பூஜை இல்லாத காரணம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவருக்குப் பூஜை இல்லாமலிருப்பதற்கு ஒரு காரணம் சொல்வார்கள்.

பரமேச்வரன் ஜ்யோதிர்மயமான லிங்கோத்பவ மூர்த்தியாக ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நின்றார். அந்த ஜ்யோதிஸ் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்று தேடிக்கொண்டு ப்ரஹ்மாவும் விஷ்ணுவும் போனார்கள். ‘நம் இரண்டு பேரில் யார் இதன் அடியையோ முடியையோ கண்டு பிடிக்கிறார்களோ அவரே பெரியவர்’ என்று பந்தயம் கட்டிக் கொண்டு போனார்கள். இப்படிப் புறப்படுகிறபோதே ப்ரஹ்மாவுக்கு, ‘அடிப்பாகத்தைப் போய் நாம் தேடுவதா?’ என்று அஹந்தை உண்டாயிற்று. அதனால், ‘நான் முடியைத் தேடுகிறேன்’ என்று ஹம்ஸபக்ஷியின் ரூபத்தை எடுத்துக்கொண்டு உயரே தேடிக்கொண்டு போனார். மஹாவிஷ்ணு எளிமையாக அடியைத் தேடிக்கொண்டு வராஹ ரூபத்தில் போனார். இரண்டு பேரும், ஒருத்தர் மேலேயும், ஒருத்தர் கீழேயுமாக, எவ்வளவு தூரம் போய் ச்ரமப்பட்டும் முடியாவது அடியாவது தெரிகிற அடையாளத்தையே காணோம். இனிமேலே முடியாது என்று களைத்துப்போய்த் திரும்பி விட்டார்கள். ஆனால் திரும்பின பிறகு மஹாவிஷ்ணு தம்மால் அடியைப் பார்க்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டார். ப்ரஹ்மாவோ முடியைப் பார்த்துவிட்டதாகப் பொய் சொன்னார்.

அப்போதுதான் ஜ்யோதி ஸ்வரூபத்திலிருந்து பரம சிவன் வெளிப்பட்டு, ‘பொய் சொன்ன ப்ரம்மாவுக்கு இனிமேல் பூஜையே நடக்காமல் போகட்டும்’ என்று சபித்து விட்டார்; அந்தப்படியே இப்போதும் நடந்துவருகிறது – என்று கதை சொல்கிறார்கள். நான் (கதையின்) அவுட்லைன் மட்டும்தான் சொன்னேன்.

நிஜத்தைச் சொன்ன விஷ்ணுவுக்குப் பரமசிவன் சக்ரம் தந்தார், தம்முடைய உடம்பிலேயே இடது பாகத்தைக் கொடுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.

பரமேச்வரனின் முடியைத் தேடித் தேடிப் போனவரின் கோயிலையும் இன்று நாம் தேடிப் தேடிப் பார்க்கும்படி இருக்கிறது!

ஆனால் இது சைவமான கதை. சைவர்கள் சொல்கிற கதை. வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். வருத்தப்படுவார்கள். ஆக்ஷேபிப்பார்கள்.

ப்ரஹ்மா தப்புப் பண்ணியதாக இன்னம் சில கதைகளும் உண்டு. கண்டியூர் கதைகூட அப்படித்தான். இல்லாவிட்டால் அவருக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றை ஈச்வரன் எதற்காக கொய்ய வேண்டும்? இதுவும் சைவமான கதைதான்.

விஷ்ணு கோயில்களிலேயும் ஏன் ப்ரம்மாவுக்கு ஸந்நிதி இல்லை? வைஷ்ணவர்கள் உட்பட ஸகல ஹிந்துக்களுந் தானே ப்ரம்மாவுக்கு வழிபாடில்லாமல் வைத்திருக்கிறார்கள்? சிவ ஸுதர்களான விக்நேச்வரருக்கும், ஸுப்ரஹ்மண்யருக்கும் ஜாம் ஜாமென்று பூஜை, உத்ஸவம் நடக்கிறது போல விஷ்ணுவின் ஸுதரான ப்ரஹ்மாவுக்கு ஏன் இல்லை?

ப்ரஹ்மாவுக்கு வழிபாடு இல்லாததற்கு வைஷ்ணவர்கள் ஏதாவது கதை, காரணம் சொல்கிறார்களோ என்று தெரியவில்லை. “இப்போது ஞாபகம் வரவில்லை” எனக் கூறும் ஸ்ரீசரணர்கள் பிற்பாடு ஞாபகம் வந்து கூறியது:

த்ரிமூர்த்திகளில் யார் சுத்த ஸத்வ மூர்த்தி என்று ப்ருகு மஹர்ஷி பரீக்ஷித்துப் பார்த்து விஷ்ணுதான் அப்படிப்பட்டவர் என்று தீர்மானம் பண்ணினதாக வைஷ்ணவமான புராணங்களில் ஒரு கதை , ஒன்றுக்கொன்று கொஞ்சம் வித்யாஸமாகச் சொல்லியிருக்கிறது. அவற்றில் ஒன்றின்படி, ப்ரஹ்மாவும் ஈஸ்வரனும் ‘நான்தான் சுத்த ஸத்வமூர்த்தி’, ‘நான்தான் சுத்த ஸத்வமூர்த்தி’ என்று பாத்யதை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மஹாவிஷ்ணு அப்படி எதுவும் சொல்லாமல் வைகுண்டத்தில் ராஜ்யபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். சுத்த ஸத்வம் என்றால் என்ன எதிரிடையான சூழ்நிலையிலும் மனஸ் கொஞ்சங்கூட மாறாமல் ஒரே அன்பு உணர்ச்சியிலேயே சாந்தமாக அடங்கி இருந்து கொண்டிருக்க வேண்டுமாதலால், அதை டெஸ்ட் பண்ணுவதற்காக ப்ருகு எந்த ஸ்வாமியானாலும் அவருக்குக் கோபம் ஏற்படும்படி, வேண்டுமென்றே அவருடைய இருப்பிடத்திற்குக் கொஞ்சங்கூட மரியாதையே காட்டாமல் அமர்க்களப்படுத்திக் கொண்டு போனார். இவர் அமர்க்களப்படுத்திக் கொண்டு போனதில் ப்ரஹ்மா கோபப்படவில்லை. ஆனால் இவரை ‘வாங்கோ!’ என்று வரவேற்கவுமில்லை. இவர் தாமாகவே ஒரு ஆஸனத்தை இழுத்துப் போட்டுக்கொண்டு ப்ரஹ்மாவுக்கு ஸமதையாக உட்கார்ந்து கொண்டார். அவருக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “கோபத்துக்கு இடம் கொடுக்கிற நீர் உம்மை சுத்த ஸத்வமூர்த்தி என்று எப்படி சொல்லிக் கொள்ளலாம்?” என்று ப்ருகு கேட்டார். ப்ரஹ்மாவுக்குக் கோபம் இன்னும் ஜாஸ்தியாகி,”அப்படித்தான் சொல்லிக்கொள்வேன்” என்றார். அப்போதுதான் ப்ருகு, “உமக்கு ஆலயமே இல்லாமல் போகக் கடவது!” என்று சபித்தாராம்.

அதற்கப்புறம் ப்ருகு மஹர்ஷி கைலாஸத்துக்குப் போய், சாந்தமாக இருந்த ஈஸ்வரனை ஒரேயடியாகச் சீண்டியதில் அவர் இவரை சூலாயுதத்தாலேயே குத்த வந்தாராம்.அப்போது இவர்,”உம் ரூபத்துக்கு ஆலயத்தில் பூஜை இல்லாமல் அதற்குப் பதில் ஒரு கல் உருண்டையைப் பூஜை பண்ணட்டும்!” என்று சபித்ததாகவும், அதனால்தான் சிவன் கோயில் மூலஸ்தானத்தில் லிங்கத்தை வைப்பதாக ஏற்பட்டது என்றும் ஒரு கதை! வாஸ்தவத்தில் லிங்கம் என்பது ஜ்யோதிஸுக்கு அடையாளம்; ஆரம்பமும் முடிவும் சொல்ல முடியாத பரப்ரஹ்மத்துக்கு அடையாளம்; ரூபமாயும் இல்லாமல் அரூபமாயும் இல்லாமல் இருக்கிற ‘அருவுருவம்’ என்கிற உசந்த தத்வம். ஆனாலும் விஷ்ணு பரத்வத்தையே சொல்லவந்த கதையானதால் இப்படிச் சொல்லியிருக்கிறது!

கடைசியாக ப்ருகு வைகுண்டத்துக்குப் போய் சயனத்தில் இருந்த மஹாவிஷ்ணு தன்னைக் கவனிக்கவில்லை என்பதால்,… சொல்லவே கஷ்டமாயிருக்கிறது…. அவருடைய வக்ஷஸ்தலத்தின் மேலேயே ஓங்கி ஒரு உதை விட்டாரென்றும், பெருமாளோ அப்போதும் பரம சாந்தத்துடனும் ப்ரேமையுடனும், ‘உங்கள் கால் வலிக்கப்போகிறது!’ என்று சொல்லிக்கொண்டு ப்ருகுவின் பாதத்தைப் பிடித்துவிட்டாரென்றும், அவர்தான் சுத்த ஸத்வமூர்த்தி என்று ப்ருகு தீர்மானம் பண்ணினதாகவும் கதை போகிறது.

இப்படி விஷ்ணு பரத்வம் சொல்லவந்த புராணங்களிலும் ப்ருகு சாபத்தால் ப்ரஹ்மாவுக்கு ஆலய வழிபாடு கூடாது என்று ஆனதால்தான் வைஷ்ணவர்களும் அப்படியே பண்ணுகிறார்கள் என்று தோன்றுகிறது.

ச்ருதியிலேயே (வேதத்திலேயே) உள்ள ப்ராஹ்மணங்கள் என்ற பிரிவுகளில் ப்ரஜாபதி தப்புப் பண்ணியதாகக் கதை இருக்கிறது. ப்ரஜாபதி என்பது ப்ரஹ்மாதான். ஸகல ஹிந்துக்களுக்கும் வேதம் ஆதாரமாக இருப்பதால் அந்த ப்ராஹ்மணக் கதை காரணமாகவே வைஷ்ணவர்கள் உள்பட எல்லோரும் அவரது வழிபாட்டை நிறுத்திவிட்டார்களென்று சொல்லலாமென்று பார்த்தால், அதுவும் ஸரியாய் வரவில்லை. வேத காலத்திற்கு அப்புறம் வெகுநாள்வரை ப்ரம்மாவுக்கு வழிபாடு நடந்துதான் வந்திருக்கிறது. கஷ்டம் என்றால் தேவர்கள் அவரிடம்தான் முதலில் ஓடி இருக்கிறார்கள். அஸுர, ராக்ஷஸரில் பலரும் அவரைக் குறித்துத் தபஸிருந்தே பெரிய வரங்கள் பெற்றிருக்கிறார்கள். முழுமுதல் தெய்வமாக அவர் வணங்கப்பட்டதாக தெரியாவிட்டாலும், முக்ய தேவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டிருக்கிறார். அப்புறம்தான் இது அப்படியே நின்று போய் விட்டதாகத் தெரிகிறது. வைஷ்ணவர்களும் ஏன் நிறுத்திவிட்டார்கள்?

நாம் பொழுது விடிந்தால் நூறு தப்புப் பண்ணிக் கொண்டிருக்கும்போது, ப்ரஹ்மா போன்றவர்கள் தப்புப் பண்ணிய கதையைச் சொல்லவே பிடிக்கவில்லை. “சாமியாம், இப்படித் தப்புப் பண்ணித்தாம்!” என்று நாஸ்திகர்கள் கேலி செய்வது இவற்றைக் காட்டித்தான். அதனால் சைவமாகப் பார்த்தது போதும். வைஷ்ணவமாக வேறு துருவ வேண்டாமென்று தோன்றுகிறது.

ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்.

(அது) என்ன?

விஷ்ணுவுக்கு ஒரு பிள்ளை ப்ரம்மா. இன்னொரு பிள்ளை உண்டு. அவர்தான் மன்மதன். இரண்டு பேரும் லக்ஷ்மியின் ஸம்பந்தமில்லாமலே பிறந்தவர்கள். ப்ரம்மா விஷ்ணுவின் நாபிகமலத்தில் உண்டானார். மன்மதனை அவர் மானஸிகமாக ஒரு பிள்ளை உண்டாகட்டும் என்று மனஸினால் நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ருஷ்டித்துவிட்டார். அதனால் அவருக்கு மனஸிஜன் என்று பெயர் வந்தது. ப்ரம்மா கமலஜர். மூன்றாவது பிள்ளையாக மஹாவிஷ்ணு மோஹினி ரூபத்தில் சிவனிடம் பெற்ற சாஸ்தா இருக்கிறார். அவருக்குப் பூஜை இருக்கிறது. பெரிசாக வ்ருத்தியாகியும் வருகிறது. ப்ரஹ்மாவுக்குப் பூஜை இல்லை. மன்மதனுக்கும் இல்லை.

இதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது. மன்மதன், ப்ரஹ்மா இருவருமே ஒரு ஜீவன் ஜன்மா எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள்தானே? புத்ரோத்பத்திக்குக் காரணமான வேகத்தை மன்மதன் உண்டாக்குகிறான். அப்புறம் எந்த ஜீவன் எந்த பிண்டத்தில் புகுந்துகொள்ள வேண்டுமென்று பார்த்து ப்ரஹ்மா ஜன்மாவைக் கொடுக்கிறார்.

அத்தனை கஷ்டமும் நாம் ஜன்மா எடுத்ததால்தானே தெரிகிறது? ஸகல ஸமயாசாரங்களும், ஸாதனைகளும் ஜன்ம நிவ்ருத்தி என்ற ஒன்றுக்காகத்தானே இருக்கிறது?

இதனால்தான் ஜன்மா ஏற்படக் காரணமான ப்ரஹ்மாவுக்கு வழிபாட்டில்லாமலாயிருக்கிறதென்று தோன்றுகிறது. மன்மதனுக்கும் இதே காரணம்தான். கூடுதலாக இன்னொன்றும்: எல்லா வேகங்களிலேயும் மஹா பொல்லாததாக, வெறிப்பிடித்ததாக இருப்பதை உண்டாக்கி ஜீவனை அலைக்கழிப்பவன் அவன்தானே? ஆனால் அவனைப் பற்றி இப்போது கேள்வியில்லை. பேச்சுவாக்கில் அவன் விஷயம் வந்துவிட்டது. குருவை மும்மூர்த்தியாகவும் சொல்லியிருக்கிறதென்று பார்த்ததில் முதல் மூர்த்தியான ப்ரஹ்மாவைப் பற்றிதான் விசாரித்துக் கொண்டிருந்தோம்.

கஷ்டத்துக்கெல்லாம் காரணமான பிறவிக்கு அவர் காரணமாயிருக்கிறாரே என்பதால்தான், ‘இவருக்கென்ன வழிபாடு?’ என்று கோபித்துக் கொண்டு நிறுத்திவிட்டோமோ என்னவோ என்று சொன்னேன்.

‘பூர்வ காலங்களிலும் அவர்தானே ஸ்ருஷ்டிகர்த்தா? அப்போதெல்லாம் அவருக்கு நிரம்ப மரியாதை நடந்திருப்பதாகச் சொன்னீர்களே!’ என்று கேட்டால், அந்தப் பூர்வ காலங்களில் இத்தனை அதர்மமும், பாபமும், அதனால் விளையும் கஷ்டங்களும் – இயற்கை உத்பாதங்கள் என்பவை கூட மனிதர்கள் செய்கிற பாபத்தின் விளைவாக ஏற்படுபவைதான். இவையும் – இல்லை. துஷ்ட சக்திகள் என்றைக்கும் இருக்கத்தான் செய்திருக்கின்றனவென்றாலும், பிற்காலத்தில் ஆனதுபோல அவை பூர்வத்தில் தலைவிரித்தாடவில்லை. அதனாலே இந்த லோகத்தில் ஜீவயாத்ரை நடத்துவது, ஜன்மா எடுப்பது என்பது இப்போது போல அப்போது அவ்வளவு நொந்து கொள்ளும்படியாக இருந்திருக்காது. தெய்வ ஸம்பந்தமாக அநேக விஷயங்கள் எங்கு பார்த்தாலும் நடப்பதாகவும், யாக யஜ்ஞாதிகள் நிரம்ப நடப்பதாகவும், அவதார புருஷர்களும் மஹான்களும் ரிஷிகளும் நிறைய இந்த பூலோகத்தில் ஸஞ்சரிப்பதாகவுமிருந்த அந்தக் காலத்தில் ‘ஜன்மா ஏன் கொடுத்தார்?’ என்று ப்ரம்மாவிடம் ரொம்பக் கோபப்படவேண்டி இருந்திருக்காது என்று ஸமாதானம் சொல்லலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கோயிலில்லாத கடவுள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வைஷ்ணவ ஆலய மூர்த்திகள்
Next