முடிவில் தம்பிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவே இருக்கும். அல்லது, நல்லது என்பது உள்பட எதுவானாலும் இந்த த்வைத ப்ரபஞ்சத்தில் ‘ரிலேடிவ்’ தான் என்றிருப்பதில், தம்பி ஒரு கோணத்தின் ந்யாயத்தைக் காட்டினாரென்றால் அண்ணா இன்னொன்றின் ந்யாயத்தைக் காட்டினார் என்று சொல்லலாம். அவரும் (பலராமரும்) மொத்தத்தில் துஷ்ட சிக்ஷணத்தின் மூலம் சிஷ்டரக்ஷணம் என்ற க்ஷத்ரிய தர்மத்தைத்தான் நடத்தினார்.

க்ருஷணர்தான் அதோடுகூட ப்ராஹ்மண தர்மமான ஞானோபதேசத்தையும் செய்தார். ஜீவிதத்தின் கடைசி பாகத்தில் அதற்கு அவச்யமேற்பட்டதால் செய்தார்.

அப்புறம், இப்போது, கலியில் துஷ்ட சிக்ஷணம் செய்வதற்கேயில்லை என்பதாக அஸுர சக்திகள் ஸர்வஜன வியாபகமாகியிருந்தன. ஆனபடியால் இப்போது அவதார கார்யம் பரம ஸாத்விகமான உபதேசம்தான்; அது ஆயுள் காலம்பூரா நடக்கவேண்டும் என்றாகியிருந்தது. ஆனபடியால் ப்ராம்மண தர்மத்தை மேற்கொண்ட ஞானியாகவே இப்போது அவதாரம் ஏற்படவேண்டியிருந்தது.

இந்த அவதாரமும் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக இருக்கலாமா? சிவனுடைய ஸம்ஹாரத்தை அவர் மேற்கொண்டது க்ஷத்ரிய தர்மத்துக்கு முற்றிலும் உகந்ததே என்று பார்த்தோம். அந்த மாதிரி ஞானோபதேசத்தை மேற்கொண்டு பூர்ணமான ஞானாவதாரமும் அவரே எடுப்பதைச் சொல்லமுடியுமா? மஹாவிஷ்ணுவும் பரிபூர்ண ஞான ஸ்வரூபிதான். அதில் கொஞ்சங்கூட ஸந்தேஹமில்லை. அவர் ஞானாவதாரம் பண்ணினால் ஈச்வரனும், “ஏனையா, என் டிபார்ட்மென்டில் குறுக்கிடுகிறீர்?” என்று சண்டைக்கு வரப்போவதில்லை. ஸந்தோஷமாகப் பார்த்துக்கொண்டே, தாமும் ஸஹாயம் செய்ய வருவார். ஒருத்தர் ரிஷிபத்னிகளை மயக்க பிக்ஷாண்டியாகப் போனால், அவருக்கு ஸஹாயமாக அவரோடு கூடவே மற்றவர் ரிஷிகளை மயக்குவதற்கு மோஹினியாகப் போனதுபோலவே, மயக்கத்தைத் தீர்த்து ஞானம் தருவதிலும் இவருக்கு ஸஹாயமாக வர ஈச்வரன் தயாராகத்தான் இருப்பார். (அந்தக் கதையில் மயக்கியதும் ஞானம் தருவதில்தான் முடிந்தது.) ஈச்வரனுக்கும், விஷ்ணுவுக்கும் அவ்வளவு ஒற்றுமை.

ஆனாலும் விஷ்ணுவுக்கேதான் ஈச்வரனுடைய ஸம்ஹார க்ருத்யத்தைத் தாம் மேற்கொள்ளுகிற அளவுக்கு அவருடைய ஞானோபதேசத்தையும் தாமே மேற்கொள்ளுவதா என்று! ஞானோபதேசப் பெருமை, ‘க்ரெடிட்’ ஈச்வரனுக்கே இருக்க வேண்டுமென்று! அவச்யம் நேரிட்டபோது அவரும் சிவ ஸாம்யத்தைக் காட்டுகிறமாதிரி ஞானியாக தத்தர், ரிஷிபர், நர-நாராயணர், வ்யாஸர் முதலியவர்களாக வந்து உபதேசித்த போதிலும் இவர்களை தசாவதாரம்போல அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக, ஜகத் ப்ரஸித்தமாகக் காட்டாமல் அடக்கியே காட்டினார் ‘ஞானாநந்தமயம்’ என்னும்படி ஹயக்ரீவர் என்ற ரூபம் எடுத்துக்கொண்டபோதும் அவருடைய பெருமை ஸாதனா மார்க்கத்தில் போகிறவர்களுக்கு மட்டுமே தெரியும்படி வைத்துக்கொண்டார். அதோடு அவரைப் பத்னி ஸமேதராக ‘லக்ஷ்மி ஹயக்ரீவர்’ என்றே சொல்கிறதாக வழக்கமிருக்கிறது.

பொதுவாகவே லோக வழக்கில்கூட ‘சிவஞானம்’, ‘சிவயோகம்’ என்று சொல்வதுபோல ‘விஷ்ணு ஞானம்’, ‘விஷ்ணு யோகம்’ என்றில்லாமல், ‘விஷ்ணு மாயை’ என்றே சொல்லும்படியாக, தம்மை ‘மாயாவி’ என்றும் ‘லீலாவிநோதன்’ என்றும் சொல்லும்படியாகவே (மஹாவிஷ்ணு) வைத்துக்கொண்டிருக்கிறார்.

ஆகையால் இப்போது தர்மத்துக்குப் பெரிய ஹானியும் அதர்மத்துக்குப் பெரிய எழுச்சியும் ஏற்பட்டிருந்தபோது கீதா வாக்யப்படி அவதாரம் எடுத்துத்தான் ஆகணும் என்றும், ஆனால் அது க்ஷத்ர தர்மப்படியில்லாமல், துஷ்ட சிக்ஷணமேயில்லாத, ஸாத்விகமான ஞானோபதேசத்திற்கே ஏற்பட வேண்டும் என்றும் ஆனபோது, அது சிவாவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று (மஹாவிஷ்ணு) நினைத்தார்.

பரமசிவனோடு ஒன்றாகவே இருப்பது, வேறே மாதிரியும் இருப்பது என்று இரண்டு விதமாக அவர் பண்ணுவார். ஒன்றாக இருப்பது, ஸத்யமான ஞான நிலையில், வேறு மாதிரி இருப்பது, வ்யவஹாரத்தில் ஸத்யம் மாதிரித் தெரியும் லோக லீலையில்.

விச்வரூப தர்சனத்தின்போது, “பச்ய மே யோகம் ஐச்வரம்” என்று ஈச்வரனின் தன்மையைத் தம்முடையதாகவே ஒன்றுபடுத்திச் சொன்னவர். கடைசி அத்யாயத்தில் அவன் தமக்கு வேறுபட்டுள்ள மாதிரி,

“ஈச்வர: ஸர்வ பூதாநாம் ஹ்ருத்-தேசே (அ)ர்ஜுந திஷ்டதி |
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ராரூடாநி மாயயா ||
தமேவ சரணம் கச்ச”

என்கிறார்: “எல்லாவற்றின் ஹ்ருதயத்திலும் ஈச்வரன் என்று ஒருத்தன் இருக்கிறான். மாயாசக்தியால் எல்லாவற்றையும் குடைராட்டின பொம்மைகளைப்போல ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். “தமேவ”, “தம் ஏவ”- அவனையே சரண் அடை!” என்கிறார்.

ஒரு இடத்தில் மே என்று தன்னோடு ஒன்றுபடுத்திச் சொன்னவர், இன்னோரிடத்தில் தம் — ‘அவனை’-என்று பிரித்துச் சொல்கிறார்!

அப்படியானால் பிரித்தே வைத்துவிடலாமா என்றால் அதற்கும் விடமாட்டேன் என்கிறார்! இங்கே ‘ஸர்வ பூத ஹ்ருதயத்திலும் ஈச்வரன் இருக்கிறான்’ என்றவரே முன்னாடி விபூதி யோகத்தில் ‘ஸர்வ பூதாசயத்திலும் நான் ஆத்மாவாயிருக்கிறேன்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

அஹம் ஆத்மா குடாகேச ஸர்வபூதாசய ஸ்தித:

‘ஆசயம்’ என்றாலும் ‘ஹ்ருதயம்’ என்றாலும் ஒன்றேதான்.
ஹ்ருதயவாஸியாக ஈச்வரனைச் சொல்லும் இடத்திலும், மாயையினால் ஆட்டிப் படைப்பதான தம்முடைய கார்யத்தை அவன் செய்வதாகவே சொல்கிறார்!

இங்கே, ‘ஈச்வரனிடமே சரணாகதி பண்ணு’ என்றவர் நாலே ச்லோகம் தள்ளி உபதேசத்தைப் பூர்த்தி செய்யும் போது ‘என்னொருத்தனிடமே சரணாகதி பண்ணு’ — மாம் ஏகம் சரணம் வ்ரஜ — என்கிறார்! ‘இப்படி மாத்தி மாத்திச் சொல்றயே!’ என்றால், “நான் ஒண்ணும் மாத்தலை. ‘மாம் ஏகம்’னா இருக்கறதே நான் ஒண்ணுதான்னு அர்த்தம். அப்புறம் இந்த ஒண்ணுக்கு வேறேயா ஏது ஈச்வரன்? நான், அவர் இரண்டு பேரும் ஏகமான ஒரு பரமாத்மாதான். விளையாட்டு ருசிக்காகத்தான் கொஞ்சம் மாத்தினாப்பலேயும் சொல்றது” என்பார்!


1கீதை IX – 8

2உலகில் பிரசித்தமாயுள்ள தசாவதாரங்களை கருத்தில் கொண்டு கூறியது; இருபத்து நான்கு அவதாரங்களையல்ல.

3ரகுவம்சம் 1.24

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அந்தண குல அவதாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஞான சிவனே ஞானாவதாரமாவது
Next