இரண்டு பக்திகளா? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இன்னம் கொஞ்சம் ஆலோசனை பண்ணிக்கொண்டு போனால், இதென்ன இரண்டு பக்திகள்? ஈச்வர பக்தி என்று ஒன்று, குரு பக்தி என்ற இன்னொன்று? அப்புறம் இரண்டும் ஸம எடையா என்று நிறுத்துப் பார்ப்பது? இப்படி வேண்டாம்! ஈச்வரன்தானே தன்னை நமக்குக் காட்டிக் கொடுப்பதற்காக குருவாக வந்திருக்கிறான்? அப்படித் தானே ஸகல சாஸ்த்ரங்களும் சொல்லியிருக்கின்றன? அத்தனை பெரியவர்களும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்? அவரவர்களும் தங்கள் இஷ்டமூர்த்தியே குரு ஸ்வரூபத்தில் வந்து தங்களை நல்ல வழியில் திருப்பிவிட்டு அநுக்ரஹித்ததாகத் தானே சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

(விநாயகர்) அகவலில் அவ்வையார் விக்னேச்வரரே குருவாக வந்தார் என்கிறாள்*. அவள் அப்படிச் சொல்கிறாளென்றால் அநுபூதி (கந்தரநுபூதி) யில் அருணகிரிநாதர் ‘குருவாய் வருவாய்’ என்று முருகனை வேண்டிக் கொண்டு முடிக்கிறார். இங்கே அநுபூதி பெறாத நம் சார்பில் மனமுருகி வேண்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முருகன் ஏற்கனவே குருவாக வந்து அநுக்ரஹம் செய்து அவர் அநுபூதி பெற்று விட்டவர். இதை (நூலின்) உள்ளே சொல்லியிருக்கிறார். ‘எல்லாக் கார்யத்தையும் விட்டு விட்டு மௌனமாக ஆத்மாவுக்குள்ளே முழுகிப் போய்விடு; சும்மாயிரு சொல்லற’ என்று ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தன்னிடம் சொன்னார்; உடனே அப்படியே ஸகல வஸ்துவும் மறைந்து போய் ஏக வஸ்துவில் தான் நின்று விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு உபதேசத்தைப் பண்ணி, அந்த உபதேசம் உள்ளநுபவமாகவும் ஆகுமாறு முருகன் பண்ணினானென்பது அவன் குரு ஸ்வரூபமாக வந்து விட்டான் என்பதையே காட்டும். மாணிக்க வாசகரும் திருப்பெருந்துறையில் – ஆவுடையார் கோவில் என்கிறது அந்த ஸ்தலத்தைத்தான்; அங்கே-குருந்த மரத்தடியில் குரு ஸ்வரூபமாக வந்து பரமேச்வரன் தம்மை ஆட்கொண்டு விட்ட பரம கருணையைப் பல இடங்களில் உருகி, உருகிச் சொல்லியிருக்கிறார்.

அருபரத்தொருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமை

என்கிற மாதிரி, எப்பேர்ப்பட்ட உத்க்ருஷ்டமான ஏக புருஷன் இப்படி இந்த பூலோகத்திலே நம் கண்ணுக்குத் தெரிந்து, நாம் கலந்து பழகும்படியாக குரு என்று வந்து அருள் பண்ணியிருக்கிறான் என்பதை நிறையச் சொல்லியிருக்கிறார்.

காளிதாஸன் அம்பாளைக் குறித்துச் செய்துள்ள ‘நவரத்னமாலிகை’ யில் அவள் குரு ரூபத்திலே வந்து உயர்ந்த ச்ரேயஸ்களைக் காட்டினாள் என்கிறான்:

தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்

ஆனதினாலே, ஈச்வரனேதான் குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டுவிட்டால் – ‘வைத்துக்கொள்வது’ என்றால் கல்பிதமாக இப்படி அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளுகிற மாதிரி த்வனிக்கிறது. அதனாலே கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன். ஈச்வரனே குருவாக வந்திருக்கிறானென்பதுதானே நிஜம்? இதைப் புரிந்து கொண்டுவிட்டால் – அப்புறம் ஈச்வரனிடமும் பக்தி, அதே அளவுக்கு குருவிடமும் பக்தி என்று இரண்டு பக்திகளைச் சொல்லவேண்டியதில்லை. குருவே ஈச்வரன் என்று அந்த ஒருவரிடமே பூர்ணமாக மனஸைக் கொடுத்து ஒரே பக்தியாகப் பண்ணவேண்டுமென்று ஆகிவிடும்.

இப்படி குரு ரூபத்தில் வந்திருக்கிற ஈச்வரனிடத்தில், அல்லது ஈச்வரனின் மநுஷ்ய ரூபமான குருவினிடத்தில் உயர்ந்த பக்தியை, பராபக்தி என்கிற உத்தமான பக்தியைச் செலுத்திவிட்டாலே உபதேசத்தின் உட்பொருளெல்லாம் உள்ளநுபவமாகப் புரிந்து அநுபூதி – ஜனன மரண நிவ்ருத்தியான மோக்ஷபதம் – கிடைத்துவிடும்.


*குரு வடிவாகிக் குவலயந்தன்னில் திருவடிவைத்து……

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ச்ருதி-யுக்தி அநுபவம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பலனளிப்பவன் ஈஸ்வரனே!
Next