“பாத பூஜைக்கார” ரின் பெருமை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அந்நிய தேவதைகளை ஆராதிக்க விரும்புகிறவர்கள்கூட இந்த யாரோ ஒருவருடைய பாத கமலங்களை நிச்சயம் ஆராதித்தாலே தங்களுடைய தேவதாராதனத்துக்கு இடையூறு இல்லாமல் பண்ணிக்கொள்ளலாமென்று அறிந்திருக்கிறார்கள் — என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பதற்கு, இப்படி அறிந்திருப்பதால் அதற்கேற்ப இந்த யாரோ ஒருவருக்கு அவர்கள் பாதபூஜை பண்ணுகிறார்களென்றே அர்த்தம். ‘அந்தராயம்’ என்றால் விக்னம், இடையூறு. ‘அந்தராய ஹதயே’: விக்ன நிவாரணத்துக்காக. அதற்காக இந்த ஒருத்தரைப் பூஜை பண்ணியே தீரவேண்டுமென்று அவர்கள் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பண்ணினால் நல்லது என்று மட்டுமில்லை; பண்ணியே தீரணும், இது அவச்யம் செய்ய வேண்டிய கார்யம் என்று தெரிந்துகொண்டிருக்கிறார்கள்: கார்யம் து அவச்யம் (த்வவச்யம் என்று ஸந்தியில் வரும்) விது:

யார் இப்படி அவசியம் பூஜிக்கப்பட வேண்டியவரென்று இங்கே சொல்லிவிடவில்லை. ‘அபி’ (கூட) என்பதை முதலில் போட்டு அப்புறம் விஷயத்தைச் சொல்கிறது போல, முதலிலேயே ஒருத்தரை இன்னாரென்று சொல்லிவிடாமல் எவரோ ஒருத்தர் என்று சொல்லிப் பிற்பாடு “அந்த அவர்” என்று வெளிப்படுத்திச் சொல்வதும் ஸ்வாரஸ்யத்துக்காகக் கவிகள் கையாளுகிற ஒரு யுக்தி. அதை அநுஸரித்து இங்கே இன்னாருக்குப் பாதபூஜை பண்ணுவதாகச் சொல்லாமல் ‘எவருக்குப் பாதபூஜை பண்ணுகிறார்களோ’ என்று ‘யத்’ போட்டுச் சொல்லியிருக்கிறது. ‘யத் பாத பங்கேருஹ………’.

எவரை நேராக ஆராதிக்க வேண்டுமென்று உத்தேசிக்காமல் வேறு தெய்வத்தை ஆராதிக்க விரும்புபவர்கள் ‘கூட’-என்று ‘கூட’ப் போட்டுச் சொன்னதில் இந்த எவரோ ஒருவருடைய பெருமை தெரிகிறது. இவரை ஆராதிப்பது அவர்களுடைய முக்யமான நோக்கமில்லை. ஆனாலும் ‘கூட’ அவச்யம் இவரை ஆராதித்தாக வேண்டுமென்று கருதுகிறார்கள் என்றால், இவருக்கு அது ரொம்பப் பெருமைதானே? அந்த பாத பூஜைக்கார ஸ்வாமி யாராயிருந்தாலும் அவருக்கு இப்படிப்பட்ட பெருமை இருக்கிறது.

இதர தேவதாராதனத்தில் இடையூறு வந்தால் அதைத் தீர்க்க அந்த தேவதைகளுக்குச் சக்தி இல்லை, இவரொருத்தருக்குத்தான் உள்ளது. இல்லாவிட்டால் இவருக்கு எதற்கு அந்நிய தேவதா உபாஸகர்களும் பூஜை செய்யவேண்டும்? எந்த தேவதைதான் அவர்களுக்கு இஷ்டமூர்த்தியாக இருக்கட்டும், அதனுடைய பாரம்யத்தை (பரத்வத்தை, அந்த தேவதையை எல்லாவற்றையும் விட உசந்தது என்ற அபிப்ராயத்தை) அவர்கள் எத்தனைதான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாலும், அந்த மூர்த்திக்கு அவர்கள் செய்கிற பூஜைக்கே ஒரு விக்னம் வருமானால் அதை நிவிருத்தி செய்வதற்கு அதற்குப் ‘பவர்’ இல்லை என்றும், இவருக்குத் தான் ‘பவர்’ இருக்கிறதென்றும் ஒப்புக்கொள்வதால்தான் அவச்யம் இவர் காலைப் பிடிக்கணுமென்று கருதுகிறார்கள்.

‘எவருக்கு இப்படிப் பாதபூஜை பண்ணியாகணுமென்று கருதுகிறார்களோ’ என்று (ச்லோகத்தின் இரண்டாவது வரியில்) சொன்னதையடுத்து, (மூன்றாம் வரியில்) ‘எவரை தத்ஹேது ந்யாயம் அறிந்தவர் இவரே ஏகப் பரம்பொருளான தெய்வம் என்று உபாஸிக்கிறாரோ’ என்று சொல்லியிருக்கிறது.

இங்கேயும் இன்னார் என்று உடைத்து ஆஸாமியைச் சொல்லவில்லை. ‘எவரை’ (‘யம்’) என்றே குறிப்பிட்டிருக்கிறது. ‘யம் ஏகம் பரம்’, ‘தேவம் யம் ஏகம் பரம்’ என்று சொல்லியிருக்கிறது. இதில் குறிப்பாக எந்த ஒரு ஸ்வாமியின் பெயரும் இல்லை. இவர் தெய்வம் என்பதால் ‘தேவம்’. அத்தனை தெய்வங்களுக்கும் மூலம் ஒன்றேயான ப்ரஹ்மம் தானே? அதைத்தான் ‘ஏகம் பரம்’ என்று சொல்லியிருக்கிறது. இந்த எவரோ ஒரு மூர்த்தியை அத்விதீயமான பரவஸ்துவாகச் சொல்லியிருப்பது ஸ்தோத்ரம் பண்ணிய பெரியவரின் அபிப்ராயமாகவே ச்லோக அமைப்பில் த்வனிக்கக் கூடுமானாலும் அது தத்ஹேது நியாயமறிந்து அது காரணமாக இவரை–இவரை மாத்திரமே–உபாஸிக்கிறவரின் அபிப்ராயமும் ஆகும் என்பது ஆலோசித்துப் பார்த்தால் புரியும்.

பெயரைச் சொல்லாமலே ச்லோகத்தில் கொண்டு போயிருந்தாலும் ஆஸாமி யார் என்று நமக்குத் தெரியாமலில்லை. வேறு ஒரு ஸ்வாமிக்கான பூஜையானாலும் அதில் விக்னம் ஏற்படாமலிருப்பதற்காகப் பூஜிக்கப்படும் ஸ்வாமி இவர் என்பதால் விக்நேச்வரரைத்தான் ச்லோகம் குறிப்பிடுகிறது என்று புரிகிறது. விக்ன நிவ்ருத்திக்கே ஏற்பட்ட அந்த மஹாசக்தரைத்தான் தமிழில் குழந்தை ஸ்வாமியாகப் ‘பிள்ளையார்’ என்கிறோம். குழந்தை என்பதால் பிள்ளை. அதே சமயம் ஸ்வாமியாயும் இருப்பதால் ‘யார்’ போட்டுப் ‘பிள்ளையார்’ என்கிறோம்.

இந்த வரியில்தான் தத்ஹேது ந்யாயத்தைப் பிள்ளையாரோடு பொருத்தியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பாத தாமரை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'ந்யாயம்'அறியாதரும் அறிந்தவரும் பண்ணுபவை
Next